Thursday, September 6, 2018

ORU ARPUDHA GNANI

ஒரு அற்புத ஞானி -- J.K. SIVAN
சேஷாத்ரி ஸ்வாமிகள்

அதிசய தண்டனை

'யாரு, அழுக்கு வேஷ்டி வெங்கட்ராமனா, அவன் ஒரு பழம் பஞ்சாங்கமாச்ச்சே '' என்ற பெயரை சுலபத்தில் சம்பாதித்த ஜமதக்கினி சாஸ்திரி பிள்ளை வேங்கடராமய்யர் உண்மையிலேயே ஒரு பத்தாம் பசலி. அப்பாவி. கவர்மெண்ட் பள்ளிக்கூட ஸமஸ்க்ரித வாத்யார். உதவி ஹெட்மாஸ்டர். மேலதிகாரிகளிடத்தில் எப்படி பொய்யாக நடித்து மரியாதை காட்டவேண்டும் என்று பிழைக்கத் தெரியாதவர். பரம ஏழை. ஆறு பெண்கள் மூன்று பிள்ளைகள். போதுமா?. சுருக்கமாக ஒரு வார்த்தையில் ஒரு நவீன மினி குசேலர்.

ஒரு பழைய ஒட்டு வீட்டில் ரெண்டு ரூபாய் வாடகைக்கு குடியிருந்தவர் . ஆறு ஏழு மாதமாக வீட்டு வாடகை பாக்கி. வீட்டு சொந்தக்காரன் நடேச முதலி ஐயர் மேல் ரொம்ப மரியாதை உள்ளவன். தோட்டம் துறவு வைத்துக்கொண்டு நிறைய வசதியோடு இருந்ததால் வாடகை பற்றி அதிகம் தொந்தரவு கொடுக்கவில்லை. பாவம் ஐயர் கஷ்ட ஜீவனம். எப்படியும் கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கை அவனுக்கு.

ஒருநாள் திடீரென்று கவர்மெண்ட் ஸ்கூல் இன்ஸ்பெக்டர் ஒருத்தர் அவருடைய பள்ளிக்கூடத்துக்கு வந்தபோது உதவி தலைமை ஆசிரியர் வெங்கட்ராமய்யர் ஏன் இன்னும் வரவில்லை என்று கேட்டுக் கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்தார் அய்யர்.

'நீர் தான் வெங்கட்ராமனா?
'' ஆமாம் சார்''
'ஏனய்யா? இப்போது தான் பள்ளிக்கூடம் வருவதா? இது தான் நீ சொல்லிக்கொடுக்கிற லக்ஷணமா?''
''சார் நான் கொட்டும் மழையிலும் பள்ளிக்கூடம் வந்து பாடம் சொல்லிக் கொடுப்பவன் சார். என்னைப்பற்றி யாரிடம் வேண்டுமானாலும் நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம் சார்.
என்னை அவமதித்து அவதூறாக பேசவேண்டாம் சார் .''

''இன்னிக்கு ஏன் யா லேட்டு ?''
இன்னிக்கு 'என் தோப்பனார் திதி. ஸ்ராத்த காலத்திலே காலம்பரவே எல்லாம் ரெடி. ஆனால் வாத்தியார்கள் தாமதமாக வந்து ஹோமம் பண்ணி இப்பதான் முடிந்தது. அதனாலே தான் லேட். என் பெற்றோருக்கும் நான் கடமைப் பட்டவனில்லையா ஸார் ?'' என்கிறார் ஐயர்.

மேலதிகாரி தனபூஷண நாய்டுவுக்கு அடக்கமுடியாமல் கோபம். அவனை எவரும் இப்படி எதிர் கேள்வி கேட்டதில்லை. இந்த ஆள் மன்னிப்பு கேட்காமல் எதிர் கேள்வி கேட்கிறவன். உயரதிகாரிகளிடம் பழக தெரியாதவன். ஒழுக்கம் குறைவு என்று வெங்கட்ராம ஐயர் மேல் ரிப்போர்ட் எழுதி வெள்ளைக்கார அதிகாரிக்கு உடனே அனுப்பிவிட்டான். வெள்ளைக்காரன் ரிப்போர்ட்டை படித்துவிட்டு மூன்று மாதம் உத்யோக தற்காலிக நீக்கம் சம்பளமில்லாமல் என்று எழுதிவிட்டான். அவனுக்கும் மேலே உள்ளவன், வேலையிலே இருந்தே எடுத்துவிடலாம் இந்த ஆளை என்று சிபாரிசு செய்தான். வருமானமின்றி எப்போது உத்யோகம் போகுமோ, பகவானே என்னை ஏன் சோதனை பண்ணுகிறாய்'' என்று வெந்து சாம்பலானார் அய்யர்.

அந்த ஊர் பெரியமனிதர் ராஜசேகர முதலியார் ஒருநாள் இந்த நிலையில் யதேச்சையாக வேறு ஒரு உயர் அதிகாரி அன்பரை பார்க்க அந்த பள்ளி மேலதிகாரி அலுவலகம் அங்கே அதிகாரிகளிடம் பேசிக்கொண்டிருந்த போது வெங்கட்ராம ஐயர் வேலை நீக்கம் பற்றி பேச்சு நடந்துகொண்டிருந்தது. முதலியாருக்கு அய்யரையும், அவர் நேர்மை, குழந்தைகளுக்கு அற்புதமாக பாடம் சொல்லிக்கொடுப்பது எல்லாம் தெரியும். அவர் வீட்டு குழந்தைகள் வெங்கட்ராமய்யரிடம் படித்தவர்கள். வீட்டில் அவரைப்பற்றி நிறைய சொல்வார்களே. அவரிடம் விஷயம் போனது. ஆகவே அவரும் அய்யரைப் பற்றி தனது உயர்ந்த அபிப்ராயத்தை சொன்னார்.

பூத நாராயணன் கோவில் ஒரு பழங்கால ஆலயம் அருணாச்சலேஸ்வரர் ஆலயம் போகும் பாதையில் இருந்தது. திருவண்ணாமலையில் அதன் அருகே ஒருநாள் சேஷாத்திரி சுவாமி நின்று கொண்டிருந்தார். எங்கோ பார்த்தவாறு தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தார். ஸ்வாமிகளை தூரத்திலேயே அவரைப் பார்த்துவிட்டார் அங்கே வந்த வெங்கட்ராமய்யர். ட அய்யர், செருப்பை கழட்டி அங்கேயே தூர விட்டுவிட்டு ஓடி வந்து ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம் பண்ணினார். ஸ்வாமிகளின் பக்தர்களில் ஒருவர் ஐயர் .

சுவாமிகள் பார்வை நேராக அந்த பழைய செருப்பருகே சென்று அதை கையில் எடுத்து அதால் அய்யர் தலையில் நாலு சாத்து சாத்தினார். செருப்பை கீழே போட்டுவிட்டு ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார் ஸ்வாமிகள்.

வெலவெலத்து போனார் அய்யர். ஓஹோ நாம் உயர் அதிகாரியோடு பதிலுக்கு பதில் மரியாதை இன்றி பேசியது ஸ்வாமிகளுக்கு தெரிந்து அவர் நம்மை தண்டி க்கிறாரோ? ஓஹோ ஒருவேளை இன்று தான் கடைசி நாளோ? நமக்கு உத்யோகம் போகப்போகிறதோ. அதனால் தான் ஸ்வாமிகள் இப்படி தண்டனை கொடுக்கிறாரோ என்று பயந்து கொண்டே பள்ளிக்கு குறித்த நேரத்தில் சென்றார். வாயிலில் இருந்த பிள்ளையாரை வணங்கினார். ''விநாயகா இன்னும் எத்தனை நாள் உன்னை வணங்கப்போகிறேனோ தெரியவில்லை''

''உங்களை தலைமை ஆசிரியர் உடனே பார்க்க வேண்டுமாம் '' என்று ஒரு தலைமை ஆசிரியர் சேவகன் சொன்ன போது பிராணன் ஊசலாடிக் கொண்டிருந்தது ஐயருக்கு வியர்த்து கொட்டியது. கைகால்கள் நடுங்க நாவடைக்க மெதுவாக தலைமை ஆசிரியர் அறைக்குள் சென்றார்.

''இந்தாங்கோ வெங்கட்ராமன், உங்களுக்கு ஒரு லெட்டர் மேலிடத்திலிருந்து வந்திருக்கு.'' வெடவெடவென்று கைகள் நடுங்க தலைமை ஆசிரியர் கொடுத்த கவரை கையெழுத்து போட்டு வாங்கிக்கொண்ட அய்யர் அரை உயிரோடு அதை பிரித்து நடுங்கிக்கொண்டே மூக்கு கண்ணாடி வழியே பார்த்தார். படித்தார்.

இன்னொரு புது ஸ்கூல் டேனிஷ் மிஷன் அந்த வளாகத்திலேயே ஆரம்பிப்பதாகவும் அதற்கு அய்யர் தலைமை ஆசிரியராக நியமிக்கப் பட்டிருப்பதாகவும் பதினைந்து ரூபாய் சம்பள உயர்வுடன் அன்றே பொறுப்பேற்க உத்தரவு அது. பதினைந்து ரூபாய் மாதம் சம்பள உயர்வு பதினைந்து ஆயிரம் ரூபாய்க்கு சமம் அப்போது.

ஸ்வாமிகள் அளித்த செருப்படிக்கு இவ்வளவு மதிப்பா?

''தலைமை'' ஆசிரியண்டா இனிமே நீ என்று 'சிறப்பை'' ''செருப்பால் ' 'தலையில்'' அடித்து அல்லவோ ஸ்வாமிகள் உணர்த்தி இருக்கிறார். நமக்கல்லவோ புரியவில்லை.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...