Thursday, September 6, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் J.K. SIVAN

34. ''கிருஷ்ணா நீ எங்கே போனாய்?''

கிருஷ்ணன் அவனில்லாதபோது துவாரகையை தாக்கிய எதிரியை தொடர்ந்து சென்று அவனை சம்ஹாரம் செய்தபின் துவாரகை திரும்ப வெகு காலமாகி விட்டது. அதற்குள் எத்தனையோ விஷயங்கள் நடந்து விட்டது. காலம் மெதுவாகவா செல்லும்? அதன் வேகத்திற்கு யார் ஈடு கொடுக்க முடியும்?

கிருஷ்ணன் மனதில் ஏதோ ஒரு சஞ்சலம். அவனுக்கு அர்ஜூஜனையும் பாண்டவர்களையும் மீண்டும் சந்திக்கவேண்டும். ராஜசூயயாகம் நடந்து அவன் துவாரகை திரும்பி வெகு நாட்களாகிவிட்டதே. எனவே இந்திரப்பிரஸ்தம் செல்ல தயாராகும்போது தான் அவனுக்கு விஷயம் தெரிந்தது. பாண்டவர்கள் எல்லாவற்றையும் சூதாட்டத்தில் இழந்து கானகத்தில் பிச்சைக்காரர்கள் போல் இருக்கிறார்களாமே . இது எவ்வாறு? என்ன நடந்தது? நேரில் சென்று அவர்களை வனத்தில் சந்தித்தபோது கிருஷ்ணன் துக்கமும் கோபமும் கொண்டவனாக இருந்தான். (நடித்தான்)!
நான் இருந்தால் இதை நடக்க விட்டிருக்கமாட்டேன். ( இது நல்ல டயலாக். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று அவனுக்கே தெரியும். கபடநாடக சூத்ரதாரி ஆயிற்றே!)

''கிருஷ்ணா, உனது பராக்ரமத்தை நான் அறிவேன். உன்னால் மாண்ட அரக்கர்கள், ராக்ஷசர்கள் அத்தனைபேர் பெயரும் கூட எனக்கு தெரியும். உனது வீரத்தின் முன்பு இந்த பிரபஞ்சத்தில் எதுவும் நிகராகாது என்பதும் எனக்கு தெரியும். நீ நினைத்தால் நடக்காதது எதுவும் இல்லை என்றும் நான் உணர்ந்தவன். நான் உனது பக்தன் அல்லவா ' அர்ஜுனன் கிருஷ்ணனை வாயாரப் போற்றினான்.

''ஜனமேஜயா, கிருஷ்ணன் சற்று கோபமடைந்தான். கௌரவர்கள் செயல் அவனைக் கோபமடையச்செய்தது என்று அறிந்த அர்ஜுனன் கிருஷ்ணனை சமாதானப் படுத்தியதும் கிருஷ்ணன் பேசினான்:

''அர்ஜுனா, நானே நீ, நீயே நான். உன்னை இகழ்ந்தவன் எனை இகழ்ந்தவன் ஆவான். அதேபோல் உனது பெருமை எனதாகுமே. நாம் நர நாராயணர்கள்.''

அரசர்கள் நடுவே கிருஷ்ணன் இவ்வாறு கூறியது கோபமடைந்திருந்த அரசர்களை ஆச்சர்யப்படுத்தியது. கிருஷ்ணன் பெருமையை அர்ஜுனனும், பாஞ்சாலியும் வரிசைப்படுத்தி உரைத்தனர்.முக்யமாக திரௌபதி '' கிருஷ்ணா, தெய்வமே, எப்படி துரியோதனனும் மற்றவர்களும் என்னை அவ்வளவு பெரிய அரசவைக்கு இழுத்து சென்று எனது பெண்களுக்குண்டான மாதவிலக்கையும் பொருட்படுத்தாது குருதி தோய்ந்த ஆடையோடு அழ அழ மானபங்க படுத்த துணிந்தார்கள். நீயல்லவோ என்னை காப்பாற்றினாய். உன்னை எவ்வாறு போற்றுவேன். என்ன வார்த்தை சொல்வேன்? தெரியவில்லையே. இழிவு படுத்தி என்னை பேசி, என் மனதையும் உடலையும் வெட்கப்பட வைத்தார்களே. ஒருவரும் உதவிக்கு வரவில்லையே உன்னைத் தவிர கண்ணா. என்னையும் அடிமையாக்கினார்கள். அந்த பாதகன் துரியோதனன் எனக்கு மட்டுமா தீங்கிழைத்தான்? இந்த பாண்டவர்கள் சிறுவர்களாக இருக்கும்போதே எத்தனை முயற்சிகள், அவர்களை அழிக்க.

கண்ணா, பராக்கிரமம், உலகப்புகழ் எல்லாம் பெற்ற மாவீரர்கள் என் கணவர்களால் அப்போது என்னை காப்பாற்ற இயலவில்லை.

உன்னைத் தவிர எனக்கு, தாயோ, தந்தையோ,சகோதரரோ, நண்பர்களோ, மகன்களோ, கணவன்மார்களோ, உற்றார் உறவினர் பெரியோர்கள் வேறு யாரும் உதவ அன்று அங்கு இல்லை. கண்களில் நீர் பொங்கியதை திரௌபதி துடைத்துக்கொண்டாள். கர்ணன் சொன்ன வார்த்தைகளைகேட்டு நான் இன்னும் உயிரோடு இருக்கிறேனே.''

''முனிவரே. கிருஷ்ணன் என்ன பதில் சொன்னான் திரௌபதிக்கு? என்று அவசரமாக ஆவலுடன் கேட்டான் ஜனமேஜயன். வைசம்பாயனர் தொடர்ந்தார்:

''அழாதே ''கிருஷ்ணா, (திரௌபதிக்கு கிருஷ்ணா என்று தான் பெயர்) நீயும் கிருஷ்ணா தானே என்னைப்போல். அழாதே. கோபத்தை விடு. உன்னைவிட உன்னை துன்புறுத்தியவர்கள் மனைவியர், குடும்பத்தினர் தான் கணவன், சகோதரன், பிள்ளை, தந்தை, மகன் ஆகியோரின் பிணத்தை ரத்த வெள்ளத்தில் கண்டு அதிகமாக அழப்போகிறார்கள். காரணமாக இருக்கப் போவது உன் கணவன் அர்ஜுனனின் காண்டிவத்தில் இருந்து புறப்பட்ட அம்புகள். என்னால் முடிந்த உதவியை பாண்டவர்களுக்கு நான் அளிப்பேன். கவலை விடு. நீ ஒரு மகாராணி. ராஜாதி ராஜனின் மனைவி. இமயபர்வதமே பிளந்தாலும், கடல் நீர் வற்றினாலும் பூமி வெடித்தாலும் என் வார்த்தை தப்பாது.'' என கிருஷ்ணன் அமைதியாக சொன்னான். (அவன் போட்ட திட்டத்தில் எல்லாம் கட்டம் கட்டமாக சரியாக தப்பாமல் நடந்து வருகிறதே)

கிருஷ்ணன் முகத்தை அனைவரும் நோக்கினார்கள். கிருஷ்ணன் மேற்கொண்டு ஏதோ சொல்லப்போகிறான் என்று புரிந்தது:

''யுதிஷ்டிரா, நான் துவாரகையில் இருந்திருந்தால் இதை நடக்க விட்டிருக்க மாட்டேன். என்னை அழைக்க வில்லைஎன்றாலும் நான் ஹஸ்தினாபுரம் வந்திருப்பேன். திருதராஷ்ட்ரனுக்கு சூதினால் நேரும் தீமைகளை விளக்கி இருப்பேன். தடுத்திருப்பேன். பெண் , சூது, குடி, வேட்டை இவற்றில் ஆசையினால் எவ்வாறு ஒருவன் மதியிழக்கிறான், அடிமையாகிறான் என்று எடுத்துக் காட்டியிருப்பேன். என் சொல் கேட்டு நடந்தால் அவர்கள் நன்மை டையச் செய்திருப்பேன். கேட்கவில்லையானாலும் எனது சக்தியால் அவனை கட்டுப்பட வைத்திருப்பேன். அவனுக்கு துணை நின்றவர்கள் அவன் அழிவுக்கு காரணமான எதிரிகள் தான். நண்பர்கள் அல்ல. அனைவரையுமே அழித்திருப்பேன். நான் துவாரகைக்கு திரும்பி வந்து தான் யுயுதானன் மூலம் நடந்ததெல்லாம் அறிந்தேன்.

"கிருஷ்ணா, நீ எங்கு சென்றிருந்தாய்?

(ஐந்தாம் வேதம் இரண்டு பாகம் புத்தகங்களாக ஆயிரம் ரூபாய் நண்கொடைக்கு கிடைக்கும். அதன் மதிப்பு காகிதம் அச்சுக்கூலி டிசைன் பைண்டிங் எல்லாமாக மொத்தம் ரூபாய் இரண்டாயிரமாக இருந்தாலும் எங்களுக்கு நண்கொடைகள் கிடைத்து குறைந்த விலை மதிப்பில் வெளியிட முடிந்தது. வேண்டுபவர்கள் பெறலாம். ஜே.கே. சிவன் 9840279080)



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...