Friday, September 14, 2018

RASA NISHYANTHINI



ரஸ நிஷ்யந்தினி                  J.K. SIVAN  
பருத்தியூர் கிருஷ்ண ஸாஸ்த்ரிகள் 

ஸ்ரீ ராமனையும் அவனது நாமத்தையும் தமது மூச்சாக கொண்டு வாழ்ந்த ஒரு மஹான் ஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ணசாஸ்திரிகளுக்கு  ஒரு நாள் கனவில் ஸ்ரீ ராமன் தோன்றி  ''கிருஷ்ணா   நான் ராமன். என் குடும்பத்தோடு நான் இந்த ஊர் குளத்தில் புதைந்து இருக்கிறேனே.  நீ  எங்களை வெளியே கொண்டு வந்து சந்நிதியை செப்பனிட்டு ஸ்தாபனம் செய்''   

ஆஹா  என் ராமன் எனக்கு இப்படி ஒரு கைங்கர்யம் செய்ய அருளினான் என்று மகிழ்ந்த சாஸ்திரிகள், அம்பரீஷ குளத்தில் தூர்வார செய்து  சரபோஜி ராஜா  காலத்திய  ராம லக்ஷ்மண, சீதா ஹனுமான் விகிரஹங்கள் புதையுண்டிருந்தவை மீட்கப்பட்டன.  குளம் சீரமைக்கப்பட்டு  ராமாயண குளம் என்று பேர் பெற்றது. வரதராஜர் கையில் ஏந்திய பிரயோக சக்ரம் உக்கிரத்தால் அக்ராஹாரம் வீடுகளை இழந்திருந்ததால் சாஸ்திரிகள் தனது செலவில் ஒரு மஹாலக்ஷ்மி விகிரஹத்தை ஸ்தாபித்து உக்ரம் குறைந்தது.  தனக்கு ப்ரவசனம் , பிரசங்கம் மூலம் கிடைத்த சன்மானத்தையெல்லாம்  பருத்தியூர் ராமர் கோவில் புனருத்தாரணம் அபிவிருத்திக்கு அளித்தவர்.   அவரைப்பற்றி இன்னும் சொல்லும் முன்பு இன்றைக்கு  மேலும் சில  ரஸ  நிஷ்யந்தினி ஸ்லோகங்கள் அர்த்தங்கள் பார்ப்போம்.

தசரதனுக்கும்  அவையில் கூடியிருந்த மற்றவர்களுக்கும்  வசிஷ்டருக்கும்  பொதுவாக  ராஜரிஷி விஸ்வாமித்ரர்  ஸ்ரீ ராமனின் மஹாத்மியத்தை தொடர்ந்து சொல்கிறார்: 

81.  ''நீ நினைப்பது போல் ராமன் இந்த அழகிய உன் மாளிகையில் மட்டுமா இருக்கிறான்?. அவன் காற்றில் விண்ணில் மண்ணில் எங்கும் நிறைந்தும் காண்பவன். இதயத்தாமரையில் எவருள்ளும்  வீற்றிருப்பவன்''

82. ''இந்த ரகு வம்ச  ராஜ்ய பரிபாலனம் வம்சாவளியாக தொடர்ந்து உனக்கு பிறகு உன் மகன் ராமன் வசம் வந்துள்ளது என்கிறாயே தசரதா, எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் கேள்.  இந்த பூமி, ஆகாசம், அக்னி, வாயு, சூரியன், சந்திரன் நக்ஷத்திரங்கள், மின்னல், இன்னும் என்னென்னவெல்லாம் உண்டோ அதெல்லாம் அவனுடையவை. அவனுக்கு சொந்தமானவை. தெரிந்துகொள்'' 

83. ''உன்னையும் என்னையும் போல், அவன் ஒரு தனி மனிதனோ, (ஜீவனோ), பிறந்து மடிபவனோ, கர்மபலத்தால் பிறவி பெறுபவனோ,  முதுமை, பிணி, பசி தாகம் கொண்டவனோ இல்லை.  அவன் பரமாத்மன்.  பாபங்கள் நெருங்காதவன்.  ஒரு மானுடனுக்கு நேரும் எதுவும் அவனை அணுகாது. ''

 84. '' ராமன் உன் மகனா? இல்லை தசரதா , அவனைப் புரிந்துகொள்.  அவன் சாஸ்வதமான ப்ரம்மம். சத்தியத்தின் ஸ்வரூபம். பரமாத்மா.''

85.உன் மனதில் ஓடும் எண்ணம் எனக்கு தெரிகிறது.  நாம்  பெரிய அஸ்வமேத யாகம், தான தர்மங்கள் பல செய்து  பெற்ற பிள்ளை ராமன் என்று கருதுகிறாய். இல்லை தசரதா.  உள்ளத்தில் சத்யம் பூரணமாக இருந்து,  சாத்வீகமாக பக்திகொண்ட, ஞானிகள், பிரம்ம ச்சர்யம் பூண்டவர்கள் எவராலும் அவனைப்  பெறமுடியும்.'' 

86.  நற்குணம் அற்ற, குறைபாடுடையவர்கள் கூட அவனை ஒரு  மனித உடல் கொண்ட  ராமனாக பார்க்கமுடியும் என்று நம்புகிறாயே, அவனை காண்பது எளிதா?  அவன் நுண்ணிய உருக்கொண்ட பரமாத்மா, புனித தெய்வீக ஒளி வீசும் ஜோதி.  குறையொன்றுமில்லாதவர்கள் மட்டுமே உணர முடிந் தவன்.

87.ராமன்  என் மகன். எவரும் அவனை காணலாம் என்ற எண்ணமா  தசரதா?  மனம்  தியானத்தில் ஆழ்ந்தபோது  காணப்படும் நுண்ணிய  ஆத்ம ஜோதி ஸ்ரீ ராமன்.   பஞ்ச பிராணனும் தன்னுள் கொண்டவன். தூய இருதயத்தோடு  பஞ்ச ரணன்தில் தெரிபவன்.

88. ஏதோ பூஜை, விரதம், மூலம் அவனை காணமுடியும் என்று நினைக்கிறாய், ஆத்ம ஞானம், ஆச்சாரம் அனுஷ்டானம் இல்லாதவர்கள் அவனை காண்பது அரிது. அவன் ப்ரம்ம ஸ்வரூபம். 

89. சில பேர் பிரபலமானவர்களோடு போட்டோ எடுத்துக்கொண்டு மகிழ்வார்கள்.. அந்த காலத்தில் இதுவும்  உண்டோ ?  விஸ்வாமித்ரர் கேட்கிறார்  ''தசரதா , அவனை அறிந்தவர்கள் பார்த்தவர்கள் மகிழ்கிறார்கள் என்கிறாயே. வெறுமனே பார்ப்பதும் பெயர்  தெரிந்து ர்ந்துகொள்வதும் தான் லட்சியமா? பெருமையா ?  அவனை யார் என்று அறிந்துகொண்ட ரிஷிகள் ஞானிகள்  பவசாகரம் கடந்தவர்கள். எல்லையற்ற மனத்தூய்மை கொண்டவர்கள். பிரம்மத்தில் லயிப்பவர்கள்.

90. ராமா  என்று அழைத்ததும் எதிரே வந்து நிற்பவன் தான் ராமனா? ஹ்ருதயத்தில் அடிவாரத்தில் உள்ள ஆத்மா அவன். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...