சேஷாத்திரி ஸ்வாமிகள்
''ரயில் விளையாட்டு''
சேஷாத்திரி ஸ்வாமிகளை நம் போன்ற ஹிந்து பக்தர்கள் போற்றி வணங்கி அருளாசி பெற்றதை இதுவரை நிறைய சொன்னேன் அல்லவா. இன்று கொஞ்சம் வித்யாசமான ஒரு சம்பவத்தை பற்றி சொல்கிறேன். ஆச்சரியமாக இருக்கிறது இது.
அப்போதெல்லாம் வெள்ளைக்காரர்கள் நமது நாட்டை ஆண்ட காலம். F.D. பீட்டர்ஸ் என்று ஒரு போஸ்ட் மாஸ்டர் ஜெனரல். மதராஸில் பெரிய உயர் அதிகாரி. அவருடைய மைத்துனர் (மனைவியின் சகோதரன்) அப்போதைய ரயில் இலாகாவில் M.S.M ரயில்வே (மெட்றாஸ் சவுத் மராட்டா) ரயில்வே கம்பெனியில் ஸ்டேஷன்மாஸ்டர். ரயில்வே அதிகாரியான மைத்துன வெள்ளைக்காரனும் அவன் மனைவியும் ( பீட்டர்ஸ் சகோதரி) இருவருமே சேஷாத்திரி ஸ்வாமிகள் மேல் பக்தி உடைய கிறிஸ்தவர்கள்.
அந்த ரயில்வே அதிகாரி மேல் ஒரு கம்பளைண்ட். யாரோ ஒரு குஜராத்தி பணக்காரர் லக்ஷக்கணக்காக மதிப்புள்ள சாமான்களை ரயிலில் அனுப்பி அவை பழுதடைந்து நஷ்டப்பட்டதால் ஒரு பெரிய தொகையை நஷ்ட ஈடாக கோரி ரயில்வே அதிகாரிமேல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த்துவிட்டார். அந்த வழக்கு ஜெயித்தால் ரயில்வே அதிகாரி வெள்ளைக்காரனுக்கு, வேலையும் போய்விடும். பத்தாயிரம் ரூபாய் நஷ்ட ஈடும் கொடுக்கவேண்டும் என்ற நிலை.
ரயில்அதிகாரி வெள்ளைக்காரர் அவருக்கு சாதகமான கணக்கு தஸ்தாவேஜிகளை நீதி மன்றத்துக்கு அனுப்பி வைத்தார். அவரது போறாத காலம் அந்த தஸ்தாவேஜிகள் சரியான நேரத்துக்கு நீதிமன்றம் போய் சேராமல் வழியே எங்கோ காணாமல் போய்விட்டது. அவனுக்கு ஆதரவாக ஆதாரங்கள் இல்லையென்றால் என்ன ஆகும்? வெள்ளைக்காரன் மேல் நீதி மன்றத்துக்கு சந்தேகம் வந்தால் அவ்வளவு தான். அவனுக்கு வேலையும் போய் நஷ்ட ஈடும் கட்ட வேண்டுமே!!
பம்பாயிலிருந்து மதராஸி லிருந்த பீட்டர்ஸுக்கு தந்தி அடித்து அந்த ரயில்வே அதிகாரி வெள்ளைக்காரன் சேஷாத்திரி ஸ்வாமிகளை போய் நேரில் பார்த்து எப்படியாவது அவருடைய அருள் ஆசி பெற வேண்டினான்.
பீட்டர்ஸ் அந்த தந்தி வந்த மறுகணமே தனக்கு கீழே வேலை செய்யும் போஸ்ட் மாஸ்டர் கோவிந்தசாமி அய்யரைப் பிடித்து உடனே திருவண்ணாமலை போய் சேஷாத்திரி ஸ்வாமிகளை பார்த்து விவரம் சொல்லி ஏதாவது உதவி பெற அனுப்பினான். கோவிந்தசுவாமி அய்யர் ரெக்கை இல்லாமலேயே திருவண்ணாமலைக்குப் பறந்தார். எங்கெங்கோ தேடி பகல் இரவு அலைந்து ராத்திரி ஒம்பது மணிக்கு ஸ்வாமிகளை கண்டு பிடித்தார். அவர் காலில் விழுந்தார். விஷயம் சொன்னார்.
ஸ்வாமிகள் காதில் விஷயத்தை வாங்கினாரா இல்லையா என்றே தெரியவில்லை. அவர் கவனம் கோவிந்தசாமி அய்யர் சொன்னதில் இல்லை. ஏதோ எண்ணம், ஏதோ ஒரு செயல் என்பது போல் இருந்தது. ஆனால் கோவிந்தசாமிஅய்யர் சொல்லி முடித்ததும் சிரித்தார்.
''எழுந்திரு. புஸ் புஸ் புஸ், குப் குப் குப் ,ஊ ஊ''. புகைவண்டி ரயில் போவதைப் போல நடித்து சத்தம் போட்டுக்கொண்டே ''அப்படிப் போச்சு, இப்படி வந்தது'' என்று சொன்னார்.
கோவிந்தசுவாமி அய்யர் விவரமான ஆசாமி. சேஷாத்திரி ஸ்வாமிகள் பக்தர். ஸ்வாமிகளைபற்றி நன்றாக அறிந்தவர். அவர் சூக்ஷ்மமாக ஸ்வாமிகள் சொன்னதை புரிந்து கொண்டார். ரயிலில் அந்த தஸ்தாவேஜிகள் சென்றன . அவை தவறாக எங்கோ இறக்கப் பட்டு தவறு கண்டு பிடிக்கப்பட்டு மீண்டும் குறித்த நேரத்தில் நீதி மன்றம் அடைய அடுத்த ரயிலில் விரைவாக பம்பாயிலிருந்து அனுப்பப் பட்டு விட்டன'' என்று புரிந்து கொண்டு அதைப் பற்றி செயதியாக பீட்டர்ஸ்க்கு தந்தியில் செயதி அனுப்பினார். அதை பீட்டர்ஸ் தனது மைத்துனன் ரயில்வே அதிகாரிக்கும் பம்பாய்க்கு தந்தியாக அனுப்பினான்.
ரயில்வே அதிகாரி தனது செல்வாக்கால் உடனே அந்த தஸ்தாவேஜிகள் எங்கே என்று தேட ஆரம்பித்தபோது பீட்டர்ஸ் தானும் தனக்கு தெரிந்த நீதி மன்ற அதிகாரிகள் உதவியை நாட, அவர்கள் அவசியம் அந்த தஸ்தாவேஜிகள் கிடைத்தால் தான் நல்ல முடிவு கிடைக்கும் என்கிறார்கள்.
ரயில்வே அதிகாரி வெள்ளைக்காரன் சேஷாத்திரி ஸ்வாமிகளை நினைத்துக் கொண்டே தேடியபோது அவனுக்கு ஒரு தந்தி வந்தது. '' சாதகமான தஸ்தாவேஜிகள் குறித்த நேரத்தில் நீதிபதிக்கு கிடைத்து விட்டது''
ஆகவே ரயிலில் சென்ற தஸ்தாவேஜிகள் நீதி மன்றத்தை அடைந்து விட்டது. பிறகு என்ன? நீதி மன்றம் ரயில்வே அதிகாரி தனது கடமையை சரியாக செயதிருக்கிறான் என்று நிரூபணம் ஆகி அவன் மேல் இருந்த வழக்கை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. எப்படி ஸ்வாமிகள் தக்க நேரத்தில் உதவி செய்தார் என்று அந்த வெள்ளைக்கார குடும்பம் ஆனந்த கண்ணீர் விட்டது பம்பாயில். ஸ்வாமிகள் சங்கேத பாஷையில் சொன்ன வாசகங்களின் முழு உள்ளர்த்தமும் சரியாக புரிந்தது.
++
இது இன்னொரு விஷயம்.:
ஆனாங்கூர் நடேச முதலியாருக்கு சேஷாத்திரி ஸ்வாமிகள் பற்றி ஒன்றுமே தெரியாது. திருவண்ணாமலை சென்றவர் அங்கே விஷயங்கள் சேகரித்து ஆச்சர்யமடைந்து இப்படி ஒரு மஹான் இருந்தாரென்றால் நிச்சயம் அவரை எப்படியாவது நேரில் சந்தித்து ஆசியும் ஏதாவது ஒரு உபதேசம் பெற ஆவல் அதிகரித்தது. இரவெல்லாம் தேடியும் சந்திக்க முடியவில்லை. மறுநாள் காலை ஆறுமணியிலிருந்து தேட ஆரம்பித்தார். எட்டு மணிக்கு அன்ன சத்திர திண்ணையில் ஸ்வாமிகளைப் பார்த்ததும் புளகாங்கிதம் அடைந்தார் முதலியார். ஸ்வாமிகளிடமிருந்து ஏதேனும் உபதேசம் கிடைக்குமா என்ற ஆதங்கம் உள்ளே நிரம்பி நின்றார்.
ஸ்வாமியை நமஸ்கரித்தார். கை கட்டி நின்றார்.
''என்னடா, ஞானமும் மோக்ஷமும் ஏதோ என்னமோ என்று பிரமிச்சு போகாதே. உன்னையே கிள்ளி பார்த்துக்கோ. எது நித்யம் அது அநித்தியம் என்று உனக்குள்ளேயே கண்டுபிடிச்சு தெரிஞ்சிக்கோ. அப்பறம் நித்ய பரிபூர்ண ஸ்வரூபியாயிடுவே'' .
ஸ்வாமிகள் எப்படி மனத்திற்குள் இருக்கும் விஷயங்களை அறிந்து கொண்டு தெரிந்து கொண்டு பேசுகிறார்? இந்த ஆச்சர்யம் அந்த காலத்தில் ஸ்வாமிகளின் பக்தர்கள் எல்லோருக்குமே இருந்தது.
இதற்கு மேல் என்ன உபதேசம் முதலியாருக்கு தேவை சொல்லுங்கள் ?
அப்படியே சாஷ்டாங்க நமஸ்காரத்துடன் எழுந்தபோது ஸ்வாமியை எங்கே காணோம்? யாருக்கு எங்கே என்ன தேவையோ அங்கே சென்றிருப்பாரல்லவா?
No comments:
Post a Comment