Saturday, September 15, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்        ஜே.கே. சிவன் 
மஹாபாரதம் 
    
                       
     பாசமும்  பயமும் 
                                                          
வைசம்பாயனர் தொடர்ந்து மஹாபாரதத்தை ஜனமேஜயனுக்கு விவரிக்கிறார். ஒவ்வொரு காட்சியும் நேர இருந்து  ரன்னிங் கமெண்ட்ரி மாதிரி கொடுக்கிறார் என்பதால்  ஜனமேஜயனோடு நாமும் அதை ரசிக்க முடிகிறது.  இந்த மாதிரி கதைகள் என்றும் நிலைத்திருப்பது  வைசம்பாயனர் சுகர் போன்ற  அருமையான  ''கதை சொல்லி'' களால் தான். 

அர்ஜுனன்  இந்திரலோகத்தில் இருக்கும்போது  லோமச ரிஷி வந்திருந்தார். அவருக்கு ஒரே  ஆச்சரியம்.    எப்படி ஒரு மானுடன்  இந்திரனுக்கு சமமாக அவனுடைய  சிம்மாசனத்தில்  சேர்ந்து  அமர முடியும்.? 

 அவர் மன ஓட்டம்  இந்திரனுக்கு புரிந்து   ''மகரிஷி   இந்த அர்ஜுனன்  சாமான்ய மனுஷன் இல்லை.  நர நாராயண  ரிஷிகள் பூமியில் அர்ஜுனனாகவும்  ஹ்ரிஷிகேசனாகவும் அவதரித்திருப்பது தான் உங்களுக்கு தெரியுமே''  என்று  ஞாபகப்படுத்துகிறான். 
அடுத்து அவரிடம் ஒரு கோரிக்கை விடுகிறான்.

''லோமச ரிஷி,   நீங்கள்  காம்யகவனம் சென்று யுதிஷ்டிரனை  சந்தியுங்கள். அவனிடம்  அர்ஜுனன் சகல  தேவாயுதங்களுடன்  வரப்போகிற  மகா பாரத யுத்தத்தில் வெற்றி  பெறப்போகிறான். தவிர  தேவலோக  நாட்ய கலையும் பெற்று அது பாண்டவர்களுக்கு  உதவப்போகிறது என்று சொல்லுங்கள்'' என்று இந்திரன் லோமசரிஷியிடம்  சொன்னான்.

''வைசம்பாயனரே,  த்ரிதராஷ்டிரனுக்கு இதெல்லாம்  தெரிந்ததா? என்று ஆவலோடு ஜனமேஜயன் கேட்டான்.
'' ஆமாம் ஜனமேஜயா,  கண்ணில்லாத  அந்த  கிழவன் வருந்தினான்.   தனது மக்களின் துரோகம் அவனை வாட்டியது. எனினும் தனது மகன் துரியோதனன் மற்றும் அவன் சகோதரர்கள் மேல் பாசம் மேலோங்கி நின்றதால்  அவர்கள் அழிவு நிச்சயம் என்று தென்பட்டதும்   துடித்தான். வாடினான்.   அர்ஜுனனோ  துரியோதனனோ  இருவரில் ஒருவர் மரணம் ஒன்றே அமைதியை  மீட்டுத் தரும்  என்ற  நிலை புரிந்தது. ஆனால்  அர்ஜுனைக் கொல்ல  இனி ஒருவர் பிறக்கவேண்டும் என்பதால்  தன்மகன் அழிவது நிச்சயம்  என்று ஆகிவிட்டது அவனுக்கு பெரும் கவலையை கொடுத்தது. பெருமூச்சு   விட்டு தனது கவலையை சஞ்சயனிடம்  கூறினான்.

''மகாராஜா,  நீங்கள்  சொல்வது வாஸ்தவம்.  சபையில்  திரௌபதிக்கு இழைத்த  தீங்கு, கர்ணனின் பேச்சு,  துச்சாதனன் துரியோதனன் ஆகியோரின்  செய்கை  பாண்டவர்களை  ஜன்ம விரோதியாக்கி  விட்டதால்  அவர்கள் பலம்   மேலும் கூடக்  கூட கௌரவர்களின்  நாசம்  நெருங்கிக்கொண்டே  வரும் என்பதில் ஐயம் இல்லை. பரமசிவன்  பாசுபதத்தை அர்ஜுனனுக்கு வழங்கினான் என்றபோதே  இது  சந்தேகமற நிரூபணம் ஆகிவிட்டது '' என்றான்  சஞ்சயன்.

 உங்களுக்கு  பார்க்கமுடியாததால் மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன் மஹாராஜா.  அன்று   துரியோதனன்  தனது  தொடையை   தட்டி திரௌபதியிடம்  ''வா  என் மடியில் வந்து உட்கார்''  என்று  சைகை  செய்தபோது  பீமன் ரௌத்ராவேசமானான்.   அவன் தொடையைப் பிளந்து உதிரத்தை குடிப்பேன் என்று சொன்னது  அது நிச்சயம்   நடக்கப்போகிறது  என்று  பயமுறுத்துகிறது.  உன் மக்கள்  தமது அழிவுக்கு  தாமே  வழி வகுத்துக் கொண்டார்கள்.

''சஞ்சயா,  நான்  விழி இழந்து செயலற்று போனதால் என் வார்த்தை மதிக்கப்படவில்லை. மகாதேவனே  தனது  கரங்களால்  அர்ஜுனனை அணைத்துக் கொண்டான்  என்று அறியும்போது என்ன சொல்வேன்!

திருதராஷ்டிரன் திகைத்து உட்கார்ந்திருந்தான்.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...