நந்திகேஸ்வரனை சந்தித்தேன் J.K. SIVAN
5.9.18 மாலை ஒரு பொன் வேளை . நான் நந்திகேஸ்வரனை சந்தித்தபோது அவர் வயது 95. மாடிப்படியிலிருந்து குச்சி இன்றி, கண்ணாடி, செவிட்டு மெஷின் இன்றி நடந்து வந்தார். ஒரு மணி நேரத்துக்கு மேலாக இருநூறு வருஷ கதைகள் நேரில் காண்பது போல் தொடர்ச்சியாக பெயர்கள் இடங்களோடு ஞாபக பிசகின்றி ப்ரவாஹமாக
நினைவிலிருந்து வந்தது.
நினைவிலிருந்து வந்தது.
தஞ்சாவூர் ம்ரிதங்க மஹாவித்துவான் வைத்யநாதய்யர் எனக்கு ரெண்டு கண்கள் என்று சொன்னது பாலக்காடு மணிஅய்யரையும் சிட்டு என்று (சிட்டுக்குருவி போல சுறுசுறுப்பாக வேகமாக அசையும் கைவிரல்களை கொண்டதால்) அழைக்கப்பட்ட ஸ்ரீ டீ..கே. மூர்த்தி ஐயர்வாளையும் தான். மஹா பெரியவாள் செல்லமாக அழைத்த, (இன்னும் கனவில் அபயஹஸ்தத்தோடு அடிக்கடி தோண்றுகிறாராம்) ஸ்ரீ டீ.கே. மூர்த்தி இன்று சாயங்காலம் கூட குழந்தைகளுக்கு மிருதங்கம் சொல்லி தருகிறார்.
மடிப்பாக்கத்தில் அவர் பெயர் கொண்ட வீதியில் அமைதியான இல்லம். மாடியில் சரஸ்வதி விக்கிரஹம், வாக்தேவி பாதங்களில் ஒரு தட்டில் நிறைய சில்லறை காசு.
இது என்ன, எதற்கு?
''இதுவா, மஹா பெரியவா எனக்கு இந்தா என்று தொட்டுக் கொடுத்தது. ஒன்றையும் விடாமல் பல வருஷங்களாக பூஜையில் வைத்திருக்கிறேன்'' -- அந்த தட்டில் இன்று செலாவணியில் இல்லாத , பார்க்க இயலாத பல காசுகள் இருந்ததை படம் பிடித்தேன்.
''காயத்ரி விடாமல் சொல்லிண்டு வா'' . உனக்கு ஒரு குறையும் வராது'' என்று பெரியவா சொன்னபடி இன்றும் காயத்ரி விடாமல் ஜபம் பண்றேன்'' . இது தான் 95 ரகசியம் போல் இருக்கிறது.
வித விதமான உயரம் பருமன் கொண்ட மிருதங்கங்கள். ''இது நான் MSS க்கு வாசித்தது'' என்று ஒரு மிருதங்கத்தை காட்டினார். அதை MSS அம்மாவை வணங்குவது போல் நமஸ்கரித்தேன். நூற்றுக்கணக்கான கச்சேரிகள் அவர்களுக்கு வாசித்தேன் .அரை நூற்றாண்டுக்கும் மேலாக.'' என்ற போது அவர் குரல் தழுதழுத்தது. இன்னும் வாசிக்க ஆசை. அவர் இல்லையே என்ற ஆதங்கம் தெரிந்தது. கண்கள் பனித்தன. உலகநாடுகள் மன்றத்தில் குறையொன்றுமில்லைக்கு வாசித்தவர் TK மூர்த்தி.
''உலகத்தில் ஒரு கோடி முதல் இன்னொரு கோடி வரை சென்று கச்சேரி செய்திருக்கிறேன்'' என்று அடக்கமாக ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார். அவர் வாசிக்காத மஹா வித்வான்களே இல்லை. ஐந்து ஆறு தலைமுறைகளுக்கு வாசித்த ஒரு மிருதங்க ஜாம்பவான்.
ஒரு பெரிய விஷயம். மஹா பெரியவாவை அடிக்கடி சந்திப்பவர். ஒரு தடவை
''ஏண்டா மிருதங்கம் கொண்டுவந்திருக்கியா?''
''ஆமாம் பெரியவா ''
''வாசியேன் ''
கூட பாடும் திருவெண்காடு ஜெயராமன் வரவில்லை, வாசு வீணை வித்துவான் வரவில்லை. இவர் மட்டும் சீக்கிரம் வந்துவிட்டார். எப்படி வாசிப்பது எந்த கீர்த்தனைக்கு வாசிப்பது?''
''என்ன யோசனை பண்றே, தாளம் பாட்டுக்கு ஆள் இல்லை என்றா? கவலைப்படாதே நானே பாடறேன்''
மஹாபெரியவா ஸ்ரீ சுப்ரமண்யாய காம்போதி ராக தீக்ஷிதர் கீர்த்தனையை அசாத்தியமாக ஸ்வரத்தோடு பாடினார். தாளம் போட்டுக்கொண்டு. மூர்த்திக்கு கேட்கவேண்டுமா. அற்புதமாக கை விரல்கள் சொல் பேசியது.
''மஹாபெரியவளுக்கு அற்புதமான சாரீரம் சங்கீத ஞானம்'' என்கிறார்.
மற்றொரு முறை ''தனி'' வாசிக்க சொன்னபோது உடனே அற்புதமாக வாசித்தவுடன் மஹாபெரியவா மேலே வரச்சொல்லி பூஜை மண்டபத்தில் இருந்து தட்டில் பழம் பால் எல்லாம் எடுத்து வந்தாராம்.
''இது எதற்கு பெரியவா''
''இது என்ன தெரியுமா உனக்கு''
''தெரியாது பெரியவா''
'' இன்னிக்கு நந்திகேஸ்வர பூஜைக்கு எடுத்து வச்சது. உனக்கு தான் எடுத்துக்கோ. நீ தான் நந்திகேஸ்வரன்''
நீ '' மிருதங்க பூஷணம்''
மஹா பெரியவா கொடுத்த விருது அது. நினைத்துப்பார்க்கும்போது மயிர் கூச்செடுக்கிறது என்று இரு கரங்களையும் நீட்டினார் ஸ்ரீ மூர்த்தி.
நமஸ்கரித்து அப்புறம் நிறைய கேட்க வருவேன் என்று சொல்லி விடை பெற்றேன்.
No comments:
Post a Comment