Saturday, September 15, 2018

NOSTALGIA BABUL

புரியாத படம். பிரியாத குரல் J.K. SIVAN

ஒரு இசை மனத்தை மகிழ்ச்சி அடைய செய்வது மட்டும் இன்றி உடல் நோயைக் கூட போக்கும், ராகங்கள் எந்தெந்த நோய்க்கு மருந்து என்று கர்னாடக சங்கீத ஜாபிதாவே இருக்கிறது. என்றும் எல்லோரும் அறிந்த ஒரு சில சினிமா பாட்டுகளும் சக்தி உள்ளவை, நெஞ்சில் இடம் பெற்று மகிழ்ச்சி தருபவை. எத்தனையோ வருஷங்களுக்கு முன்னால் கேட்ட சில பாட்டுகள் இன்றும் நாம் முணுமுணுக்கும்போது மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி தருகிறதே அது ஏன்? சில பாட்டுகள் தெலுங்கு, கன்னடம் ஹிந்தி என்று நமக்கு தெரியாத மொழி பாடல்களாக கூட இருக்கலாம். அப்படியும் ஏன் நம்மை ஈர்த்தது? காரணம் பாட்டின் இசை, பாடும் அபூர்வமான குரல், காட்சி, படம் பிடிக்கப் பட்ட நேர்த்தி, கதையின் வலு எல்லாமே, மனதிற்கு பிடித்த ஒரு காட்சியின் போது பாடியது என்று ஒன்று நிச்சயம் அதன் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கிறது.

60-65 வருஷங்களுக்கு முன்பு சோகப் படங்கள் தான் பெரும்பாலும் ரசிகர்களுக்கு பிடித்து இருந்தது, வசூல் தந்தது, இந்தியா முழுவதும் இது தான் நிலை.

தேவதாஸ், பாசமலர் படங்கள், அம்பிகாபதி, லைலா மஜ்னு போன்ற படங்கள் சக்கை போடு போட்டன. காசு கொடுத்து டிக்கெட் வாங்கி உள்ளே நுழைந்தவர்கள் அழுது கொண்டே வெளியே வந்த காலம் அது. அதற்கும் முன்பு நல்ல தங்காள் போன்ற நாடகங்கள், கூத்துகள். அதற்கும் முன்பு என்னை கேட்கவேண்டாம். எனக்குத் தான் அது தெரியாதே.

௭னக்கு 10-11 வயதில் நியூ க்ளோப் ( அப்போது மவுண்ட் ரோடு, அப்புறம் அண்ணாசாலை ,,, இன்று அது ஒரு ஷாப்பிங் காம்ளெக்ஸ்) சினிமா தியேட்டரில் ''பாபுல்'' என்ற கருப்பு வெளுப்பு இந்தி படம் பெரியண்ணா பிச்சையுடன் (ரத்னம் அய்யருக்கு வீட்டில் இப்போதும் இதே பெயர் தான்) அந்தக்காலத்தில் குழந்தைகள் நீண்ட ஆயுளுடன் வாழ பிச்சை, மண்ணாங்கட்டி, வேம்பு, சோம்பு என்று பெயர் வைப்பார்கள். ''சே, பெயரே நன்றாக இல்லையே. இவன் வேண்டாம்'' என்று எமன் வேறு ஆளைத் தேடுவான் என்று ஒரு நம்பிக்கை)

எங்குபோனாலும் எங்களுக்கு அப்போதெல்லாம் நடராஜா சர்வீஸ் தான். பல மைல்கள் நடந்து போயிருக்கிறோம். மூன்று மணிக்கு மவுண்ட் ரோடு நியூக்ளோப் தியேட்டரில் படம் பார்க்க சூளைமேட்டிலிருந்து உச்சி வெயில் 12 மணிக்கே நடப்போம்.

படத்தில் எல்லோரும் எனக்கு தெரியாத ஹிந்தியில் பேசி சிரித்து அழுதார்கள். செவிடாக பார்த்துக்கொண்டிருந்தேன். ஏதோ ஒரு படம் பார்க்க வாய்ப்பு. அவ்வளவு தான். பாபுல் என்றால் என்ன? பெயரும் அர்த்தமும் இப்போது புரிகிறது. காதல் சோக கதைகளில் சினிமா சாஸ்திர சம்பிரதாய வழக்கப்படி, ஒரு ஆள் ரெண்டு பெண், அல்லது ரெண்டு பெண் ஒரு ஆள், அல்லது ரெண்டு ஆள் ஒரு பெண்.. இப்படி தானே இருக்கும். இந்த கதையில் ஒரு ஆள் ரெண்டு பெண்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு தவிப்பது தான். எட்டு ஒன்பது வயதில் எனக்கு காதல் தெரியாது புரியாது. திலிப் குமார் என்ற தலை கலைந்த, சிரிக்காத, தலைவலி வயிற்று வலி மருந்து விளம்பரத்துக்குப் பொருத்தமான ஹீரோ, அழுதுகொண்டே சிரிப்பார் சிரித்துக்கொண்டே அழுவார் பாடினார்.

அதெல்லாம் சரி,இதில் என்ன சிலாக்யம்? 70 வருஷங்களுக்கு அப்பறம் நினைக்க , ஞாபகம் வைத்துக்கொண்டு எழுத என்ன இருக்கிறது? ரொம்ப ஞாயமான கேள்வி. காரணம் சொல்கிறேன்.

தலத் மஹ்மூத் என்ற தேன் குரல் என்றும் அழியாமல் நேற்று சாயந்திரம் ஒரு வண்டியில் உட்க்கார்ந்திருந்தவரை என் நெஞ்சில் அன்று தான் குடி புகுந்தது,

"அப்பா வீட்டை விட்டு நெஞ்சில் குடி கொண்டவன் வீடு நோக்கி போனேன் , ஆனால் கடைசியில் சாஸ்வதமான வீடு நோக்கி போகிறேன் ,,,chodu babul kaa gar,,,!

கதாநாயகி கனவில் வந்த கருப்பு உடை க்காரன் வெள்ளை குதிரை மேல் வந்து தூக்கிக் கொண்டு போகும்போது பேய்க்காற்று வீசி, விளக்கு சாய்ந்து அணைந்து நர்கீஸ் திலீப் குமார் தோளில் சாய்ந்து மெல்லிய சோக குரலில் தலத் பாட அவள் இறக்கும் கடைசி நிமிடங்கள் மஹமத் ரபி குரலில் இணைந்து கருப்பு போர்வை ஆள் ""வீட்டுக்கு போகிறேன் " என்று பாடும்போது படம் மனதை பிழிந்து விட்டு முடியும், அந்த காட்சி யூட்யூபில பார்த்து இணைத்துள்ளேன்,எப்படி இருக்கு???

இன்னும் சில படங்கள் பற்றியும் நினைத்துப் பார்த்து சொல்லுகிறேன் இது பிடித்திருந்தால்.

https://youtu.be/LEPyr3ceec8

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...