நள சரித்திரம் 1 J.K. SIVAN
நளன் ஒரு நல்ல நிஷத நாட்டு ராஜா. மக்களை நன்றாக அன்போடு ஆண்டு நன் மதிப்பை பெற்றவன். நிஷத ராஜ்யம் செழிப்பானது. அந்த அழகான நல்ல ராஜா நளனுக்கு கல்யாணமாகவில்லை. ஆகவே சுகமாக இருந்தான். அப்புறம் ஒருநாள் ஆரம்பித்தது சோதனை. நளனின் அரண்மனைக்கு ஒரு பிராமணர் வந்தார். விதர்ப தேசத்து ராஜாவுக்கு ஒரு கிளிமாதிரியான பெண் தமயந்தி என்ற பெயரோடு இருக்கிறாள் என்று அவள் அழகை விவரித்தபிறகு நளனின் மனதில் தமயந்தியை தவிர வேறு யாருக்குமே இடமில்லாமல் போனது. அவளைப் பார்க்க துடித்தான். பார்க்கிறான். அவளும் நளனை விரும்புகிறாள். அப்பறம் என்ன . தமயந்திக்கு ஸ்வயம்வரம் . கல்யாணம். ரெண்டு குழந்தைகள். அப்புறம் ஒருநாள் யுதிஷ்டிரன் போல் நளனும் சொக்கட்டான் ஆடி நாடு வீடு எல்லாம் இழந்து காடு போகிறான். சனீஸ்வரன் அங்கும் அவனை விடவில்லை. பிள்ளைகள் மனைவி எல்லாரையும் விட்டு நடு இரவில் கட்டின துணியோடு ஓடுகிறான். உருமாகிறான். காசி ராஜாவுக்கு தேர் ஓட்டுகிறான். தமயந்தி எப்படியோ அம்மா வீட்டுக்கு போகிறாள். தமயந்திக்கு மறு கல்யாணம் என்று சேதி வந்து காசி ராஜா அவளை மணக்க ஸ்வயம்வரத்தில் பங்குகொள்ள விதர்பா போகிறான். தமயந்தி கெட்டிக்காரி ஒரு பிளான் போட்டு நளனை அவளிடம் வரவழைத்து அப்புறம் அவனுக்கு சனி தசை நீங்கி மீண்டும் அவன் மறுபடியும் சொக்கட்டான் ஆடி இழந்த ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று எல்லோரும் மகிழ ராஜாவாகிறான். எல்லோரும் சௌக்கியம். சுபம். சுபம் இது கதைச் சுருக்கம்.
இந்த நளனின் சரித்திரம் படித்தால் சனி தோஷம், தொந்தரவு விலகும். சனீஸ்வரனே ''நான் அவர்களை விட்டு விடுவேன்'' என்று சொல்லி இருக்கிறான்.
காம்யகவனம் சென்ற ரிஷி விருஹதஸ்வர் யுதிஷ்டிரன் தன்னை நல்லமுறையில் வரவேற்க முடியவில்லையே என்று வருந்தியபோது அவனுக்கு ஆறுதல் சொல்கிறார்.
''யுதிஷ்டிரா, கவலைப்படாதே. உன் நிலை புரிகிறது. உன்னைப்போலவே வீரசேனன் என்று நிஷத மன்னன் மகன் நளன் என்று ஒருவன் இருந்தான். உன்னைப்போல அவனும் தர்மம் சத்யம் தவறாதவன். நல்ல ராஜா, சொக்கட்டான் ஆடி நாட்டை மனைவியை எல்லாம் இழந்து மீண்டும் பெற்று சுபிக்ஷமாக வாழ்ந்தான். நீயும் எல்லாம் மீண்டும் பெறுவாய். காலம் வெல்லும். பொறுத்திரு '' என்கிறார.
''ஓ அப்படியா. யார் அந்த நளன் . அவனைப் பற்றி சொல்லுங்கள்'' என்கிறார் யுதிஷ்டிரன்.
ராஜா வீரசேனன் பிள்ளை நளன். துரதிர்ஷ்டம் அவனையும் பிடித்தது. நளன் உண்மை பேசுபவன். புஷ்கரன் என்பவனிடம் ஏமாந்து எல்லாவற்றையும் இழந்து காட்டில் மனைவியோடு வசித்தான். அவனுக்கு,தேரோ, உதவியாளர்களோ, சகோதரர்களோ யாரும், எதுவுமில்லை.' நளன் உன்னைப் போலவே உண்மையே பேசுபவன். அவனுக்கு பகடைக் காய் ஆட பிடிக்கும். விதர்ப நாட்டின் பீமன் என்கிற அரசனுக்கு தமயந்தி என்று ஒரு அழகிய மகள். நளனும் தமயந்தியும் ஒருவரை ஒருவர் பற்றி அறிந்து மையல் கொண்டனர். ஒரு அன்னம் தூது சென்றது. அவர்களது மனக்கிடக்கையை புரிய வைத்தது. அன்னம் விவரித்ததில் மயங்கி மணந்தால் தமயந்தியையே என்று நளனும் நளனே என் உயிர் என்று தமயந்தியும் முடிவெடுத்தனர்.
பீமராஜன் தன் பெண் தமயந்திக்கு ஸ்வயம்வரம் வைத்து நல்ல கணவனாக தேர்வு செய்ய ஏற்பாடுகள் நடந்தது.
இந்த கால கட்டத்தில், இந்த்ரலோகத்தில் நாரதர் இந்திரனை சந்தித்தார். திரிலோக சஞ்சாரி எனவே அவருக்கு பூமியில் தமயந்தி அழகும் அவளுக்கு ஸ்வயம்வரம் நடக்கிறது. எல்லா தேசத்து ராஜாக்களும் போட்டா போட்டி போட்டு தனக்கே தமயந்தி என்று கனவு காண்கிறார்கள் என்ற விவரமெல்லாம் அத்துபடி. இந்திரனிடம் பூரா விஷயம் கொட்டிவிட்டார்.
'அவ்வளவு அழகா தமயந்தி? என்றான் இந்திரன். அவனருகே அக்னி, அஷ்ட திக் பாலகர்கள் இதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
''நாமும் போவோம். ஸ்வயம்வரத்தில் கலந்து கொள்வோம்'' என்று முடிவெடுத்தனர். நளன் தேரோட்டுவதில் நிபுணன். பேரழகன்.
நளனைப் பார்த்த இந்த்ராதி தேவர்கள் ''நளா , உன்னை ஒரு உதவி கேட்டு வந்திருக் கிறோம். உதவுகிறாயா?'' என்றபோது நளன் தேவர்களே வந்த கேட்கும்போது எப்படி இல்லை என்று சொல்வது என கருதி ''ஆஹா அதற்கென்ன உதவுகிறேனே என்றான்''
''நளா, பீமராஜன் புத்ரி தமயந்தி கொள்ளை அழகியாம். அவளை மணக்க ஸ்வயம் வரத்தில் நாங்கள் தேவலோகத்திலிருந்து வந்திருக்கிறோம். உனக்கு தமயந்தியை நன்றாக தெரியுமாம். நீ எப்படியாவது அவளிடம் எங்கள் விருப்பத்தை சொல்லி எங்களில் ஒருவரை கணவனாக தேர்ந்தெடுக்குமாறு சொல்லவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
''தேவாதி தேவா, நானே தமயந்தியை விரும்புகிறேன். உங்களை எவ்வாறு சிபாரிசு செய்வேன்''
''இதோ பார் நளா , நான் இந்திரன், இது அக்னி, வருணன், யமன்.எங்களில் ஒருவரை அவள் மணக்கவேண்டும் என்று விரும்புகிறோம்.'' நீ உதவுகிறேன் என்று சொல்லிவிட்டு பின் வாங்குவது முறையாகுமா?'' என்றான் இந்திரன்.
"பீமராஜன் கோட்டையில் காவல் அதிகம். நான் எப்படி உள்ளே செல்வேன்.?'' என்றான் நளன் .'
' உன்னை யாரும் பார்க்க முடியாது. நீ எளிதில் உள்ளே புகமுடியும். செல். ''
நளன் தமயந்தியை தோழியர் மூலம் சந்திக்கிறான். அவன் யார் என்று அறிகிறாள். மகிழ்கிறாள். ''தமயந்தி நான் ஒரு சேதி சொல்பவனாக தான் இப்போது வந்திருக் கிறேன். தேவர்கள், இந்திரன், வருணன், அக்னி, யமன் ஆகியோர் உன்னை மணக்க ஸ்வயம்வரத்திற்கு வரப்போகிறார்கள். அவர்களில் ஒருவரை நீ தேர்ந்தெடுத்து மணக்க வேண்டும் என்பது அவர்கள் விருப்பம். அதைச் சொல்ல என்னை அனுப்பியிருக் கிறார்கள்.
''நான் உங்களைத்தான் மணப்பெண். இல்லையென்றால் இறப்பேன்.''
''பெண்ணே தேவர்கள் என்னிலும் சக்தி, வசீகரம், கம்பீரம், பதவி, உள்ளவர்கள். நான் அவர்களுக்கு ஈடல்ல. மற்றும் அவர்களை விரோதித்தால் என் உயிரும் இருக்காது. எனவே அவர்களில் ஒரு தேவன் உனக்கேற்றவன். யார் என்று நீயே முடிவெடு.''
''நடக்காது. அவர்களை அழைத்துக்கொண்டு நீங்களும் வாருங்கள். அனைவரிலும் உங்களை நான் தேர்ந்தெடுப்பதில் அவர்கள் குறை சொல்லமுடியாதே. எனது தேர்வு அல்லவா இது. அவர்களுக்கும் ஸ்வயம்வரத்தில் அமர வாய்ப்பு கொடுப்போம். ஆனால் முடிவு எனது''
நளன் திரும்பினான். தேவர்கள் காத்திருந்தார்கள்.
No comments:
Post a Comment