மனக்குமுறல் -- J.K. SIVAN
''வள்ளுவர் சொன்ன தன் மகன் சான்றோன்'' எனக் கேட்ட தாய் சந்தோஷப்படுவது ஒரு பக்கம் இருக்கட்டும். குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்து கண்ணெதிரே இறப்பதை ஒரு தாய் கண்ணீரோடு பார்க்கிறாள். எப்படியோ ஒரு குழந்தை அழகாக இல்லை, வெகு வெகு அழகாக பிறந்து, பிறந்த மறுகணமே அது அவளை விட்டு புரியவேண்டும். ஏன்? எதற்கு? காரணம்: அதுவும் சாகக்கூடாதே. உயிர்தப்பவேண்டும். அது எங்கேயோ தன்னை பிரிந்து தான் உயிர் தப்பவேண்டும் என்றால் அது அருகில் இருக்கவேண்டும் என்ற ஆசையை, பாசத்தை, பந்தத்தை முதலில் கொல்லவேண்டும் என்று புரிந்த ஒரு தியாகத் தாயை பற்றி சற்று நினைப்போம்.
எல்லோரும் உலகமுழுதும் இன்று ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லோரும் கொண்டாடும்போது அவனைப் பெற்ற அந்த தெய்வத்தாய் அவன் உயிரோடு இருப்பதை கூட வெளிவிடமுடியாத மௌனத்தை அனுஷ்டிக்கிறாள். ஆயிரம் வருஷங்கள் நாம் பின்னோக்கி அவள் இருக்கும் மதுரா நகர சிறைச்சாலைக்குள் செல்வோம். அவள் மனதில் சுனாமி எழும்புகிறது.
அவள் சிறையில் கணவனோடு தவிக்கிறாள். சிறை வைத்ததே அவள் பிரிய சகோதரன் தான். அவள் குழந்தைகளை இதுவரை கொன்றதும் அவன் தான்.
சரி அவள் மட்டுமா உண்மையிலேயே சிறையில் இருந்தாள்..அவள் அருகில் நாம் இப்போது நிற்கிறோம். தேவகியின் கண்களில் நீர். வாய் முணுமுணுக்கிறாளே, காதில் விழுகிறதா ?
''நான் மட்டுமா சிறையில் இருக்கிறேன். என் அருமை மகனும் தான். அவன் எங்கோ, நான் இங்கே. தாயும் மகனும் நாங்கள் இருப்பது வேறு வேறு சிறைகள். நான் இருப்பது இந்த கல்லால் கட்டிய சிறை. அவன் இருப்பது என் உள்ளம் எனும் என் மனச் சிறை.
உடல் தான் இங்கிருந்ததே தவிர மனசெல்லாம் என் என் மனம் பூரா, அவன் மேலேயே இருக்கிறதே. பாவி, நான் கொடுத்து வைக்காதவள். என் கஷ்டம் இனி வேறெவருக்கும் வரவேண்டாம். தனியளாகி விட்டேனே. இருந்தும் இல்லாதவளாகினேனே. இந்த தாய்க்கு ஏழும் பிறந்து ஒட்டாமல் போனதால் எட்டாவதாக நீ பிறந்து எங்கோ வாழ்ந்து எனக்கு எட்டாதவனாகவே போய் விட்டாயோ?. கிட்டா என்று உன்னை கூப்பிடுவது கூட நீ எட்டாமலே இருப்பதாலா, கிட்டாமல் இருப்பதாலா?
அவனை பற்றி அவன் விஷமங்களைப் பற்றி, அவன் நண்பர்களை பற்றி அவன் விரும்பியவற்றை பற்றி, அவன் சாகசங்களை பற்றி நிறைய நிறைய கேட்கவேண்டும் போலவே இருக்கிறதே.
எங்கும் எதிலும் அவனையே நான் நினைத்துகொண்டிருக்கிறேனே தவிர அவனை நெருங்க முடிய வில்லையே!!. இது கொடுமையிலும் கொடுமையல்லவா? ஒவ்வொரு முறையும் அவன் பற்றிய ஏதாவது செய்தி வராதா என்று கண்ணிமைக்காமல் காத்திருந்தே என் வாழ்க்கை முடியப் போகிறதா?.
எங்கிருந்தாலும் அவன் நன்றாகவே வளரட்டும் வாழட்டும், நீண்ட நாள் இருக்கட்டும்.(தாயின் ஆசிர்வாதம் பலித்தது. கிருஷ்ணன் 125 வயது வரை வாழ்ந்தான்). அவனை இரவும் பகலும் காத்து வளர்ப்பவர்கள் யாரோ, அவர்கள் நன்றாக இருக்கட்டும். நான் செய்யத் தவறியதை, செய்ய கொள்ளை ஆசை இருந்தாலும் செய்ய முடியாததை, யாரோ எங்கோ செயகிறார்களே. எத்தனை கோடி நன்றி சொல்லுவேன் அவர்களுக்கு?
அவன் சந்தோஷம் ஒன்றே என் சந்தோஷம். நான் துக்கப்படுகிறேனோ? ஏன்? எதற்கு? இந்த துக்கத்துக்கு அவசியமே இல்லை. அவன் தான் எங்கோ ன்றாக வளர்கிறானே. விளையாடுகிறானே. குழல் நன்றாக ஊதுகிறானாம்!. பசுக்கள் கன்றுகள் எல்லாம் கூட அவன் பின்னாலேயே அவன் குழலோசையில் மயங்கி அவனை தொடர்கின்றனவாம். முழு கிராமமும் கூட்டமாக கோபியர்கள் கோபர்களாக கூடி அவன் அருகில் சிலையாக நின்று அவன் இசையில் மூழ்கு கிறார்களாமே. நான் தான் காதிருந்தும் செவிடாயிற்றே. என்று எங்கு எப்போது என் மகன் அவன் குழலோசையை கேட்பேன்? ஊருக்கும் பேருக்கும் தான் நான் பெற்ற தாய். ஆனால் உண்மையில் நான் தான் ''மற்ற தாய்'' விட்டேனே. ஊருக்கு தான் நான் பத்து மாதம் சுமந்த தாய். அவன் குரல் கேட்காத செவிடி அவனை காணாத குருடி. ஆனால் இதெல்லாம் உன்னைப்பற்றி காது குளிர கேட்கும்போது நான் ''ஈன்ற பொழுதைவிட பெரிதும் உவக்கும் தாய்'' என்பது சர்வ நிச்சயம்.
தேவகி குமுறினாள் குமைந்தாள்.
கண்ணன் அவள் குறை தீர்க்க தீர்மானித்து விட்டானே.
“ பொறுத்திரு தாயே காலம் கை கூடி வரப்போகிறது. உன்னை சிறை மீட்பேன். உனக்கு சிறைவாசம் சிறிது காலம் தானே. ஆனால் நான் தான் உன் மனச்சிறையில் என்றுமிருப்பேனே. எனக்கு அதிலிருந்து விடுதலையே வேண்டாமே, திருப்தியா?'' என சங்கல்பித்தான் கண்ணன்.
No comments:
Post a Comment