Wednesday, September 12, 2018

RASA NISHYANDHINI

ரஸநிஷ்யந்தினி                                           J.K. SIVAN 
பருத்தியூர்  கிருஷ்ண ஸாஸ்த்ரிகள்

                       ராமனைத் தெரியுமா?


மிகவும் ரசித்து படித்த ஸ்ரீ பருத்தியூர் பெரியவா  கிருஷ்ண சாஸ்திரிகளின்  ரஸநிஷ்யந்தினி  இந்த கட்டுரையுடன்  பூரணம் பெறுகிறது.

ராமன்  சாக்ஷாத் பரமாத்மா.   கண்ணுக்கு விருந்தானவன். இதை  ஸ்ரீமத் ராமாயணத்தின் அற்புத வாக்கியங்கள் நிரூபிக்கிறதே.  ராமம் என்கிற வார்த்தை ராம  என்ற நாமத்தில் உதித்தது. எல்லாவற்றையும் மகிழ்விக்கும் மந்திரச் சொல். புனிதத்தின் உற்பத்தி ஸ்தலம். தாரக மந்திரம். யோகிகளின் மனதில் எப்போதும் வசிக்கும் நாமம். சதானந்தம் தரும் ஞான வடிவம்.
ராமன் சத்ய பராக்ரமன். அப்படியென்றால்?  நேர்மைக்கும் நன்மைக்கு மட்டுமே  தனது ஈடிணையற்ற சக்தியை வீரத்தை செலுத்தி அக்கிரமம், அநியாயம்  அநீதி எல்லாம் அழிப்பவன். சத்யம்  என்கிற வார்த்தை அவன் சொன்ன வார்த்தை தவறாதவன் என்பதை வலியுறுத்துகிறது. ''ஓக்க மாட்டா'',    ''ஓக்க பாணம் '' என்பார்களே அது.  ஏதோ ஒரு பத்து அம்பு விட்டால் ஒன்றாவது எதிரிமேல் பட்டு கீழே விழமாட்டானா என்கிற சமாச்சாரம் எல்லாம் கிடையாது.  இவனைக் கொல்வேன்  என்று ராமன் முடிவெடுத்தால், அடுத்த கணம் அவனது ஒரே ராமபணம்  எவ்வளவு சக்திவாய்ந்தவனாக  எங்கே ஒளிந்து கொண்டு இருந்தாலும் எதிரியை தேடி பிணமாக்கிவிடும்.

ராமன் ஒரு முறை சொல்வது போல் ஒரு ஸ்லோகம்:  

''சந்திரனின் நிலவொளி சந்திரனை கை விடலாம், பனிமலையான ஹிமாச்சலத்தை விட்டு பனி நீங்கி அது மொட்டை பாறையாகலாம். ஆனால்  என் தந்தை தசரதனுக்கு  நான் கொடுத்த வாக்கு நிறைவேறாமல் போகவே போகாது.''

''ஹே  லக்ஷ்மணா,  என்னருமை சீதா உங்களையே என் உயிரோடு சேர்த்து நான் தியாகம் செய்யவேண்டியிருந்தால் அது நடக்கும்,  ஆனால் பிராமணர்களுக்கு நான் கொடுத்த வாக்
கிலிருந்து  பின் வாங்க மாட்டேன்''

தசரதன் ராமனைப்பற்றிய முழு உண்மை மறந்தவனாக, அறியாதவனாக அவன் வயதை மட்டும் அனுமானித்து சிறுவன் எப்படி ராக்ஷஸர்களை எதிர்கொள்வான் என்று கலங்கியபோது விஸ்வாமித்ரர் இதெல்லாம் எடுத்துச்சொல்லி தசரதனை  அஞ்ஞானத்திலிருந்து தட்டி எழுப்புகிறார்.

ராமன் துஷ்ட நிக்ரஹன்,  தீயவர்களை, எதிரிகளை இரக்கமின்றி கொல்பவன் . சிஷ்ட பரிபாலனன், சாதுக்களை, ரிஷிகளை, நல்லவர்களை  காப்பவன். காக்கும் கடவுள் அல்லவா அவன்? என்று ஞாபகப்படுத்துகிறார். நல்லவர் முன்  அவன் அடங்கி ஒடுங்கி நிற்பவன். கோபமற்ற   சாந்தஸ்வரூபி.
அடியார்க்கு அடியான்.  தனது பக்தர்களை  விரும்பி சேவை செய்பவன். பக்தவத்சலன்.

''தசரதா , நீ இப்போது உன் ராமனை என்னோடு அனுப்பவில்லையென்றாலும், அவன் தானே தக்க நேரத்தில் அந்த கொடிய ராக்ஷஸர்களை வலிய  தேடிப்போய் சம்ஹாரம் செய்யப்போகிறவன்''  என்கிறார் விஸ்வாமித்ரர். தேவர்களுக்கு  ''உங்களை அரக்கர்கள் கொடுமையிலிருந்து காப்பது என் கடமை'' என்று வாக்கு கொடுத்தவன்  சும்மாவா இருப்பான்? பக்தர்கள் ஒரு அடி எடுத்து அவனை நோக்கி நகர்ந்தால்  அவன் பத்து அடி அவர்களை நோக்கி ஓடி வருபவன்.  ஞானிகளின்  தாசன், விரும்பி (FAN) அவன்.   நான்  விஸ்வாமித்ரன், அகிலமே என்னை விரும்புபவன், நான் அந்த ராமபக்தன். நீ அனுமதிக்க வில்லையென்றாலும் ராமன் என்னை கைவிடமாட்டான்.'' என்கிறார் விஸ்வாமித்ரர்.

''எனக்கு என் பக்தர்கள் என்னை விட உயர்ந்தவர்கள். இருந்தும் ஞானிகள் என் ஆத்மா'' என்கிறான் ராமன்.பல பிறவிகளுக்கு பிறகே ஞானிகள் என்னை அடைபவர்கள். உத்தமர்கள். அபூர்வர்கள். அவர்களை நான் மிகவும் நேசிப்பவன். விட்டுவிடுவேனா? என்று கிருஷ்ணனாகவும் சொன்னவன் அவன்.

''சத்யபரா''   மஹா லக்ஷ்மியை குறிக்கும்.  அவள் வில்வ வனத்தில் வசிப்பவள். கடம்பமலரில் காண்பவள். தெய்வீகமானவள். யானை, உயர்சாதி  குதிரை, தேரின் மீது, கோபுர கலசத்தின் மேல், ஸ்வாமிக்கு பிடிக்கும் குடை மேல், ஆடை, சங்கு, பசுக்களிடம், தாமரை மலர், கொடிகளிடையே, ராஜாக்கள் அரண்மனையில்,  கங்கை நதியில், கம்பீர புருஷர்களிடம், மஹாவிஷ்ணுவின் வக்ஷஸ்தலத்தில்  எல்லாம் காணப்படுபவள்.  அவன் ராமனாக அவதரித்தபோது அவள் சீதையாக அவனோடு இணைந்தவள். அவன் கிருஷ்ணனாக வந்தபோது அவள் தான் அவனது ருக்மிணி. அவன் பெண்ணானால் அவள் ஆணானவள். அவன் மானுடன் என்று உருவெடுத்தால் அவள் சாதாரண மனுஷி. தசாரதா, அவன் உன் மகன் ராமனாக இங்கே பிறந்தவுடனே அவள் மிதிலையில் ஜனகனுக்கு மகள் சீதையாக பிறந்துவிட்டாள் . அவள் பிரிந்தால் அவன் தேடிச்சென்று அவளை பெறுபவன். அவள் அவனது நவநிதி.  இந்த தெய்வீக தம்பதிகள் பற்றி நான் நன்கு அறிவேன்.

நளன் தமயந்தி கதையில் ஒரு அன்னம் தூது வருமே  அதுபோல் அவர்கள் இருவர் சேர்வதற்கு நான் உன்னிடம் தூதனாக வந்தவன்.எனக்கு  இந்த வேலை தந்தவர்களே அவர்கள் தான்.   நான் உன்னை ராமனை என்னோடு அனுப்பு என்றது என் யாகத்தை பாதுக்காக்க என்று சொன்னேன் அல்லவா?அவனால் தான் அது முடியும் என்று அவனே அறிவான். இது அல்ல சரியான காரணம். இதன் மூலம் அவன் இரண்டு காரியங்களை முடிப்பதற்கு தான். ஒன்று  என் யாகத்தை தடை செய்யவரும் அரக்க அரக்கியரை கொல்வது.மற்றொன்று  அப்புறம் மிதிலையை அடைந்து அவனது மஹாலக்ஷ்மியை சந்திப்பது.  பராக்கிரமத்தால்  அவளை அடைவது.  அவன் சத்யபராவை  அடையவேண்டாமா?

தசரதா  ''சத்ய' என்பது  சத்யலோகத்தை குறிக்கும். அது பிரம்மலோகம்.ராமனாகிய  விஷ்ணு வசிக்கும் வைகுண்டம் சத்யலோகத்தை விட மேலானது.  நீ ராமன் இங்கே  பூலோகத்தில் வசிப்பவனாக எண்ணுகிறாய். அவன்  வைகுண்டவாசி.

''சத்ய' என்கிற சொல்  கடந்த, நிகழ், எதிர்காலங்களை கடந்த சாஸ்வத உண்மையைக் குறிப்பது. மாறுதல் இல்லாதது. மாயை அல்ல.  ராமனாகிய நாராயணன்  உள்ளும் வெளியும் கடந்து பரந்து அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாசன்.

வசிஷ்டன் சொன்னால் தசரதன் ஏன் கேட்பான் என்பதற்கு லொரு அற்புத வியாக்கியானம் கொடுக்கிறார் ஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண ஸாஸ்த்ரிகள் .

''உன்மகன் ராமனை என்னோடு அனுப்பு''  என்று ரிஷி விஸ்வாமித்ரர் சொல்லும்போது சரி அனுப்பு என்று வசிஷ்டர் சொன்னால் அதற்கு என்ன அர்த்தம். ஒரு ரிஷியின் வார்த்தையை மற்றொரு ரிஷி ஆமோதித்து ஒப்புக்கொள்வதாகும். ஒரு ரிஷி மற்றவரின் தவறான பொய்யான கூற்றை ஆமோதித்தால் அவர் இது வரை சம்பாதித்த  யோக, தவ சக்தி , ஆத்மபலம், அவரை விட்டு போய்விடும். எனவே நிச்சயம் வசிஷ்டர் தவறான கருத்தாக இருந்தால் ஒப்புக்கொள்ளவே மாட்டார்.

வசிஷ்டரும் விஸ்வாமித்ரரும் அப்படி ஒருவர் கருத்தை ஒருவர் ஏற்பவர்கள் அல்லர். ஹரிச்சந்திரன் கதையில் அவனது சத்யத்தை எவ்வளவு சோதனைகள் மூலம் படுத்தியவர் அவர்.  விஸ்வாமித்ரர்  அக்னி சூடானது என்றால்  வசிஷ்டர் அக்னி எவ்வளவு குளிர்ந்தது என்று சாஸ்த்ரப்ரமாணம் நிரூபிப்பவர்.  அவரே  ''தசரதா உன் மகனை விஸ்வாமித்ரரோடு அனுப்பு என்று ஆமோதிப்பதால்  அவருக்கு  ராமனின் சக்தி அவன் யார் என்று தெரியும். விஸ்வாமித்ரர் கூறுவது அனைத்தும் சத்யம் என்றும் அறிவார்.  விஸ்வாமித்திரரின் கோரிக்கை தவறானது என்றால் உடனே வசிஷ்டர்  ராமனை அனுப்புவதை நிராகரித்திருப்பார்..  ஆகவே அவரும் அனுமதித்தபின் தசரதன் ராமனை காட்டுக்கு விஸ்வாமித்ரரோடு கவலையின்றி அனுப்புகிறான்.
    
ஒவ்வொருவனும் தனது வார்த்தையை பொறுப்பின்றி அள்ளி வீசக்கூடாது. தன்னால் எது முடியும்என்று அவனுக்கு தைரியமாக நம்பமுடிகிறதோ அதை சொல்லி அப்படிச்சொன்ன வார்த்தையிலிருந்து பிறழக்கூடாது என்ற பாடத்தை ராமன் போதிக்கிறான். உண்மை சத்யம் என்ற வார்ததை பலமிழந்து, பொலிவிழந்து, வெற்று வேட்டாக நாம் ஆகிவிடக்கூடாது என்று இந்த நீதி  கற்பிக்கிறது.

பருத்தியூர் பெரியவா சிறந்த குரு மட்டுமல்ல. குருபக்தி  சிகாமணி.தனது குருக்களாக  சேங்காலிபுரம் முத்தண்ணா என்ற வைத்யநாத தீக்ஷிதர், மன்னார்குடி பெரியவா  என்கிற  ராஜு சாஸ்திரிகள் இருவரையும் தெய்வமாகி போற்றி அவர்கள் உபதேசங்களை பின்பற்றியவர். தனது குருவின் ஆராதனை தினம் அன்று  தைமாதம், க்ரிஷ்ணபக்ஷம் துவாதசி அன்று  11.2.1911  குடவாசலில்  தனது புத்ரன் க்ரஹத்தில் ப்ரம்ம கபாலம் வெடித்து சித்தி அடைந்தவர்.  இப்படிப்பட்ட மஹான்கள் பலர் நமக்கு தெரியாமலே வாழ்ந்து இன்னும் நம்மை  நாம் அறியாமலேயே ஆசிர்வதிக்கிறார்கள்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...