Thursday, August 30, 2018

YATHRANUBAVAM



தேப்பெருமா நல்லூர் -  J.K. SIVAN 













தமிழகத்தில் பிறந்து வளர்ந்து வாழும் நாம் மிகவும் பாக்கியசாலிகள். கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். இந்த தேசமே கோவில்களால் நிரம்பியது. போட்டி போட்டுக்கொண்டு எத்தனையோ வம்ச ராஜாக்கள் கட்டிய கோவில்கள் இருந்தன. அவற்றில் பல வடக்கே மதவெறியர்களால் மறைந்தன. ஏதோ யார் செய்த புண்யமோ அந்த அளவுக்கு தெற்கே வெளி வெறியர்களால் நாசமாகாவிட்டாலும் ஆபத்து நம்மை விட்டு இன்னும்  நீங்கவில்லையே.

உள்ளூர் மாலிக் காபூர்கள் போதுமே.  இது வேறு தினுசு  ஆபத்து.  கொடியது.  உடன் பிறந்தே கொல்லும் வியாதி. கொஞ்சம் கொஞ்சமாக கோவில்கள், நிலங்கள், குளங்கள்,அக்ரஹாரங்கள் எல்லாமே கழுதை தேய்ந்து கட்டெறும்பாகும் கதை. குறைந்ததா மறைந்ததா? எந்த வார்த்தையை உபயோகிப்பது என்று தெரியவில்லை, ஏனென்றால் அந்த 'அரிய' கைங்கர்யம்  தொடர்ந்து  பகல் கொள்ளையாக  நடந்து வருகிறதே!

இந்த நிலையில் ஒரு சில ஆலயங்களை மக்களே முன்னின்று சீரமைத்து, புனருத்தாரணம் பண்ணி, ஸம்ப்ரதாயமாக, காலம் காலமாக நடந்த கைங்கர்யங்களை தொடர்ந்து நடத்தி வருவதால் மே ஜூன் மாதங்கள் கூட துளியூண்டு  மழையைப் பார்க்க முடிகிறது.

ஒரு கிராமத்தின் சிறிய பகுதி தான் அக்ரஹாரம். 'அக்ரம்'' என்றால் முதல் என்றும் நுனி என்றும் அர்த்தம் உண்டு. தெருவின் கிழக்கு மேற்காக ரெண்டு நுனியில் கிழக்கே சிவன் கோவில், மேற்கே விஷ்ணு சந்நிதிகளும் இருப்பது வழக்கம். அதை வைத்தே திசையை கண்டுபிடிக்கலாம்.

கும்பகோணத்திலிருந்து  6 கி.மீ. தூரத்தில்  திருநாகேஸ்வரம்.  ரயில் நிலையம் உண்டு. 
  திருநாகேஸ்வரம் (ராகு ஸ்தலம்) நாகேஸ்வரன் சிவஸ்தலம். பக்கத்திலேயே தென்னாட்டு திருப்பதியான ஒப்பிலியப்பனின்  திருவிண்ணகரம். திவ்ய தேசம். நேர்வடக்காக 2 கி.மி தொலைவிலும், கும்பகோணம்- மயிலாடுதுறை பேருந்து தடத்தில் கும்பகோணத்திலிருந்து 5 கி.மி தூரத்தில் அம்மாச்சத்திரம் என்ற பைரவர் தலத்திற்கு தெற்காக 3 கி.மி தொலைவிலும் அமைந்துள்ளது. 

 அங்கிருந்து  பொடிநடையாக ஒரு கி.மீ. தூரம் நடந்தால் வருவது அஷ்ட சஹஸ்ர (எண்ணாயிரவர்) பிரிவை சேர்ந்த பலர் வாழ்ந்த, இன்னும் சிலர் வாழும்,  ஒரு அருமையான கிராமம் தேப்பெருமாநல்லூர். சைவ வைணவ பேதமே கிடையாது. இங்கே பெருமாள் ஸ்ரீ லட்சுமி நாராயணன். ராஜமான்யம் பெற்ற ஸ்தலங்கள் மங்கலம்//நல்லூர் என்று அழைக்கப்படும். பெருமாள் பெயரால் இந்த ஊர் லக்ஷ்மிநாராயணபுரம் எனவும், தேவராஜபுரம், தேவ பெருமாள்புரம், தேவப்பெருமாள் நல்லூர்  இப்போது   அவசரமாக காலத்தின் கோளாறினால் சுருங்கி இப்போது  தேப்பெருமா நல்லூர். தேப்பெருமாநல்லூர் ஆலயம் மூன்றாம் ராஜராஜசோழனால் கி.பி.1234ல் உருவானது.  சோழனின் கல்வெட்டு ''தூய பெருமாள் நல்லூர்'' என்கிறது. இது தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ள ஒரு பிராசீன கிராமம். 

கலியுகத்தில் மோக்ஷ சாதனம் நாமசங்கீர்த்தனம் ஒன்றே. அதை பரப்பிய “ஸ்ரீபகவன் நாமபோதேந்திராள்”.ஸ்ரீ வரதராஜ பெருமாளை காஞ்சிபுரத்திலிருந்து இங்கே கொண்டு வந்து பிரதிஷ்டை செய்ததால், காஞ்சியிலிருந்து கொண்டுவந்ததால், காஞ்சியில் வரதனுக்கு ஒரு பெயர் தேவ பெருமாள் என்பதாலும் இந்த ஊர் தேவ பெருமாள் நல்லூர் என பெயர் பெற்றது. மற்றதெல்லாம் போல் சிதைந்து, சிதிலம் அடைந்து தற்போது தேப்பெருமாநல்லூராக சுருங்கியது. இனிமேலும் இந்த பேராவது மாறாமல் நாம் கெட்டியாக இதை பிடித்து பாதுகாக்க வேண்டும். கஞ்சி வரதராஜன் குடியேறியதால் இந்த ஊருக்கு தக்ஷிணகாஞ்சி என்ற உன்னத பெயரும் உண்டு. 

'அன்னதான சிவன்'' என மஹா பெரியவா அன்போடு அழைத்த அமரர் அன்னதானபிரபு ராமஸ்வாமி ஐயர் வாழ்ந்த ஊர்.

அமைதியாக  ஒரு சிவன் கோவில் உள்ளது.  விஸ்வநாத சுவாமிக்கு  இங்கே  ருத்ராக்ஷேஸ்வரர் என ஒரு அருமையான பெயர்.  இங்கே மட்டும் தான்  பிரதோஷ காலத்தில், மற்றும் சிவராத்திரி அன்று  சிவனுக்கு ருத்ராக்ஷ கவசம்.   
ருத்திராக்ஷ அர்ச்சனை செய்வார்கள்.   அம்பாளுக்கு எனக்கு ரொம்ப பிடித்த பெயர்.  வேதாந்த நாயகி.  நாரத,  மார்க்கண்ட , அகஸ்திய ரிஷிகள் பல மஹான்கள் தரிசித்த சிவன். நானும் கையைக் கட்டிக்கொண்டு என்னை மறந்து நின்றேன்.  இங்கு சிவனை அம்பாளை தரிசித்தவர்களுக்கு  மறு பிறவி இல்லையாம்.  கோவில் வாசலிலேயே பெயர்பலகையில்   போட்டிருக்கிறது.  ஆயிரம் வருஷத்துக்கு மேலான  ஆகம சாஸ்த்ர விதிப்படி கட்டப்பட்ட கோவில். கர்பகிரஹம் சுண்ணாம்பு தேன்  கலந்த கலவையில் சோழனால் உருவானதாம்.  தினமும் சூரியன் கதிர் சிவனின் கால் மேல் விழுகிறதாம்.    ஆனந்த தக்ஷிணாமூர்த்தி ரொம்ப அழகாக இருக்கிறார். அமோகமாக எல்லோருக்கும்  உணவு கிடைக்க செய்கிறார். ஆலயத்தில் நுழைந்ததும் முதலில் தென்படுபவர் வாசலில்  கபால கணபதி 
  
ஒரு  நாகராஜா இங்கே 12 வருஷம் தவமிருந்து பூஜை செய்து மோக்ஷம் அடைந்ததாக ஒரு வரலாறு. :
15.1.2010 அன்று சூரிய கிரஹணம்.  காலை  பத்தரை மணிக்கு  ஒரு ராஜ நாகம் கோவிலில் இருக்கும் வில்வமரத்தின் ஒரு இலையோடு அபிஷேக ஜலதாரை(கோமுகம்)  வழியாக உள்ளே நுழைந்து கர்பகிரஹத்தில் ருத்ராக்க்ஷேஸ்வரர் மேல் ஏறி வில்வத்தை மூன்று முறை  சாத்தியது என்று ஒரு சேதி படித்தேன். பரபரப்பான இந்த சேதியை படத்தோடு நிறைய பத்திரிகைகள் வெளியிட்டன. ஞாபகம் இருக்கலாம்.  
ஆலயத்தில் நிறைய  பேர்  நேரில்  பார்த்தார்களாமே.  28.8.2018  அன்று  தேப்பெருமாநல்லூரில் தரிசனம் செய்யும்போது அர்ச்சகரிடம் கேட்டதில்  அந்த நாகம் சிவன் மீது சட்டை உரித்ததை படமெடுத்து வைத்திருப்பதைக்  காட்டினார்.  அந்த நாகம் மோக்ஷம் அடைந்துவிட்டதாம். 

அன்னதான சிவன் இங்கே இருக்கும் விநாயகருக்கு நைவேத்தியம் செய்த பிறகே உணவு உட்கொள்வார். அவர் வணங்கிய  தக்ஷிணாமூர்த்தி தான் எல்லோருக்கும்  குறைவில்லாமல் அன்னதானம் நடக்க அருளியவர். இன்னும் தொடர்ந்து நடக்கிறது என்றார் அர்ச்சகர். 

இந்த ஊர் குடும்ப ங்களில்  வீட்டுக்கு ஒரு நாகேஸ்வரன், நாகராஜன், நாகநாதன் என்ற பெயர் உண்டு. 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...