Monday, August 13, 2018

KRISHNA'S HUNGER




               கிருஷ்ணனின் பசி -  J.K. SIVAN

குழந்தைகள்  அப்பா சட்டையை போட்டுக்கொள்ளும், அப்பா செருப்பில் காலை  நுழைத்துக்கொண்டு   நடக்கமுடியாமல் தடுமாறும். அப்பா  அம்மா  தாத்தா  மூக்கு கண்ணாடி போட்டுக்கொள்ளும். என் நண்பன் ஒருவன் தாத்தா மூக்கு பொடியை கொஞ்சம் முகர்ந்துவிட்டு பட்ட பாட்டை விட  தாத்தாவிடம் வாங்கிய அடி  ஜாஸ்தி.  இதெல்லாம் எதற்காக?  தாமும் சீக்கிரம்  பெரியவர்களாகிவிடவேண்டும் என்ற ஆர்வம். ஆவல்.!!


கிருஷ்ணன் இப்போது குழந்தை அல்ல. பத்து-பதினோரு வயது பையன். தானும் நண்பர்களும் மற்ற பெரிய கோபர்களைப் போல  பொறுப்பேற்றுக்கொண்டு நடந்தனர்.  காலையில் ஆகாரம் உண்டு, மதிய உணவு கையில் எடுத்துக் கொண்டு,  கன்று மாடுகளை வெகுதூரம் வயல் காடுகளுக்கு இட்டுச்சென்று மேய்த்து  வெயில் நேரத்தில் எங்காவது மரத்தடியில் ஒய்வு கொடுத்து,  நதியில் குளிப்பாட்டி, நீரூட்டி , சாயந்திரம்  அஸ்தமனத்துக்குள்  பிருந்தாவனம் திரும்புவார்கள்.

ஆகவே பிருந்தாவனத்திலிருந்து  அன்று கிருஷ்ணன் பலராமன்  மற்றும் ஆயர்பாடி கோபர்கள்  பசுக்கள் கன்றுகளோடு மேய்ச்சலுக்கு  கிளம்பும்போது கிருஷ்ணன் " யாரும்  இன்று  சாப்பாடு  பொட்டலம் கொண்டு வரவேண்டாம்.   நாம் இன்று  வெகு  தூரம் செல்ல போவதில்லை.  எனவே  சீக்கிரமே திரும்பிவிடலாம்"  என்றதால் யாரும்   மதிய உணவு  எதுவும் கொண்டு வரவில்லை

ஆனால் வழக்கம்  போல  மதியம்  அவர்களுக்கு பசி எடுத்தது 

 "கிருஷ்ணா  நீ  தான் எங்கள்  பசிக்கு ஏதாவது வழி செய்ய வேண்டும் உன் பேச்சைக் கேட்டுத்தானே நாங்கள் ஒன்றும் கொண்டு வரவில்லை..ஏதாவது வழி செய்".என்றனர்.   கிருஷ்ணன்  யோசித்தான். அடுத்த கிராமத்தில்  சில பிராமணர்கள்  வசித்தனர் அவர்கள் அன்று ஒரு  யாகம் வளர்த்தி  இந்தரனுக்கு  ப்ரீதி பண்ணிக்கொண்டிருந்ததால்  நிறைய உணவு  இருக்குமே!!.  

கண்ணன்  நண்பர்களை அழைத்தான்.

'' நீங்கள்  அடுத்த ஊரில்  யாகம்  வளர்த்து கொண்டிருப்பவர்களிடம் செல்லுங்கள்.  கிருஷ்ணன்,  பலராமன்  இருவரும்  பசியாக  உள்ளார்கள். நாங்கள் அவர்களோடு வந்திருக்கிறோம் எங்கள் எல்லோருக்கும் உணவு  தர வேண்டும் என்று கேளுங்கள்''  -   என்றான் கிருஷ்ணன்.,

கோப சிறுவர்கள் அங்கு  சென்று கிருஷ்ணன் சொல்லியவாறு  கேட்ட போது அந்த  பிராமணர்கள்  

''இன்னும் யாகம் யஞம் எதுவுமே  முடியவில்லை. சிறிது நேரம் கழித்து தான்.  அது   முடிந்தபிறகு  எல்லோரும்  இங்கு உணவு  அருந்தியபிறகு தான்  உங்களுக்கு உணவு  தர முடியும் என்று  சொல்லி  அனுப்பி விட்டனர்.  

“ஓம் கோவிந்தாய  ஸ்வாஹா”  “ஓம்  சங்கர்ஷனாய ஸ்வாஹா”  என்று மந்திரம்  மட்டும்  ஒலித்து  யாகத்தீயில்  நெய்  கொட்டிக்கொண்டிருந்ததே  தவிர பசி என்று கிருஷ்ணன் கேட்டான் என்ற போதும் பொருள் விளங்க வில்லை அவர்களுக்கு!!  

கிருஷ்ணனிடம்  வந்து சிறுவர்கள் நடந்ததை சொன்னார்கள்.

“ ஏன் உணவு அங்கு இல்லையா?”

“”நிறைய  இருக்கிறதே ஆனால் தேவர்களுக்கு  அர்ப்பணம் பண்ணிவிட்டு  பிறகு தான் தருவார்கள்.  நடுவிலே தரமாட்டார்களாம்”

 “அப்படியா, சரி, நீங்கள்  அந்த பிராமணர்கள்  வீடுகள் அங்கேதானே  உள்ளது அந்த  பிராமணர்கள் வீட்டில் அவர்கள் மனைவிகள்  பெண்மணிகள்  இருப்பார்களே? அவர்களிடம் சென்று கிருஷ்ணனும் பலராமனும்
ரொம்ப பசியாக இருக்கிறார்கள்.  உங்களை  கேட்டு சாப்பிட  உணவு வாங்கிவர சொன்னார்கள்” என்று சொல்லுங்கள். அவர்கள் ஒருவேளை  தரலாம்”  என்றான் கிருஷ்ணன்.

சிறுவர்கள்  மீண்டும் சென்றார்கள்.   அக்ரஹார வீடுகளில் பிராமணர்களின்  மனைவிகளிடம் கிருஷ்ணன் சொன்னதை  சொன்னவுடனே அந்த ஸ்திரீகள் எல்லோரும்  உடனே ஒன்று  கூடி யோசித்தார்கள். இந்த  யாகத்திற்கு  சமைத்த உணவு ரெடியாக உள்ளது.  ஆனால் புதிதாக  சமைத்து எடுத்து செல்வதுற்குள் கிருஷ்ணன் பலராமன் பசியோடு  பிருந்தாவனம் திரும்பி சென்று விட்டால்  என்னசெய்வது?   ஏற்கனவே யாகத்துக்கு தயாரானதையே  எடுத்து  செல்வோம் என்று  நிறைய  உணவை எடுத்துக் கொண்டு அவர்களே கிருஷ்ணன்  பலராமன் இருக்கும்  இடத்துக்கு அந்த சிறுவர்களோடு சேர்ந்து  கிளம்பினார்கள்.

சில பிராமணர்கள்  இதை  பார்த்து  விட்டு அவர்களை  தடுத்தார்கள். அந்த காலத்தில்  பெண்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாது. கணவனின்  கட்டளையை  மீறவும் முடியாது.  இந்த ஸ்திரீகளோ கவலையே இன்றி கிருஷ்ணன்  பலராமன் இருக்கும்  இடம் சென்று அவர்களே அனைவருக்கும் பரிமாறினார்கள்.

இதற்கிடையே  பிராமணர்கள்  வளர்த்துக்கொண்டிருந்த  யாக குண்டத்திலிருந்து  அக்னியில் ஒரு   தேவதை தோன்றி அனைத்து  தேவர்களும்  இந்திரன் உட்பட  உண்டு மகிழ்ந்ததாக  கூறவே பிராமணர்கள் திடுக்கிட்டார்கள்  இன்னும் மந்திரங்களே முடியவில்லையே,  அவிர்பாகம் அளிக்கப்படவில்லையே, எப்படி  இந்திராதி தேவர்கள்  உண்டு திருப்தியடைந்தார்கள் என்று  என்று ஆச்சர்யப்பட்டார்கள்.

 காட்டில் கிருஷ்ணன் அந்த  ஸ்திரீகளை   நோக்கி    “நாங்கள் வயிறு நிரம்ப சாப்பிட்டு விட்டோம் .  நேரமாகி  விட்டதே நீங்கள்  வீடு  செல்லுங்கள்” என்றான்.

அழுதுகொண்டே அந்த பெண்கள்  ''இனி நாங்கள்  வீடு  திரும்ப முடியாதே  உங்களுடனே தான் வரவேண்டும் . எங்கள்  வீட்டில் கணவன்மார்கள் எங்களை மீண்டும் அக்ராஹாரத்தில் அனுமதிக்க மாட்டார்கள். எங்கள்  வார்த்தை  மீறி  உணவோடு வீட்டை விட்டு செல்லும் நீங்கள்  இனி  வீடு  திரும்ப முடியாது. ஞாபகமிருக்கட்டும் என்று  எச்சரித்ததை  சொன்னார்கள். 

 கிருஷ்ணன் சிரித்தான்    “அதெல்லாம் ஒன்றும் நடக்காது.  கவலையின்றி  நீங்கள்  உங்கள் வீடுகளுக்குச்  செல்லுங்கள்.  உங்களை  அவர்கள் சந்தோஷமாக  வரவேற்று திரும்ப அழைத்துக் கொள்வார்கள்” என்றான்
யாகம் முடிந்தது.  பிராமணர்கள் திகைத்து நின்றனர்.  அப்போது  இரு யோகிகள் அங்கு தோன்றி னார்கள் . பிராமணர்களை அவர்களை வரவேற்று உபசரித்தனர். 

அந்த   யோகிகள்  நடந்த விஷயங்களை அறிந்து சந்தோஷித்தார்கள்.  ''நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். உங்கள் பெண்கள் உங்களுக்கு புண்யம்,  யாக பலன், பெருமை எல்லாம்  வாங்கி தந்து விட்டார் கள்.  யாகத்தால்  விஷ்ணுவுக்கு யாக பலன்  எப்படி போய் சேர்கிறது அதனால்  பிரபஞ்சம் எப்படி   சம்ரக்ஷிக்கபடுகிறது'' என்று  யோகிகள் விளக்கிய போது தான் பிராமணர்களின் அகக்கண் திறந்தது. அவர்கள் வீட்டு பெண்கள் உண்மையிலேயே ரொம்ப  கொடுத்து  வைத்தவர்கள்!    இறைவனின் அம்சமாகிய கிருஷ்ணன் பலராமன்  பசியாக இருக்கிறேன் என்று உணவு கேட்டு  வாங்கி  திருப்தியாக உண்டதன்  விளைவே யாகத்தின்  முழு  பயன் என்று உணர்ந்தனர்  தங்கள் அறியாமைக்கு வருந்தினர்.

 வழிமேல் விழி  வைத்து அந்த  பெண்கள் வரும்  வரை காத்திருந்தார்கள் அவர்கள்  காலில்  விழுந்து வணங்காத  குறையாக  தவறுக்கு வருந்தி அவர்களை போற்றி  மரியாதையோடு அன்போடு அவர்களை  வரவேற்றார்கள் என்று  இந்த கதை முடிகிறது.  


 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...