Monday, August 13, 2018

RASANISHYANDHINI



ரஸ நிஷ்யந்தினி - 110 வயது புத்தகம்
J.K. SIVAN
ராமன் யார் தெரியுமா?

இதென்ன ஆச்சர்யம்? அயோத்தியில் தசரத மஹாராஜா அரண்மனையில் இத்தனை கற் சிலைகளா? வாஸ்தவம். விஸ்வாமித்ரர் ராமனின் குணாதிசயங்களை ஒவ்வொன்றாக தசரதனுக்கு விளக்கி ''தசரதா நீ நினைப்பது போல், உன் போல் ஒரு மானுடன் அல்ல ராமன் என்று உணர்த்துவதை செவி மடுத்த அத்தனைபேரும் கற்சிலைகளாகாமல் வேறு எப்படி இருக்க முடியும்.

ரிஷி விஸ்வாமித்ரர் தசரதனிடம் ராமன் யாரு என்று தெரிய நூறு சொல்கிறேன் கேள் என்று தொடர்கிறார். ஐந்திலிருந்து ஆறாவதாக இனி ஆற அமர கேட்போம்.

6. ''நீ உன் மகன் ராமன் இந்த நாட்டை ஆளுவதற்காக பிறந்தவன் என்று தான் நினைக்கிறாய். அப்படியில்லை, அவன் என்னை பொறுத்தவரை, இந்த மூவுலகையும் பிரபஞ்சத்தையும் அதன் அனைத்து ஜீவராசிகளையும் தனது ஆளுமையில் ரக்ஷிப்பதற்காகவே பிறந்தவன்''.

7. உன்னை நினைத்தால் சிரிப்பு வருகிறது. அவன் வேதம் எல்லாம் கற்றவன் என்று பெருமைப்படுகிறாய். அப்பனே, எனக்கு தெரியும், அனைத்து வேதங்களும் அவனை இன்னும் முழுமையாக புரிந்து தெரிந்து கொள்ளவில்லை என்று.

8. நீ நினைப்பது போல் உன் மகன் ராமன் படைக்கும் தெய்வம் பிரமனின் எண்ணற்ற படைப்புகளில் ஒருவன் அல்ல. எனக்கு தெரியும் அந்த ப்ரம்மதேவனே காக்கும் கடவுளான ராமனின் எண்ணற்ற படைப்புகளில் ஒருவனாக தோன்றியவன்.

9. நீ நினைப்பது போல் உன்னை காப்பதற்கு பிறந்தவன் அல்ல ராமன். அவன் இந்த பிரபஞ்சத்தையே காத்தருள்பவன் என்பதை நான் அறிவேன்.

10. தசரதர், உன் மகன் ராமன் நீ நினைப்பது போல் பல ராஜாக்களை வென்று செல்வத்தை தேடிச் சேர்ப்பவன் அல்ல. சங்கநிதி பத்மநிதி முதலான அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியான ஸ்ரீ மஹாலக்ஷ்மியே சதா சர்வகாலமும் தேடும் ''ஸ்ரீ'' நிவாஸன் உன் மகன் ராமன் என நான் அறிவேன்.

11 ஒரு நல்ல ராஜ குடும்பத்த்தில் சிறந்த நற்குணங்கள் பொருந்திய ராஜகுமாரியாக ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து உன் மகன் ராமனுக்கு திருமணம் செய்யவேண்டும் என்று நீ நினைக்கிறாய். தேவலோக, வைகுண்ட நாயகி ஸ்ரீ மஹாலக்ஷ்மியே எந்த மனித உடலிலும் பிறவாமல் பூமியில் அவதரித்து உன் ராமனை கணவனாகப் பெற காலமெல்லாம் காத்திருப்பது எனக்கு தெரியும்.

12. எனது ராஜ்யத்தை என் மகன் ராமனுக்கு அளித்து அவனை மன்னனாக முடிசூட்டுவேன் என்கிறாயே உனக்கு தெரியுமா ஒரு உண்மை? பிரம்மன் இந்திராதி தேவர்கள் எல்லாருக்குமே அவர்களது ராஜ்யத்தை அவர்களுக்கு அளித்ததே இந்த ராமன் தான்.

13 என் மகன் பல யாகங்கள் செய்து தெய்வங்களை ப்ரீதி அடைய, திருப்தி அடைய செயது அவர்கள் ஆசி பெற செய்வேன் என்று எண்ணுகிறாயே தசரதர், இதைக் கேள். உன் ராமனை மனதில் சங்கல்பித்து அத்தனை தெய்வங்களும் அவனை துதித்து அருள் பெற ஆசிபெற யாகங்கள் செய்வது எனக்கு தெரியும்.

14 நல்ல ஆச்சார்யர்களை கொண்டு உன் மகன் ராமனுக்கு தெய்வீகமான ஞானம் பெற வைக்கவேண்டும் என்று நீ நினைக்கிறாய். உன் ராமன் ஞானிகளால் உணரமுடியாத, வேத சாஸ்த்ர ஞானங்களை எல்லாம் கடந்தவன் என்பதை நான் அறிவேன்.

ஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் இதெல்லாம் நேரே ஆனந்தமயமாக ராமனுடன் இரண்டரக்கலந்து இதை ராமாயண ப்ரவாஹமாக பிரசங்கம் செய்யும்போது கேட்டவர்கள் அல்லவோ உண்மையிலே பாக்கியசாலிகள்!!

இன்னும் கேட்போம்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...