ஒரு அற்புத ஞானி - J.K. SIVAN
சேஷாத்திரி ஸ்வாமிகள்
11 ஸ்வாமியின் தீர்க்க திருஷ்டி
படிப்பு வேறு. ஞானம் வேறு. ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்பார்கள். படிப்பது பட்டம் பெறுவதற்கோ பிறர் புகழ்வதற்கோ என்று இருந்தால் இப்படித்தான் முடியும். எதைப் படித்தாலும் அதை நன்றாக உணர்ந்து அதன் விளக்கத்தை புரிந்தவர்கள் அனுபவிக்கும் இன்பமே தனி. வள்ளுவர் சொன்ன ''கசடறக் கற்றவர்கள்'' இவ்வகை.
1903ல் இப்படி ஒரு மஹான் திருவண்ணாமலைக்கு வந்தார். சிறு வயதிலேயே பஞ்சாக்ஷர மந்திரம், தேவியின் தாரா மந்திரம், கோடிக்கணக்கான ஜபம் செயது தேவியின் அருள் பெற்றவர். நான்கு வேதம் ஆறு சாஸ்திரம் நன்றாக அறிந்தவர். தெய்வப் புலமை பெற்றவர். அவர் பெயர் ஸ்ரீ கணபதி சாஸ்திரிகள். ''காவ்ய கண்ட'' என்று புகழ் பெற்றவர்.
திருவண்ணாமலை தரிசனத்துக்கு வந்தவர் சிறு வயதினராக இருந்தபோதிலும் ஸ்ரீ ராமணரைப் பார்த்த கணமே புரிந்து கொண்டார், இந்த யோகி, ஞானத் தபோதனர் என்று. அப்போதே அவரை தனது இஷ்ட தெய்வமாக, குருவாக நிர்ணயித்து விட்டார்.
சேஷாத்திரி ஸ்வாமிகள், ரமண மகரிஷி இருவரையும் தமது இரு கண்களாகக் கொண்டு அங்கே தங்கி விட்டார் கணபதி சாஸ்திரிகள். யாராவது சேஷாத்திரி ஸ்வாமிகளை தரிசிக்க வந்தால் கணபதி சாஸ்திரிகள் என்ன சொல்வார் தெரியுமா?
''சேஷாத்திரி ஸ்வாமிகளையா பார்க்க வந்தீர்கள். அடேடே, அவர் ஒரு பைத்தியமாயிற்றே''
வந்தவர்கள் சாஸ்திரிகளை கோபத்தோடு எதிர்த்தால் சந்தோஷமாக சிரித்துக் கொண்டு, ''சந்தோஷம், நீங்கள் உண்மையான பக்தியோடு சேஷாத்திரி ஸ்வாமிகளை பார்க்க வந்தீர்களா? என்று சோதனை செய்தேன் '' என்பார். .
''சேஷாத்திரி ஸ்வாமிகள் உடலில் குண்டலினி சக்தி சதா ஓடிக்கொண்டே இருக்கிறது. அதால் தான் அவருக்கு ஞான திருஷ்டி'' என்பார் சாஸ்திரிகள்.
ஒரு சமயம் கோவிலுக்கருகே அன்ன சத்திரத் திண்ணையில் ''சக்தி'' என்ற தலைப்பில் கணபதி சாஸ்திரி பத்துநாள் உபந்நியாசம் செய்தார். அவருக்கு ஒரு பையன் மஹாதேவன் என்று. அவனுக்கு கல்யாணம் ஏற்பாடு செய்ய விரும்பினார். பத்து நாள் உபந்நியாசத்தின் முடிவில் பக்த கோடிகள் நிதி திரட்டி அவருக்கு ஐம்பது ரூபாய் வசூலானது (சிரிக்காதீர்கள். 125 வருஷங்களுக்கு முன்பு அது பெரிய தொகை. ஐம்பதாயிரத்துக்கு சமானம் என்று வைத்துக் கொள்ளுங்கள்). அந்த பணம் தாலுக்கா போர்டு ப்ரெசிடெண்ட் வேங்கடசுப்பய்யர் கையில் சேர்ந்தது. அந்த சமயம் சேஷாத்திரி ஸ்வாமிகள் அங்கு வந்துவிடவே, அய்யர் அந்த பணத்தை ஸ்வாமியின் கையில் கொடுத்தார்.
''எனக்கு எதற்கு பணம்.?'' என்கிறார் சுவாமி.
''உங்கள் கையில் கொடுத்துவிட்டோம். சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம் அதை '' என்கிறார் அய்யர்.
ஸ்வாமிகள் அடுத்த கணமே அதை கணபதி சாஸ்திரிகள் கையில் திணித்தார்.
சாஸ்திரிகள் ஸ்வாமிகளை வணங்கி '' சுவாமி எனக்கு எதற்கு இது ?'' என்று கேட்க
''வாகர்த்தவிவ சம்ப்ருக்தௌ வாகர்த்தப் பிரதிபத்தயே: ஜகத : பிதரௌ வந்தே பார்வதீ பரமேஸ்வரௌ'' என்று உரக்க ஸ்லோகத்தை சொல்லிக்கொண்டே அங்கிருந்து சென்று விட்டார்.
''மஹாதேவன் கல்யாணத்திற்கு இது'' என்று சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றார் ஸ்வாமிகள். இது அவரது ஞான த்ரிஷ்டிக்கு ஒரு திருஷ்டாந்தம்.
இன்னொரு சம்பவம். கணபதி சாஸ்திரியாரும், இ.எஸ். ராமஸ்வாமி சாஸ்திரியார் என்பவருமாக சேர்ந்து ''ஸ்ரீ ரமண சமிதி'' என்ற ஒரு சங்கத்தை ஆரம்பிக்கலாம் என்று தீர்மானித்து அதை மகரிஷி ராமணரிடம் தெரிவித்துவிட்டு ஆரம்பிக்கலாம் என்று இருவருமாக மலைமீது இருந்த மஹரிஷி ரமணரை தேடிச் சென்றனர். போகும் வழியில் சேஷாத்திரி ஸ்வாமிகள் எங்கிருந்தோ அங்கு வந்தார்.
ரெண்டு பேரும் ஸ்வாமிகளை விழுந்து வணங்கினார்கள். சேஷாத்திரி ஸ்வாமிகள் இருவரையும் ஆசிர்வதித்தார். சிரித்துக் கொண்டே ''சங்கமா, ஆரம்பிக்கப் போகிறீர்கள்? பலே பலே. உடனே ஆகட்டும்'' என்று சொல்லியவாறு சென்றுவிட்டார்.
இருவரும் திகைத்து வியந்தனர். நம் இருவருக்கு மட்டுமே தெரிந்த இந்த விஷயம் எப்படி ஸ்வாமிகளுக்கு தெரிந்தது? என்று சேஷாத்திரி ஸ்வாமிகள் யோக சக்தி வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
No comments:
Post a Comment