Sunday, August 5, 2018

PESUM DEIVAM




பேசும் தெய்வம்  J.K. SIVAN 

                             
புளி மாதுளை 

ஒரு அற்புதமான சம்பவத்தை  இன்று தான்  படித்தேன்.  சுவாமிநாத ஆத்ரேயர் என்பவர் எழுதிய ஒரு ஆங்கில  கட்டுரை . அதை  சுருக்கி  தமிழாக்கி  எளிதாக தருகிறேன் : 

மகா பெரியவா  1963 நவம்பரில் கிட்டத்தட்ட ஒரு மாசம்  திருவிடைமருதூர் அருகே ஒரு காவிரிக்கரை குக்கிராமம் ஒன்றில்  வாசம் இருந்தபோது,  என்  நண்பர் தஞ்சாவூர் ஆனந்தா  லாட்ஜ் முதலாளி கே. எஸ். கோபாலஸ்வாமி அய்யர்  என்னை தேடி வந்தார்.

''மட்றாஸ்லேருந்து ( அப்போது சென்னை என்ற பெயர் கிடையாது ) ஒரு நண்பர் கார்லே  வந்திருக்கார். பெரியவாளை பார்க்க கல்யாணபுரம் போகணுமாம்.  நீங்களும் வரேளா.கார்லே அவரோடு போகலாம்.''

''ஆஹா,  பெரியவாளை பார்க்க கிடைச்ச ஒரு சந்தர்ப்பம் விடுவேனா.''  திருவிடைமருதூர் சென்றோம். வீர சோழன் ஆற்றிலே நிறைய  தண்ணீர்.மேலே  பாலம் ஏறி 3மணி சுமாருக்கு  திருவிடைமருதூர்  அடைந்தோம்   வயசான மடத்து யானை தென்னை ஓலையை சுவைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தது.  ஆற்றில் குளிப்பாட்ட பசுக்களை அழைத்துக்கொண்டு சிலர் சென்றார்கள்.  எதிர் திண்ணையில் மடத்து  சமையல் ஆட்கள்  வேலை செய்த களைப்பில் சயனம். 

''வாங்கோ'' -    மடத்து மானேஜர்வரவேற்றார். பக்கத்து வீடு தான் அப்போதைக்கு அவர்  ஆபிஸ்.  மெட்ராஸ் ஆசாமி  ஒரு  சில நூறு  ரூபாய்  நோட்டு கத்தைகளை கொடுத்து ஒத்தை ரூபாய்  காசுகளாக சில்லறை மாற்றி ஒரு மரத்தட்டு நிறைய பரப்பினார். இன்னொரு பெரிய  மூங்கில் தட்டில் பழங்கள், கல்கண்டு, முந்திரி திராக்ஷை,  வில்வம்,  சந்தன கட்டை, கற்பூரம், குங்குமப்பூ,   புஷ்பங்கள் எல்லாம் கொண்டுவந்ததை  நிரப்பினார். ரொம்ப கஷ்டப்பட்டு  தப்பு தவறுமாக பஞ்சகச்சம் கட்டிக்கொண்டார். குழைத்து பட்டை பட்டையாக  விபூதியை நெற்றியில் உடம்பில் கைகளில் அணிந்தார்.  தட்டுகளை எடுத்துக்கொண்டு கிளம்பினார். 

கோசாலையில்  பெரியவா மன்னார்குடி பெரியவா ராஜூ சாஸ்திரி பேரன் மகாலிங்க  சாஸ்திரிகளோடு பேசிக்கொண்டிருந்தா. நான் சற்று முன்னால் சென்று  கோபாலசாமி அய்யர் மெட்ராஸ் ஆசாமி ஆகியோர் வந்திருப்பதை சொன்னேன். ஒரு  புன்சிரிப்பு.  கண்டு கொள்ளவில்லை.  அரைமணி ஓடியது. பெரியவா மன்னார்குடி பெரியவா எழுதிய  ''துர்ஜனோக்தி நிராஸா '' புஸ்தகம் பற்றி பேசிக்கொண்டிருந்தார். 

மெட்ராஸ் ஆசாமி  பெரியவா பேசியதற்கு எல்லாம்  ஆமோதித்து கொஞ்சம் சப்தமாக சிரித்து  அவர் கவனத்தை ஈர்க்க முயன்றார். 

அந்த நேரம் யாரோ  கோசாலையில் எட்டிப்பார்த்ததால்  ''வேதபுரி,   யாரு வந்திருக்கா  பாரு?''  பெரியவாளுக்கு விசிறிக்கொண்டிருந்த வேதபுரி சென்று பார்த்து விட்டு  மாயூரம் வள்ளலார் தெரு ஸ்ரௌதிகளோடு உள்ளே வந்தார். நமஸ்காரம் செய்த  சிரௌதிகள் கையில் சின்னதாக ஒரு தட்டு.  ரெண்டு தேங்காய், வாழைப்பழம் ஒரு சீப்பு.  சாமவேதம் சொன்னார். மீண்டும் நமஸ்கரித்தார். 

'என்ன விஷயம் சிரௌதிகளே''

''பொண்ணு கல்யாணம் நிச்சயமாயிடுத்து. பெரியவா ஆசீர்வாதம் வேணும் ''

''பொண்ணு  ஹை ஸ்கூல்லே  படிக்கிறான்னு சொன்னேளே. சம்பந்தத்துக்கு ஒத்துண்டுடுத்தா?''

''பெரியவா அனுகிரஹத்தாலே, குடும்பத்திலே பழைய சம்ப்ரதாயம் தொடர்ந்திண்டு இருக்கு''

வேறே யாரோ ஒரு தலை தெரிந்தது.  வேதபுரி போய் பார்த்தார். பேசினார்.  பெரியவாளிடம் வந்தார்.

''பெரியவா, வில்லியனூர் அம்மா வந்திருக்கா, புளி மாதுளை  பெரியவாளுக்காக கொண்டுவந்திருக்கா. கையில் இருந்த பழங்களை ஒரு தட்டில் வைத்தார் வேதபுரி. 

''அவளை வரச்சொல்லு''. வேதபுரி போய் சொன்னார். 

''பெரியவா, அந்த அம்மா  அங்கிருந்தே நமஸ்காரம் பண்ணிட்டு போறேங்கிறா''

''இங்கே வரச்சொல்லு ''

அந்த மாமி  பவ்யமாக பக்தியாக  மெதுவாக கைகட்டிக்கொண்டு எதிரே நின்றாள்.
கையில் அவள் கொண்டுவந்த ஒரு புளிப்பு மாதுளையை வைத்து உருட்டிக்கொண்டே பெரியவா  மகாலிங்க சாஸ்த்ரியிடம் '' வைத்தாவை தெரியுமோல்லியோ?  (வில்லியனூர் வைத்யநாதசுவாமி அய்யர்) 
ஒரு காலத்திலே எனக்கு வயிற்று வலி  விடாம இருந்தபோது   வெங்கடரமணா ஆயுர்வேத காலேஜ் நடேச சாஸ்திரிகளை கேட்டேன். புளிப்பு மாதுளை ரசம் தொடர்ந்து சாப்பிட்டா சரியாகும்னார் . வைத்தா என்ன பண்ணார் தெரியுமா? எங்கிருந்தோ போய் புளிப்பு மாதுளை வாங்கிண்டு வந்ததோடு இல்லாமல் வீட்டிலே ஒரு  மரக்  கன்னை  வாசலில் நடுவில் நட்டுவைத்தார். பக்தியோடு வளர்த்தார். பின்பக்கம் கொல்லையில் குப்பை தூசி, அசுத்தம் கூடாதுன்னு வாசலிலே நடுவிலே மரம் எனக்காக வளர்ந்தது.  வைத்தா போய்ட்டார். அவர் வீட்டு அம்மா விடாம எனக்கு புளிப்பு மாதுளைபழங்களை  எனக்காக  நட்ட அந்த மரத்திலேருந்து பறிச்சு,  விடாமல் கொண்டுவந்து தரா''. நான் ஊரிலே இல்லாட்டா அதை காயவைச்சு, பொடி பண்ணி கெட்டுப்போகாம கொண்டுவருவா.   புளி  மாதுளை அபூர்வம். யாரும் விரும்ப மாட்டா.  உபயோகப்படாத பழைய  அயிட்டங்களுக்கு  விலை இல்லை.  அபூர்வம் என்பதாலே  மதிப்பு அதிகம்.  

உனக்கு தெரியுமா,  ஹனுமான் லங்கையில் ராவணன் மாளிகையில் சீதையை தேடறான். அவன் கண்ணிலே குபேர சம்பத்து, தங்கம், நவரத்தினம் எல்லாம் படறது.  அதே சமயம் பழைய  கலைப்பொருள்களையும் ராவணன் வைத்திருப்பது கண்லே படறது.  அப்போ ஹனுமான் சொல்றமாதிரி ஒரு ஸ்லோகம்........... பெரியவா சிறிது வினாடிகள் யோசிக்கிறார் .... ஹாம்...அது இதுதான்....

Ya hi vaisravane lakshmi!  Ya ca indra harivahane"!  ''ய ஹி வைஸ்ரவனே லக்ஷ்மி,   ய ச இந்திரா ஹரிவாஹனே''

குபேர சம்பத்து  ஒரு புறம்.  பச்சை நிற  குதிரைகள் ஒருபுறம் .... குதிரை பச்சையா??  அபூர்வ வஸ்து இல்லையா? எங்கேயாவது கிடைக்குமா?''   அது மாதிரி இந்த புளி மாதுளை. 

''அடேடே,  வேதபுரி, இங்கே வா,  இதோ இந்த மெட்ராஸ் லிருந்து தாராள மனசோடு வந்திருக்காரே ஒருத்தர் அவர்  எனக்கு   என்னவெல்லாமோ  ''அபரிமிதமா''  கொண்டுவந்திருக்கார் பார். அந்த தட்டிலே இருக்கிற காசை எல்லாம்  எண்ணவேண்டாம்,  அப்படியே தட்டோடு  எடுத்து சிரௌதிகள் அங்கவஸ்திரத்திலே கொட்டு  அவருக்கும் ''அபரிமிதமா'' பொண்ணு   கல்யாண செலவு இருக்குமே''

மெட்ராஸ் ஆசாமியுடைய  வறட்டு  கௌரவம்  (நிறைய காசாக தெரிய  சில்லறையாக மாற்றியது)  அதை தான் ''அபரிமிதமாக '' என்று அழுத்தி பெரியவா சொன்னது, உறுத்தியது.  ஆணவமழிந்து   வேரறுந்த மரம்போல் பெரியவா காலடியில் விழுந்து வணங்கினார்.   அது தான் மகா பெரியவா.....

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...