Thursday, August 16, 2018

NOSTALGIA

  சூளைமேடு  கங்கையம்மன் கோவில் 
                                  J.K. SIVAN 



எழுபத்திரண்டு வருஷங்களுக்கு முன்னால்..........எனக்கு    எட்டு ஒன்பது வயதானபோதே அந்த  வேப்பமரத்துக்கு  நூறு வயது என்பார்கள்.  யார்  அந்த வேப்ப  மர  வயதை சரியாக  ஞாபகம் வைத்திருப்பார்கள்?  ஏதோ ஒரு குத்து மதிப்பு. அதன் உருவமும் அப்படி தான் இருக்கும். மூன்று ஆள் கைகோர்த்துக்கொண்டு கட்டிப்பிடிக்கும்படியான  அதன் தண்டு. கப்பும் கிளையாக  நிறைய  வேர்கள் மலைப்பாம்புபோல் எங்கும் தரையில் நீள அகலமாக  படர்ந்திருக்கும்.  மேடை போல் அதன் மீது நிறைய பேர் அமர்ந்திருப்பார்கள்.  அந்த வேப்ப மரத்தின் கிளைகள்  ஒவ்வொன்றுமே  தடியான மரங்கள் போல் இருக்கும். பச்சை  பசேல் என்று இலைகள். பல காலமாக  பறவைகளின் வாசஸ்தலம். அதன் தண்டு நிறைய கிளைகளை இழந்த பெரிய பொந்துகள்.  பாம்புகள் அதில்  வாசம் செய்வதாக சொல்வதால்  கிட்டே போக பயமாக இருக்கும். போதாதற்கு அந்த மரத்தின் தண்டுகள் நிறைய பட்டை பட்டையாக  தோலுரித்து  வெள்ளையும் பிரௌனுமாக இருக்கும். பாளம் பாளமாக  மரம்  விரிந்து இருக்கும். அதன் அடிப்பாகத்தில் முக்கிய விசேஷம் என்னவென்றால்  சூளைமேட்டு  கங்கையம்மன் கோயில் கொண்டிருக்கிறாள்.  முதலில் சிறு விக்ரஹமாக.   அம்மன் சிலைகள் வெறும் தலையோடு நிறைய கோவில்களில் இருக்கும். ரொம்ப விசேஷம்.  அப்படி வெயிலிலும் மழையிலும் காய்ந்து சூளைமேட்டை  காவல் காத்த தெய்வம். பிறகு மரம் பெரிதாக வளர்ந்தது. அம்மன் கோவில் மேலே கூரை பார்த்தது.கொஞ்சம் கொஞ்சமாக  பக்தர்கள் பெறுக, அவளின் அனுகிரஹம் புரிந்து நிறைய பேர் வேண்டுதல்கள்  பூர்த்தியாகி மரத்தின் கிளைகளில்  மஞ்சள் துணிகள், தொட்டில்கள், பூமாலைகள் வஸ்திரங்கள் தொங்கின. கோவிலாகியது. வாசல், அதை தொடர்ந்து கர்பகிரஹம் எதிரே சிம்ஹ வாகனம். சூலம்.எல்லாம் வந்துவிட்டது. தெருவையே சற்று சுற்றி போகும்படியாக அமைத்தார்கள். 

நான் பள்ளிக்கூடம் போகும்போது அந்த கங்கையம்மனை தரிசித்துவிட்டு தாண்டி தான் கார்பொரேஷன் பள்ளிக்கூடம் செல்லவேண்டும். ஒரு வயதான பூசாரி அந்த கோவிலிலேயே எப்போதும் இருப்பார். காவி அரை வேஷ்டி. கழுத்தில் நிறைய  மணிகள், ருத்ராக்ஷ மாலைகள்,  ஆழ்ந்த குறுகிய கூர்மையான கண்கள். வெள்ளை தாடி மீசை. தலையெல்லாம் பிரி பிரியாக சடை.  நெற்றியில் அவரைவிட   பெரிய குங்கும தீற்றல்.  அதை  பொட்டு என்று சொல்லமுடியாது.    

சின்ன பசங்கள் நாங்கள் காசு போடுவோம் என்று எதிர்பார்க்கமாட்டார். நெற்றியில் குங்குமம் இட்டு விடுவார். சிலர் தலையில் குட்டுவார்.  ரொம்ப பேசமாட்டார்.  தமிழில் ஏதோ பாட்டுகள் பாடிக்கொண்டே இருப்பார்.  

''அம்மா  எல்லாம் தருவா  போ. நல்லா  படி''  என்று சொல்வார்.  அம்மனுக்கு புடவைகள் நிறைய வரும் அதை எடுத்து  எப்போது தோன்றுகிறதோ அப்போது  யாருக்காவது கொடுப்பார்.  

அன்று என்ன நடந்தது தெரியுமா?  வழக்கம்போல் கங்கையம்மன் கோவிலில் வந்து நின்றேன். உள்ளே கர்ப்பூரம் காட்டிக்கொண்டிருந்தார். யாருக்கோ  பிறந்தநாளோ அல்லது ஏதோ விசேஷமோ. நிறைய சர்க்கரை பொங்கல் கொடுத்தார். முதுகில் பையை மாட்டிக்கொண்டு  கையை நீட்டிக்கொண்டு நின்றேனா?  என் அருகே வந்தவர் நான் நெளிவதை பார்த்து  ''என்னா?'' என்கிறார். கழுத்துக்கு பின்னால் ஏதோ  அரிக்கிறமாதிரி இருக்கு  கை நிறைய பொங்கல் இருக்கிறதே''  
அவர்  என்னை திரும்பச் சொல்லி பார்த்தவர்  டப்பென்று கழுத்தை அடித்தார். ஏதோ கீழே விழுந்தது.  நீளமான ஒரு விஷ பூரான். செகப்பும் பிரவுன் கருப்புமாக  மீசையை ரெண்டு பக்கமும்  நீட்டிக்கொண்டு  நூறுக்கு மேல் கால்களோடு.  ஐயோ என்று அலறினேன்.

''இதை எங்கே புடிச்சே?'' 
தெரியாதே.
அந்த பூரான்  வேப்பமரத்தில் இறை தேடிவிட்டு கால் நூறு இருந்தும் தவறி கீழே விழுந்து என் முதுகு பையில் அடைக்கலம் புகுந்து என் பாட புத்தகங்கள் பிடிக்காமல் வெளி உலகை பார்க்க என் சட்டைக்கு தாவி மேலே கழுத்தை கடந்து தலையை நோக்கி போகலாமென திட்டத்தோடு வந்திருக்கிறது.  பூசாரியால் ஏற்றப்பட்டு  நானும் விஷக்கடி படவில்லை.   அம்மன் சாம்பலை கழுத்தில் தேய்த்தார். 

''அது நக்கினாலே விஷம். தப்பிச்சே '' இங்கே மரத்திலே நிறைய இருக்கு. ராவுலே வௌவால் பிடிச்சு திங்கும்.

ஒரே ஓட்டம் ஓடினேன்.  இன்றும் சூளைமேட்டு  கங்கையம்மன் கோவிலை கடக்கும்போது பூரான் பூசாரி ஞாபகம் வருகிறது. எவ்வளவோ மாற்றங்கள் இந்த எழுபத்திரண்டு வருஷங்களில்.......ஆனால்  பழைய நினைவு பச்சை பசேலென அந்த காலத்து வேப்பமர இலைபோல்   மனத்திரையில்  வியாபித்திருக்கிறது.

.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...