அறுபத்து மூவர் J.K. SIVAN
முருக நாயனார்
கல்யாண கோலத்தில் கைலாசம்
தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் ஜில்லாவில் நிறைய கோவில்கள் உண்டு. திருப்புகலூர் என்ற ஊரில் கருந்தார்குழலி சமேத அக்னீஸ்வரர் கோவில் புராதனமானது. காவிரி தென்கரை கோவில்களில் ஒன்று. சிவனுக்கு இங்கே கோணபிரான் என்று ஒரு பெயர். அதற்கான கதை கீழே வரும். நன்னிலம் பஸ் மார்கத்தில் நாகப்பட்டினம் மேற்கே 25 கி.மீ. தூரத்தில் உள்ளது.
திருவாரூரிலிருந்து வந்தால் 25 கி.மீ. பழைய சோழர் கால ஆயிர வருஷ கல் கோவில். சுற்றிலும் மதில் சுவர் கட்டப்பட்டுள்ளது. ஐந்து நிலை கிழக்கு பார்த்த ராஜகோபுரம் வரவேற்கிறது. உள்ளே மூணு அடுக்கு கோபுரம். கோவில் மதிலை சுற்றி அகழி இருந்திருக்கிறது. ராஜ கோபுர வாசலை அடுத்து உள்ளே துவஜஸ்தம்பம் (கொடிமரம்) தொடர்ந்து மகாமண்டபம், அர்த்த மண்டபம். அக்னிக்கு கோஷ்ட சந்நிதி. ப்ரம்மா, அப்பர் சிலை. ஸ்தல புராணம் இந்த கோவிலில் முக்யத்வம் என்ன வென்று சொல்கிறது?. இங்கு அக்னி சிவனை தவமிருந்து வழிபட்டதால் சிவனுக்கு அக்னிபுரீஸ்வரர் என்று பெயர். அம்பாள் கருந்தார்குழலி. கோயில் குளத்திற்கு அக்னி தீர்த்தம் என்று பெயர். இன்னொரு புராண கதை வேறு விஷயம் ஒன்று சொல்கிறது. பூதேவியின் மகன் பாணாசுரன் தனது தாய் ஸ்தாபித்த சிவலிங்கத்தை இடம் பெயர்க்க துணிந்தான். அவனால் சிவலிங்கத்தை பூமியிலிருந்து அசைக்கவே முடியவில்லை. கொஞ்சம் கோணலாக ஒருபக்கம் சாய்ந்துவிட்டது. அதால் கோண பிரான் என்றும் பெயர்.
அக்னிக்கு இங்கே ஒரு அதிசயமான பஞ்சலோக விக்ரஹம். எங்குமே இதுபோல் இல்லை. காரணம், ரெண்டு தலை, மூன்று கால்கள். மூலவர் அக்னிபுரீஸ்வரர். லிங்கம் சற்று சாய்ந்திருக்கும். பக்தர்களுக்கு சாய்பவர். இங்கே இன்னொரு சிவனுக்கும் சந்நிதி உண்டு. அவர் பெயர் வர்த்தமானீஸ்வரர். வர்த்தமானீஸ்வரர் எதிரே ஒரு சிறு சந்நிதி. அதில் ஒரு சிவனடியார் சிலை.அது பற்றி தான் இந்த கட்டுரையே.
அந்த சிவனடியார் பெயர் முருகனார். சிறந்த ஒழுக்கமுள்ள பிராமண
குலத்தில் திருப்புகலூரில் பிறந்த சிவபக்தர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.
தினமும் சூரிய உதயத்துக்கு முன்பே எழுந்து ஸ்னானம் செயது, திருநீறு பூசி, நித்ய கர்மாக்களை புரிந்துவிட்டு, தோட்டத்திற்கு சென்று ஓம் நமசிவாயஎன்று விடாமல் பஞ்சாக்ஷரமந்த்ரம் சொல்லிக்கொண்டே பூக்களை பறித்து கூடை நிறைய கொண்டுவருவார். அழகிய கதம்ப மாலைகளை தொடுத்து திருப்புகலூர் கோணபிரானுக்கும் , வர்த்தமானீஸ்வரருக்கும் சாற்றுவது வழக்கம்.
திருப்புகலூருக்கு ஒரு முறை ஞானசம்பந்தர் வருகிறார். முருகனார் அவரை வரவேற்று உபசரிக்கிறார். நல்ல நண்பர்களாகிறார்கள். சம்பந்தருக்கு திருமணம் நடக்கிறது. முருகனார் அதில் கலந்து கொள்கிறார். அந்த வைபவ சிறப்பு என்னவென்றால், சம்பந்தர், அவர் மணந்துகொண்ட பெண், முருகனார் அனைவருமே சிவனோடு ஐக்யமாகிறார்கள். ஒளியில் கலந்துவிடுகிறார்கள்.
திருப்புகலூர் அப்பர் சம்பந்தர் தரிசித்த பாடல் பெற்ற சிவஸ்தலம்.
சிவனுக்கு சிவாகமங்களில் சொல்லப்பட்ட பூக்களை, பக்தியோடு பறித்து, மாலை தொடுத்து சாற்றுவது, அந்த பூக்களால் அர்ச்சனை செய்வது மிகபெரிய புண்யம்.
திருநாவுக்கரசர் ஒரு பாடல் பாடியிருப்பது நினைவுக்கு வருகிறது.
"பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்-
நாக்கைக் கொண்டர னாம நவில்கிலா-
ராக்கைக் கேயிரை தேடி யலமந்து-
காக்கைக் கேயிரையாகிக் கழிவரே."
ஒருநாளாவது ஒரு புஷ்பமாவது சிவன் திருவடிக்கு அளிக்கவில்லை. பொட்டுக்கூடை பேச்சு பேசும் இந்த நாக்கு ஒரு தரமாவது ஓம் நமசிவாய என்று அவனை போற்றவில்லை, பொழுது விடிந்தது முதல் இரவு பொழுது சாயும் வரை ந்த உடம்புக்கான சுகம், உணவு இதிலேயே என் நேரம் கழிந்தது. கடைசியில் என்ன ஆகப்போகிறது. இந்த பாடுபட்டு வளர்த்த உடம்பு எங்கோ காக்கை கழுகு களுக்கு நல்ல தீனியாகப்போவது தான் மிச்சம். இது தான் வாழ்க்கையா?என்கிறார் திருநாவுக்கரசர்.
No comments:
Post a Comment