உலகுக்கு உன் பங்கு என்ன? - J.K. SIVAN
நூறு வயது வாழ்வது எப்படி என்று ஒருவர் அறிவுரைகள் கொடுத்து இருந்தார். புத்தகம் நிறைய விற்பனை ஆகியது. எழுதியவர் பாவம் பாதி கிணறு தாண்டுவதற்குள்ளே மறைந்து போனார். நினைப்பது வேறு நடப்பது வேறு. அழகாக இருக்குமே ஒரு பாட்டு ''நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை...'' நூறு வயது எதற்கு வாழவேண்டும்? என்ன பிரயோஜனம்? யாருக்கு பயன்?
முப்பத்திரெண்டில் முன்னூறு வயதில் செய்யமுடியாததை கச்சிதமாக செயதுமுடித்து எப்படி ஆதி சங்கரர் விடை பெற்றார் ? என்ன குறை? அப்படியே தானே விவேகானந்தரும்.... இனிமேல் என் மூளைக்கு வேலை எதுவும் பாக்கி இல்லை? பலூன் மேலே மேலே ஊதினால் வெடித்துவிடும் என்று கிளம்பி போய்விட்டாரே . என்ன பாக்கி வைத்திருக்கிறார்? பாரதியார் என்ன கிழவரா? இதற்கும் மேலா ஒருவர் எழுதமுடியும்? என்ற அளவிற்கு எழுதிவிட்டாரே. ஆஸ்பத்திரிக்கு வீட்டுக்கும் அலைந்து அலைந்து யார் யாரோ என்னவெல்லாமோ சொல்லும்படியான எதற்கும் பிரயோஜனமில்லாத ''வெறும்'' வாழ்வு எனக்கு வேண்டாம். எனக்கு பணமில்லை. என்னால் பிறருக்கு சிரமமும் வேண்டாம். என் அண்ணா கொடுத்து வைத்தவன். நொடியில் மறைந்தான்.
அன்று ஏகாதசி. காலை 11 மணி. குளித்து விட்டு வழக்கம்போல் ராமஜெயம் நோட்டில் சில எழுதிவிட்டு பேரன் சைக்கிளை எடுத்துக்கொண்டு நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் வந்தான். அருகே ராகவேந்திரர் பிருந்தாவன தரிசனம். சில நிமிஷங்கள் த்யானம். அடுத்து ஆன்மீக புத்தகங்கள், வீடியோ, சிடிக்கள் விற்கும் கடையில் நுழைந்து ஏதோ ஒரு ஸ்லோகம் CD கேட்டு அதை போடுங்கள் கேட்டுவிட்டு வாங்குகிறேன் என்று எதிரே அமர்ந்து கேட்டவன் அது முடிவதற்குள் முடிந்து விட்டான்.... அவன் கோடி புண்யம் பண்ணியவன்.
சுப்புராவ் வீட்டில் ஏகப்பட்ட ரகளை. ப்ளக் புடுங்கணும் னு பொண்ணு சொல்றா. ஆஸ்பத்திரி பில் கட்டி மாளலை . பிள்ளை இருக்கிறவரை இருக்கட்டுமே என்கிறான். கண்ணை மூடி உலகமே மறந்து சுப்புராவ் தொண்டைவழியாக ஏதோ ஜோஸ் ருசியற்று உள்ளே போய் உயிர் ஊசலாடுகிறது. 21நாள். ஒரு அபிவிருத்தியும் இல்லை. பெண்கள் பிள்ளைகள் சேர்ந்து பில் காட்டுகிறார்கள். அவர்களுக்குள்ளே சுப்புராவ் வேண்டுமா வேண்டாமா என்ற பட்டிமன்றம். இப்படியே வீட்டுக்கு தூக்கிக்கொண்டுபோனாலும் சுப்புராவுக்கு எந்த வீட்டில் வரவேற்பு??? எத்தனை காலத்துக்கு?
ஐயோ வேண்டாம். வியாதி இல்லாத வாழ்க்கை அனாயாச மரணம். பாபு மாமா சுண்டக்காய் வற்றல் குழம்பு பருப்பு துகையல் கேட்டார். துகையல் ''A'' க்ளாஸ் என்று ரெண்டு தடவை வாங்கி சாப்பிட்டார். வெந்நீர் ஒரு டம்பளர் கேட்டார். வெந்நீர் வந்தது. குடிக்க அவரில்லை. இது எப்படி இருக்கு?
எங்கோ ஒருவருக்கு ரிடையர் ஆகிவிட்டார் என்று பிரிவுபச்சாரம் மீட்டிங் நடந்தது. எல்லோரையும் நினைவுகூர்ந்து நன்றி சொல்லி அப்படியே மயங்கி விழுந்து மறைந்துவிட்டார்.
பாரத ரத்னா அப்துல் கலாம் ஒரு கூட்டத்தில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிக்கொண்டே அப்படியே மேடையில் சரிந்து விழுந்து ஆடி ஏகாதசியில் இறைவனடி சேர்ந்தார்.
''உன்னை உலகத்துக்கு அனுப்பினேன், நீ என்ன செய்தாய்? ...... இறைவன் கேட்கும்போது என்னுடைய லிஸ்ட் பஸ் டிக்கெட்டை விட சின்னதாக இருக்குமோ?
No comments:
Post a Comment