சேஷாத்திரி ஸ்வாமிகள்
10 ''நான் சொன்னேனே''
திருவண்ணாமலை, ஸ்ரீ ரமணர் மற்றும் ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள் என்ற இரு ஆத்ம ஸ்வரூபிகள் ஒன்றாக சேர்ந்து இருந்த காலத்தில் பக்தர்கள் ஆத்மானுபவத்தின் உச்சியில் இருந்தனர் என்று தாராளமாக சொல்லலாம். ரமணர் ஸ்கந்தாஸ்ரமத்தில் அடிக்கடி ஒரு நெல்லி மரத்தின் அடியில் அமர்ந்திருப்பார். அதில் இருந்த அணில்கள் அவருடன் நெருங்கி பழகின. அவர் மேல் ஏறி விளையாடும். அவற்றின் வாயில் அவர் தின்பண்டங்களை ஊட்டுவார்.
சேஷாத்திரி ஸ்வாமிகள் சக்தி ஸ்வரூபம். ஞானச் சித்தர். ''நான் தான் பார்வதி தேவி'' என்று எல்லோரிடமும் சொல்வார். விவரமறியாதவர்கள் அவரை ஏளனம் செய்வார்கள். ரமணரைப் பற்றி சொல்லும்போது ''அவன் சுப்ரமணிய மூர்த்தி', குழந்தை, என்பார். தாயும் பிள்ளையாக அவர்கள் இருந்திருக்கிறார்கள்!
ரமணரிடம் சேஷாத்திரி ஸ்வாமிகளை பற்றி கேட்டபோது அவர் சொன்னது :
''சேஷாத்திரி ஸ்வாமிகள் யாரையும் கிட்ட சேர்க்கமாட்டார். அவர் கிட்ட நெருங்கவே பயம். இங்கே அப்படியில்லையே. எல்லோரும் வருவார்கள் போவார்கள். சிலர் என்னிடம் பெரிய சேஷாத்திரி எங்கே பெரிய ரமணர் எங்கே என்று கேட்பதும் உண்டு.''
சேஷாத்திரி ஸ்வாமிகள் ரமணரை விட பத்து வயது மூத்தவர். திருவண்ணாமலைக்கு முதலில் வந்தவர். அதனால் தான் பெரிய சேஷாத்திரி. பெரிய ரமணர். இருவருமே இந்திரியங்களை வென்ற ஜிதேந்திரியர்கள். தேக நினைப்பு இல்லாதவர்கள்.
ராமநாதபுரம் மாணிக்க சாமி, ரமணரைப் பற்றி சொல்லும்போது '' சேஷாத்திரி ஸ்வாமிகள் முக்குணங்களை கடந்த ஸ்திதியை கொண்டவர். அந்த நிலை பெறுவது எக்காலமோ என்ற கவலை கொண்டவர் ரமணர்'' என்பார். காலக்கிரமத்தில் ரமணர் ஞான சித்தி பெற்றார்.
திருவண்ணாமலை ஐந்து மலைச் சிகரங்கள் கொண்டது. புராணங்கள் இவற்றை பரமசிவனின் பஞ்ச முகங்கள் என்கின்றன. அருணாசல பஞ்சகம் என்பார்கள். சிவனின் ஐந்து முகங்களும் ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம், திரோதானம், அனுகிரஹம் முதலிய ஐந்து தொழில்கள். இந்த பஞ்சகத்தை நிறையபேர் அருணாசலேஸ்வரர், ஆறுமுகம், ரமணர், சேஷாத்திரி ஸ்வாமிகள், மற்றும் பல சித்தர்களாக விளக்குவதும் உண்டு.
1928ம் வருஷம் பக்தர்கள் சிலர் ஒரு புது சோபா ஒன்றை கொண்டுவந்து ரமணர் உட்காருவதற்கு அளித்தார்கள். அவர்கள் அவரை அதில் அமர வேண்டும்போது பகவான் ரமணர் ''நான் அதில் உட்காரவேண்டுமா? சரி உட்காருகிறேன். நான் என்ன சேஷாத்திரி ஸ்வாமிகளா உடலையே மறந்தவனா?'' என்று சிரித்தார். அபரோக்ஷஅனுபூதியில் இருவரும் ஒன்றே. ஞானிகள் கண்களாலேயே பேசுபவர்கள். மனசாலேயே சம்பாஷிப்பவர்கள். அந்த ரஹஸ்யம் மற்றவர்களுக்கு புரியாது. தெரியாது.
லட்சுமி அம்மாள் சேத்துப்பட்டு கிராமத்தை சேர்ந்தவள். சென்னையில் எழும்பூர் பக்கத்து ஸ்டேஷன் சேத்துப்பட்டு இல்லை இது. வட ஆற்காடு ஜில்லாவில் உள்ளது. ரமண பக்தை. ஸ்கந்தாஸ்ரமத்தில் பணிவிடை செய்பவள். சேஷாத்திரி ஸ்வாமியை பார்த்ததில்லை. திடீரென்று அவரைப் பார்க்க வேண்டும் என்று அவா. ஐந்து ஆறு நாள் தேடினாள். ஏழாம் நாள் காலையில் கண்ணில் தென்பட்டார். அவரை த்யானம் பண்ணி எதிரில் நின்றாள்.
''அங்கே என்றால் என்ன? இங்கே என்றால் என்ன ?' ரெண்டுமே ஒண்ணு தானே'' என்கிறார் ஸ்வாமிகள். இரு ஞானிகளும் ஒன்றே என்ற அர்த்தம் இதில் த்வனிக்கும்.
ஒரு ஆச்சர்யமான சம்பவம். எம். கே. சுப்ரமணிய சாஸ்திரி என்ற ஒருவருக்கு த்யானம் செய்து சித்தி பெற ஆசை. பூர்ணாதி லேகியம் என்ற ஒன்றை விழுங்கினால் அது கிட்டும் என்று யாரோ சொல்ல, ராமணரிடம் அதை சாப்பிடலாமா என்று கேட்டார். ''அந்த எண்ணம் வேண்டாம். சாப்பிடக் கூடாது'' என்கிறார் மகரிஷி. சாஸ்திரிக்கு நப்பாசை. யார் சொல்வதை கேட்டோ என்னவோ அதை வாங்கி விழுங்கினார். தலை சுற்றியது. உலகமே தலைகீழாக சுற்றியது. என்ன செய்வது என்று புரியவில்லை. அன்றிரவு ஒன்பது மணிக்கு சேஷாத்திரி ஸ்வாமிகளை தரிசிக்க வேண்டும் தோன்றியது. ஸ்வாமிகள் கம்பத்திளையனார் கோவில் சந்நிதியில் இருக்கிறார் என்று அறிந்து ஓடினார். யாரோ நாலு பேர் ஸ்வாமிகளோடு இருந்தார்கள். அவர் என்னன்னவோ புரிபடாமல் சொல்லிக்கொண்டிருந்தார். ஆர்வமாக அவற்றை கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர் பேசுவது சம்பந்தப் பட்டவர்களுக்கு மட்டுமே தெளிவாக மனதில் இருக்கும் கேள்விக்கு விடையாக புரியும். மற்றவர்களுக்கு வெறும் பேத்தலாக தோன்றும்.
சாஸ்திரி ஓடினார். அருகே நின்றார். வணங்கினார். அருகே அமர்ந்தார். ஸ்வாமிகள் பார்வை சாஸ்திரிமேல் விழுந்தது.
'' கூடாது கூடாது என்று தான் சொன்னேனே ஏன் அதை தின்னே?'' என்கிறார்.
லேகிய விஷயமாக ரமணர் சொன்னது இவருக்கு எப்படி தெரியும்? அவர் சொன்னதை ''நான் சொன்னேனே'' என்கிறாரே!! இருவரும் ஒருவரே என்று இதை விட எப்படி நிரூபணம் செய்ய முடியும்?
லேகிய விஷயமாக ரமணர் சொன்னது இவருக்கு எப்படி தெரியும்? அவர் சொன்னதை ''நான் சொன்னேனே'' என்கிறாரே!! இருவரும் ஒருவரே என்று இதை விட எப்படி நிரூபணம் செய்ய முடியும்?
No comments:
Post a Comment