Saturday, August 18, 2018

VIDHURA NEETI



விதுர நீதி    J.K. SIVAN 

         

   விதுரா எனக்கு அறிவுரை வழங்கு''
 
திருதராஷ்டிரன் விதுரனிடம் அறிவுரை பெறுவது ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விடுவது போல் தான் இருக்கிறது. இதை திருதராஷ்டிரன் மட்டுமா செய்கிறான். அவன் அவனல்ல.  திருதராஷ்டிரன் என்பது மஹா கனம்  பொருந்திய  நண்பர்களே  நாம் தாம்.  அவனுக்கு பிறவியிலேயே கண்ணில்லை. நமக்கு கண்ணிருந்தும் நாம் குருடர்கள். பார்க்கவேண்டியதை பாராமல் பார்க்ககூடாதவற்றையெல்லாம் தேடித் சென்று பார்க்கிறோம். அதால் விளையும் தீமைகள் எழுத்தில் அடங்காது. அவன் காதும் நமது காதே. எவ்வளவோ நல்ல விஷயங்களை கேட்கிறோம். அதோடு சரி. காதில் நுழைந்தது கருத்தில் பதிவதில்லை.  இந்த விதுர நீதி நமக்காகவே  திருதராஷ்டிரனை சாக்காக வைத்து வேத வியாசரால் சொல்லப்படுவதால் சற்று கவனித்து மனதில் இருத்திக் கொள்ளமுடிந்தால் நமக்கு தான் நல்லது. மற்றவருக்கு எடுத்து சொன்னால் அவர்களுக்கும் நல்லது. அதைத்தான் நான் செய்து வருகிறேன் ஐயா.

यथाशक्ति चिकीर्षन्ति यथाशक्ति च कुर्वते ।
न किं चिदवमन्यन्ते पण्डिता भरतर्षभ ॥ २१॥


அரசே, எவனொருவன் தனது முழு சக்தியையும் பிரயோகித்து முழு மனத்துடன், எந்த செயலிலும்  ஈடுபடுகிறானோ, அப்படி ஈடுபடும்போது எதையும் அசிரத்தையாக  இது பொருத்தமில்லை என்று தள்ளாமல்  ஆராய்ந்து செயல்படுகிறானோ அவனே புத்திமான். 

क्षिप्रं विजानाति चिरं शृणोति
विज्ञाय चार्थं भजते न कामात् ।
नासम्पृष्टो व्यौपयुङ्क्ते परार्थे
तत्प्रज्ञानं प्रथमं पण्डितस्य ॥ २२॥

இன்னும் சொல்கிறேன் கேளுங்கள்.  உங்கள் பிள்ளை ஒரு மஹாராஜா, நாட்டின் சக்ரவர்த்தி.  அவனை மாதிரி பொறுப்புள்ளவர்கள் என்ன செய்யவேண்டும் தெரியுமா?    எதையும்  சட்டென்று  சரியாக புரிந்து கொள்ள வேண்டும், பொறுமையாக எதை சொன்னாலும் முழுமையாக கேட்டுக் கொள்ள வேண்டும், தான் செய்ய வேண்டியதை தெளிவாக நேர்மையுடன் செயலாக்க வேண்டும்.   எந்த நிலையிலும்  ஏதோ ஒரு விருப்பத்தால், குறுகிய நோக்கத்தோடு, மற்றவர் விஷயங்களில்  குறுக்கிட்டு, ஆர்வத்தோடு, தானாகவே அவசரமாக ஒரு முடிவெடுத்து, சுயநலத்தோடு செயல்படாதவன் தான் சிறந்த புத்திமான். எல்லோராலும் போற்றப்படுபவன்.

नाप्राप्यमभिवाञ्छन्ति नष्टं नेच्छन्ति शोचितुम् ।
आपत्सु च न मुह्यन्ति नराः पण्डित बुद्धयः ॥ २३॥

கிடைக்காது என தெரிந்தும்  அதற்காக பிரயாசை படுவது,  சென்றதை,  இழந்ததை நினைத்து வருந்துவது,  சிறிய  துன்பம்,  இடுக்கண் வந்தாலும் நிலை குலைவது,   புத்தி  பேதலிப்பது  -- இதெல்லாம்   திடமான சித்தம் உள்ள நடுநிலையாளன், புத்திமானிடம்  நெருங்காது. 

निश्चित्य यः प्रक्रमते नान्तर्वसति कर्मणः ।
अवन्ध्य कालो वश्यात्मा स वै पण्डित उच्यते ॥ २४॥

கண் துஞ்சாமல், பசி நோக்காமல்,  எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் வரை அதில் மும்முரமாக ஈடுபடும் புத்திமான், நேரத்தை வீணடிப்பதில்லை, அவனது புலன்கள் கட்டுப்பாட்டில் இருக்கும், அவன் ஆத்மா அவனை வழி நடத்தும்.

இன்னும் விதுரர் சொல்வதை கேட்கப்போகிறோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...