ஐந்தாம் வேதம் J.K. SIVAN
அபயம் அபயம்
இதிகாசத்தில் வரும் பெண்கள் பள்ளிகளுக்கு சென்று கற்றதில்லை என்று நினைக்கிறோம். ஆனால் அவர்கள் இயற்கை அறிவினாலும் பெற்றோராலும், மற்றோராலும் தேவையான பொது அறிவையும், சமயோசிதத்தையும், கற்றுவிக்கப்பட்டு வாழ்க்கைக்கு தேவையான ஞானத்தை பெற்றிருந்தனர். ஆண்களை விட பெரும்பாலும் பெண்களே நிதானம் இழக்காதவர்கள், சமயோசிதம் தெரிந்தவர்கள்.
பாண்டவர்களின் சக்தியற்ற நிலை பிரதிகாமன் என்கிற தூதுவன் சொன்னதிலேயே திரௌபதிக்கு புரிந்தது. நியாயமான தனது கேள்விகளை அவன் மூலம் அறிவித்த திரௌபதி அடுத்து என்ன நேருமோ என்று கலங்கி நின்றாள் . எந்த நிமிஷமும் ஹஸ்தினாபுரத்து ஆட்கள் வருவார்கள். ஆபத்து நெருங்கி வீட்டுக்குள்ளேயே வந்துவிடும்.
'துச்சாதனா, இந்த பிரதிகாமன் மூளையற்றவன். திரௌபதியின் கேள்விகளை சுமந்து இங்குமங்கும் அலைகிறான். நீ போய் அவளை அழைத்துவா. வராவிட்டால் இழுத்து வா.''
துரியோதனனின் ஆணைப்படி, மிக்க கோபத்துடன், கண்கள் சிவக்க, துச்சாதனன் திரௌபதியை அடைந்து, சற்று நேரத்திலேயே துச்சாதனன் அவள் முன் தோன்றினான்.
''ஏ, அடிமையே வா என்னோடு. உன் கேள்விக்கெல்லாம் சபையில் பதில் கிடைக்கும்'' என்று கேலி செய்தான் துச்சாதனன். திரௌபதி தனது நிலையை தெரிவித்து வர மறுத்தாள் .
''வருகிறாயா இழுத்துச் செல்லட்டுமா உன்னை என்று அவன் மேலும் அவளை தகாத வார்த்தைகளை கூறி துன்புறுத்தி கடைசியில் ஒதுங்கி ஓய்வெடுக்க வேண்டிய நிலையில் திரௌபதி எல்லோர் முன்னாலும் சபைக்கு ஒற்றை வஸ்திரத்துடன் இழுத்துவரப்பட்டாள் .
சபையில் நால்வரைத்தவிர மற்றவர் விசனத்தோடு மௌனமாயினர்.
கைகளை முகத்தில் மூடிக்கொண்டு திரௌபதி பெண்கள் இருக்கும் இடம் தேடி ஓடினாள் . கோபத்துடன் துச்சாதனன் அவளைப் பின் தொடர்ந்து அவள் கூந்தலைப் பிடித்து இழுத்து சபையில் அனைவர் முன்பும் அவளை கொண்டு வந்து நிறுத்தினான். நடுங்கிய திரௌபதி கதறினாள்.
' ஏ மிருகமே, 'என்னை விடு. சபையில் ஏனையோர் முன்னே நிற்கும் நிலையில் நான் இல்லை. ஒற்றை வஸ்த்ரத்துடன் மறைவில் இருக்க வேண்டிய நிலையில் உள்ளவள் '' .
திக்கற்றவளுக்கு தெய்வமே துணை. மனதில் நாராயணனை, கிருஷ்ணனை வேண்டிக்கொண்டிருந்தாள்.
'' ஒரு ஆடையோடோ நிர்வாணமாகவோ இருந்தாலும் எனக்கு அது லட்சியமில்லை. வா இங்கே. ஆட்டத்தில் பணயமாகி இழக்கப்பட்ட நீ எங்கள் அடிமை . எங்கள் பணிப்பெண்களில் ஒருத்தி.இப்போது''
துரியோதனன் சிரித்தான். அடிபட்ட பெண் புலியாக சீறினாள் திரௌபதி.
''இந்த மாபெரும் சபையில் நீதி நேர்மை நியாயம் கற்றுணர்ந்த பெரியோர்கள் இருக்கிறீர்களே. பல யாக யஞங்கள் செய்தவர்கள், வயதில் மூத்தவர்கள், உங்கள் எதிரில் இந்த நிலையில் நான் நிற்க கூட தகுதியற்றவள். என்னை இவன் தொட்டு என் கூந்தலைப் பற்றி இழுக்கிறானே. தகாத வார்த்தைகள் பேசுகிறானே. இந்திரனே உதவிக்கு வந்தாலும் அவனை என் கணவர்கள் மன்னிக்க மாட்டார்கள். ஒழுக்கம் நேர்மை நீதி குறைவின்றி தர்மமே உருவனாவர் என் கணவர். இச் சபையில் என்னை மான பங்கப் படுத்த துணிந்த நீ தப்பமுடியாது. கட்டுண்டவர்களாக என் கணவர்கள் இதைக் காண நேர்ந்தது என் துர்பாக்யம். என்னைத் தொடாதே. பெண்மையின் தூய்மை நீ உணர இயலாதவன். என் கணவர்கள் அணுவளவும் நேர்மை நீதி நியாயம் தர்மம் பிசகாதவர்கள். இந்த நிலையிலும் என்னை நீ தொட்டு இழுத்ததை இங்கு எவரும் தடுக்கவில்லையே. அடக்க வில்லையே. உனக்குள்ள மதியை தான் அவர்களும் கொண்டிருக்கிறார்களோ?. க்ஷத்ரிய தர்மம் அழிந்துவிட்டதா? இல்லையென்றால் எல்லோரும் இப்படி சிலையாக பார்த்துக்கொண்டிருப்பார்களா?
''துரோணர் பீஷ்ம பிதாமகரே, உங்கள் சக்தி என்ன ஆயிற்று. விதுரரே, உங்களையும் தான் கேட்கிறேன். இது நியாயமா? உங்கள் கண்ணெதிரில் இந்த அக்ரமம் நடக்கலாமா?'' குமுறினாள் திரௌபதி.
''ஜனமேஜயா, சபையில் திரௌபதியின் குரல் எதிரொலித்தது. அவள் பார்வை சக்தியிழந்த பாண்டவர்கள் மீது சென்றது. துச்சாதனன் அவளை நெருங்கினான்.
''ஏ அடிமையே கத்தாதே'' என்று சிரித்தான். கர்ணன் வேடிக்கை பார்த்துக்கொண்டு சிரித்தான். சகுனி துச்சாதனன் செயலுக்கு கை தட்டி ஆர்ப்பரித்தான்.
''பெண்ணே, என்னால் ஒன்றும் முடிவாக சொல்ல இயலவில்லை. உன் கணவன் சகுனி சூதாட்டத்துக்கு அழைத்தபோது, அவனது சூதாட்ட சக்தியை நன்றாக தெரிந்தவன். அவனை ஜெயிக்க எவராலும் முடியாது என்று அறிந்தும், அவன் ஜாலக்காரன் என்று புரிந்தும் அவனோடு விளையாடுவதை தவிர்க்கவில்லை. அவன் அழைப்பை ஏற்று ஆடினான். தானே பணயம் வைத்து தொடர்ந்து சூதாடி சகலமும் இழந்தான். தன்னையே இழந்தான். சகுனி தன்னை ஏமாற்றிவிட்டான் என்று கருதவில்லை. தான் தோற்றதை ஒப்புக்கொண்டான். தோற்று அடிமையானவனுக்கு எந்த உரிமையும் கிடையாது. தன்னையே இழந்தவன் உன்னை எப்படி வைத்து இழக்கலாம், என்ன உரிமை என்று கேட்டாய். ''நான் தோற்றுவிட்டேன் என்னிடம் இனி ஒன்றும் இல்லை என்று தெரிந்தும் சகுனியால் உந்தப்பட்டு உன்னை வைத்து இழந்தான் யுதிஷ்டிரன். மனைவி கணவன் ஆளுமைக்கு உட்பட்டவள் அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டவள் என்ற தன்மையில் உன்னை அவன் வைத்து இழந்தால் மற்றவர்க்கு இதில் குறுக்கிட எந்த அதிகாரமோ தகுதியோ இல்லை என்று தான் எனக்கு தோன்றுகிறது. யுதிஷ்டிரன் நியாயம், நேர்மை, நீதியை மதித்து நடப்பவன், எனவே ஒன்றும் செய்ய இயலாத நிலைக்கு பாண்டவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்'' என்றார் பீஷ்மர்.
''தனக்கு சகுனியோடு ஆடும் திறமை இல்லை என்று அறிந்தும் யுதிஷ்டிரர் ஆட்டத்துக்கு நிர்பந்தப் படுத்தப் பட்டிருக்கிறார். இதில் விருப்பமில்லை என்று சொல்லியும் அவரை கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் தானே எல்லாம் இழந்தார் என்று எப்படி சொல்லமுடியும். எல்லோரும் கூட்டாக அவரை கட்டாயப்படுத்தி ஏமாற்றி அடிமையாக்கி இருக்கிறார்கள். மனசாட்சி என்று இருந்தால் அவர்கள் சிந்திக்கட்டும்.
பீமனின் கண்களில் நெருப்பு எழுந்தது. யுதிஷ்டிரனை வெறித்து பார்த்தான். இந்த கொடுமை உன்னால் நடந்தது. சூதாட்டம் ஆடுபவர்கள் வீட்டிலும் பெண்கள் உண்டு.அவரில் சிலர் ஒழுக்கமற்றவர்களாக தீய குணங்கள் கொண்டவர்கள் இருக்கலாம். சூதாடிகள் இத்தகைய பெண்களைக் கூட பணயம் வைத்து ஆடுவதில்லை. எண்ணற்ற அரசர்கள் கொடுத்த செல்வங்கள் அனைத்தையும் வைத்து இழந்தாய். நான் ஒன்றும் சொல்லவில்லை. நீ எங்கள் மூத்தவன். தலைவன். உன் சொற்படி கேட்டு நடப்பவர் நாங்கள். ஆனால் திரௌபதியை பணயம் வைத்து இழந்தது ஜீரணிக்க முடியாத தவறு. பாண்டவர்களின் மனைவியான இவளை இந்த நாய்கள், கௌரவர்கள் கொடுமைப் படுத்த துன்புறுத்த வைத்து விட்டாய். இதில் தான் உன்மீது எனக்கு கோபம் பொங்கி வருகிறது. இவளை வைத்திழந்த உன் கைகளை நான் தீயினால் கொளுத்தவேண்டும். சகா தேவா தீ எடுத்துவா.'' என்றான் பீமன் .
அர்ஜுனன் குறுக்கிட்டான். ''அண்ணா பீமசேனா, இது போல் நீ இன்றுவரை பேசியதில்லை. இந்த கேடு கெட்டவர்களால் உன் உயர்ந்த ஒழுக்கம் குன்றியதோ? எதிரியின் எண்ணங்களை பூர்த்தி செய்யாதே. அமைதியைக் கடைப்பிடி. நமது மூத்தவர் சொல்லை, செயலை, நாம் மீறலாமா? அவரைக் குறை சொல்லலாமா? அவமதிக்கலாமா? எதிரியின் அழைப்பை நாணயமாக மதித்து ஏற்றார். சகோதர பாவத்தோடு நட்பாக அழைப்பு விடுத்ததை ஏற்றார். விருப்பமில்லாவிட்டாலும் ஆட்டத்துக்கு அழைத்தபோது ஒப்புக்கொண்டார். நமது புகழ் ஒங்க இந்த குணமே காரணம்.'' என்றான் அர்ஜுனன்.
'அர்ஜுனா, சரியான நேரத்தில் என்னை நேர்ப் பாதைக்கு கொண்டு வந்தாய். அண்ணன் க்ஷத்ரிய தர்மம் பிரகாரம் தான் இதை எல்லாம் செய்தார் என்று நான் உணராமலிருந்தால் அவர் இரு கரங்களை பிய்த்து தீக்கிரையாக்கி இருப்பேனே''
துரியோதனன் சகோதரில் ஒருவனான விகர்ணன் எழுந்தான். ''சபையோர்களே, இந்த திரௌபதியின் கேள்விக்கு யாரும் ஏன் பதில் அளிக்கவில்லை? பீஷ்மர், துரோணர், விதுரர், கிருபர், ஏன் சும்மா இருக்கிறார்கள்? மற்றவர்களும் ஏன் வாய் திறக்க வில்லை. உண்மையை பரிசீலித்து பதில் வழங்கவேண்டும்.''
ஒருவரும் விகர்ணனுக்கு பதிலளிக்காத நிலையில் துன்பப் பெருமூச்சு விட்டவாறு விகர்ணன் தொடர்ந்தான். ''நீங்கள் வாய் திறவாததால் அது நேர்மையாகாது. இங்கு நடந்தது அநீதி. அக்ரமம். அராஜகம். சூதாட்டம் ஆடுவது ஒரு அரசனுக்கு உரிமையாக இருக்கலாம். யுதிஷ்டிரனை சூழ்ச்சியால் திரௌபதியை பணயம் வைக்க செய்தது தவறு. அவள் மற்ற பாண்டவர்களுக்கு மனைவி. தன்னை இழந்த பிறகு தான் யுதிஷ்டிரன் அவளை பணயம் வைத்தான். சகுனியின் துர்போதனையால் தான் யுதிஷ்டிரன் அவளை பணயம் வைத்தான். எனவே திரௌபதி பணயத்தில் ஜெயிக்கப்படவில்லை. திரௌபதி அடிமையல்ல''
விகர்ணன் பேச்சுக்கு பலத்த கைதட்டல் கிடைத்தது. சகுனி செய்தது அக்ரமம் என்று சில குரல்கள் ஒலித்தது. கர்ணன் கோபத்தோடு எழுந்தான்
.''விகர்ணா நிறுத்து. உளறாதே. எந்த கட்டையால் நெருப்பு பற்றவைக்கப்பட்டதோ அந்த கட்டையும் நெருப்பில் தான் அழியும். உன் வார்த்தைகளே உனக்கு எதிரி. இங்கு ஏன் யாரும் வாய் திறக்க வில்லை என்றால் எந்த அநீதியும் இங்கு நடைபெறவில்லை. தட்டிக் கேட்கும்படியாக எதுவும் நிகழவில்லை. அனுபவமற்ற நீ ஒருவன் மட்டுமே ஏதோ உளறுகிறாய். முட்டாளே, யுதிஷ்டிரன் எல்லாவற்றையும் இழந்தபோது திரௌபதியையும் சேர்த்து தான் இழந்தான். அவள் அவனுள், அவன் உடமையில், உரிமையில் அடக்கம்''
''ஒரு வஸ்த்ரத்தொடு வந்த ஒழுக்கமான பெண்ணை கொண்டுவந்தது தவறு என்றாய். ஒருவனுக்கு ஒருவளே உலக வழக்கம். ஒழுக்கம். ஆனால் இவளோ ஐந்து பேர் மனைவி. இவளையா அந்த ரகத்தில் சேர்க்கிறாய்? இவள் ஆடையை உருவுவது தவறே அல்ல. எல்லோர் எதிரிலும் தான் ஆட்டம் நடந்தது. சகுனி நியாயமாக தான் யுதிஷ்டிரனை வென்றான். அவன் வைத்த பணயப் பொருள்கள் சகலமும் கை மாறியது..
விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம்'' என்றான் கர்ணன்.
''துச்சாதனா, இந்த விகர்ணன் புரியாமல் ஏதோ பேசிவிட்டான். நீ இந்த பாண்டவர்கள் அவர்கள் மனைவி திரௌபதி அனைவரின் ஆடைகளையம் களைவாயாக. '' என்றான் கர்ணன்.
துச்சாதனன் அவள் ஆடையைப் பிடித்து இழுத்தான்.
பாண்டவர்கள் தங்களது மேல் வஸ்த்ரங்களை களைந்து எறிந்தார்கள். துச்சாதனன் திரௌபதியின் ஆடையை உருவ முயன்றான்.
நிர்கதியாக நின்ற திரௌபதி ஹரியை நினைத்தாள் . ''ஒ கோவிந்தா, கிருஷ்ணா, இந்த கௌரவர்கள் என்னை மானபங்கப் படுத்துகிறார்களே. லக்ஷ்மிபதி, அபயம் அபயம். என்னைக் காப்பாற்று. எனக்கு நினைவு தப்புகிறது. உடனே என்னை சம்ரக்ஷிக்கவேண்டும் லோக சம்ரக்ஷணா'' என் மானம் காப்பாய். தீன ரக்ஷகா '' இரு கரம் கூப்பினாள் திரௌபதி. கண்கள் மூடினாலும் தாரை தாரையாக கண்ணீர் பிரவாகம் பெருகியது.
எங்கிருந்தாலும் கிருஷ்ணனுக்கு திரௌபதியின் அபயக் குரல் கேட்டது. எந்த உள்ளத்திலிருந்தும் ஆழமான உண்மையான பக்தியோடு, நம்பிக்கையோடு தன்னை வேண்டி ஒரு அபயக்குரல் கேட்டால் உடனே எங்கு உள்ள போதிலும் கண்ணனின் உதவி கிடைக்குமே.
வண்ண வண்ண ஆடைகள் திரௌபதியின் இடையில் ஒன்றன் பின் ஒன்றாக நீண்டன. துச்சாதனன் அவள் ஆடையை உருவிக்கொண்டே தான் இருந்தான். அவன் இழுத்த ஆடை அதே வண்ணத்தில் நீண்டு கொண்டே இருந்தது. சபையில் அனைவரும் அதிசயித்தனர். கண்களை நம்பவே முடியவில்லையே. திரௌபதியை மெச்சி கை தட்டினர்.
பீமன் கர்ஜித்தான். எங்கும் எதிரொலிக்க ''இதற்கு முன் எவரும் உரைக்காததை , இனியும் எவரும் சொல்லப்போவதில்லை என்ற வார்த்தைகளை இப்போது சொல்வேன். இந்த வார்த்தைகளை நான் நிறைவேற்றாவிட்டால் என் முன்னோர்களின் இடம் செல்ல தகாதவன். யுத்தத்தில் இந்த கீழ் மகன் கேடு கெட்டவன் துச்சாதனனின் மார்பைப் பிளந்து, துரியோதனனின் துடையை பிளந்து அவன் ரத்தத்தை பருகவில்லைஎன்றால் என் முன்னோர்கள் சென்ற இடம் எனக்கு இல்லை.'' ஹா என்ற அதிர்ச்சியின் சப்தம் அவையில் எங்கும் கேட்டது. திரௌபதியைச் சுற்றி மலைபோல் சேலை ஒன்று குவிந்திருக்க அதன் அருகே, ஆடையை உருவிய துச்சாதனன் களைத்துப் போய் ஏமாற்றத்தோடும் வெட்கத்தோடும் அதிர்ச்சியிலுமாக விழுந்து கிடந்தான்.
No comments:
Post a Comment