ரஸ நிஷ்யந்தினி J.K. SIVAN
பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள்
ராமன் யார் தெரியுமா? 5
என்னுடைய அம்மா வழி தாத்தா ப்ரம்மஸ்ரீ வசிஷ்ட பாரதிகள், காஞ்சி பரமாச்சார்யா மகா பெரியவாவிடம் ''புராண சாகரம் '' என்ற விருது பெற்ற கம்பராமாயண பிரசங்க உபன்யாசகர். தமிழ் வித்துவான். கண் பார்வை இல்லாத போதும் நல்ல ஞாபக சக்தி . எல்லா பாடல்களும் தமிழ் நூல்களும் அத்துபடி. என் முன்னோர்களில் ஐந்து ஆறு தலைமுறையாக ராமாயண பிரசங்கத்தாலே உஜ் ஜீவனம் செய்தவர்கள். அருணாச்சல கவிராயரின் ராமநாடக கீர்த்தனைகளை தஞ்சாவூர் ராஜா அரண்மனையில், மற்றும் அநேக ஜமீன்தார்கள் சபையில் சங்கீத உபன்யாசம் செய்து சன்மானம் பெற்று வாழ்ந்தவர்கள். ஆஸ்தான புலவர்கள். எனவே பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகளின் ரஸ நிஷ்யந்தினி என்னை கவர்ந்ததில் ஆச்சர்யமில்லை.
அயோத்தியில் அன்று போல் இது வரை என்றுமே ஆச்சர்யம் நிகழ்ந்ததில்லை. வெகுநேரமாக கையைக் கட்டிக்கொண்டு சக்கரவர்த்தி தசரதன் கண்ணிமைக்காமல் சிலையாக பார்த்துக்கொண்டிருக்க அவனது ஆசனத்தில் கௌசிகர் எனும் பிரம்மரிஷி விஸ்வாமித்ரர் அமர்ந்து கொண்டு அவனுக்கு ராமனைப் பற்றிய ரகசியங்களை ஒவ்வொன்றாக கூறி வருகிறார். அவையில் வசிஷ்டர் முதலாக எல்லோரும் ஆனந்தமாக நம்மைப் போல் கேட்டுக் கொண்டி ருக்கி றார்கள்.
முப்பத்தி ஐந்தாவது காரணத்தை இப்போது விஸ்வாமித்ரர் சொல்வதால் நாமும் ஆணி அடிக்கப்பட்டு அங்கே நிற்கிறோம் :
35. ''தசரதா , ராமன் எல்லோரையும் போல இரு கால்களால் இந்த பூமியில் நடக்கும் பாதசாரி என்றா உன் எண்ணம்? நான் அறிவேன் அவனை. இந்த அகில உலக உயிர்கள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்தாலும் அவனது உருவத்தின் கால் பங்கு தேறாது என்றபோது அவனது உருவத்தின் முக்கால்பங்கு விண்ணுலகை கடந்து அழியாது நிற்பதை உணரமுடிகிறதா உன்னால்? (புருஷ சூக்தம் சொல்வது)
36. ''இதோ பார் ராமனை. வேத வித்துக்களான பிராமணர்களின் முகங்களை ஆர்வமாக ஆவலாக எதிர் நோக்கி அவர்களது ஆசிகளை பெற அவன் நிற்பது போல் உனக்கு தோன்றுகிறது அல்லவா?
அது அல்ல உண்மை. பிராமணர்கள் என்பதே அவன் முக பிரதி பிம்பம் என்று உணர்வாய். காரணம் அவன் முகத்திலிருந்து தான் பிராமணர்களே தோன்றினார்கள்.'' (புருஷ சூக்தம் சொல்வது)
37.உன் மகன் ராஜ குமாரன் ராமன் எதிரி மன்னர்களின் சதி திட்டங்களை முறியடிக்க க்ஷத்ரியர்கள் அநேகரின் பலமிகுந்த புஜங்கள் அவனுக்கு தேவை என்று நீ எண்ணுகிறாய். புருஷ சூக்தம் சொல்லும் ''புஜத்திலிருந்து க்ஷத்ரியர்கள் தோன்றினார்கள்'' என்பது ஸ்ரீ ராமனின் புஜத்திலிருந்து தான்.
38. இருளில் ஒளி பெற சூரியனையும் சந்திரனையும் தேடும் மற்றவர்கள் போல் அல்ல ராமன். வேதம் சொல்வது கவனமிருக்கிறதா? ''ஒளி, பிரகாசம் எங்கிருந்தெல்லாம் பிறக்கிறதோ அதெல்லாம் ஸ்ரீ ராமனிடமிருந்து வெளிப்படும் ஸ்வயம் பிரகாசத்தின் பிரதிபலிப்பு என்று நான் அறிவேன்.
39. அயோத்தி மகாராஜனே, கேள். இக்ஷ்வாகு வம்ச தோன்றல்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த பழம்பெரும் பெருமை வாய்ந்த கோசல ராஜ்ஜியம் ராமனால் காப்பாற்றப்படும் என்று நீ எண்ணுகிறாயே, அவன் யார் தெரியுமா உனக்கு? கரிய நெடிய காட்டுப் பன்றி உருவெடுத்து பல கரங்களுடன் இந்த மா பெரும் பூமியையே இரண்யாக்ஷனிடமிருந்து திரும்ப பெற்று தூக்கி நிலை நிறுத்தியவன். சுருங்க சொல்லவேண்டுமானால் பூமி மீண்டும் தோன்ற காரணன் ஸ்ரீ ராமன்.
40. அரசனே, உன் மகன் ஸ்ரீ ராமனை எல்லோரும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்கிறாயே, முதலில் நீ புரிந்து கொள்ளவேண்டியது என்ன தெரியுமா? ஸ்ரீ ராமனின் சந்தோஷத்தின் ஒரு துளியூண்டு தான் இந்த அகில புவன உயிர்களின் மொத்த சந்தோஷமே.
41.என் மகன் ராமன் வேத சாஸ்திரங்கள் எல்லாம் கற்றவன் அவன் பேசுவதில் வேத சாரம் இருக்கும் என்று சொல்கிறாயே, நான் அறிந்ததைச் சொல்கிறேன் கேள். ரிக்வேதம், யஜுர்வேதம், சாமவேதம் எல்லாமே ஸ்ரீ ராமனின் மூச்சாகவே வெளிப்பட்டவை. அவன் சகலமும் அறிந்தவன், எல்லாவித சக்தியும் கொண்டவன் என்பது புரிகிறதா?
42. ராமன் மாயை வசப்பட்டவன் என்று நீ நினைத்தால் அது தவறு. மாயையே அவனை நம்பித்தான் இருக்கிறது தசரதா.
43. இந்த உலகத்திலேயே சிறந்த பிறவி உன் மகன் ராமன் என்று பெருமைப் படுகிறாயே. இன்னும் அதிக பெருமைப்பட உனக்கு தெரியவில்லை. அவன் வெறும் மனிதப் பிறவி அல்ல. பிறவியே அற்ற அழியாத பரம்பொருள்.
44 . ஒரு சின்ன விஷயம் தசரதா . நீ அவனைப் பார்க்கும்போது கருநீல வண்ணனாக பார்க்கிறாய். அவன் நிறம் என்ன தெரியுமா? புடம் போட்ட தங்கஒளி . கண்ணைப்பறிக்கும் பிரகாசம். பொன்னொளி.
45. ராமன் நீ நினைப்பதுபோல் இந்த ப்ரக்ரிதியில் ஒரு ஜீவன் அல்ல. இந்த ஜீவன்களின் ஒட்டு மொத்த சாரமான பரமாத்மா. புருஷோத்தமன்,
46 ராமன் உன் மகன். எல்லோரையும் போல காலத்தின் பிடியில் அகப்பட்டவன் என்று நீ கருதுகிறாயே. அவன் யார் என நான் அறிவேன். காலத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவன். பக்தர்களின் சீலத்திற்கு , பக்திக்கு மட்டுமே கட்டுப்பட்ட பக்தவத்சலன்.
47. நீ நினைக்கிறபடி இந்த ராமன் வெறும் கோசலை ராஜ்யத்தை மட்டும் ஆண்டு கொண்டு சுற்றி சுற்றி வருபவனா? எனக்கு தான் தெரியுமே. அவன் இந்த கரிய பிரபஞ்சத்தில் பொன்னொளி வீசும் ஆதித்யன்.
சூரியன்.
48. என் மகன் ராமன் இந்த கோசல நாட்டின் பிரஜைகளுக்கு அதிபதி என்று உனக்கு பெருமை அல்லவா. ? இல்லை தசரதா. அதைவிட பெரிய பெருமை உனக்கு இருப்பதை நீ அறியவில்லை. நான் அறிவேன். ராமன் இந்த பிரபஞ்சமனைத்திலுமிருக்கும் சர்வ ஜீவன்களின் நாடி, அவர்கள் இடையே நடமாடுபவன். உறவு கொண்டவன்.
49. ஏதோ தனது கைகளாலும், கால்களாலும் உழைப்பவனா உன் மகன் ராமன் ? கைகளின் உதவி இன்றியே எதையும் கொள்பவன். கால்களின்றியே எங்கும் வேகமாக நகர்பவன், கண்களில்லாவிடிலும் எல்லாவற்றையும் காண்பவன், காதே வேண்டாம் அவனுக்கு எதையும் கேட்க, மொத்தத்தில் நம் போல் மனிதன் அல்ல ஸ்ரீ ராமன்.
50. அவன் இங்கே இதோ உன் முன் நிற்கிறான் என்றா நினைக்கிறாய் தசரதா ? அவன் என்ன ஒரு இடத்தில் மட்டுமே காணப்படுபவனா? எங்கும் எதிலும் எப்போதும் நிறைந்தவன் என நான் அறிவேன்.
ஆஹா விஸ்வாமித்ரர் என்னமாக ராமனின் ப்ரபாவத்தை விளக்குகிறார். பருத்தியூரார் தானாக சொல்வதில்லை இதெல்லாம். ஒவ்வொரு காரணத்தின் பின்னாலும் வேதங்கள், சாஸ்திரங்கள், ஸ்தோத்திரங்கள், புராணங்களின் தத்துவங்கள் பொதிந்திருக் கின்றதை கற்றோர்கள் அறிவார்கள்.
மேலும் ஸ்ரீ க்ரிஷ்ண ஸாஸ்திரியை அனுபவிப்போம். இப்போது தானே பாதி கேட்டிருக்கிறோம். இன்னும் பாதி இருக்கிறதே. மொத்தம் நூறு அல்லவோ சொல்கிறார்.
No comments:
Post a Comment