நாலடியார் - J.K. SIVAN
அவ்வப்போது நாம் சமண முனிவர்களை விடுவதில்லை. அவர்களது நாலடியார் பாடல்கள் கருத்து செறிந்தவை. அற்புத பரிசாக நமக்கு தரப்பட்டவை. சிறுவயதில் இதை நாம் மனப்பாடம் செய்ய மட்டுமே கற்றோம். அர்த்தம் கற்பிக்கப்படவுமில்லை,நாம் கற்றுக்கொள்ள முயற்சிக்கவோ, அதற்கான சந்தர்ப்பமோ வாய்க்க வில்லை. அது அப்படியே மனப்பாட செய்யுளாக போகவேண்டாம். அர்த்தமும் இப்போதாவது புரியட்டும்.
''விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்கு ஒருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய்
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது.''
ஒரு பெரிய மாளிகை. நிறைய அறைகள். வெகுகாலமாக எவரும் அதில் வசிக்காமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. அதில் என்ன இருக்கும். வெறும் இருள் மட்டும். எத்தனை காலமாக பல நூற்றாண்டுகளாக! எவ்வளவோ காலமாக இருண்டு கிடந்த போதிலும் அந்த அறையில் ஒரு தீபம்
விளக்கொளி கொண்டு வரும்போது கண்மூடி கண் திறக்கும் நேரத்தில் பல கால இருள் பறந்து போய் மறைந்து விடுகிறது அல்லவா. இது போலவே தான் ஒருவன் செய்த தவத்தின் பயனாக, பலனாக அவன் இதற்கு முன் செய்திருந்த பல ஜன்ம பாவம் கணநேரத்தில் விலகும்;. தீபம் எரிய வேண்டுமானால் அதற்கு திரி எரிய விளக்கில் எண்ணெய் வேண்டும். எண்ணெய் இல்லாமல் குறையும்போது தீப ஒளி மங்கி அணைந்து எங்கும் மீண்டும் இருள் பரவுவது போல் நமது நல்வினை பயன் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தால் மீண்டும் பாபம் தலை காட்டத் தொடங்கும். அது கெட்டியாக நம்மைப் பிடித்துக் கொண்டுவிட்டால் என்ன? பழையபடி பல ஜென்ம பிறவி தான். கஷ்டம், துன்பம். ......
''நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமம் செய்வார் - தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவைபிதற்றும்
பித்தா¢ன் பேதையார் இல்.
ஆதி சங்கரர் நாலடியாரை நிச்சயம் படித்திருக்க மாட்டார். அவர்காலத்தில் புத்தர்கள் சமணர்கள் இருந்தார்கள். ஆனால் அவரது நேரம் வடக்கே ஸமஸ்க்ரித காரர்களிடையே பெரிதும் கழிந்து விட்டதால் தமிழ் தெரிந்திருக்காது. ஆனால் சமணர்கள் கெட்டிக்காரர்கள். ஆதி சங்கரர் சமஸ்க்ரிதத்தில் சொன்னதை நாலடியாரில் தமிழில் அழகாக சொல்கிறார்கள். கொஞ்சம் வேறே மாதிரி அவ்வளவுதான்.
இந்த தேகம் அழியக்கூடியது. எப்போது என்று எவனுக்கும் தெரியாத ரகசியம் இன்று இதை எழுதும் வரை வாஸ்தவம். அழிவது என்றால் ஏதோ டிவி யில் ஒரு சீரியல் பார்த்து அழுது சிரித்துவிட்டு சாப்பிட்டு படுத்தோம் காலை எழுதிருக்கவில்லை. படுக்கையோடு கதை முடிந்துவிட்டது என்பது வழியில்லாமல் கஷ்டமில்லாமல் துன்பப்படாமல் போகும் சந்தோஷமான எண்ணம் தான். ஆனால் நிறையபேருக்கு பீஷ்மர் அம்புகளை விட அதிக ஊசிகளை கை கால் தொடை, எல்லாம் குத்தி, காது மூக்கு தொண்டை எல்லாம் குழாய் செருகி நரகவேதனை மாசக்கணக்கில் பட்டு அவஸ்தையில் துடித்து, சேர்த்து வைத்த எல்லா பணத்தையும் தொலைத்து விடும் பாக்யம் இந்த உடம்புக்கு உண்டு. இதெல்லாம் நன்றாக உணர்ந்த பெரியோர்கள், அறிவுடையவர்கள் நமக்கு தவத்தில் தியானத்தில் ஈடுபட உதவ வேண்டும். நாம் தான் அவர்களை தேடி பிடித்து பயன் பெற வேண்டும். கற்பது இப்போதுள்ள மாணவர்கள் கற்கும் வறட்டு விஞ்ஞானம் தொழில் முறை, காசு சம்பாதிக்க, வாழ்வை ஈடுபடுத்துவது அறிவிலிகள் வெறும் இலக்கணத்தை கற்பது போல். ஆதி சங்கரர் சாகிற வயதில் பாணினி இலக்கணத்தை கற்பவனிடம் ''இந்த வெத்து இலக்கணம் உன்னை கடைசி காலத்தில் காப்பாற்றாது'' என்று முதல் ஸ்லோகமாக பஜகோவிந்தத்தில் ஏற்கனவே பாடி இருக்கிறார். உதவாக்கரைகள் நிறைய இருப்பது போல் இலக்கணநூல் என்று சொல்லப்பட்ட பல நூல்களையே விடாமல் தேடி கற்றுக்கொள்ளும் மனிதர்களே 'நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே ''உன்னை இது காப்பாற்றாதே தம்பி'' என்று சங்கரர் சொல்லியதை தான் சமணர்கள் மேலே சொன்னார்கள்.
அடுத்து மீதி நாலடியார் தெரிந்து கொள்வோம்.
.
No comments:
Post a Comment