பருத்தியூர் கிருஷ்ண ஸாஸ்திரிகள்.
J.K SIVAN
ஸாஸ்திரிகளின் முதல் குரு
நமது வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்ளவேண்டியவை எத்தனையோ. எண்ணற்ற மஹான்கள் சத்தம் போடாமல் இருந்த இடம் தெரியாமல் அநேக அற்புதங்களை செய்துவிட்டு மறைந்திருக்கிறார்கள். அவர்களை அறிந்தவர்கள் மூலம், அவர்களை பற்றி எழுதப்பட்ட சில விஷயங்கள் நம்மை அடைவதன் மூலம் நாம் அந்த மஹான்களைப் பற்றி அறிந்து புளகாங்கிதம், ஆனந்தம் அடைகிறோம். இவரைப்போல் இன்னொருவர் இல்லை என்று வாழ்ந்தவர்களில் ஒருவர் பருத்தியூர் கிருஷ்ண ஸாஸ்த்ரிகள் . அவரைப் பற்றி சில விஷயங்களை அவர் கொள்ளுப்பேரன் ஸ்ரீ சுந்தர ராம மூர்த்தி எழுதிய ஒரு கட்டுரையில் தெரிந்து கொண்டேன்.
நூற்றைம்பது வருஷங்களுக்கு முன் குருவிடம் சென்று கல்வி கற்கும் பழக்கம் இருந்தது. அதற்கும் முன்பு குருகுல வாசம். குருவுடன் அவர் இல்லத்தில் தங்கி சேவை செய்து கல்வி பெறுதல். ஆரம்பக்கல்வி அப்பா ராமசேஷ ஸாஸ்த்ரியிடம் வீட்டிலேயே பெற்று, ஏழாம் வயதில் சேங்காலிபுரம் ப்ரம்ம ஸ்ரீ வைத்யநாத தீக்ஷிதரிடம் சிஷ்யனாக சேர்கிறார். இந்த தீக்ஷிதரை அனைவரும் மரியாதையோடு ''முத்தண்ணாவாள்'' என்று அழைப்பார்கள்.
அப்பா பிள்ளை கிருஷ்ண ஸாஸ்திரியோடு தீக்ஷிதரை அணுகி மகனை சிஷ்யனாக சேர்த்த அன்று தீக்ஷிதர் தனது வீட்டு திண்ணையில் மற்ற சிஷ்யர்களுக்கு காளிதாசனின் ராகு வம்ச ஐந்தாவது சர்க முதல் ஸ்லோகம் அர்த்தம் சொல்லிக் கொண்டிருந்தார்.
तमध्वरे विश्वजिति क्षितीशं निःशेषविश्राणितकोशजातम्|
उत्पातविद्यो गुरुदक्षिणार्थी कौत्सः प्रपेदे वरतन्तुशिष्यः॥ ५-१
tamadhvare viśvajiti kṣitīśaṁ niḥśeṣaviśrāṇitakośajātam
utpātavidyo gurudakṣiṇārthī kautsaḥ prapede varatantuśiṣyaḥ || 5-1
'இந்த பயல் உம்ம புத்ரனா? பார்க்க சூட்டிகையா இருக்கானே?
''பெரியவா ஆசிர்வாதம், ஸ்ரீ ராமன் அனுக்கிரஹம். எனக்கு தெரிந்ததை சொல்லிக்கொடுத்திருக்கேன். இனிமே இவன் பெரியவா கிட்டே சிக்ஷை பெறணும்னு அழைச்சுண்டு வந்திருக்கேன்.
''பயலே இங்கே வா இதை வாசி....''
மேலே கண்ட ஸ்லோகத்தை சிறுவன் கிருஷ்ணன் வாசித்தான்.
அதன் அர்த்தம்: ரவிகுல ராஜா ரகு, ஒரு பெரிய யாகம் பண்ணினான். அதன் பெயர் விஸ்வஜித். அதன் முடிவில் எல்லோருக்கும் தன்னிடம் இருந்த எல்லா பொருள்களையும் தானமாக கொடுத்துவிட்டான். ஒன்றுமே அவனிடம் இல்லாத நிலையில் ரகுவிடம் ஒரு சிறு பிராமண சிறுவன், கௌஸ்தன் ,வருகிறான்.
சிறுவன் தனது குரு வரதத்துவுக்கு குரு தக்ஷிணை கொடுக்க இந்த யாகத்தில் ராஜா ரகுவிடம் நிறைய தானம் பெற வந்ததை சொல்கிறான். இதை அறிந்ததும் ராஜா ரகு நிலைகுலைகிறான். கண்களில் நீர் மல்க:
''என் மகனே, நான் என்ன செய்வேன் அப்பா. நீ வந்த இந்த நேரத்தில் என்னிடம் எதுவுமே இல்லையே . என்னிடம் இருந்த எல்லாவற்றையும் ஏற்கனவே தானம் செய்துவிட்டேனே'' என்று ராஜா வருந்துகிறான்.''
இந்த ஸ்லோகத்தின் அர்த்தத்தை முத்தண்ணாவாள் எடுத்துச் சொன்னதும் கிருஷ்ண சாஸ்திரிகள் அவருக்கு நமஸ்காரம் செயது திரும்புகிறார்.
''குருநாதா, நான் கல்வி கற்க தங்களிடம் வந்த நேரமே சரியில்லை. குரு தக்ஷிணை கொடுக்க வழியில்லாத கௌஸ்தன் நிலை தான் எனக்கும். கொஞ்சம் நல்ல நிலை அடைந்ததும் தங்களிடம் வருகிறேன்'' என்கிறார் சிறுவனான கிருஷ்ண ஸாஸ்த்ரிகள் .
''அதெல்லாம் இல்லை அப்பனே, நீ இன்றுமுதல் என்னிடம் சிஷ்யனாக கல்வி கற்கப்போகிறாய். பின்னால் ரகு குபேரனைப் போல செல்வம் பெற்று நிறைய தானம் கொடுத்து கௌஸ்தனை திருப்தியாக அனுப்பி கௌஸ்தனும் தனது குரு வரதந்து ரிஷிக்கு குரு தக்ஷிணை சமர்பித்ததுபோல் நீயும் சில காலத்தில் நிறைய செல்வம் பெற்று தான தர்மம் செய்யப்போகிறாய் '' என்று ஆசீர்வதிக்கிறார் முத்தண்ணா. அன்றுமுதல் அவர் சிஷ்யனாகி காவியம், நாடகம், அலங்காரம், வேதாந்த சாஸ்திரம் எல்லாம் கற்று சிறந்தார் கிருஷ்ண ஸாஸ்திரி . ஸ்ரீ ராமன் புகழ் பாடுவது ரத்தத்தில் ஊறி இருந்தது.
''நீ ஸ்ரீ ராம கதை சொல்ல ஆரம்பி '' -- முத்தண்ணா வின் ஆசிர்வாதத்தோடு தொடர்ந்தது ராம கதா பிரசங்கங்கள். திருவனந்தபுரம் சமஸ்தானம் நடத்திய பரிக்ஷையில் உயர்ந்த சன்மானம் பெற்று வேதாந்த பாடங்கள் நடத்தும் உத்தியோகமும் கிடைத்தது. சந்தோஷமாக குரு முத்தண்ணாவிடம் ஓடி வந்து விஷயம் சொன்னார்.
''ரொம்ப சந்தோஷம் கிருஷ்ணா, ஒன்று ஞாபகம் வைத்துக்கொள். என்னிடம் கற்ற வேதாந்தத்தை பணத்துக்காக விற்காதே.''
கிருஷ்ண ஸாஸ்த்ரி முகம் கவிழ்ந்து நின்றார்.
''என்ன கவலை உனக்கு ?''
''என் குடும்பம், ஜீவனத்துக்கு என்ன வழி தெரியவில்லையே குருநாதா?''
''இதுவா கவலை, இந்தா.''
தனது ஸ்ரீ ராமாயண புஸ்தகத்தை கிருஷ்ண ஸாஸ்திரியிடம் கொடுக்கிறார் சேங்காலிபுரம் ப்ரம்ம ஸ்ரீ வைத்யநாத தீக்ஷிதர் என்கிற முத்தண்ணாவாள்.
''ஸ்ரீ ராம ஷடாக்ஷரி மந்திரத்தையும் உனக்கு உபதேசிக்கிறேன் . அது உன் க்ஷேமத்தை பார்த்துக் கொள்ளும் ''
பெரியவா வாய் முஹூர்த்தம் பலித்தது. எட்டு திக்கிலும் ராமாயண பிரசங்கங்கள் தொடர்ந்து நடைபெற்றன. ஸ்ரீ இராமாயண ஸாஸ்த்ரிகள் என்ற புகழ் ஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண ஸாஸ்திரிகளை தானாகவே தேடி வந்தது. கற்றோர்க்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு இல்லையா. நிறைய பொன்னும் பொருளும் சம்பாவனையாக வந்தது. ஒவ்வொரு பிரசங்கத்தின் போதும் ''ப்ரம்மா விஷ்ணு மஹேசனை நான் கண்டதில்லை. என் குரு முத்தண்ணாவை ப்ரத்யக்ஷமாகவும், ஸ்ரீ ராமனை கனவிலும் காண்கிறேன்'' என்பார்.
ஒரே ஒரு ஆசை. ''என் குரு முத்தண்ணாவாள் சித்தி அடைந்த அதே தை மாதம் கிருஷ்ண பக்ஷம் துவாதசி அன்றே நானும் சித்தி அடைய ஸ்ரீ ராமன் அனுக்கிரஹம் செய்யட்டும்'' என்பார்.
அவரது அடுத்த குரு பற்றி பிறகு சொல்கிறேன்.
No comments:
Post a Comment