Thursday, August 30, 2018

ADVICE



குறை சொல்லாதே J.K. SIVAN

சாம்புவுக்கு தன்னையே பிடிக்காது. அப்படியிருக்கும்போது யாரைக்கண்டாலும் ஏதாவது குறை சொல்லமாட்டானா.

''கோபு, அந்த பாலு ரொம்ப திமிர் பிடித்தவன்.
'' ஏன் என்ன பண்ணினான்?
''பச்சைகலர்லே ஒரு சைக்கிள் ஒட்டிண்டு வந்து என் எதிர்லே அதிலே உட்கார்ந்துண்டே பேசினான்''. ''அதிலே என்ன தப்பு? அவன் சைக்கிள் மேலே தானே உட்கார்ந்தான்.
''சைக்கிள் அறுநூறு ரூபான்னு ஆறுதடவை சொல்லிட்டானே''.
'' நீ கொடுக்கலியே, அவன் தானே கொடுத்து வாங்கினான். சொன்னா என்ன ?
''அவன் வாங்கினா .. அதுக்காக,. டம்பமா எதுக்கு எல்லார்கிட்டயும் சொல்லணும்? திமிர் திமிர்''.

இது உதாரணம். இதுபோல் பொழுது விடிந்தால் முடியும் வரை யாரைப்பற்றியாவது எதைப் பற்றியாவது ஒரு குறை சொல்வான் சாம்பு.

இதுபோல் நிறைய சாம்புகள் இருக்கிறார்கள். சந்தோஷம் என்றால் என்ன வென்றே தெரியாமல், மற்றவர்களையும் துன்பப்படுத்துபவர்கள் சமூகத்தில் துர்பாக்யசாலிகள். ஆங்கிலத்தில் NEGATIVE MINDSET என்போம். எதிர்மறை மனோநிலை. குறுகிய மனப்பான்மை. மனத்தடைகள் இவை யெல்லாம் தான் ஒருவனுடைய மகிழ்ச்சியை தின்பவை. நிறைய பேர் புஸ்தகம் படிப்பார்கள், விஞ்ஞான படம் பார்ப்பார்கள்,சிலர் விறுவிறுப்பான கதைகள் தேடுபவர்கள் , சிலர் சங்கீதம் ரசிப்பவர்கள். அவர்களால் மேலே சொன்ன மன இறுக்கத்தை கொஞ்சம் சமாளிக்க முடியும்.

சீரான வாழ்க்கை அமைத்துக்கொண்டு வாழ்பவனுக்கு சந்தோஷம் கிட்டும். சந்தோஷத்தோடு
வெற்றியும் கிட்டும். வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்ளாமல் களேபரமாக்கிக்கொண்டு சந்தோஷம் வெற்றி மட்டும் தேடினால் எந்த ஜென்மத்திலும் கிட்டாது.

மற்றவர்களோடு பேசும்போது, உன்னைப்பற்றியே உயர்வாக பேசுவது தவறு. ஒவ்வொருவருக்கும் அவரவர் பற்றி உன்னைவிட அதிக உயர்வான அபிப்ராயம் இருக்கலாம் இல்லையா. அங்கே தான் நட்பு முறிகிறது.

ஒவ்வாருவருக்கும் அவருக்கென்று எந்தவிஷயத்தைப்பற்றியும் தனியாக ஒரு அபிப்ராயம், சிந்தனை உண்டே. அது உன்னுடையதோடு ஒத்து போகாதே. உன்னிடம் பேசிக்கொண்டிரும்போது மற்றவன் மனதில் நடக்கும் யுத்தம் பற்றி உனக்கு என்ன தெரியும்? அதை மூடி மறைத்து அல்லவோ உன்னிடம் நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறான். அவனை மதிக்க தெரிய வேண்டாமா?

ஒருவன் சந்தோஷமாக இருப்பது அவன் கையில் தான் இருக்கிறது. என்பதை விட அவன் தேடும் சந்தோஷம் அவன் மனதில் இருப்பதை அறியாதவன் என்று சொல்லலாம். மனதில் தோன்றும் எந்த எண்ணத்தாலும் நமக்கு என்ன பிரயோஜனம், லாபம் என்று தீர்மானிப்பதை விட, இதனால் யாருக்கு லாபம் என்று கொஞ்சம் விசாலமாக எண்ணும் பழக்கம் வேண்டும்.
வார்த்தைகளை வைத்து முடிவெடுக்கக்கூடாது. செயலில் தான் வார்த்தையின் பலம் புரியும். நான் ஒரு புத்தம் எழுதப்போகிறேன் என்று சொன்னால் அதை எத்தனைபேர் முக்யமாக கருதுவார்கள். யாருக்கு அதனால் பயன் என்பது அல்லவோ முக்கியம். அதை உண்மையில் படித்து ஒருவர் பயன் அடைந்தாலும் அந்த முயற்சி வெற்றிகரமானது எனலாம். மற்றவர்களின் உதவி, தானாகவே கிடைக்கும்.
உன்னுடைய ஒவ்வொரு முயற்சியும் உனக்கு வெற்றியை தரும்படியாக நீ உழைக்கவேண்டும். அந்த வெற்றி பிறருக்கு அதனால் நீ எதிர்பார்த்த பயனை தரவேண்டும். அது ஒன்றே உன் உழைப்பின் ஊதியம். உனக்கு மகிழ்ச்சி தரும். உனக்கே திருப்தி இல்லாமல் நீ செய்யும் எந்த செயலும் நேரத்தை வீணடிப்பதே ஆகும். உனக்கே திருப்தி தராதது பிறருக்கு எப்படி திருப்தி அளிக்கமுடியும்.?

உன்னுடைய வெற்றிக்கு அது கிடைக்காமல் செய்யும், உன்னைமற்றவர் ஒரு பொருட்டாக மதிக்காமல் செய்யும் உன் முதல் எதிரியை உனக்கு தெரியுமா. தெரிந்து கொள்ளவேண்டுமானால் உடனே கண்ணாடி எதிரில் நின்று கண்ணை விழித்து பார்.



இன்னும் நிறைய பேசுவோம்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...