Monday, August 20, 2018

PAZHAIYANUR NEELI




பழையனூர் நீலி J.K. SIVAN

பேய் பிசாசு, அதுவும் கொள்ளி வாய் பிசாசு, ரத்த காட்டேரி கதை என்று கதைகள் கேட்டு, படித்து சின்ன வயதில் நடுங்கியவர்களில் நானும் ஒருவன். காற்றில் சிறிய சலசலப்பு, எங்கோ யாரோ ஹா ஹா என்று உரக்க சிரிப்பது, பறவைகளின் கீச் கீச் சப்தம், இரவில் ஓலமிடும் நாய்கள், மிருகங்களின் புரிபடாத சப்தம், எங்கோ யாரோ அழுவது போல் பிரமை, பேயை அருகிலே கொண்டு வந்துவிடும். ரொம்ப முக்கியமான விஷயம் இருட்டு. அப்போது மின்சாரம் இல்லை, அதால் இந்த பயம் அதிகம். அதுவே பேய் பிசாசு பயத்துக்கு அஸ்திவாரம். மரங்கள் கிளைகளை அசைப்பது, எங்கோ தொங்கும் காற்றில் ஆடும் சில துணிகள், ஏதோ பேய் ஒன்று வேறு யாரும் கிடைக்காமல் என்னையே சுற்றி சுற்றி வருவது போல் ஒரு உணர்ச்சியை கொடுத்ததுண்டு. அடிக்கடி பாத் ரூம் போக வைக்கும்.

இதற்கெல்லாம் காரண பூதம் சொக்கலிங்கம். எனக்கு ஐந்தோ ஆறோ வயதில்

சொக்கலிங்கம் என்னுடைய ஹீரோ. எப்போ வருவான் என்று காத்திருப்போம். அவனுக்கு 12 - 13 வயசானாலும் எட்டு ஒன்பது வயது பையனைப் போல் தான் இருப்பான். எண்ணெய் காணாத தலை. எப்போதும் ஒரு தொளதொளா காக்கி நிஜார். அதற்கு பொருத்தமில்லாத ஏதோ ஒரு கலர் அரைக்கை சட்டை. பட்டன் இல்லாமல் ரெண்டு safety pin போட்டு மூடி இருப்பான். தாயற்ற சிறுவன். தந்தை ஒரு அச்சகத்தில் அச்சு கோர்ப்பவர். அவருக்கு உதவியாக அவனும் வேலைக்கு போவதால் பள்ளிக்கு போவதை நிறுத்திக்கொண்டான். அவனுக்கு ஆறு ரூபாய் சம்பளம்.

சொக்கலிங்கம் கற்பனை வளம் மிருந்தவன். பேய்க் கதைகள் சொன்னால் மெய் சிலிர்க்கும். பேய்க்கு தரையில் கால் பாவாது என்று சொல்வான். நான் பேய்களை பார்த்து சண்டை போட்டிருக்கிறேன் என்பான். அவன் சொல்வதை கேட்டு திகில் கொண்டு, பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்களை பார்க்கும்போதே கால் தரையில் ஊன்றி இருக்கிறதா என்று பார்க்க தோன்றும். வேண்டுமென்றே தனது காலை தரையில் வைக்காமல் தூக்கி வைத்துக்கொண்டு என் கால்களை பாருங்கள் தரையில் படியவே படியாது என்பான். அலறுவோம். திகில் மன்னன் சொக்கலிங்கம். கரெண்ட் இல்லாத காலம். காற்றில் மரங்கள் இருட்டில் அசையும் போது ஏற்படும் சப்தத்துக்கு பேயின் சப்தங்கள் அது என்று எதையோ சொல்வான். தனக்கு பேய் பாஷை தெரியும் என்பான். நம்பியிருக்கிறேன். சாயந்திரம் முடிந்து இரவு வந்துவிட்டால் எதுவும் பேயாக தோன்றும்படியாக எங்களை மாற்றிவிட்டவன் சொக்கலிங்கம்.

நேற்று 19.8.2018 ஒரு பேய் சம்பந்தப்பட்ட ஊர் வழியாக சென்றேன் இதெல்லாம் ஞாபகம் வந்தது. அது பழையனூர். திருவாலங்காட்டுக்கு அருகில் உள்ள கிராமம். நாங்கள் சென்றபோது இரவு 9 மணி. எங்குமே ஒரு வீடு வாசல் தென்படாத முள் புதர்களாக தர்ப்பைகள் வளர்ந்த ஒரு பிரதேசமாக இருந்தது. தெருவில் விளக்கே இல்லை. கார் வெளிச்சத்தில் பிரயாணம்.
பழையனூர் திருவாலங்காட்டுக்கு அரை கி.மீ. தூரத்தில் உள்ள கிராமம். அங்கே ஒரு சின்ன கோவில். நீலி அம்மன் கோவில். என்ன சார் பேய் என்கிறீர்கள் கோவில் என்கிறீர்கள். ரொம்ப வயாதாகி விட்டது பாவம் உங்களுக்கு? என்று சொல்லவேண்டாம். கொஞ்சம் வரிகள் படித்தால் பேய் வரும்.

நல்லதங்காள், கண்ணகி மாதிரி நாட்டுப்பாடல்களில் அழியாதவள் நீலி.

புவனபதி என்ற பிராமணன் காஞ்சிபுரத்து ஆள். குடும்பம் மனைவியை விட்டு காசிக்கு சென்றான். விஸ்வநாதரை தரிசித்து சிலகாலம் அங்கே தங்கினான். அங்கே அவனுக்கு சத்தியஞானி என்ற ஒருவர் பழக்கமாகி அவர் வீட்டுக்கு சாப்பிட போனவன் அவர் மகள் நவஞானி என்பவளை பார்க்கிறான்.அவள் அழகில் மயங்கி அவளை கல்யாணம் செய்துகொண்டான். காஞ்சிபுரம் குடும்பம் மனைவி பற்றி மூச்சு விடவில்லை. அவர்களுக்கு தெரியாது. சிலமாதங்கள் கடந்து காஞ்சிபுரம் திரும்பும்போது நானும் வருவேன் என்கிறாள் அந்த புது மனைவி. அவளோடு அவள் சகோதரன் சிவஞானியும் வருகிறான். இந்த சிக்கலில் இருந்து மீள வழி தெரியாமல் நடுங்குகிறான் புவனபதி. ரொம்ப சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். காஞ்சிபுரம் அடைவதற்கு முன்னால் திருவாலங்காட்டை அடைந்தான். சில நாட்கள் அங்கே மூன்று பேரும் தங்கினார்கள். .

ஒரு நாள் மாலை சிவஞானியை ''நீ போய் ஒரு குடம் நல்ல நீர் குடிக்க கொண்டுவா என்று அனுப்பிவிட்டு, அவன் வருவதற்குள் புது மனைவி நவஞானியின் கழுத்தை நெரித்து கொன்ற புவனபதி அங்கிருந்து ஓடிவிட்டான்.

தண்ணீருடன் வந்த அண்ணன், தங்கை இறந்துகிடப்பதைப் பார்த்து துடித்தான். பக்கத்தில் இருந்த புளியமரத்தில் தூக்குப்போட்டு தானும் இறந்துவிட்டான்.
அவர்கள் இருவரும் நீலன், நீலி என்ற பேய்களாக அந்த ஆலங்காட்டையே சுற்றி சுற்றி வந்தனர். ஊரார் அந்த பக்கமே இருண்டபிறகு, மற்றநேரங்களில் தனியாகவோ போவதில்லை.

வருஷங்கள் ஓடின. அடுத்த பிறவியில் புவனபதி ஒரு வியாபாரியாக பிறந்தான்.ல் தரிசனன் என்ற பெயர். அவன் ஜாதகத்தை பார்த்த சில நல்ல ஜோசியர்கள், அவனுக்கு ஏதோ சாபம். பேய் ஒன்று அவனை பழிவாங்க காத்திருக்கிறது என்கிறார்கள். யாரும் நம்பவில்லை. மாந்த்ரீகர்கள் ஹோமம், ஜபம், செய்து ஒரு மந்திர சக்தி வாய்ந்த கத்தி இடுப்பில் செருகி வைத்துக்கொள்ள கொடுத்து வடக்கே போகாதே '' என்றார்கள்.
தரிசனனுக்கு காஞ்சிபுரத்தில் கல்யாணம் ஆனது. பிள்ளை பிறந்தான்.
அவன் அப்பா சாகுமுன் அவனுக்கு ஜோசியர்கள் சொன்னது, மந்திர கத்தி பற்றி சொல்கிறார்.

நீலனும், நீலியும் திருவாலங்காட்டில் ஒரு குடும்பத்தில் பிறக்கிறார்கள். பகலில் சாதாரண குழந்தைகளாக தோன்றுவார்கள். இரவில் மீண்டும் பேயாகி ஆடு, மாடுகளை கொன்று ரத்தத்தைக் குடிப்பார்கள். ஊர் காரர்கள் ஆடுமாடுகள் இழப்புக்கு காரணம் தேட இரவில் ஒளிந்து சிலர் பார்க்க, நீலன், நீலியின் பேய் உருவம் தெரிகிறது. அந்த பேய்க் குழந்தைகளின் குடும்பம் தொட்டிலோடு அவர்களை கொண்டுபோய் ஒரு மரத்தில் கட்டி விட்டார்கள். நீலனும் நீலியும் தனித்தனியாக பிரிந்து பிராமணனை பழிவாங்க தேடினார்கள்.நீலன் ஒரு வேலமரத்திலேயே இருக்க நீலி திருச்செங்கோடு பறந்து போனாள் .

பழையனூரில் விவசாயிகள் அதிகம். சிலர் உழுவதற்கு கலப்பை செய்ய மரம் தேடி நீலன் இருந்த வெட்டி விட நீலன் கோபத்தில் அங்கிருந்து சென்றவன் வழியே இருட்டில் திரு வாலங்காட்டு கோவில் குருக்களை அடித்து விட்டான், உயிர் போகுமுன் அந்த சிவாச்சாரியார் சிவபெருமானிடம் வேண்ட, சிவனின் கணம் ஒன்று நீலனை அழித்தது. நீலி விஷயம் அறிந்து நீலன் மறைவுக்கு காரணமான அந்த விவசாயிகளை பழிவாங்க சபதம் செய்கிறாள். பிராமணனை கொல்ல ஒரு பழி பாக்கி வேறு.

அவனது போதாத காலம் காஞ்சியில் இருந்த தரிசனனுக்கு பழையனுரில் வியாபாரம் ஒன்று கிடைத்தது. மந்திரக்கத்தி இருக்கும் தைரியம். வீட்டில் எவர் சொல்லியும் கேட்காமல் கிளம்பினான். திருவாலங்காட்டை அடைந்த அவனை நீலி அடையாளம் புரிந்துகொண்டாள் . அழகிய பெண்ணாக மாறி அவனை அழைத்தாள்., தரிசனன் வலையில் விழவில்லை. இடுப்பில் மந்திரக்கத்தி வேறு அவளால் அவனை நெருங்க முடியவில்லை.

தரிசனனின் மனைவியைப் போல் உருமாறினாள் . தலைவிரி கோலமாக, அழுது கொண்டு இடுப்பில் ஒரு கள்ளிமர கட்டையை குழந்தையாக்கி வைத்துக்கொண்டு
பழையனூரில் அழுது அட்டகாசம் பண்ணி எல்லோர் இரக்கத்தையும் சம்பாதித்தாள்.

''ஐயோ இது என்ன கொடுமை, என் புருஷன் என்னையும் குழந்தையும் விட்டு பிரிகிறாரே, ஊரார் இதை தடுத்து அவரை என்னோடு சேர்த்து வைக்க நீதி வழங்கக்கூடாதா. உங்களிடம் சொன்னதால் என்னை கொன்றுவிடுவார். அவரிடம் ஒரு கத்தி மறைத்து வைத்திருப்பார். அதை பிடுங்கி வைத்துக் கொள்ளுங்கள்'' என்று அலறுகிறாள். அழுகிறாள். பஞ்சாயத்து கூடியது.

''ஐயோ இது ஒரு பேய், என் மனைவி இல்லை '' என தரிசனன் கத்தினாலும் வேளாளர்கள் நம்பவில்லை. அவனிடம் கத்தி இருந்தது அவளை நம்பவைத்தது.

''சாமி நீங்க பயப்படாதீங்க உங்க சண்டையை தனியாக இன்னிக்கு பேசி தீத்துக்கிடுங்க. நாங்க இருக்கிறோம். தைரியமா போங்க. உங்க உயிருக்கு ஏதாவது ஆபத்துன்னா நாங்க எழுபது பேரும் அப்போதே உயிரை விட்டுவிடுவோம் என்று அருகே சாட்சி பூதேஸ்வரர் முன்னால் சத்தியம் செயது, சமாதானம், தைர்யம் சொல்லி தரிசனனை நீலியோடு அனுப்பினார்கள்.
மறுநாள் காலை தரிசனம் அவர்கள் தங்கியிருந்த சத்திரத்தில் பிணமாக கிடந்தான். நீலியை காணோம்.

உண்மை விளங்கியபின் எழுபது வேளாளர்களும் சாட்சிபூதேஸ்வரர் ஆலயம் முன்பு தீக்குளித்த இடம் பழையனூரில் இப்போது ஒரு குளம் .

சிதிலமான சிறிய சாட்சி பூதேஸ்வரர் கோவில் எதிரே தீக்குளிப்பு மண்டபம் இருக்கிறது. வேளாளர்கள் தீக்குளிப்பது போன்ற சிலை வைத்திருக்கிறார்கள்.
சேக்கிழார் பெரியபுராணத்தில் நீலி பற்றி வருகிறது.

‘நற்றிரம்புரி பழையனூர்ச் சிறுதொண்டர் நவைவந்
துற்றபோது தம்முயிரையும் வணிகனுக் கொடுகாற்
சொற்றமெய்ம் மையுந்தூக்கியச் சொல்லையே காக்கப்
பெற்றமேன் மையினிகழ்ந்தது பெருந் தொண்டை நாடு’

சேக்கிழார் புராணத்திலும் நீலி கதை. பொய்யாக யாரவது அழுது கண்ணீர் பெருக்கினால் நீலிக் கண்ணீர் என்ற பெயரும் நிலைத்துவிட்டது.



திருவள்ளூர் வந்து அக்ஷயா உணவகத்தில் தோசை சாப்பிடும் வரை நீலி என் மனதில் சொக்கலிங்கம் நினைவாக இருந்தாள் .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...