Saturday, August 18, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்    ஜே.கே. சிவன் 

           
 கட்டின துணியோடு  காட்டுக்கு....                                                                

 ''ஜனமேஜயா,  ஹஸ்தினாபுரத்தில் துரியோதனன் சபையில் அடுத்து நடந்ததை சொல்கிறேன் கேள்.


மயக்கம் தெளிந்து எழுந்த  துச்சாதனனைப்  பார்த்து  எல்லோரும்  சிரித்து  பரிகசித்தனர்.  ''திரௌபதியின்  கேள்விக்கு  சரியான விடையை கௌரவர்கள் இன்னும் கொடுக்கவில்லை''  என்று  சபையோர் பலர்  குரல் கொடுத்தனர்.
விதுரன்  எழுந்து ''சபையோர்களே,  திரௌபதியின் கேள்வி நியாயமானது. நீதியும்  நேர்மையும்   பிரழக்கூடாதவை. ஒருவர் தீப்புண்ணில்  துன்புறும்போது அவரது துன்பத்திலிருந்து அவரை உடனே காப்பாற்றவேண்டியது மனித நேயம். கடமை.    கோபத்தால், பொறாமையினால், முன் விரோதத்தால், உதவாமல்,  நியாயமின்றி  நடப்பது தீங்கு செய்வதிலும் கொடுமையானது. ஒரு கதை சொல்கிறேன்.  

பிரஹலாதனுக்கு ஒரு   பிள்ளை. பெயர் விரோசனன்.  ஆங்கிரஸ் என்கிற ரிஷியின் மகன் சுதன்வன்.     ஒரு பெண்ணை  மனைவியாக  அடைவதற்கு  இந்த இருவருக்கும்  போட்டா  போட்டி.   சண்டை மூண்டது. மத்தியஸ்தத்துக்கு  இருவரும்  ப்ரகலாதனிடம்  சென்றார்கள். அவன் நேர்மையானவன் அல்லவா?  . தனது மகனை  விட ஆங்கிரசின் மகனே  அந்த பெண்ணை அடைய தகுந்தவன் என முடிவெடுத்தான்.  இதற்கு முன்னால்  காச்யப முனிவரிடம் சென்று அவரது  அபிப்ராயத்தையும் பெற்ற  பிறகே அவ்வாறு அறிவித்தான்.   சுதன்வன் மகிழ்ந்து போனான்.  பெற்ற  பிள்ளை என்றும் பாராமல்  தகுதி மட்டுமே  பார்த்த  உங்கள் நேர்மையை போற்றி உங்கள் மகன் நூறாண்டுகாலம் வாழ வாழ்த்துகிறேன் என்றான்''.

 கதையை முடித்த விதுரன்,  ''சபையோர்களே, நேர்மை, நியாயம் மட்டுமே  மனதில் கொண்டு  திரௌபதியின் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்'' என்று அமர்ந்தான். எவருமே  பதில் சொல்லவில்லை.  கர்ணன் எழுந்து  ''துச்சாதனா, இந்த அடிமை  திரௌபதியை  பெண்கள் பகுதிக்கு  இழுத்துச் செல்''  என்றான்.

திரௌபதியின் கையை  பிடித்து இழுத்த  துச்சாதனனிடம் திரௌபதி '' கேடு  கெட்டவனே, நில், எனக்கொரு கடமை இருக்கிறது.  என் கைகளை கூப்பி  என் கணவர்களையும்  என்னை விட பெரியவர்களையும்  நான்  வணங்கவில்லை இன்னும்.  இவ்வளவு  அரசர்களையும்   என் ஸ்வயம்வரத்தில் தான்  பார்த்தேன். அன்றிருந்த நிலை வேறு இது வேறு. இங்கு இன்று அவமானச் சின்னமாக  நிற்கிறேன்.  கெளரவர்களே  யோசித்து சொல்லுங்கள்.  சக்ரவர்த்தியின் மனைவி  நான் ஒரு பணிப்பெண்ணா. சேடியா?  நான்  பயணப் பொருளா, இழக்கப்பட்டேனா,  சுதந்திரமான ஒரு  பெண்ணா?   உண்மையை சொல்லுங்கள்? ஒப்புக்கொள்கிறேன்''

''யுதிஷ்டிரன் தர்மம், நியாயம்  தெரிந்தவன்  அவனே  சொல்லட்டும் என்றனர் சிலர்.
துரியோதனன் சிரித்தான். '' திரௌபதி,  உன் கேள்விக்கு பதிலை உன் புருஷனே  சொல்லட்டும்''. சபையோர்  அமைதி இழந்து  இனி என்ன நடக்குமோ என்று  பெருமூச்சு விட்டனர்.

பீமன்  எழுந்தான்:   ''மஹா  புருஷன், தர்மவான், நியாயவாதி  யுதிஷ்டிரன் மட்டும் எங்களது தலைவன், எங்கள் உயிராக  இல்லை என்றால்  இந்நேரத்திற்குள்  இந்த கௌரவர்களை  நான்  மன்னித்திருக்க மாட்டேன்.  அவர்  வாய் திறந்து நான் ஜெயிக்கப்பட்டேன், பாண்டவர்கள்  ஜெயிக்கப் பட்டார்கள்  என்று  ஒப்புக்கொண்டால், நாங்கள் அவர்  சொல்லுக்கு கீழ் படிவோம்.  இல்லையென்றால்  திரௌபதியின் மேல்  விரல் பட்டதற்கு  இந்த  கௌரவர்கள்  என்னிடமிருந்து உயிர் தப்பமாட்டார்கள். அர்ஜுனனும் என்னை  சமாதானப் படுத்தினான்.  யுதிஷ்டிரன் ஒரு வார்த்தை, ஏன்  ஒரு ஜாடை காட்டட்டும் எனக்கு.  இங்குள்ள அனைவரையும்  கொன்று கூழாக்குகிறேன்''

துரோணர்,பீஷ்மர்   ஆகியோர்  '' பீமா  உன்  சக்தி அறிவோம்.  அமைதியாக  இரு''  என்றார்கள்.

கர்ணன்  எழுந்து பேசினான்.  ''பீஷ்மர், துரோணர், விதுரன்  ஆகியோர் எப்போதும்  அவர்களது  வயது, உறவின்  சாக்கில்  எங்களுக்கு  எதிராகப்  பேசுவது, எஜமானனுக்கு விரோதமாக பேசுவது வழக்கமாகி விட்டது. ''ஏ  திரௌபதி,  அடிமைப் பெண்ணே,  பேசாமல் உன் நிலை உணர்ந்து பெண்கள் அந்தப் புரத்துக்கு  நட. இனி கௌரவர்கள் மட்டுமே  உன்  எஜமானர்கள்.  பாண்டவர்கள் அல்ல.  அவர்களும் உன்னைப்போல் அடிமைகள் தானே.  உன்னை  அடிமையாக்காத  வேறு ஒரு கணவனைப் பார்த்துக்கொள்''
\''யுதிஷ்டிரா  நீ சொல்.  நீ  அடிமையானாயா , உன் சகோதரர்கள்  உங்கள் மனைவி  திரௌபதி அனைவரும் அடிமையா  இல்லையா? . நீ அவர்களையும் வைத்து இழந்தாயா  இல்லையா?''என்று வினவினான் துர்யோதனன். திரௌபதியை பார்த்து  தனது  இடது தொடையை காட்டி னான் .   பீமன் கொதித் தெழுந்தான்.  இந்த  நாய் துரியோதனன் தொடையை நான்  பிளந்து அவன் உயிரைக் குடிப்பேன். இது சத்தியம்''  என்றான்

விதுரன்  உடனே  ''துரியோதனா,   பீமனை எதிர்த்துக் கொண்டீர்கள். உங்கள் அழிவுக்கு வழி தேடிக் கொண்டீர்கள்.  யுதிஷ்டிரன்  தன்னை இழக்குமுன்  திரௌபதியை வைத்து  இழந்திருந்தால்  அவள் அடிமை தான்.  அவனே  தன்னை இழந்தபோது அவளை வைத்து இழக்க அவனுக்கு அதிகாரம் இல்லை.  அவள்  அடிமையல்ல. இதை நினைவில் கொள்''

துரியோதனன்    ''சபையோர்களே,  பீமன்  அர்ஜுனன், நகுல சகாதேவர்கள்   யுதிஷ்டிரன் எங்கள்  தலைவன் அல்ல. எங்கள் எஜமானன் அல்ல என்று சொல்லட்டும்  நான் திரௌபதியை அடிமை இல்லை என்று பிரகடனப் படுத்துகிறேன் '' என்று சிரித்தான்.

அர்ஜுனன்  '' சூதாட்டத்துக்கு  முன்பு வரை  யுதிஷ்டிரன் எங்கள் தலைவர்.  சூதாட்டம் ஆடி  அவர் தன்னையே இழந்தபோது அவருக்கு யார்  எஜமானர் என்பது தெளிவாகட்டும்''

திருதராஷ்டிரன்  குறுக்கிட்டு ''பாஞ்சாலி, நீ  என்னிடம்  என்ன  கேட்க விரும்புகிறாயோ  அதைக் கேள்.  நான் வர மளிக்கிறேன்'' என்றான்.

''மகாராஜா. முதலில்  யுதிஷ்டிரரை  அடிமைத் தளையிலிருந்து  விடுதலை செய்யுங்கள்.
"அப்படியே  என் மகளே.  உனக்கு  ஒரு வரம் போதாது.  இன்னொன்றும்  கேள். அளிக்கிறேன்.  என்றான்  திருதராஷ்டிரன்''

''தந்தையே,   என் கணவர்கள் அனைவருமே  அவர்கள் தேர், வில், ஆயுதங்களோடு, அடிமைத் தளையி லிருந்து விடுதலை  பெறவேண்டும். சுதந்திர மனிதர்களாக வேண்டும்.''

''திரௌபதி  உன் விருப்பபடியே  ஆகட்டும் அம்மா''  பாண்டவர்கள்  அடிமைகள் அல்ல. மூன்றாவது வரமும் கேள் அம்மா தருகிறேன்''
''எனக்கு  எந்த வரமும் இனி வேண்டாம்  தந்தையே''

கர்ணன்  பேசினான்.  "இது போல் எங்கும்  பார்க்க முடியாது.  இந்த  திரௌபதியால் பாண்டவர்கள் காப்
பாற்றப்  பட்டார்கள்''.
பீமன்  மீண்டும்  ஆத்திரப்பட்டான். யுதிஷ்டிரன்  அவனை  தழுவி  அவனை  சாந்தப் படுத்தினான்.

யுதிஷ்டிரன்  திருதராஷ்ட்ரனை  வணங்கி.  ''அரசே, நீங்களே எங்கள் தலைவர். எஜமானர். இனி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கட்டளையிடுங்கள். உங்களுக்கு கீழ்படிந்தவர்கள் நாங்கள்.''

''யுதிஷ்டிரா. உன் நாட்டுக்கு திரும்பு.  பெரியோர்களை  அணுகி அவர்கள் சொல்படி நட.ப்பவன் நீ.  அமைதியாக  இரு. அவர்கள் செய்த  தவறை மறந்து மன்னித்து  கௌரவர்களோடு  சகோதரர்களாகவே அன்புடன் பழகு.''

திருதராஷ்டிரனால்  விடுதலை  பெற்று,  யுதிஷ்டிரன்  பாண்டவர்களோடும் , த்ரௌபதியோடும்   தேர்களில் இந்த்ரப்ரஸ்தம் திரும்புகிறான் என்று  துச்சாதனன்  கேள்விப்பட்டு  துரியோதனனை காண்கிறான்.  ''  அரசர்களே,  கஷ்டப்பட்டு  நாம் பெற்ற வெற்றியை அந்த கிழவன்  நமது தந்தை நிராகரித்து,  பாண்டவர்கள்  சகல செல்வங்களோடும்  இந்தரப் பிரஸ்தம் திரும்பி கொண்டிருக்கிறார்கள்''  என  அறிவித்தான்.
பதறிப் போனான் துரியோதனன். சகுனி முகத்தில் ஈ ஆடவில்லை.  கர்ணன்  திகைத்தான்.

இங்கு நடந்தது  பாண்டவர்களை முற்றிலும் நமக்கு எதிராக திருப்பும். அவர்கள்  எதிர்ப்பை  நாம் எதிர்கொள்வது  கடினம். பெற்ற வெற்றியை இவ்வளவு சீக்கிரம் இழப்பதா?
சகுனி  யோசித்தான்.   ''துரியோதனா.  உடனே  யுதிஷ்டிரனை கூப்பிட்டு  சமரசம் பேசுவோம்.  ''இதோபார் யுதிஷ்டிரா, இன்னுமொரு சந்தர்ப்பம் உனக்கு.  மீண்டும் ஒரு ஆட்டம் ஆடுவோம்.  நீ ஜெயித்தால்  நாங்கள் கட்டின துணியோடு  12வருஷம்  காட்டுக்குப் போவோம்.  இன்னுமொரு வருடம்  எவர் கண்ணிலும் படாமல்  மறைந்திருப்போம்.  அந்த ஒரு வருடத்தில் யார்  கண்ணிலாவது பட்டு  அடையாளம் காணப் பட்டால் மீண்டும் 12 வருஷம் காடு.  நீ ஜெயித்தால்  நாங்கள் இதற்கு கட்டுப் படுகிறோம்.  நாங்கள்  ஜெயித்தால்  நீ இதற்கு கட்டுப்பட வேண்டும்.  சரியா என்று கேட்போம்.  எப்படியும்  நான்  மீண்டும் ஜெயிப்பேன். பாண்டவர்கள்  நம்மை  எதிர்க்க வழியின்றி செய்துவிடலாம்''  என்றான் சகுனி.

திருதராஷ்டிரனிடம் ஒப்புதல் பெற்று  மீண்டும்  பாண்டவர்களை  அழைக்க  சென்றான் தூதன்.  பீஷ்மர் துரோணர் விதுரன் முதலானோர் மீண்டும் சூதாட்டம் வேண்டாம்.  சகோதரர்கள் அமைதியாக அவரவர் இடத்தில் வாழட்டும் என்றனர்.   திருதராஷ்டிரன் செவியில் இது ஏறவில்லை.

காந்தாரி அங்கு வந்து  இந்த துரியோதனன் பிறக்கும்போது அபசகுனங்கள் தோன்றின. அவனால் நமது வம்சம் அழியலாம் என்று  பெரியோர்கள், வேதியர்கள், ஜோசியர்கள் சொன்னார்களே.  இது  என்ன விபரீதம். இதைத் தடுக்க கூடாதா  அரசே  என்றாள்.

''காந்தாரி  எது நடக்கவேண்டுமோ அதை தடுக்க முடியாது. மீண்டும் சூதாட்டம் தொடரட்டும்.'' என்றான்  தீர்மானமாக  திருதராஷ்ட்ரன்.
தூதுவர்கள்  செய்தி சொன்னவுடன்  யுதிஷ்டிரன்   ''என் தந்தை போன்றவர் திருதராஷ்டிரன் அவர் கட்டளைக்கு நான் பணியவேண்டியவன். என்னால் இதை மீற  முடியாது.'' என்றான்.

என்ன செய்வது. மீண்டும்  பகடை வீசப்பட்டது.  ''யுதிஷ்டிரா,  கேள்,  உன் சகல சொத்தும்  உன்னிடமே  வந்து விட்டது. இந்த ஒரு ஆட்டத்தில் நீ ஜெயித்தால்,  நாங்கள் அனைவருமே  மான் தோலை  மட்டும் அணிந்து 12 வருஷம் கானகம் செல்வோம்.  அது முடிந்து ஒரு வருஷம் எவர் கண்ணிலும் படாமல் அஞ்ஞாத வாசம் இருந்து திரும்புவோம். அவரவர்  ராஜ்யத்தில்  அமைதியாக  ஆள்வோம்.   இதற்கிடையே  எவரேனும் அந்த மறைந்து வாழும் ஒரு வருஷத்தில்  எங்களை  அடையாளம் கண்டு கொண்டால்,  மீண்டும்  12 வருஷம் கானகம் செல்வோம். நீங்கள் தோற்றால்  அதே  நிபந்தனை. இது நியாயந்தானே'' என்றான்  சகுனி.

யுதிஷ்டிரன் ஒப்புக்கொண்டு  காயை  உருட்டினான்.  சகுனி கேட்ட  எண்ணே  விழுந்தது.  யுதிஷ்டிரன் மீண்டும் சகலமும் தோற்றான்.

துச்சாதனனுக்கு மிக்க மகிழ்ச்சி.  பாண்டவர்கள் தொலைந்தார்கள்.  அவர்கள் பலம் இனி செல்லாது. வனவாசம் 12 வருஷம்.  இனி நாம்  தான் ஏகபோக  சக்ரவர்த்திகள்.

துச்சாதனன்   ''திரௌபதி, இப்போதாவது இந்த  உபயோகமற்ற பாண்டவர்களை நம்பி வீணாக  காட்டில்  அலையாதே.  இந்த  கௌரவர் சபையில் உனக்கேற்ற  மணாளன் ஒருவனை மணந்து கொள்.  என்று  சொன்னான்.
பீமன்  காதில் இது விழுந்தது.  ''அடே  துச்சாதனா  எங்கள் நெஞ்சைத் துளைக்கும்  வார்த்தைகளை சொன்ன   உன் மார்பை பிளந்து உன்  ரத்தத்தை  குடிப்பேன்.  உன்னையும் உன்னைச் சேர்ந்தவர்களையும் யமனுலகுக்கு அனுப்புகிறேன்.  தொடையைக் காட்டிய  துரியோதனனை  என்  கதையால்  தொடையைப் பிளந்து அவன் தலை மீது  என் காலை வைத்து அவனை நரகத்துக்கு அனுப்புவேன்.   அதுவரை  பிழைத்துபோங்கள்  கொஞ்ச காலம்''   என்றான்.

அர்ஜுனனும்  ''பீமா, சுடு வார்த்தைகளைப் பேசிய கர்ணனை நான் கொல்வேன் '' என்றான்.
சகாதேவனும்  ''என்  தமையன்  பீமன்  அந்த  சகுனியை எனக்கு விட்டு வைத்திருக்கிறான். சகுனியின் முடிவு என் கையில்''  என்றான். நகுலன் மற்ற  திருதராஷ்ட்ரனின் பிள்ளைகளை  எமனுலகுக்கு அனுப்புவதில் எனக்கும் பங்குள்ளது'' என்றான்.
யுதிஷ்டிரன் சபையில் பெரியோர்களை வணங்கி   ''விடை பெறுகிறோம்  13 ஆண்டுகள் கழித்து மீண்டு வருவோம்  உங்கள் ஆசிகளைப் பெற '' என்று சொன்ன;போது  யாரும்  வருத்ததோடு பதில் சொல்ல முடியவில்லை.  விதுரன் மட்டும்  '' யுதிஷ்டிரா, நீ எங்கிருந்தாலும்  நல்லதே நினைப்பாய், நல்லதே செய்வாய்.  உனக்கு தெய்வ பலம்  உதவும்.  கண் மூடி கண் திறப்பதற்குள்  இந்த  13 வருஷங்கள் ஓடிவிடும் நீ  வெற்றி வீரனாக உன் சகோதர்களோடும்  த்ரௌபதியோடும்  சந்தோஷமாக  வரும் நாளை  எதிர்ப்பார்த்து காத்திருப்பேன்  என்றான்.'

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...