Wednesday, August 1, 2018

SEWAGE


WHAT I WROTE TWO YEARS AGO HAS BEEN REMEMBERED AND REPRODUCED BY A READER. I AM THANKFUL TO HIM AND ALL OF YOU FOR YOUR SUPPORT TO ME. I COPY IT BELOW: JKS.
''J.k. Sivan August 1, 2016 ·
யார் புருஷோத்தமன்?- j.k. sivan
எல்லோர் கண்களும் கடிகாரத்தையே பார்த்தன . இன்னும் பதினோரு நிமிடங்கள். ஆர்வமும், கவலையும் பயமும் சேர்த்து ஒவ்வொரு முகத்திலும் வியர்வை வழிந்தோடியது. ஹால் நிசப்தமாக இருந்தது. ஒரு காலைத் தாங்கி தாங்கி நடந்துகொண்டு துரைசாமி வந்து விட்டார். கையில் கட்டுக் காகிதங்கள். மேலே மெதுவாக ஆனால் படு சப்தத்துடன் ஒரு பழைய மின் விசிறி ஓடிக்கொண்டோ இல்லை ஆடிக்கொண்டோ இருக்க ஜன்னலில் வெயிலோடு சேர்ந்து உஷ்ணக் காற்று உள்ளே 40 -45 பேர் விடும் பெருமூச்சுடன் சேர்ந்து வாட்டியது.
''சைலன்ஸ். இந்த வருஷ பத்தாவது வகுப்பு மாணவர்கள் ரிசல்ட் வாசிக்கப் போகிறேன். கேளுங்க .. அப்புறம் நோட்டீஸ் போர்டுலே ஓட்டுவேன் . 11வது தேர்வு பெற்றவங்க பீஸ் கட்டிட்டு அடுத்தமாதம் 1ம் தேதி வகுப்பு வரணும். பெயிலானவங்க இன்னொரு வருஷம் நல்லா படிக்கணும். நல்ல மார்க்கு எடுத்து முதல்லே வந்தா பள்ளி நிர்வாகி முனிசிபாலிடி சேர்மன் கண்ணப்பன் ஆயிர ரூபா பரிசு கொடுப்பார். பத்திரிகைகளிலே பேர் வரும் படம் வரும். யார் பாஸ் யார் பெயில் என்று அடுத்த அரைமணி நேரத்தில் தெரிந்து நிறைய மாணவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். கேள்விகள் ரொம்ப கடினமாக இருந்ததே , தப்பிப்போமா என்று பயந்தவர்கள் தேர்வு பெற்றதில் நிம்மதி அடைந்தது ஒரு பக்கம். மறுபக்கம் பாஸ் ஆகிவிடுவோம் என்று எதிர்பார்த்து பெயில் ஆனவர்கள் அழுதனர், பயந்தனர். வீட்டில் நேரப்போகும் சுனாமி பயமுறுத்தியது. எப்படியும் தேறமாட்டோம் என்று முன்கூட்டியே தீர்மானித்தவர்கள் அறிந்தவர்கள் துளியும் அதிர்ச்சி அடையவில்லை.
துரைசாமி வகுப்பு டீச்சர் ரோஹிணியைக் கூப்பிட்டு இந்த வருஷம் முதன்மையாக மார்க்குகள் வாங்கினவன் பேரை அந்த காகிதக் கட்டிலிருந்து தேடி எடுக்கச் சொன்னார்.
''இந்தப் பையன் தான் சார் முதல் மார்க். 492 மார்க்குகள் 500க்கு -- '' ஜி .புருஷோத்தமன்''. துரைசாமி அறிவித்து விட்டு கண்ணாடியை இறக்கிவிட்டு மேல்வழியாக பார்த்து எந்த பையன் என்று தேடினார். பலத்த கைதட்டல். வெகுநேரம் கழித்து ஓய்ந்தது.
ஒல்லியாக, ஒரு ஒட்டு போட்ட மஞ்சள் கொட்டடி யூனிபாரம் அணிந்த உயர பையன் எழுந்து நின்றான். சோகையான பற்களைக் காட்டி சிரித்தான். கலைந்த எண்ணெய் பிசுக்கு தலை, இரு கைகளை கூப்பி துரைசாமியை வணங்கினான்.
''ஜி புருஷோத்தமனுக்கு எல்லோரும் மீண்டும் கைதட்டி படபட வென்று பெரும் சத்தம்.
''டேய் பையா. புருஷோத்தமா நாளை காலை 11.30 மணிக்கு இந்த பள்ளிக்கூட தெருவிலேயே 7ம் நம்பர் வீட்டுக்கு வந்துவிடு. வரும்போது உன் அப்பாவையும் கூட்டிக் கிட்டு வா. பள்ளிக்கூட நிறு வனர் , முனிசிபாலிடி சேர்மன் காத்தாயி அம்மாள் நினைவு டிரஸ்ட் பரிசு ஆயிரம் ரூபாய் தரப்போகிறார். பத்திரிக்கை ஆசாமிங்க வருவாங்க நல்ல சட்டையா போட்டுக்கிட்டு வா.
''அம்மா நான் முதல்லே வந்துட்டேன் பரிக்ஷையிலே'' என்று கமலத்திடம் சொன்ன பொழுது அவள் அவனை அப்படியே கட்டி முத்தமிட்டாள். ''உங்க அப்பாரு சந்தோசப் படுவாரு செல்லம்.''
'' நாளைக்கி காலை 11.30 மணிக்கு பள்ளிக்கூட முதலாளி ஆயிரம் ரூபா குடுக்கப் போறாராம். அப்பாவை கூட்டியா ன்னு சொன்னாங்க ''
''அடேயப்பா ஆயிரம் ரூபாயா. கண்ணு நீ நல்ல பையன்டா. எங்களுக்கு வயத்தில் பால் வாத்துட்டே. நீ நல்லா இருக்கணும்னு அந்த மாரியாத்தாவுக்கு வேண்டிக்கிட்டு படையல் இடப்போறேன்''.
ஆறுமணிக்கு குருசாமி வந்தான். நேராக எப்போதும் வீட்டுக்கு பின் பக்கமாக தான் வருவான். துணியெல்லாம் அவிழ்த்து நிறைய தண்ணீர் மொண்டு சோப்பு போட்டு உடம்பெல்லாம் தேய்த்து குளித்தான், கமலம் குடுத்த துவைத்த லுங்கியை உடுத்தி நெத்தியில் திருநூறு பூசினான். சாமி கும்பிட்டான்.
'இன்னாங்க பையன் ஒரு நல்ல சேதி கொண்டாந்திருக்கிறானே கேளுங்க.
''இன்னாடா நல்ல சேதி''
''பள்ளிக்கூடத்திலே இந்த வருஷம் முதல் மார்க் வாங்கிட்டேன் பா.''
'' அப்படியா ரொம்ப நல்லா இருக்குடா கேக்கவே
''ஆயிரம் ரூபா பரிசு முதலாளி கொடுக்கிறார் நாளைக்கு''
''அடேடே அதிஷ்டக்காரன்டா நீயி''
'' நாளைக்கி காலை பதினொன்றரை மணிக்கு உன்னையும் வரச் சொல்லியிருக்காங்க''
''நாளைக்கா -- முடியாதேப்பா. ரொம்ப பெரிய இடம் நாளைக்கு முக்கியமான வேலையாச்சே.'
இஸ்கோலுக்கு போயிட்டு அப்படியே போறது.
''முடியாது திட்டுவாங்க. லீவ், நேரமா வேலைக்கு வரது எல்லாம் கிடையாது''
'' நீ வரலையான்னு கேப்பாங்களே என்னப்பா சொல்றது ?''.
' ஊருக்கு அர்ஜண்டா போயிட்டாரே ரெண்டு நாள் ஆவும்'' னு சொல்லிட்டு நீயே போய் வந்துரு கமலம் ''
''வேற இன்னா செய்யமுடியும். நானே வூட்டுக்காரம்மா கிட்டே சொல்லிட்டு டைம் வாங்கிக்கினு இசுக்கோல் போறேன்''
பெரிய புள்ளிகள் வாழும் கோபால கிருஷ்ணன் சாலையில் ஒரே நாற்றம். தெருமக்கள் அனைவரும் போன் போட்டு, நேரில் சென்று முனிசிபல் ஆபிசில் கம்பளைண்ட். எங்கோ கழிவு நீர் அடைத்துக் கொண்டு ரெண்டு வீடுகளில் கழிவு நீர் வீட்டுக்குள்ளே நுழைந்துவிட்டது. அந்த தெருவில் தான் முனிசியபல் தலைவர் கண்ணப்பனின் சகோதரி வீடு. அதிலும் நாற்றம்.
''என்னாடா உங்க ஆளுங்க வேலை செய்றாங்க? - சகோதரி சத்தம் போட கோபம். சும்மா இருப்பாரா. '' இதோ நானே அதை கவனிக்கிறேன்' ' சம்பந்தப் பட்ட ஆட்களை கூப்பிட்டு கெட்டவார்த்தையில் திட்டினார். காலை பத்துமணிக்கே அங்கே போய்விட்டார். தெருவில் இருந்த கழிவு நீர்ப் பாதை குழாய் மூடிகள் திறக்கப்பட்டன. சில ஆட்கள் வெறும் கோவணம் மட்டும் அணிந்து கொண்டு அதில் நுழைந்தார்கள். நீளமான மூங்கில் பத்தை, ரப்பர் குழாய்கள் செருகப் பட்டன. தெருமுழுதும் நாற்றத்தோடு கழிவு நீர் தேங்கி இருந்தது. ஆட்கள் உள்ளே இறங்கியவர்கள் அதில் முழுகி அடைப்புகளை நீக்கி வெளியே போட்டனர்.
''யார் இங்கே மேஸ்திரி டே பக்கிரி, நல்லா வேலை செய்றவனை வைச்சு உடனே வேலை முடியுங்க. பதினொன்றரை மணிக்கு ஸ்கூலுக்கு போயிட்டு பன்னிரண்டு பன்னிரெண்டரைக்கு நானு வரதுக்குள்ளே வேலை முடிஞ்சிருக்கணும்.''
பதினொன்றரை மணிக்கு கைதட்டலோடு கண்ணப்பன் பள்ளியில் மாணவர்கள் பெற்றோர்கள் பத்திரிகை நிருபர்கள் முன் நின்றார். தேச சேவைக்கு கல்வி எப்படி முக்கியம் என்று சொன்னார். ( துரைசாமி எழுதிக் கொடுத்ததை தான் மனப்பாடம் செயதிருந்தார்) . பள்ளியில் சிறந்த மாணவன் '' குருசாமி புருஷோத்தமன் '' என பேர் அறிவித்தார்கள். ஒரே கை தட்டலோடு பரிசு ஆயிரம் ரூபாய் ஒரு கவரில் வாங்கினான். கிளிக் கிளிக் என்று பத்திரிகை நிருபர்கள் போட்டோ எடுத்தார்கள்.
''உங்கப்பா எங்கே ? என்று பத்திரிகை நிருபர்கள் கேட்டார்கள்''
''ஊருக்கு போயிருக்கிறார்.
பன்னிரண்டு பணிக்கு மேலே கோபாலக்ரிஷ்ணன் சாலை நாற்றம் அகன்றது. கழிவு நீர் அடைப்பு நீக்கப் பட்டது.
''யார் யா பொறுப்பா வேலை செஞ்சவன் கூப்பிடு அவனை''
'' இதோ இவரு தான் இருவது வருஷம் அனுபவம்.
''வாய்யா உன் பேர் இன்னா?''
''குருசாமி.''
''அடே இந்த பேரை இப்போதான் கேள்விப்பட்டேன்.
''ஏன்யா உனக்கு பசங்க இருக்கா?''
''ஒரு பையன்யா ''
'என்ன பண்றான்?
உங்க பள்ளிக்கூடத்தில் பத்தாவது படிக்கிறாங்க.
இப்பான்தானே போய் ரிசல்ட் கேட்டு பரிசு கொடுத்தேன். பாஸ் பண்ணிட்டானா பையன். இன்னா பேரு?
குருசாமி புருஷோத்தமன்''
.முதல் மார்க் ஒரு பையன் வாங்கினான். ஒருவேளை அவனா இருக்குமோ? அவன் அப்பன் ஊரிலே இல்லை ஏன்னு சொன்னானே. இந்த பையனா? போட்டோ காட்டினார். ''என் பையன் தானுங்க இவன்''
''ஏன்யா நீ ஊரிலே இல்லேன்னு பொய் சொன்னான் உன் பிள்ளை ? .
தயங்கி தயங்கி குருசாமி.......''ஆமாங்க. நான் தானுங்க சொல்ல சொன்னேன். இங்கே வேலை முக்கியம் ஆச்சுங்களே, .. அதாலே பள்ளிக்கூடம் வரச்சொல்லி கூப்டா எப்படிங்க போவமுடியும்?''.
அப்பா புருஷோத்தமனா பிள்ளை புருஷோத்தமனா என்று புரியாமல் இன்னொரு ஆயிரம் ரூபாயை குருசாமி கையில் அழுத்தினார் கண்ணப்பன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...