Friday, August 31, 2018

NATAARAJA PATHTHU

யாத்ரா விபரம்   J.K SIVAN 





             சிறுமணவை நிரஞ்சீஸ்வரர்
                                                                    

19.8.2018    - நண்பர்களோடு ஒரு  சிறு   மாலை -யாத்திரை சென்றேன். வெகுநாட்களாக  சிறுமணவை செல்ல விருப்பம். தாகம்.  இன்று நிறைவேறியது.
.
 சென்னையையடுத்த திருவள்ளூர் ஜில்லாவில் பேரம்பாக்கத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் சின்னமண்டலி என்ற கிராமம் தான் அக்காலத்தில் சிறுமணவை.  திருவள்ளூர் தாலுக்காவில், கருமுத்தூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. சென்னை அரக்கோணம் மார்கத்தில் கடம்பத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 8 கிமீ தூரம். சென்னையிலிருந்து ஏறக்குறைய  70 கி.மீ. தூரம்.  

இன்று  சிறுமணவை இல்லை. அது சின்னமண்டலி ஆகிவிட்டாலும், அதில்  மிக பெருமை வாய்ந்த  நிரஞ்சீஸ்வரர் ஆலயம் இருப்பது  அங்கே அடுத்த தெருவில் இருப்பவருக்கு கூட தெரியாது போலிருக்கிறது.  ''ஈஸ்பரன்'' கோவில் எங்கே இருக்கிறது என்றால் ரொம்ப கஷ்டமான அணு ஆராய்ச்சி  கேள்வி கேட்டது போல் நெற்றியை சுருக்கிக்கொண்டு  இங்கே எதுவும் இல்லை என்று சிலர்.     நிரஞ்சீஸ்வரர் என்றால் ஏதோ
அதிசயமாக  வார்த்தை சொன்னது போல்  பார்த்தவர்களை சந்தித்தேன்.     எப்படியோ பலபேரில் சிலர் சொல்லி நிரஞ்சீஸ்வரரை ஒரு சிறு ஆலயத்தில் கண்டுபிடித்தோம்.  ஆலயம்  சில பக்தர்களின் முயற்சியால்  புதுப்பிக்கப்பட்டு மரகதவல்லி சமேத நிரஞ்ஜீஸ்வரர் அருள்பாலிக்கிறார். பல  நூறு வருஷங்களுக்கு முன்பு ஆதி சங்கரர் திருவாலங்காடு செல்லும் வழியில் இந்த ஆலயத்திற்கு விஜயம் செய்ததாக தெரிகிறது. 

அந்த அமைதியான கிராமத்தில் அதிகம் பேர் இல்லை. எங்கும் சுற்றி நெல், பயிறு, வயல்கள். கிணற்றிலிருந்து ஏற்றம் இறைத்து நீர்ப்பாசனம். காய்கறி தோட்டங்கள். வயல்கள். அங்கும் இங்குமாக ஒரு சில வீடுகள், கட்சி கொடிகள் மரத்தில், கம்பங்களில் ......இங்கு  விவசாயிகள்  சிறிய சில்லறை வியாபாரிகள்  தான் அதிகம். மரங்கள், நிழலில் காளைகள், கலப்பைகள், வைக்கோல் போர், குடிசைகள். நிறைய  கட்டம் போட்ட லுங்கிகள்  அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு இங்கும் அங்கும் செல்வதும்,  முடிச்சாக அங்கங்கே உட்கார்ந்து  எதையோ பேசிக்கொண்டு பொழுதை கழிப்பதையும் காண முடிந்தது.  
+++
ஒரு பெரிய குளத்தங்கரையில் இருந்த சிறிய சிவன் கோவிலுக்கு வருபவர்கள் கம்மிக்கு  காரணம் ஊரிலேயே  ஆட்கள் கம்மி.

கோவிலை ஒட்டி ஒரு சந்து. அதில் ஒரு ஒட்டு வீட்டில் இருந்து முதியவர் கொம்பை ஊன்றிக்கொண்டு கொண்டு வெளியே வருகிறார். கால்கள் தானாகவே அந்த சிறிய பழைய சிவன் கோவில் நோக்கி நகர்கிறது. அந்த முதியவரை ஊரில் எல்லோருக்கும் தெரியும் . முனிசாமி முதலியார் என்றாலே நடமாடும் சிவன் என்று தான் ஊரில் அவருக்கு பெயர்.

நாள் தோறும் அந்த முதியவர் நிரஞ்சீஸ்வரனை வணங்கிவிட்டு அங்கே ஒரு தனி இடத்தில் இருந்த நடராஜர் சிலை முன் வந்து ஆர அமர உட்கார்ந்து கொள்வார். ''சிதம்பரம் நடராஜன் தான் இவன்''  என்று வருவோர் போவோரிடமெல்லாம் சொல்வார். நெற்றி நிறைய பட்டையாக விபூதி, கழுத்தில் ருத்ராக்ஷம், காவி உடை, நீண்ட வெள்ளிக்கம்பி தாடி மீசை. கணீர் குரல். கொட்டும் மழையானாலும், தினமும் அங்கே வந்து அமர்ந்து நடராஜனை கண்கொள்ளாமல் நேரம் காலம் பார்க்காமல் தரிசிப்பார். அவரே சிறுமணவையை சேர்ந்த முனுஸ்வாமி முதலியார்.

கண்கள் மூடியிருக்க, பனிக்க, தாரை தாரையாக ஆனந்தக்கண்ணீர் வடிய அந்த முதியவர் தனது மனத்திலும் எதிரே சிலையாகவும் நடராஜனைக் கண்டு வெள்ளமாக தன் மனதிலிருந்து எழும் பக்தி பரவசத்தோடு, பாடல்களை பாடுவார். அவரைச் சேர்ந்த சிலர் அந்த பாடல்களை எழுதிக் கொள்வார்கள். அவருக்கு, தான் பாடுவதோ, அதை மற்றவர்கள் வெளி உலகுக்கு அவரது பாடல்களை அறிமுகப் படுத்துவது பற்றியோ சிந்தனையே இல்லை.

இப்படித்தான் அந்த அற்புத மனிதர் ''நடராஜ பத்து''  எனும் அற்புதமான பத்து   பதிகங்களை இயற்றியவர்.  அவரைப்பற்றி ஊர்  மறந்து போய்விட்டது. சந்ததி இல்லாமல் சென்றுவிட்டார் என்று அறிந்தேன். அவர் வணங்கிய  நடராஜருக்கு பதிலாக இன்னொரு நடராஜர் சிலை வைத்துள்ளார்கள். அந்த புது நடராஜரும் பூட்டப்பட்டு கண்ணில் படவில்லை. ஒரு துவாரத்தின் வழியாக பார் என்று சொன்னபோது எனக்கு நடராஜர் தெரியவில்லை. 

நடராஜ பத்து ஏற்கனவே உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இருந்தபோதிலும்  ஒரு பாட்டு உதாரணத்துக்கு  கொடுக்கிறேன். இது முனுசாமி முதலியாரின்  நடராஜ பத்தின்  கடைசி பத்தாவது பதிகம். 

''இன்னமும் சொல்லவோ உன் மனம் கல்லோ இரும்போ பெரும் பாறையோ
இருசெவியும் மந்தமோ கேளாது அந்தமோ இது உனக்கழகு தானோ
என் அன்னை மோகமோ இதுவென்ன சாபமோ, இதுவே உன் செய்கைதானோஇருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ ஆனாலும் நான் விடுவனோ
உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ நான் உனையடுத்துங் கெடுவனோ,
ஓஹோ இது உன்குற்றம்என்குற்றம் ஒன்றுமில்லை உற்றுப்பார் பெற்ற ஐயா
என் குற்றமாயினும் உன் குற்றமா யினும் இனியருள் அளிக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.'' 

எளிமையான பக்தி பாடல். இருந்தாலும்  கொஞ்சம்  அர்த்தம் சொல்கிறேன்.

'நிரஞ்சீஸ்வரா, இதுவரை நான் கெஞ்சியது போதாதென்றால் இன்னமும் சொல்லவா?
அவ்வளவு சொல்லியும் கரையாத உன் மனம் என்ன இரும்பாலானதா? பாறைக் கல்லா? அல்லது உன் தோடுடைய செவி தான் செவிடா?
நீ செய்வது உனக்கே அழகா? ஓஹோ,  உன் மனம் பூரா மரகதவல்லி மீதோ? ஒருக்கால் நான் சொல்வது உனக்கு கேட்கக்கூடாது என்று எனக்கே ஒரு சாபமோ? உன் பிள்ளைகளைப் பற்றிய கவலையா? யார் மீதாவது உள்ள கோபத்தை என்னிடம் காட்டுகிறாயோ?
இது மட்டும் நிச்சயம். நீ எப்படி இருந்தாலும் நான் உன்னை விடப்போவதில்லையே!
எங்கே போவேன் உன்னை விட்டு. இங்கே தான் சுற்றிக்கொண்டே இருப்பேன். உன் நிழலாக.
உன்னை அணுகி இருக்கும்போது எனக்கென்ன தீங்கு நேரும்?
யோசித்தால் ஒன்று புரிகிறது. இந்த நிலை எனக்கு ஏற்பட்டதற்கு நீயோ நானோ காரணம் அல்ல.
என்னை கடைக்கண்ணால் பார் என்றேனே. பார்த்தால் குற்றம் யாருடையதாக இருந்தாலும் குறை தீர்ந்து விடுமே. என்னைக் கரை சேர்க்க வருவாய் சிவகாமி நேசா, சிதம்பரம் வாழ் நடராஜனே.''
புராதன நிரஞ்சீஸ்வரர் கோயில் சிதிலமடைந்து புதுப்பிக்கப்பட்டுள்ளது. சில கல்வெட்டுகள் சிற்பங்கள் உள்ளன.  யாரவது ஒரு  நாகசாமி இதெல்லாம் படித்து அர்த்தம் சொல்வாரா?  கல்வெட்டுகள் தமிழ் நாட்டில் நிறைய இருக்கின்றன. யாராவது  இது விஷயமாக படித்தவர்கள் அதையெல்லாம்  அந்தந்த கோவில்களில்  இந்த கால தமிழில் எழுதி வைக்க கூடாதா?  பொறுப்பு யாருக்காவது இருக்கிறதா? 

இது வரை நடராஜ பத்து ரசித்தவர்களே முடிந்தால் இனி நேரே சென்று நிரஞ்சீஸ்வரர் தரிசனம் பெறுங்கள்.  எனக்கு அதிர்ஷ்டம் இருந்தது.  நான் சென்ற அன்று மாலை  ஆலயத்தில் எவருமே இல்லை. பொறுப்புள்ள ஒருவர் என்னையே உள்ளே சென்று கற்பூர ஹாரத்தி காட்ட அனுமதித்தார். நிரஞ்சிஸ்வரரை  அம்பாளை அருகே நின்று ஸ்லோகம் சொல்லி கற்பூர ஹாரத்தி காட்ட எனக்கு ஒரு பாக்யம் கிடைத்தது நான்  நடராஜ பத்து எழுதி எல்லோருக்கும் என்னால் முடிந்தவரை அதை பரப்பியதாலா? 

ஒரு விஷயம்   நான் அறிந்தவரையில்  பல சிவன் கோவில்களில் இப்போதெல்லாம் நடராஜபத்து பாடுகிறார்கள் என்பது மனதுக்கு இனிய விஷயம்.

 ஒருகாலத்தில் கூவம், தக்கோலம் போன்ற ஸ்தலங்களைப்போல இன்றும் இருக்கும் பழமையும் பெருமையும் வாய்ந்த சிவாலயங்களில் இதுவும் ஒன்று. காலப்போக்கில் எத்தனையோ சிதிலமான கோவில்களில் இதுவும் ஒன்றாகி உள்ளூர் மக்களால் மீண்டும் புனருத்தாரணம் செய்ப்பட்டு ஒரு சிறு கோவிலாக  இன்றுள்ளது. கோவிலை ஒட்டி புஷ்கரணி. கோவிலை விட மூன்று மடங்கு பெரியது. .
எல்லோரும் ஒருமுறையாவது நிரஞ்சீஸ்வரரை சென்று அங்கே அமர்ந்து ஒரு ஐந்து நிமிஷம் நடராஜ பத்து படியுங்கள், பாடுங்கள். மனதுக்கு கிடைக்கும் நிம்மதியை  என்னால் எப்படி விவரித்து  எழுத முடியும் ?.

PATTINATHTHAR


எனக்கு எப்போது மோக்ஷம்? - J.K. SIVAN
ஏதோ ஒரு உடல் பற்றி எரிகிறது. தீ ஜ்வாலை வீச சதைகள் தீயில் வெந்து பொசுங்கி காற்றில் அதன் விளைவு துர்கந்தமாக வீசுகிறது. எரிந்த ஒரு உடலின் சாம்பல் மேட்டில் அமர்ந்து தியானம் செயகிறார் அந்த சந்நியாசி.
எதிரே ராஜா நிற்கிறான். அதனால் என்ன? அவர் காடுடைய சுடலைப் பொடி பூசியபடி ஒரு மயானத்தில் சாம்பலுக்கு இடையே அமர்ந்திருக்கிறார்.
''சுவாமி நீங்கள் ஏன் இப்படி சுடுகாட்டு சாம்பலில் உட்கார்ந்திருக்கிறீர்கள்?. ''
''நான் அமர, நீ நிற்க,....'`
ஒரு வறண்ட சிரிப்பு பட்டினத்தார் முகத்தில் களை கட்டுகிறது .
பிச்சைக்காரர்கள் அமர்ந்திருக்க, அரசன் நிற்கிறான்...!! இதற்கு மேல் என்ன வியாக்யானம் தேவை.
ராஜாவிற்கு பொறி தட்டியது. புரிந்து கொண்டுவிட்டான். அப்புறம் என்ன.? ராஜ்ஜியம் துறந்தான். கோவணாண்டியானான். பட்டினத்தார் சிஷ்யனானான். அவன் தான் பத்திரகிரியார் ஆனான்.
பத்திரகிரியார் புலம்பல் நிறைய எழுதி இருக்கிறேனே.
குருவும் சிஷ்யனுமாக எங்கெங்கெல்லாமோ அலைந்து பல க்ஷேத்ரங்கள் சென்றார்கள்.
ஒரு நாள் ஒரு திருவோடு எங்கோ பத்ரகிரியார் கண்ணில் பட்டது. அதை எடுத்து வைத்துக்கொண்டார்.
''எதற்கு உனக்கு திருவோடு? நீ சந்நியாசி அல்லவா?
''குருவே யாரேனும் பிக்ஷை கொடுத்தால் பெறுவதற்காக உபயோகப்படட்டுமே. சிவபெருமானே கபாலத்தை கையில் ஏந்திய பிக்ஷாடனர் தானே சுவாமி ''
''உன் விருப்பப்படி செய்'
மற்றொருநாள் ஒரு நாய் அவர்கள் செல்லும்போது பின் தொடர பத்ரகிரி அதற்கு சிறு உணவளிக்க பசியோடு இருந்த அந்த நாய் அன்றுமுதல் பத்ரகிரியுடன் ஒட்டிக்கொண்டது. எங்கு சென்றாலும் கூடவே இருந்தது.
'உனக்கு எதற்கு இந்த பந்தம், எல்லாம் அற்றவன் அல்லவா நீ, வேண்டாம் என்று தானே எல்லாவற்றையும் உதறித்தள்ளியவன்?''
''ஏதோ என் பிக்ஷையில் பசியாக இருந்த அந்த ஜீவனுக்கு ஒருநாள் சிறிது தந்தேன் பாவம் என் பின்னே தொடர்கிறது'
'' விட்டதெல்லாம் மீண்டுமா... சரி உன்னிஷ்டம்''
எங்கோ ஒரு இடத்தில் ஒரு கிழிந்த பை கிடந்தது. பத்ரகிரி அதை எடுக்க,
''இது எதற்கு உனக்கு?''
''யாருக்கும் வேண்டாதது தானே இது ? என் துணியையாவது இதில் சுருட்டி வைத்துக்கொள்ளலாமே என்று தான்......''
''சரியப்பா சொத்துக்களை சேர்த்துக்கொள்''
''இல்லை சுவாமி அதை போட்டுவிட்டேன்.''.
சில தினங்களில் திருவிடை மருதூர் வந்து சேர்ந்தார்கள் குருவும் சிஷ்யனும். மகாலிங்க சுவாமி ஆலயம். இரவு தங்க வடக்கு வாசலில் பட்டினத்தார் சுருண்டு களைத்து படுத்தார் , கிழக்கு றொரு வாசலில் பத்ரகிரியார் நாயுடன், ஓட்டுடன்.
அந்த இரவு நேரத்தில் பசியாக ஒரு பிச்சைக்காரன் அங்கே வந்தான்.
பட்டினத்தாரிடம் ''ஐயா பசிக்கிறது. எனக்கு ஏதாவது உங்களிடம் இருந்தால் கொடுங்களேன்''
''அப்பனே என்னிடம் எதுவும் இல்லையப்பா. அடுத்த கிழக்கு வாசலில் ஒரு குடும்பஸ்தன் இருக்கிறான் அவனிடம் ஏதாவது இருந்தால் போய் பெற்றுக்கொள்''
பிச்சைக்காரன் அந்த இரவில் கிழக்கு வாசலில் யாருமே இல்லை. அங்கு இருந்த பத்ரகிரியிடம் வந்தான். பட்டினத்தாரிடம் கேட்டதுபோலவே கேட்டான்.
''அந்த சாமியார் தான் உங்களிடம் நீங்கள் குடும்பஸ்தனாக இருப்பதால் ஏதாவது உணவு வைத்திருப்பீர்கள் என்று சொன்னார் ''
''என் குருநாதர் என்னை குடும்பஸ்தன் என்றா சொன்னார். அதில் ஏதோ அர்த்தம் இருக்கவேண்டும்.
நான் முற்றும் துறந்தல்லவோ சன்யாசியானவன்.. அவர் சொல்வது ஞாயம் தான் எனக்கு எதற்கு இந்த திருவோடு? இறைவன் கொடுத்த கை இருக்க ஓடெதற்கு ? வீசி எறிந்தார் ஓட்டை? அது நாயின் மண்டையில் பட்டு அது தக்ஷணமே அவரை நன்றியோடு பார்த்துவிட்டு மடிந்தது''
எழுந்தார் பத்திரகிரியார் குருநாதனை நோக்கி நடக்க அப்போது தான் எதிரே இருந்த பிச்சைக்காரன் யார் என்று தெரிந்தது?
''மகாலிங்க மூர்த்தி எதிரே புன்னகைத்து நிற்க கண்களில் ஜலம் வழிய இரு கை கூப்பி நின்றார் பத்திரகிரியார். அக்கணமே மஹாலிங்கத்தோடு ஐக்கியமாகி மோக்ஷ பதவி கிடைத்தது.
விஷயம் அறிந்த பட்டினத்தார் வியந்தார். ''சிஷ்யனுக்கு மோக்ஷம் கொடுத்த மஹாலிங்கா எனக்கு எப்போது அருள்வாய்?''
பட்டினத்தார்க்கு பேய்க்கரும்பு கரும்பு ஒன்றை அளித்த பரமசிவன் ''திருவெண்காடா , இது என்று எங்கே உனக்கு இனிக்கிறதோ அன்று அங்கே நீ என்னை அடைவாய்''
பட்டினத்தார் சென்னையை அடுத்த திருவொற்றியூர் கடற்கரையில் சமாதி அடைந்ததை பற்றி தான் உங்களுக்கு ஏற்கனவே எழுதி இருக்கிறேனே

Thursday, August 30, 2018

YATHRANUBAVAM



தேப்பெருமா நல்லூர் -  J.K. SIVAN 













தமிழகத்தில் பிறந்து வளர்ந்து வாழும் நாம் மிகவும் பாக்கியசாலிகள். கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். இந்த தேசமே கோவில்களால் நிரம்பியது. போட்டி போட்டுக்கொண்டு எத்தனையோ வம்ச ராஜாக்கள் கட்டிய கோவில்கள் இருந்தன. அவற்றில் பல வடக்கே மதவெறியர்களால் மறைந்தன. ஏதோ யார் செய்த புண்யமோ அந்த அளவுக்கு தெற்கே வெளி வெறியர்களால் நாசமாகாவிட்டாலும் ஆபத்து நம்மை விட்டு இன்னும்  நீங்கவில்லையே.

உள்ளூர் மாலிக் காபூர்கள் போதுமே.  இது வேறு தினுசு  ஆபத்து.  கொடியது.  உடன் பிறந்தே கொல்லும் வியாதி. கொஞ்சம் கொஞ்சமாக கோவில்கள், நிலங்கள், குளங்கள்,அக்ரஹாரங்கள் எல்லாமே கழுதை தேய்ந்து கட்டெறும்பாகும் கதை. குறைந்ததா மறைந்ததா? எந்த வார்த்தையை உபயோகிப்பது என்று தெரியவில்லை, ஏனென்றால் அந்த 'அரிய' கைங்கர்யம்  தொடர்ந்து  பகல் கொள்ளையாக  நடந்து வருகிறதே!

இந்த நிலையில் ஒரு சில ஆலயங்களை மக்களே முன்னின்று சீரமைத்து, புனருத்தாரணம் பண்ணி, ஸம்ப்ரதாயமாக, காலம் காலமாக நடந்த கைங்கர்யங்களை தொடர்ந்து நடத்தி வருவதால் மே ஜூன் மாதங்கள் கூட துளியூண்டு  மழையைப் பார்க்க முடிகிறது.

ஒரு கிராமத்தின் சிறிய பகுதி தான் அக்ரஹாரம். 'அக்ரம்'' என்றால் முதல் என்றும் நுனி என்றும் அர்த்தம் உண்டு. தெருவின் கிழக்கு மேற்காக ரெண்டு நுனியில் கிழக்கே சிவன் கோவில், மேற்கே விஷ்ணு சந்நிதிகளும் இருப்பது வழக்கம். அதை வைத்தே திசையை கண்டுபிடிக்கலாம்.

கும்பகோணத்திலிருந்து  6 கி.மீ. தூரத்தில்  திருநாகேஸ்வரம்.  ரயில் நிலையம் உண்டு. 
  திருநாகேஸ்வரம் (ராகு ஸ்தலம்) நாகேஸ்வரன் சிவஸ்தலம். பக்கத்திலேயே தென்னாட்டு திருப்பதியான ஒப்பிலியப்பனின்  திருவிண்ணகரம். திவ்ய தேசம். நேர்வடக்காக 2 கி.மி தொலைவிலும், கும்பகோணம்- மயிலாடுதுறை பேருந்து தடத்தில் கும்பகோணத்திலிருந்து 5 கி.மி தூரத்தில் அம்மாச்சத்திரம் என்ற பைரவர் தலத்திற்கு தெற்காக 3 கி.மி தொலைவிலும் அமைந்துள்ளது. 

 அங்கிருந்து  பொடிநடையாக ஒரு கி.மீ. தூரம் நடந்தால் வருவது அஷ்ட சஹஸ்ர (எண்ணாயிரவர்) பிரிவை சேர்ந்த பலர் வாழ்ந்த, இன்னும் சிலர் வாழும்,  ஒரு அருமையான கிராமம் தேப்பெருமாநல்லூர். சைவ வைணவ பேதமே கிடையாது. இங்கே பெருமாள் ஸ்ரீ லட்சுமி நாராயணன். ராஜமான்யம் பெற்ற ஸ்தலங்கள் மங்கலம்//நல்லூர் என்று அழைக்கப்படும். பெருமாள் பெயரால் இந்த ஊர் லக்ஷ்மிநாராயணபுரம் எனவும், தேவராஜபுரம், தேவ பெருமாள்புரம், தேவப்பெருமாள் நல்லூர்  இப்போது   அவசரமாக காலத்தின் கோளாறினால் சுருங்கி இப்போது  தேப்பெருமா நல்லூர். தேப்பெருமாநல்லூர் ஆலயம் மூன்றாம் ராஜராஜசோழனால் கி.பி.1234ல் உருவானது.  சோழனின் கல்வெட்டு ''தூய பெருமாள் நல்லூர்'' என்கிறது. இது தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ள ஒரு பிராசீன கிராமம். 

கலியுகத்தில் மோக்ஷ சாதனம் நாமசங்கீர்த்தனம் ஒன்றே. அதை பரப்பிய “ஸ்ரீபகவன் நாமபோதேந்திராள்”.ஸ்ரீ வரதராஜ பெருமாளை காஞ்சிபுரத்திலிருந்து இங்கே கொண்டு வந்து பிரதிஷ்டை செய்ததால், காஞ்சியிலிருந்து கொண்டுவந்ததால், காஞ்சியில் வரதனுக்கு ஒரு பெயர் தேவ பெருமாள் என்பதாலும் இந்த ஊர் தேவ பெருமாள் நல்லூர் என பெயர் பெற்றது. மற்றதெல்லாம் போல் சிதைந்து, சிதிலம் அடைந்து தற்போது தேப்பெருமாநல்லூராக சுருங்கியது. இனிமேலும் இந்த பேராவது மாறாமல் நாம் கெட்டியாக இதை பிடித்து பாதுகாக்க வேண்டும். கஞ்சி வரதராஜன் குடியேறியதால் இந்த ஊருக்கு தக்ஷிணகாஞ்சி என்ற உன்னத பெயரும் உண்டு. 

'அன்னதான சிவன்'' என மஹா பெரியவா அன்போடு அழைத்த அமரர் அன்னதானபிரபு ராமஸ்வாமி ஐயர் வாழ்ந்த ஊர்.

அமைதியாக  ஒரு சிவன் கோவில் உள்ளது.  விஸ்வநாத சுவாமிக்கு  இங்கே  ருத்ராக்ஷேஸ்வரர் என ஒரு அருமையான பெயர்.  இங்கே மட்டும் தான்  பிரதோஷ காலத்தில், மற்றும் சிவராத்திரி அன்று  சிவனுக்கு ருத்ராக்ஷ கவசம்.   
ருத்திராக்ஷ அர்ச்சனை செய்வார்கள்.   அம்பாளுக்கு எனக்கு ரொம்ப பிடித்த பெயர்.  வேதாந்த நாயகி.  நாரத,  மார்க்கண்ட , அகஸ்திய ரிஷிகள் பல மஹான்கள் தரிசித்த சிவன். நானும் கையைக் கட்டிக்கொண்டு என்னை மறந்து நின்றேன்.  இங்கு சிவனை அம்பாளை தரிசித்தவர்களுக்கு  மறு பிறவி இல்லையாம்.  கோவில் வாசலிலேயே பெயர்பலகையில்   போட்டிருக்கிறது.  ஆயிரம் வருஷத்துக்கு மேலான  ஆகம சாஸ்த்ர விதிப்படி கட்டப்பட்ட கோவில். கர்பகிரஹம் சுண்ணாம்பு தேன்  கலந்த கலவையில் சோழனால் உருவானதாம்.  தினமும் சூரியன் கதிர் சிவனின் கால் மேல் விழுகிறதாம்.    ஆனந்த தக்ஷிணாமூர்த்தி ரொம்ப அழகாக இருக்கிறார். அமோகமாக எல்லோருக்கும்  உணவு கிடைக்க செய்கிறார். ஆலயத்தில் நுழைந்ததும் முதலில் தென்படுபவர் வாசலில்  கபால கணபதி 
  
ஒரு  நாகராஜா இங்கே 12 வருஷம் தவமிருந்து பூஜை செய்து மோக்ஷம் அடைந்ததாக ஒரு வரலாறு. :
15.1.2010 அன்று சூரிய கிரஹணம்.  காலை  பத்தரை மணிக்கு  ஒரு ராஜ நாகம் கோவிலில் இருக்கும் வில்வமரத்தின் ஒரு இலையோடு அபிஷேக ஜலதாரை(கோமுகம்)  வழியாக உள்ளே நுழைந்து கர்பகிரஹத்தில் ருத்ராக்க்ஷேஸ்வரர் மேல் ஏறி வில்வத்தை மூன்று முறை  சாத்தியது என்று ஒரு சேதி படித்தேன். பரபரப்பான இந்த சேதியை படத்தோடு நிறைய பத்திரிகைகள் வெளியிட்டன. ஞாபகம் இருக்கலாம்.  
ஆலயத்தில் நிறைய  பேர்  நேரில்  பார்த்தார்களாமே.  28.8.2018  அன்று  தேப்பெருமாநல்லூரில் தரிசனம் செய்யும்போது அர்ச்சகரிடம் கேட்டதில்  அந்த நாகம் சிவன் மீது சட்டை உரித்ததை படமெடுத்து வைத்திருப்பதைக்  காட்டினார்.  அந்த நாகம் மோக்ஷம் அடைந்துவிட்டதாம். 

அன்னதான சிவன் இங்கே இருக்கும் விநாயகருக்கு நைவேத்தியம் செய்த பிறகே உணவு உட்கொள்வார். அவர் வணங்கிய  தக்ஷிணாமூர்த்தி தான் எல்லோருக்கும்  குறைவில்லாமல் அன்னதானம் நடக்க அருளியவர். இன்னும் தொடர்ந்து நடக்கிறது என்றார் அர்ச்சகர். 

இந்த ஊர் குடும்ப ங்களில்  வீட்டுக்கு ஒரு நாகேஸ்வரன், நாகராஜன், நாகநாதன் என்ற பெயர் உண்டு. 


ADVICE



குறை சொல்லாதே J.K. SIVAN

சாம்புவுக்கு தன்னையே பிடிக்காது. அப்படியிருக்கும்போது யாரைக்கண்டாலும் ஏதாவது குறை சொல்லமாட்டானா.

''கோபு, அந்த பாலு ரொம்ப திமிர் பிடித்தவன்.
'' ஏன் என்ன பண்ணினான்?
''பச்சைகலர்லே ஒரு சைக்கிள் ஒட்டிண்டு வந்து என் எதிர்லே அதிலே உட்கார்ந்துண்டே பேசினான்''. ''அதிலே என்ன தப்பு? அவன் சைக்கிள் மேலே தானே உட்கார்ந்தான்.
''சைக்கிள் அறுநூறு ரூபான்னு ஆறுதடவை சொல்லிட்டானே''.
'' நீ கொடுக்கலியே, அவன் தானே கொடுத்து வாங்கினான். சொன்னா என்ன ?
''அவன் வாங்கினா .. அதுக்காக,. டம்பமா எதுக்கு எல்லார்கிட்டயும் சொல்லணும்? திமிர் திமிர்''.

இது உதாரணம். இதுபோல் பொழுது விடிந்தால் முடியும் வரை யாரைப்பற்றியாவது எதைப் பற்றியாவது ஒரு குறை சொல்வான் சாம்பு.

இதுபோல் நிறைய சாம்புகள் இருக்கிறார்கள். சந்தோஷம் என்றால் என்ன வென்றே தெரியாமல், மற்றவர்களையும் துன்பப்படுத்துபவர்கள் சமூகத்தில் துர்பாக்யசாலிகள். ஆங்கிலத்தில் NEGATIVE MINDSET என்போம். எதிர்மறை மனோநிலை. குறுகிய மனப்பான்மை. மனத்தடைகள் இவை யெல்லாம் தான் ஒருவனுடைய மகிழ்ச்சியை தின்பவை. நிறைய பேர் புஸ்தகம் படிப்பார்கள், விஞ்ஞான படம் பார்ப்பார்கள்,சிலர் விறுவிறுப்பான கதைகள் தேடுபவர்கள் , சிலர் சங்கீதம் ரசிப்பவர்கள். அவர்களால் மேலே சொன்ன மன இறுக்கத்தை கொஞ்சம் சமாளிக்க முடியும்.

சீரான வாழ்க்கை அமைத்துக்கொண்டு வாழ்பவனுக்கு சந்தோஷம் கிட்டும். சந்தோஷத்தோடு
வெற்றியும் கிட்டும். வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்ளாமல் களேபரமாக்கிக்கொண்டு சந்தோஷம் வெற்றி மட்டும் தேடினால் எந்த ஜென்மத்திலும் கிட்டாது.

மற்றவர்களோடு பேசும்போது, உன்னைப்பற்றியே உயர்வாக பேசுவது தவறு. ஒவ்வொருவருக்கும் அவரவர் பற்றி உன்னைவிட அதிக உயர்வான அபிப்ராயம் இருக்கலாம் இல்லையா. அங்கே தான் நட்பு முறிகிறது.

ஒவ்வாருவருக்கும் அவருக்கென்று எந்தவிஷயத்தைப்பற்றியும் தனியாக ஒரு அபிப்ராயம், சிந்தனை உண்டே. அது உன்னுடையதோடு ஒத்து போகாதே. உன்னிடம் பேசிக்கொண்டிரும்போது மற்றவன் மனதில் நடக்கும் யுத்தம் பற்றி உனக்கு என்ன தெரியும்? அதை மூடி மறைத்து அல்லவோ உன்னிடம் நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறான். அவனை மதிக்க தெரிய வேண்டாமா?

ஒருவன் சந்தோஷமாக இருப்பது அவன் கையில் தான் இருக்கிறது. என்பதை விட அவன் தேடும் சந்தோஷம் அவன் மனதில் இருப்பதை அறியாதவன் என்று சொல்லலாம். மனதில் தோன்றும் எந்த எண்ணத்தாலும் நமக்கு என்ன பிரயோஜனம், லாபம் என்று தீர்மானிப்பதை விட, இதனால் யாருக்கு லாபம் என்று கொஞ்சம் விசாலமாக எண்ணும் பழக்கம் வேண்டும்.
வார்த்தைகளை வைத்து முடிவெடுக்கக்கூடாது. செயலில் தான் வார்த்தையின் பலம் புரியும். நான் ஒரு புத்தம் எழுதப்போகிறேன் என்று சொன்னால் அதை எத்தனைபேர் முக்யமாக கருதுவார்கள். யாருக்கு அதனால் பயன் என்பது அல்லவோ முக்கியம். அதை உண்மையில் படித்து ஒருவர் பயன் அடைந்தாலும் அந்த முயற்சி வெற்றிகரமானது எனலாம். மற்றவர்களின் உதவி, தானாகவே கிடைக்கும்.
உன்னுடைய ஒவ்வொரு முயற்சியும் உனக்கு வெற்றியை தரும்படியாக நீ உழைக்கவேண்டும். அந்த வெற்றி பிறருக்கு அதனால் நீ எதிர்பார்த்த பயனை தரவேண்டும். அது ஒன்றே உன் உழைப்பின் ஊதியம். உனக்கு மகிழ்ச்சி தரும். உனக்கே திருப்தி இல்லாமல் நீ செய்யும் எந்த செயலும் நேரத்தை வீணடிப்பதே ஆகும். உனக்கே திருப்தி தராதது பிறருக்கு எப்படி திருப்தி அளிக்கமுடியும்.?

உன்னுடைய வெற்றிக்கு அது கிடைக்காமல் செய்யும், உன்னைமற்றவர் ஒரு பொருட்டாக மதிக்காமல் செய்யும் உன் முதல் எதிரியை உனக்கு தெரியுமா. தெரிந்து கொள்ளவேண்டுமானால் உடனே கண்ணாடி எதிரில் நின்று கண்ணை விழித்து பார்.



இன்னும் நிறைய பேசுவோம்

naaladiyar



நாலடியார் - J.K. SIVAN



பக்தி ஒன்றே தான் உன்னை காக்கும்.

அவ்வப்போது நாம் சமண முனிவர்களை விடுவதில்லை. அவர்களது நாலடியார் பாடல்கள் கருத்து செறிந்தவை. அற்புத பரிசாக நமக்கு தரப்பட்டவை. சிறுவயதில் இதை நாம் மனப்பாடம் செய்ய மட்டுமே கற்றோம். அர்த்தம் கற்பிக்கப்படவுமில்லை,நாம் கற்றுக்கொள்ள முயற்சிக்கவோ, அதற்கான சந்தர்ப்பமோ வாய்க்க வில்லை. அது அப்படியே மனப்பாட செய்யுளாக போகவேண்டாம். அர்த்தமும் இப்போதாவது புரியட்டும்.
''விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்கு ஒருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய்
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது.''

ஒரு பெரிய மாளிகை. நிறைய அறைகள். வெகுகாலமாக எவரும் அதில் வசிக்காமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. அதில் என்ன இருக்கும். வெறும் இருள் மட்டும். எத்தனை காலமாக பல நூற்றாண்டுகளாக! எவ்வளவோ காலமாக இருண்டு கிடந்த போதிலும் அந்த அறையில் ஒரு தீபம்
விளக்கொளி கொண்டு வரும்போது கண்மூடி கண் திறக்கும் நேரத்தில் பல கால இருள் பறந்து போய் மறைந்து விடுகிறது அல்லவா. இது போலவே தான் ஒருவன் செய்த தவத்தின் பயனாக, பலனாக அவன் இதற்கு முன் செய்திருந்த பல ஜன்ம பாவம் கணநேரத்தில் விலகும்;. தீபம் எரிய வேண்டுமானால் அதற்கு திரி எரிய விளக்கில் எண்ணெய் வேண்டும். எண்ணெய் இல்லாமல் குறையும்போது தீப ஒளி மங்கி அணைந்து எங்கும் மீண்டும் இருள் பரவுவது போல் நமது நல்வினை பயன் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தால் மீண்டும் பாபம் தலை காட்டத் தொடங்கும். அது கெட்டியாக நம்மைப் பிடித்துக் கொண்டுவிட்டால் என்ன? பழையபடி பல ஜென்ம பிறவி தான். கஷ்டம், துன்பம். ......

''நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமம் செய்வார் - தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவைபிதற்றும்
பித்தா¢ன் பேதையார் இல்.

ஆதி சங்கரர் நாலடியாரை நிச்சயம் படித்திருக்க மாட்டார். அவர்காலத்தில் புத்தர்கள் சமணர்கள் இருந்தார்கள். ஆனால் அவரது நேரம் வடக்கே ஸமஸ்க்ரித காரர்களிடையே பெரிதும் கழிந்து விட்டதால் தமிழ் தெரிந்திருக்காது. ஆனால் சமணர்கள் கெட்டிக்காரர்கள். ஆதி சங்கரர் சமஸ்க்ரிதத்தில் சொன்னதை நாலடியாரில் தமிழில் அழகாக சொல்கிறார்கள். கொஞ்சம் வேறே மாதிரி அவ்வளவுதான்.

இந்த தேகம் அழியக்கூடியது. எப்போது என்று எவனுக்கும் தெரியாத ரகசியம் இன்று இதை எழுதும் வரை வாஸ்தவம். அழிவது என்றால் ஏதோ டிவி யில் ஒரு சீரியல் பார்த்து அழுது சிரித்துவிட்டு சாப்பிட்டு படுத்தோம் காலை எழுதிருக்கவில்லை. படுக்கையோடு கதை முடிந்துவிட்டது என்பது வழியில்லாமல் கஷ்டமில்லாமல் துன்பப்படாமல் போகும் சந்தோஷமான எண்ணம் தான். ஆனால் நிறையபேருக்கு பீஷ்மர் அம்புகளை விட அதிக ஊசிகளை கை கால் தொடை, எல்லாம் குத்தி, காது மூக்கு தொண்டை எல்லாம் குழாய் செருகி நரகவேதனை மாசக்கணக்கில் பட்டு அவஸ்தையில் துடித்து, சேர்த்து வைத்த எல்லா பணத்தையும் தொலைத்து விடும் பாக்யம் இந்த உடம்புக்கு உண்டு. இதெல்லாம் நன்றாக உணர்ந்த பெரியோர்கள், அறிவுடையவர்கள் நமக்கு தவத்தில் தியானத்தில் ஈடுபட உதவ வேண்டும். நாம் தான் அவர்களை தேடி பிடித்து பயன் பெற வேண்டும். கற்பது இப்போதுள்ள மாணவர்கள் கற்கும் வறட்டு விஞ்ஞானம் தொழில் முறை, காசு சம்பாதிக்க, வாழ்வை ஈடுபடுத்துவது அறிவிலிகள் வெறும் இலக்கணத்தை கற்பது போல். ஆதி சங்கரர் சாகிற வயதில் பாணினி இலக்கணத்தை கற்பவனிடம் ''இந்த வெத்து இலக்கணம் உன்னை கடைசி காலத்தில் காப்பாற்றாது'' என்று முதல் ஸ்லோகமாக பஜகோவிந்தத்தில் ஏற்கனவே பாடி இருக்கிறார். உதவாக்கரைகள் நிறைய இருப்பது போல் இலக்கணநூல் என்று சொல்லப்பட்ட பல நூல்களையே விடாமல் தேடி கற்றுக்கொள்ளும் மனிதர்களே 'நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே ''உன்னை இது காப்பாற்றாதே தம்பி'' என்று சங்கரர் சொல்லியதை தான் சமணர்கள் மேலே சொன்னார்கள்.

அடுத்து மீதி நாலடியார் தெரிந்து கொள்வோம்.
.

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் J.K. SIVAN
பீமனின் பலம்

வியாசர் தொடர்ந்து கூறுகிறார்:

''சுரபி என்று காமதேனுவுக்கு ஒரு பெயர் . கருணையின் அம்சம். ஒரு நாள் அழுதது. இந்திரன் அதைப் பார்த்துவிட்டு கலங்கினான்.

''ஏனம்மா காமதேனு நீ அழுகிறாய். உனக்கு என்ன குறை என் தேவலோகத்தில். உடனே சொல். நிவர்த்திக்கிறேன்.''

''தேவராஜா, எனக்கு ஒரு குறையுமில்லை. ஒருவன் எனது மகன் ஒருவனை கழுத்தில் பெரிய கலப்பையை மாட்டி கட்டையால் அடித்து துன்புறுத்துகிறான். அதன் கண்ணில் நீர் வருகிறதே. அது என்னை வாட்டுகிறது. அதால் வலியைப் பொறுத்துக்கொண்டு பளு சுமந்து நடக்கமுடியவில்லை. அதன் கஷ்டம் என் கஷ்டம் அல்லவா?''

''உனக்கு எத்தனையோ பசுக்கள், காளைகள் இருக்க ஒன்றின் துயரம் மட்டும் ஏன் வாட்டுகிறது?

''அரசே எத்தனை குழந்தைகள் இருந்தாலும் துன்பப்படும் ஒன்றின் மீது தானே கவனமும் கருணையும் இருக்கவேண்டும்.''

இந்திரன் மழையை அனுப்பினான். விவசாயி காளையோடு வீடு திரும்பினான்.

திருதராஷ்டிரா, உனக்கு எண்ணற்ற மகன்கள் இருக்கிறார்கள். இருந்தபோதும் யார் துன்பப் படுகிறார்களோ அவர்கள் மீது உன் அபிமானமும் கருணையும் வைக்கவேண்டும். காமதேனுவின் கதையில் வருவதுபோல் பாண்டுவின் மக்களும் உன் மக்களும் ஒன்றே தான் என்றாலும் பாண்டவர்கள் படும் துன்பம் என்னை அவர்களை நினைக்க வைக்கிறது. விதுரனும் அவ்வாறே கருத்து கொண்டவன்.

உன் சகோதரன் பாண்டுவின் குழந்தைகளும் சந்தோஷமாக இருக்கவேண்டுமானால் நீ செய்ய வேண்டியது உடனே உன் மகன் துரியோதனனை கூப்பிட்டு பாண்டவர்களுடன் சமாதானமாக இருக்க வைத்து அவர்களையும் ரக்ஷிப்பது. இது உன் கடமை.

"முநிஸ்ரேஷ்டரே, எனக்கு புரிகிறது. இதையே தான் பீஷ்மர், விதுரன், துரோணர் ஆகியோரும் சொல்கிறார்கள். என் மகன் துரியோதனனை நீங்களே திருத்துங்கள்

"பாண்டவர்களை சந்தித்துவிட்டு மைத்ரேய ரிஷி இங்கு வருகிறார். அவரே உன் மகன் துரியோதனனை திருத்தட்டும்.உலகம் உய்யட்டும். அவர் சொல்வதை மட்டும் தவறாமல் செய்யவேண்டும். அது முக்கியம். அவர் சொன்னதை மீறினால் அவரது சாபம் உங்கள் அனைவரையுமே அழித்துவிடும் ஜாக்ரதை.''

'அப்புறம் என்ன நடந்தது என்று இதுவரை பாரதக் கதை கேட்டுவந்த ஜனமேஜயன் கேட்க, வைசம்பாயனர் தொடர்கிறார்:

''ராஜனே, கேள் சொல்கிறேன். இவ்வாறு திருதராஷ்டிரனிடம் சொல்லிவிட்டு வியாசர் புறப்பட்டார். ரிஷி மைத்ரேயர் வந்தார். எல்லோரும் ஹஸ்தினாபுரத்தில் அவரை வணங்கி வரவேற்று உபசரித்தனர்.

திருதராஷ்ட்ரன் அவரிடம் '' குருதேவா, என் சகோதரன் மக்கள் பாண்டவர்களை சந்தித்தீர்களா? எப்படி உள்ளார்கள்?''

''ராஜனே, குருஜங்களாவில் யுதிஷ்டிரனை சந்தித்தேன். காம்யக வனத்தில் இருந்தார்கள். அடடா எத்தனை தவசிகள், முநிஸ்வரர்கள் அவனைச் சுற்றி இருந்தார்கள் தெரியுமா? மான் தோல் தரித்து, சடை முடியோடு முனிவனாக அவன் காட்சியளித்தான். அப்போது தான் உன் மக்கள் அவனுக்கு செய்த துரோகம் தெரிந்தது. மிகப் பெரிய தவறை நீங்கள் புரிந்துவிட்டீர்கள். அதற்காகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். உன் மக்கள் எக்காரணத்தை கொண்டும் பாண்டவர்களோடு யுத்தத்தில் ஈடுபடக்கூடாது. நீயும் பீஷ்மரும் உள்ளவரை அது நேராமல் பார்த்துக்கொள்ளுங்கள். உன் ராஜ்யத்தில், உன் அரண்மனையில் தவறு நேர அனுமதித்து விட்டாய். மதிப்பிழந்தாய்''

அப்போது அங்கிருந்த துரியோதனன் ரிஷியின் கண்ணில் பட்டான். ரிஷி அவனிடம்
''துரியோதனா, நீ பலசாலி, கெட்டிக்காரன். சகல வசதியும், பெரும் புகழும் பெற்றவன். வீணாக பாண்டவர்களோடு சண்டை போடாதே. இது உனக்கோ, இந்த பாரத பூமிக்கோ நல்லதல்ல. நிரம்ப சக்தி வாய்ந்தவர்களை துணையாகக் கொள்வதை விட்டு எதிரியாக நினைக்காதே. பீமார்ஜுனர்
களின் பராக்கிரமம் தெய்வீகமானது. மேலும் கிருஷ்ணன் அவர்களுக்கு உறுதுணையாக உறவினனாக இருக்கிறார். மனதில் கொள். கோபத்தை விடு. அவர்களிடம் மன்னிப்பு கேள்.நட்பாக இரு !"

"ஹா ஹா'' என்று சிரித்த துரியோதனன் தனது தொடையைத் தட்டினான். அது அவனது வழக்கம். காலால் தரையை கீறினானே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை. மைத்ரேயருக்கு தன்னை அவன் உதாசீனப் படுத்தியது கோபம் தந்தது. கண்கள் சிவக்க, கமண்டலத்தில் ஜலம் எடுத்து தெளித்து ''ஏ துரியோதனா, என்னை இகழ்ந்தாய். விரைவில் இதன் பயன் உனக்கு கிட்டும். எந்த தொடையை தட்டினாயோ அந்த தொடையை பீமன் பிளப்பான்.!'

''முனீஸ்வரா, முனீஸ்வரா என்று திருதராஷ்ட்ரன் இது நடக்காமல் அருளவேண்டும்'' என கெஞ்சினான்.

''துரியோதனன் பாண்டவர்களோடு சமாதானமாக போவதால் யுத்தம் நிகழாது உன் மகனும் பிழைப்பான். அப்போது என் சாபம் நிறைவேறாது. வேறு வழியில்லை.'' என்றார் ரிஷி மைத்ரேயர்.

''மகரிஷி, பீமன் எவ்வாறு பலம் வாய்ந்த ஜராசந்தன், பகாசுரன் ஆகியோரை கொன்றான் என்று பீமனின் பலத்தை ஆராய திருதராஷ்ட்ரன் கேட்ட கேள்விக்கு மைத்ரேயர் பதில் சொல்லவில்லை.

''எப்போது உன் மகன் என் வார்த்தையை மதிக்கவில்லையே, இனி பேச்சில்லை.எது வேண்டுமானாலும் விதுரனைக் கேள் அவன் சொல்லுவான் '' என்றார். ரிஷி சென்றுவிட்டார்.

ஒருநாள் திருதராஷ்டிரன் ''விதுரா, பீமன் எவ்வாறு அந்த பலம் வாய்ந்த ராக்ஷசனைக் கொன்றான். உனக்கு தெரிந்தால் சொல்''

''பாண்டவர்களோடு பேசுகையில் பீமனின் பராக்கிரமம் பற்றி கேள்விப்பட்டேன். சொல்கிறேன். சூதாட்டத்தில் ஏமாற்றப்பட்டு தோற்று பாண்டவர்கள் இரவும் பகலும் வனவாசம் செய்கையில் காம்யக வனம் அடைந்தார்கள். அடர்ந்த காடு அது. உயிர்களை தின்னும் ராக்ஷசர்கள் வாழும் இடம். நள்ளிரவு. பாண்டவர்கள் தனித்து அந்த இரவு அங்கே வரும்போது ராக்ஷச தலைவன் பார்த்து மகிழ்ந்தான். இன்று நல்ல உணவு நம்மை தேடிவருகிறது என்று அவர்களை தடுத்தான். தௌம்யர் திரௌபதி இருவரும் தான் முதலில் அந்த ராக்ஷசனை பார்த்தவர்கள். யுதிஷ்டிரன் அந்த ராக்ஷசனை பார்த்து, '' நீ யார் எதற்கு எங்களை தடுக்கிறாய்?'' என்று கேட்டான்.

''நான் பகனின் சகோதரன். இந்த காம்யகவனத்தில் நுழைந்தோரைக் கொன்று தின்பது என் வழக்கம்'' என்றான் அசுரன்.

''நான் யுதிஷ்டிரன், பாண்டவன். என் சகோதரர்கள் பீமசேனன், அர்ஜுனனைப் பற்றி நீ அறிவாயா? இந்த வனத்தில் நாங்கள் தங்கப்போகிறோம். அமைதியாகப் போ''

''என் நல்லகாலம் உங்களைப் பார்த்தேன். என் சகோதரன் பகனைக் கொன்ற பீமனைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். அவனே இங்கு கிடைத்தது அதிருஷ்டம். பீமன் ஏற்கனவே என் நண்பன் இடும்பனைக் கொன்ற கோபம் வேறும் எனக்கு இருந்தது நல்லதாகப் போய்விட்டது. கடன் தீர்க்கிறேன் இன்று. ''

அருகே இருந்த பீமன் ஒரு மரத்தைப் பிடுங்கினான். ராக்ஷசனை நெருங்கினான். பிடித்தான். அந்த ராக்ஷசனின் தலையில் அந்த பெரிய மரத்தின் அடிபாகம் பலமாக விழுந்து அவன் மண்டை வலித்தது. கோபத்தில் அவனும் ஒரு நீண்ட மரத்தை வேரோடு பிடுங்க இருவரும் போராடினர். சில நேரம் அவனோடு விளையாடிவிட்டு பீமன் அவனை இடுப்பில் கை கொடுத்து மேலே தூக்கினான். ஒரு க்ஷணம் அவனை துரியோதனனாக நினைத்தான் கோபமும் பலமும் அதிகரித்தது. அப்படியே மேலே சுழற்றி படு வேகமாக பூமியில் அறைந்தான். கீழே விழுந்தவன் கழுத்தை இரு கைகளாலும் நெரித்து துடிக்க வைத்தான். கொன்றான்.''

அண்ணா, இதைத் தான் கேட்டேன். என்றான் விதுரன். கிர்மிரன் என்ற அந்த ராக்ஷஸன் இவ்வாறு அழிந்த பிறகு அந்த காட்டில் ராக்ஷச பயம் இல்லை. முனிவர்கள் ரிஷிகள் அனைவரும் பாண்டவர்களோடு அங்கே வாழ்ந்தார்கள்.

பாண்டவர்கள் வனவாசம் பற்றி அறிந்த துருபதன், அவன் உறவினர், மற்ற அரசர்கள் எல்லோரும் காம்யக வனம் சென்றார்கள். கௌரவர்கள் மேல் கோபம் கொண்டார்கள். ஒரு நாள் துவாரகையிலிருந்து கிருஷ்ணனும் காம்யக வனம் வந்தான்.

கிருஷ்ணன் தலைமையில் ஒரு கூட்டம் நடந்தது.

'இந்த பூமியில் துரியோதனன், துச்சாதனன், சகுனி, கர்ணன் ஆகியோர் இரத்தம் கலக்கபோகிறது. அவர்கள் இழைத்த அநீதியை எதிர்த்து அவர்களை யுத்தத்தில் அழித்து மீண்டும் யுதிஷ்டிரன் முடிசூட நேரம் வருகிறது'' என்று கிருஷ்ணன் அறிந்தான்.


GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...