யாத்ரா விபரம் J.K. SIVAN
கேதுவுக்கு பள்ளத்தில் ஒரு கோவில்
நானும் நண்பர் அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனும் திருநாங்கூர் கருட சேவை சென்றபோது வைத்தீஸ்வரன் கோவிலில் சௌகர்யமாக ஒரு இரவு தங்க நேர்ந்தது. அன்று நாங்கள் திருவெள்ளக்குளம் எனும் அண்ணன்கோவில் குமுதா வ ல்லி நாச்சியார் கல்யாண மண்டபத்தில் நடந்த கலியன் ஒலி மாலை வைணவ மாநாட்டு விழாவில் பங்கேற்க வந்திருந்தோம். அடியேனுக்கு அந்த மாநாட்டில் ''வைணவ சேவா ரத்னா'' விருது வழங்கி கௌரவித்தார்கள் என்பது எனக்கு மறக்கமுடியாத பேரின்பமான அனுபவம். அங்கிருந்து சென்னை கிளம்பு முன் அருகே இருந்த காவிரிப்பூம் பட்டினம் சிவன் கோவில் சென்றதைப் பற்றி ஏற்கனவே எழுதி இருந்தேன். இன்று மற்றொரு புண்ய ஸ்தலம் அருகே இருந்ததால் கேது க்ஷேத்ரம் எனும் கீழ பெரும்பள்ளம் எனும் கிராமம் சென்றோம்.
நாகநாத சுவாமி சிவன் பெயர். இங்கே அம்பாள் பெயர் சௌந்தரநாயகி. காவிரி புகும் பட்டினமான பூம்புகாரிலிருந்து 2 கி.மீ. தூரம். தஞ்சாவூர் ஜில்லாவை சேர்ந்தது. கேது ஒரு சாயா க்ரஹம். இந்த ஊர் சோழநாட்டின் நவகிரஹ ஸ்தலங்களில் கேதுவிற்கான ஸ்தலம். ரெண்டு தள ராஜகோபுரம். உள்ளே ரெண்டு பிரஹாரம் .
ஒரு காலத்தில் இந்த ஊருக்கு வனகிரி என்று பெயர் இருந்தது. திருப்பாற்கடலில் வாசுகியை கயிறாக்கி மந்திர மலையை மத்தாக்கி தேவர்களும் அசுரர்களும் கடையும் ஒரு அசுரன் தேவனாக மாறுவேடம் அணிந்து அமிர்தத்தை பருகுகிறான். இதை கவனித்த ஸ்ரீமந் நாராயணன் கையிலிருந்த கரண்டியால் அந்த அசுரன் தலையில் தாக்க அவன் தலை துண்டிக்கப்பட்டு கீழே விழுகிறது. அமிர்தத்தை ஏற்கனவே கொஞ்சம் பருகிவிட்டதால் அவன் உடல் தலை இரண்டும் உயிரிழக்க வில்லை. அந்த அசுரனின் தலை ஒரு பாம்பின் உடலை ஏற்று ராகு வாகிறது. துண்டிக்கப்பட்ட அவன் உடல் பொதிகை மலை மேல் விழுகிறது ஒரு பாம்பின் தலையை அது பெற்று கேதுவாகிறது. உங்களுக்கு தெரியுமா 7 (ஏழு) என்கிற எண் கேதுவை குறிக்கும். கேது விகிரஹம் ஐந்து தலை நாகத்தை தலையாக கொண்டு உடல் கரம் குவித்து ஆயிரம் வருஷம் கொண்ட இந்த ஆலயத்தில் நாகநாதஸ்வாமி சிவனை வணங்கும்.
நாக தோஷம், கேது தோஷம் உள்ளவர்கள் இங்கே பரிகாரம் தேடி வருகிறார்கள். கேதுவின் ஆடை நிறம் சிவப்பு.
No comments:
Post a Comment