உத்தவ கீதை J.K. SIVAN
''அவதூதரின் அருமையான குருமார்கள் யார்?''
ஸ்ரீ கிருஷ்ணன் உத்தவருக்கு உபதேசம் செய்கையில் மஹாராஜா யதுவுக்கு ஒரு சமயம் தத்தாத்ரேயர் தனது குருமார்களை பற்றி விவரித்ததை நினைவுக்கூறுகிறார்.
''மஹாராஜா யயாதியின் மகன் யது காட்டில் அலைந்து தெரிந்தபோது ஒரு இளம் ப்ராமண யோகியை சந்திக்கிறான்.
'' மகரிஷி நீங்கள் யாத்ரிகராக எங்கெல்லாமோ அலைபவராக காண்கிறீர்கள், ஒரு குழந்தை மாதிரி துளியும் கவலை இன்றி உங்களால் எப்படி உலகில் வாழ முடிகிறது. அளவற்ற ஞானம் உங்களுக்கு எங்கே எப்படி இந்த வைராக்கியம் எல்லாம் அடையமுடிந்தது. எல்லோரும் ஏதோ ஒரு விருப்பு, வெறுப்பு, ஆசை பாசம் இதிலெல்லாம் மூழ்கி தவிக்கும்போது தாங்கள் எப்படி நிச்சிந்தையாக உலவுகிறீர்கள். உங்களது குரு யார். அவதாரிகனீர்
''அவதூதர் தத்தாத்ரேயர் பற்றி உன் வாயால் கேட்க வேண்டும் கிருஷ்ணா ''
கிருஷ்ணன் உத்தவருக்கு சொன்ன அந்த அவதூதர் ரிஷி தத்தாத்த்ரேயரை பற்றி அறிந்து கொள்வோம்:
த்ரி மூர்த்திகளான ப்ரம்மா விஷ்ணு சிவன் சேர்ந்த ஒரு அவதாரம் தத்தாத்ரேயர். ரிஷி அத்ரிக்கும் ரிஷி பத்னி அனசூயாவுக்கும் பிள்ளையாக தோன்றியவர். ''தத்தா'' என்றால் ''தந்தவர்'' '' த்ரேயர்'' திரி ''மூர்த்திகள்'' மும்மூர்த்திகளும் தங்களை ஒரு சிசுவாக தந்து ரிஷி தம்பதிகளுக்கு தத்தாத்ரேயராக அவதரித்தவர். ஆத்ரேயருக்கு இன்னொரு அர்த்தம் ''அத்ரி வம்சத்தை சேர்ந்தவர்'' அத்ரி மகன் ஆத்ரேயன். தத்தாத்ரேயன்.
ஆதி குரு, ஆதிநாத், யோகாச்சார்யன் என்று கோடானுகோடி ஹிந்துக்கள் வழிபடும் குரு தத்தாத்ரேயர். சிறுவயதிலேயே துறவியாக வெளியே கிளம்பி மஹாராஷ்ட்ரா, குஜராத், வட கன்னட பகுதிகளில் தேசாந்திரியாக காணப்பட்டார். கந்தமாதன சிகரத்தில் தவம் செய்தார் என்கிறார்கள். கிர்னார் மலைமேல் அவர் காலடி சுவடு இருக்கிறதாம். இவர் பரசுராமரின் குரு. ஓரிடத்தில் தங்காத அவதூதர்.
அவரது ''அவதூத கீதை '' விவேகானந்தர் விரும்பி படித்து பேசிய ஒரு தத்துவ பொக்கிஷம். பாகவத புராணத்தில் தத்தாத்ரேயரின் 24 குருமார்களை பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது.
தத்தாத்ரேயர் படம் பார்த்திருக்கிறீர்களா? மூன்று தலை மும்மூர்த்திகள். ஜாக்கிரதை, ஸ்வப்னா, ஸுஷுப்தி நிலைகள். கையில் பிடித்திருக்கும் நான்கு நாய்கள் நாலு வேதங்கள். நினைத்ததை அளிக்கும் கருணை வாய்ந்ததால் காமதேனு மாதிரி ஒரு பசு. அதன் கன்றுக்குட்டி. பசு தான் பூமாதேவி. கையில் உள்ள திரிசூலம் முக்குணத்தையும் வென்றதன் குறி.
மும்மூர்த்திகளும் கற்புக்கரசி அனசூயையின் பெருமையை நிலைநாட்ட ஒரு நாடகமாடினர். அதிதிகளாக அனசூயை ஆஸ்ரமம் வந்து பசிக்கிறது என்றார்கள். அத்ரி வெளியே எங்கோ போய்விட்டார்.
'' இருங்கள் இதோ இதோ உணவு தயார் பண்ணுகிறேன்'' என்று அனசூயை உணவு தயாரித்தாள் . உணவு ரெடியாகிவிட்டது. இலையின் முன்னே அமர்ந்த மும்மூர்த்திகள்
''அனசுயா, சொல்ல மறந்துவிட்டோம், நாங்கள் பரிசுத்தமாக உணவருந்துபவர்கள். எனவே நீ எந்த வித ஆடையுமின்றி எங்களுக்கு உணவு பரிமாறு '' என்றபோது அனசூயை திடுக்கிட்டாள். அவளுக்கு உடனே தெரிந்து விட்டது. வந்தவர்கள் வெறும் சாதாரண அதிதிகள் இல்லையோ? தன்னை சோதிக்க வந்தவர்களோ?. அதிதிகள் வார்த்தையை தட்டுவதோ, அவர்களை அவமதிப்பதோ, பாபம் ஆச்சே.
''ஆஹா அப்படியே செய்கிறேன் அதிதி ஸ்வாமிகளே''
ஆடையின்றி வருமுன் அனசூயா தனது கையிலிருந்த பூஜா பாத்திரத்தின் தீர்த்தத்தை அவர்கள் மேல் தெளித்து '' நீங்கள் சிறிய குழந்தைகளாக கடவது'' என்று வேண்டுகிறாள்.
குழந்தைகளாக மாறிவிட்ட அந்த மும்மூர்த்திகளும் அனுசூயா ஆடையின்றி பரிமாற சௌகர்யமாக உட்கார்ந்து நன்றாக சாப்பிட்டன!
வெளியே இருந்து திரும்பிய அத்ரி தனது மனைவி அனுசூயா சாப்பிட்ட அந்த மூன்று சிறு குழந்தைகளோடு விளையாடுவதை கண்டு அதிசயித்தார். தனது ஞான திரிஷ்டியால் நடந்ததை அறிந்தார். திரிமூர்த்திகளை வணங்க அவர்களும் தம் சுய உருக்கொண்டு அவரை ஆசிர்வதித்து அனசூயையின் பக்தி, கற்பை சிலாகித்து போற்றி அருள் பாலித்தார்கள். அவர்கள் வேண்டுதலின் படியே மூவரும் ரிஷி தம்பதிகளின் குழந்தை களானார்கள். மூவரும் ஒரே உடலுடன் மூன்று சிரங்களுடன் தத்தாத்ரேயராக பிறந்தனர்.
வடக்கே ஸ்ரீ ஷீர்டி ஸாயீ பாபா தத்தாத்ரேயரின் அம்சம் என்கிறார்கள்.
இந்த தத்த்ராத்ரேயருக்கு தான் 24 விசேஷ குருமார்கள். ரொம்ப ஆச்சர்யமான குருமார்கள். அவர்களை இனி தெரிந்து கொள்வோமா?
++
இதற்கிடையில் பழைய நினவு ஒன்று. சிறு குட்டிக்கதையாக அதை சொல்கிறேன்.
மஹா பாரதத்தில் வரும் ஒரு பெரிய யது குல ராஜரிஷி யயாதி. கிருஷ்ணனின் குலம். யயாதிக்கு அசுர குரு சுக்ராச்சார்யார் மகள் தேவயானி மனைவி. வயதாகியும் உலக ஆசைகள் யயாதியை விடவில்லை. மீண்டும் இளமையை தேடினான். யார் கொடுப்பார்கள்? . கிழவன் யயாதி தனது மகன் யதுவை ஒருநாள் கேட்கிறான்
''அன்பு மகன் யது, நாம் இருவரும் வயதை மாற்றிக்கொள்ளலாமா?''
'' ஸாரி அப்பா, நான் இந்த ஆட்டத்துக்கு வரவில்லை''
கோபித்த யயாதி மகன் யதுவை நாடு கடத்துகிறான். யது மனது உடைந்து காட்டுக்கு போகிறான். அவன் மனது இதமாக யாராவது அவனுக்கு ஆறுதல், உபதேசங்கள் சொல்ல மாட்டார்களா?? தேடுகிறான்? அப்போது தான் அங்கே ஒரு அவதூதரை (முற்றும் துறந்த நிர்வாண ரிஷி ) காண்கிறான்.
தாடி, மீசை, உடல் முழுதும் வெண்ணிற சாம்பல் பூச்சு. ஞான ஒளி வீச எதிரே வருகிறார் முனிவர். அப்படியே ஓடி அவர் காலில் விழுகிறான் யது .
''மகரிஷி நீங்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாமா?
''ஒரு அவதூதன்''
''அப்படியென்றால் என்ன அர்த்தம்?
'' உலக பற்றை அறவே விட்டொழித்தவன், ஆத்ம ஞானப் ப்ரம்மானந்தத்தை பிடித்துக் கொண்டு அதில் திளைப்பவன்''
''மகரிஷி எனக்கும் அஞ்ஞானத்திலிருந்து விடுபட்டு அழியாத ஞானம் பெற உபதேசம் செய்வீர்களா '' என்கிறான் யது .
அவதூதரான தத்தாத்ரேயர் யதுவை கூர்ந்து கவனிக்கிறார். அவன் ஆர்வம் உண்மையானது என அறிகிறார்.
''அப்பனே, நானும் உன் மாதிரி சாதகன் தான். வாழ்க்கையே உலகில் பெரிய பள்ளிக்கூடம். அதில் எண்ணற்ற சாதகர்களுக்கு குருமார்களும் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இருபத்திநாலு சந்தர்ப்பங்களில் எனக்கு உபதேசம் செய்தவர்களை என்னை உய்விக்க வந்த இருபத்து நாலு குருக்களாக ஏற்றுக் கொண்டவன்''
சாக்ஷாத் ஸ்ரீ தத்தாத்ரேயருக்கு ஒரு குரு அவசியமா என்ன? அவரே ஜகத் குரு. அவதூதராக அவர் சென்று கொண்டிருந்தவர்.
யதுவுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. மண்டை வெடித்து விடும்போல ஆகிவிட்டது.
''சுவாமி என்னால் நம்ப முடியவில்லையே. உங்களுக்கு யார் குரு தேவர்? ''
''குரு என்று நீ யாரையெல்லாம் நினைக்கிறாயோ அவர்கள் எல்லோருமே குரு தான்''
''உங்கள் பெற்றோரிடமிருந்து ஞானம் பெற்றீர்களோ?''
''பெற்றோர் மட்டுமல்ல, மற்றோர் யாராக இருந்தாலும் அவர்களுடமிருந்தும் அறியவேண்டியவை இருந்தால் அவர்களும் குரு தான்''
''உங்களது ஆசானைத் தெரிந்துகொள்ள வெகு ஆர்வமாக இருக்கிறது. யார் அவர் என்று சொல்லுங்களேன்''
''நான் தான் சொன்னேனே அப்பனே. எனக்கு 24 குருமார்கள் உண்டு''
''சுவாமி என்ன சொல்கிறீர்கள் உங்களுக்கு 24 குருவா? எப்படி அத்தனை பேரிடம் பயின்றீர்கள். என்ன தெரிந்துகொண்டீர்கள்?''
''நீ சரியான சாதகன். ஞான மார்க்கத்தை அடைய விழைபவன் என்று புரிகிறது. எனவே சொல்கிறேன் கேள்'' என்று ஆரம்பிக்கிறார் தத்தாத்ரேயர்.:
No comments:
Post a Comment