நமது சாஸ்திரம்: J.K. SIVAN
2. போனவனுக்கு போகப்போகிறவன் செய்வது....
எனக்கு ஒரு நண்பர் மார்க்கண்டேயன்.என்றும் பதினாறு இல்லை. ;அதற்கு மேல் ஐம்பது வருஷங்கள் இருந்து நிறைய பேரை படுத்தி விட்டு ஒரு நாள் பக்கோடா நிறைய சாப்பிட்டு விட்டு படுத்தவர் அப்புறம் எழுந்திருக்க மறந்து விட்டார்.
அவருக்கு அடுத்த பதிமூன்று நாட்களில் செய்ய வேண்டிய கர்மா அல்லது நியமங்களை சாத்திரத்தில் சொல்லியபடி செய்தார்கள்.
கவனித்து பார்த்தால் அவற்றில் சில சடங்குகள் வெறும் சாஸ்திரம் மட்டும் இல்லை. விஞ்ஞான ரீதியாகவும் அமைந்திருக்கிறது. மற்றதெல்லாம் வெறும் நீதி போதனையாக இருக்கிறது. நாம் எல்லோரும் எப்போதும் ஒழுக்கத்தோடு நேர்மையாக .-- இது முடியுமா? சாஸ்திரம் சொல்கிறது அப்படித்தான் நாம் வாழவேண்டும். ஆமாம். நிச்சயமாக. பக்தி கடவுள் நம்பிக்கை பெரியோரிடம் மதிப்பு, பயபக்தி எல்லாமும் இருக்கவேண்டுமே. நித்ய கர்மாநுஷ்டானங்களை விடவே கூடாது. நிறைய விஷயங்கள் நமது வாழ்க்கையில் ஏதோ ஒரு நம்பிக்கையின் பேரில் தான் நடக்கிறது. பரம்பரை பரம்பரையாக, காலா காலமாக இது தான் நடைமுறை. இதை மாற்றவேண்டிய அவசியமும் இல்லை. கூடவும் கூடாது. இதில் என்ன கஷ்டம், நஷ்டம்?
சில பழக்கவழக்கங்கள் அந்த காலத்தில் சௌகரியமாக, எல்லோராலும் அனுஷ்டிக்கும்படியாகி இருந்தது. கொஞ்சம் காலத்திற்கு ஏற்றபடி ''யதா சௌகர்யமாக '' சிறிது மாற்றிக் கொள்ளலாம் தவிர நம்பிக்கை அதே.
அந்தணர்கள் நிறைய பேர் இதில் ஈடுபட்ட காலம் அது. இப்போது அந்தணர்கள் வேறு உத்யோகங்களில் ஈடுபட்டு அவர்களுக்கு பதிலாக யாரோ பேசிய ஒலி அவர்கள் அசரீரியாக பல இல்லங்களில் மந்திரங்களாகி, அதை பின் பற்றி நிறைய சடங்குகள் நிறைவேறுகிறது.
அப்போது இந்த மாதிரி ப்ரோஹிதர்கள், வைதீகர்கள் தமது சேவைக்கு கொடுத்த தக்ஷணை களையும், தானங்களையும் இப்போதும் செய்ய வழியில்லை என்பது வாஸ்தவம். பசுவை தானமாக கொடுக்க முடியவில்லை.... இதை வியாபாரமாக்கி அவர்கள் இப்போது பல மடங்கு பணமாக கேட்கிறார்கள் என்றும் குறை . அவர்கள் பிழைக்க வழி என்ன? என்பது ஒருபுறம் இருக்க அவர்கள் உச்சரிக்கும் மந்திரம் பொருத்தமானதா, சரியானதா? முழுதுமா ? தவறில்லாமலா? என்ற கேள்விகளுக்கு பதில் தெரியாது ஏன் என்றால் அந்த மந்திரங்களோ அவற்றின் அர்த்தமோ தெரிந்து கொள்ள எவருக்கும் விருப்பமில்லை.
கருடபுராணம் ஆச்சரியமாக சில விஷயங்களை சொல்கிறது. இறந்தவன் செல்கிற பாதை எப்படிப் பட்டது. அவனுக்கு செய்யவேண்டிய சடங்குகள் என்ன ? இதெல்லாம் முதலில் கருடாழ்வாருக்கு ஸ்ரீமன் நாராயணனே போதிக்கிறார். அது தான் கருட புராணம்.
இது எப்படி நமக்கு தெரியும் என்றால் நாராயணன் எழுதிவைக்கவில்லை. கர்ண பரம்பரையாக, அதாவது ஒருவர் சொல்லி மற்றவர் கேட்டு, அவர் சொல்லி அதற்கு பின் பலர் கேட்டு மந்திரங்கள் கொஞ்சமும் மாறுபடாமல் வழி வழியாக வந்து யாரோ ஓலைச்சுவடியில் வடமொழியில் அல்லது கிரந்தம், தமிழ் எதிலோ எழுதி, அதை சிலர் பாதுகாத்து, காகிதத்தில் எழுதி, அதை வெள்ளைக்காரன் அச்சு யந்திரம் கண்டுபிடித்து அது நமது நாட்டிலும் வந்தபின் தான் காகிதத்தில் கருப்பு வெள்ளையாகியது. முதலில் ஆற்றங்கரையில், மரத்தடியில் சொன்ன நேரம் காலம் சூழ்நிலை வேறு, அதை பல நூற்றாண்டுகள் கழித்து ஒலி நாடாவில் குளுகுளு அறையில் சோபாவில் அமர்ந்தவாறு கேட்கும் இக்காலம் வேறு. மாறுதலுக்கு காலம் ஒன்றே பொறுப்பு. ஆனாலும் சில சடங்குகள் மாறவே மாறாது. மாற்றினால் அவற்றை செய்வதில் அர்த்தம் இல்லை. பண விரையம், விளையும் பாபம் ஒன்று தான் மிச்சம்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு ப்ரோஹிதர், வாத்யார் இருப்பார். அவர் தான் அந்த வீட்டில் நடக்கும் சுப அசுப காரியங்கள் எல்லாவற்றையும் நடத்திக் கொடுப்பவர். அவர் மீது வீட்டுக்கார்களுக்கும் வீட்டுக்காரர்கள் மீது அவருக்கு பரஸ்பர நம்பிக்கை இருக்கும். அவரை கூப்பிட்டு மார்க்கண்டேயன் குடும்பத்தினர் என்ன செய்யவேண்டும் நாங்கள் என்று கேட்டால் அவர் சொல்வது:
''வழக்கமாக இந்த பன்னிரண்டு பதிமூன்று நாளும் செய்யவேண்டிய சம்ப்ரதாயம் சொல்றேன்.அதுக்கப்புறமும் ஒருவருஷம் பூரா இருக்கு. அப்புறம் வருஷத்துக்கு ஒரு தடவை ஸ்ரார்த்தம் வரை சொல்றேன்''.
மார்க்கண்டேயன் வீட்டில் அவன் மறைந்த பின் ஏற்றப்பட்ட விளக்கு அடுத்த பன்னிரண்டு நாள் வரை தெற்கு பக்கத்தில் எரிந்து கொண்டே இருந்தது. அணையாமல் எண்ணை விட்டு கதவை காற்று படாமல் மூடி வைத்தார்கள். அந்த பன்னிரண்டு நாட்களிலும் பூஜை அறையில் விளக்கு எரியாது. பூஜை கிடையாது. சில வீடுகளில் இப்போதும் அந்த பன்னிரெண்டு நாட்கள் சமையல் அறையிலும் பூனைக்குட்டி படுத்திருக்கும். சமையல் கிடையாது. அடுப்பு எரியாது. ஏன்? மார்க்கண்டேயன் இறப்பினால் விளைந்த துக்கம், துயரம். மகிழ்ச்சி இதர உணர்வுகளை மட்டு படுத்த.இறந்தவர் நினைவில் இருக்க. மார்க்கண்டேயன் இப்போது யமனின் ஆதிக்கத்தில்.
எதற்காக பூஜை செய்வதில்லை, என்றால் பூஜை செயது விளக்கேற்றி நாமாவளி சொல்லி மனம் லயித்தால் அங்கு தெய்வம் நிச்சயம் சாந்நித்தியம் ஆகும். நம் கண்ணுக்கு தெரியாததை மனம் அனுபவிக்கும். இதயம் அடையாளம் கண்டுகொள்ளும். அசுப காரியம் நடந்துகொண்டிருக்கும் இடத்தில் சில ஜீவன்கள் மறைந்த ஜீவனுடன் சம்பந்தப்பட்டவை உலவும். அவை இருக்குமிடத்தில் தெய்வத்தை அழைக்க கூடாது. அந்த ஜீவன்களை முதலில் அவை போகவேண்டிய இடத்துக்கு வெளியேற்ற வேண்டும். அனுப்பவேண்டும். மார்க்கண்டேயன் ஜீவன் அங்கேயே ஏக்கத்தோடு, ஏமாற்றத்தோடு சுற்றிக் கொண்டிருக்கிறதே. அதனால் தாம் அவரோடு இத்தனை நாள் இருந்த குடும்பம் அவரை விட்டு வேறு மகிழ்ச்சி காரியங்களில் ஈடுபடுவதில்லை. அசுப இடங்களில் தெய்வம் கிடையாது.
மார்க்கண்டேயன் செய்த பாவங்களுக்கு பரிகாரங்கள் செய்து அவனை யமனுலகுக்கு அனுப்பி வைக்க தான் சடங்குகள்.
ஸ்ரீவாஞ்சியத்தில் வாஞ்சிநாதர் ஆலயத்தில் உள்ளே நுழைந்ததும் யமதர்மன் சந்நிதி பார்த்தது நினைவுக்கு வருகிறது.
மேற்கொண்டு பேசுவோம்.
No comments:
Post a Comment