Tuesday, April 24, 2018

aindham vedham



ஐந்தாம் வேதம்  ---            ஜே.கே. சிவன் 
                              
    28  'அர்ஜுனனோடு நான் போட்டியிடுகிறேன்! '

மஹா பாரதம், ராமாயண, பாகவத, பக்தவிஜய கதைகளுக்கு  ஈடாக உலகில் வேறெதையும் நான் சொல்ல மாட்டேன். எத்தனை அற்புத கதை சித்திரங்கள். நற்போதனைகள். ஒவ்வொரு இந்தியனும் படித்து, மற்றவர்களுக்கு எடுத்து சொல்ல தவறினால் அவன் தனது ஆதார  கடமையில் தவறியவன் என்று சொல்லலாம்.

ஒருசமயம் கங்கையில் ஸ்நானம் செய்யும்போது துரோணர் காலை ஒரு முதலை கவ்வி இழுத்தது.
''சிஷ்யர்களே என்னை ஒரு முதலை கவ்வி இழுக்கிறது. என்னைக் காப்பாற்றுங்கள் '' என்று குரல் கொடுத்தார். அர்ஜுனன்  கரையில் நின்று அவரைக் கவனித்துக் கொண்டிருந்தவன் ஐந்து கூறிய அம்புகளை செலுத்தி முதலையைக் கொன்றான்.

துரோணர் அர்ஜுனனின் குருபக்தியை மெச்சி அவனை அணைத்துக் கொள்கிறார்.

''அர்ஜுனா  நான் இன்று ஒரு முடிவு செய்து விட்டேன். என்னிடம் இருக்கும் ஒரு அதி சக்தி வாய்ந்த  அஸ்திரம் பிரம்மாஸ்திரம்.  அதை எப்படி பிரயோகப் படுத்துவது, எப்படி  அதை உன்னிடமே  மீட்பது என்பவற்றை உனக்கு மட்டுமே  உபதேசிக்கப்போகிறேன். ஒன்று மட்டும் கவனத்தில் வைத்துக்கொள். எக்காரணம் கொண்டும் அதை மனிதர்கள் மேல் பிரயோகிக்கக் கூடாது. அதை இவ்வாறு தாழ்ந்த சக்தி கொண்டவர் மீது பிரயோகித்தால் இந்த பிரபஞ்சத்தையே அது தீக்கிரையாக்கிவிடும். ஜாக்ரதை. இந்த அஸ்திரம் ஈடிணையற்றது. இது போன்ற அஸ்த்ரத்தை உன் மீது ஒரு எதிரி செலுத்தினால், அதை தடுக்க வேண்டுமானால் நீ இந்த அஸ்திரத்தை பிரயோகிக்கலாம்.'

 ''ஒன்று நிச்சயம்  அர்ஜுனா. வில் வித்தையில் உன்னை வெல்ல இனி எவரும் இல்லை. உன் சாகசங்கள் உலகம் உள்ள வரை மெச்சப்படும் என்பது நிச்சயம்''  என்கிறார் துரோணர்.
ஒரு நாள்  துரோணர் ஹஸ்தினாபுரம் அரண்மனையில் திருதராஷ்டிரன், விதுரர், பீஷ்மர், முன்னிலையில் அரசர்களே, உங்கள் இளவரசர்களுக்கு  எனக்குத் தெரிந்த வித்தைகளை  கற்றுக்கொடுத்து விட்டேன், இனி அவர்கள் தாங்கள் கற்றுக்கொண்டதை உங்களுக்கு நிரூபிக்க வேண்டியது மட்டுமே பாக்கி உள்ளது.என் வேலை முடிந்து விட்டது.

மிகவும் மகிழ்ச்சியுடன் அனைவரும் துரோணருக்கு நன்றி கூற  திருதராஷ்டிரன் ''விதுரா, எனக்கு இந்த தேர்ச்சியைக் காண கண்களில்லை. நீ வேண்டிய  ஏற்பாடுகள் செய்து நமது செல்வங்கள் தங்களை ஆற்றலை வெளிப்படுத்த ஒரு நாள் குறித்து விடு. தகுந்த இடத்தை ஏற்பாடு செய்.''

அவ்வாறே ஒரு இடம் தேர்ந்தேடுக்கப்பட்டு, மக்கள் முன்னிலையில் ஒரு பெரிய மேடை அமைத்து அதில் அரசர்கள் வீற்றிருக்க  ஒரு  வீரப் போட்டி துரோணர் பீஷ்மர், விதுரர் கிருபர், திருதராஷ்டிரன் காந்தாரி, குந்தி ஆகியோர் முன்னிலையில் நடந்தது.ஹஸ்தினாபுரமே  ஒன்று சேர்ந்து அங்கு திரண்டது   மல்யுத்தம், கதாயுதம், வில் வித்தை, வாள் வீச்சு, ஈட்டு எறியும் போட்டி எல்லாம் சிறப்பாக  நடைபெற்றது. பீமனும் துரியோதனும் கதாயுதத்தில் மோதும்போது அங்கிருந்தவர்கள் அனைவரும் இரண்டு கட்சிகளாக பிரிந்து இவன் தான் ஜெயிப்பான், இல்லை அவன் தான் ஜெயிப்பான் என்று  வீராவேசமாக ஆர்வத்தோடு ஆதரித்தனர். துரோணர்  அஸ்வத்தாமனிடம் ''இருவரையும் சமாதானப் படுத்தி வை. ஏதேனும் விபரீதம் நடக்காமல் தடு'' என்றார்.

 அடுத்ததாக  ''எனது சீடன் அர்ஜுனன் இப்போது தனது வில் வித்தையைக் காட்டுவான்'' என்று  துரோணர் அறிவித்தவுடன் அனைவரும் கடல் அலையென கரகோஷம் செய்தனர்.  அர்ஜுனன் அனைவரையும் வணங்கி, குருவின் தாள் தொட்டு  பணிந்து அக்னி அஸ்திரத்தை விடுத்து தீயை வரவழைத்தான். எங்கும் தீ. அடுத்து வருணாஸ்திரம் எய்து நீரால் அதை அணைத்தான். வாயுவாஸ்திரம் செலுத்தி எங்கும் பெரும்  காற்றை அனுப்பினான், அடுத்து மேகாஸ்திரம் எய்து எங்கும் கரு நிற மேகக் கூட்டங்களை கொணர்ந்தான். பர்வதீய அஸ்தரம்  மலைகளைக் கொண்டு வர, அந்தர்தான அஸ்திரம் அனுப்பி எதையுமே காணமல் போக்கினான்.எத்தனையோ தந்திர வித்தைகள் காட்டினான்.

 நிகழ்ச்சி முடியும் தருணம்.கர்ணன் அங்கே தோன்றினான், அவனது கையில் ஒரு பெரிய வில், நிறைய அஸ்த்ரங்கள். தனது வில் வித்தையைக் காட்ட வந்தான்.

யார் இவன்? என்றான் அர்ஜுனன்.
''அர்ஜுனன் நிகழ்த்திய  சாகசச் செயல்கள் அனைத்தையும், ஏன் அதைவிட  அதிகமாகவே என்னால் செய்து காட்ட முடியும்'' என்றான் கர்ணன். துரியோதனன் மிகவும் மகிழ்ந்தான்.அவனைக் கட்டி மகிழ்ந்தான். '

'உனக்கு என்ன தேவை சொல் கர்ணா?'' என்றான் துரியோதனன்.

''உன் நட்பொன்றே போதும் நண்பா. முடிந்தால்  எனக்கு ஒரே விருப்பம்  அர்ஜுனனோடு தனியே மோத வேண்டும். யார் சிறந்த வில்லாளி என்று தெரிந்து கொள்ளவேண்டும்''

அர்ஜுனன் தனது வில்லையும் அஸ்த்ரங்களையும்  எடுத்துக் கொண்டு கர்ணனோடு போட்டியிடத் தயாரானான்.

திருதராஷ்டிரன் மக்கள் அனைவரும் கர்ணனை உற்சாகப்படுத்த,  பீஷ்மர், கிருபர், ஆகியோர் அர்ஜுனனை நோக்கினர். குந்தி மயக்கமடைய  விதுரர் அவளை மயக்கத்திலிருந்து தெளிவிப்பதில் ஈடுபட்டார்.

கிருபர் முன் வந்து கர்ணனை அணுகினார். 

''இந்த பாண்டவன் குந்தி ராணியின் இளைய மகன். கௌரவ வம்சம். உன்னோடு அர்ஜுனன் மோதுவான். நீ யார், எந்த தேசத்தவன், எந்த ராஜ வம்சம் பற்றி எல்லாம் சொல்கிறாயா? அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்.அரச குமாரர்கள் அவர்களுக்குள்  போட்டியிடுவது தான் முறை. மற்றவர்கள் போட்டியிட அனுமதி இல்லை''என்றார் கிருபர்.

வைசம்பாயன ரிஷியே, கர்ணன் அர்ஜுனனோடு மோதினானா? என்று  வினவினான் ஜனமேஜயன். நாமும் போட்டி பற்றி இனி அறிவோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...