நான் யார்? ஜே.கே. சிவன்
மணி என்ன ஐந்தா ஆறா ? எனக்கு இன்னும் விடியவில்லை சரியாக. குளிர் காற்று வீசிக் கொண்டி ருக்கிறது. மகிழ மரத்திலிருந்து கம்மென்று வாசனை காற்றோடு கலந்து என்னை எங்கேயோ கொண்டு போகிறது. நான் எங்கே இருக்கிறேன். எப்படி வாய் ஓயாமல் சில பேர் தெரியாத பறவைகள் அவ்வளவு அழகாக ஸ்ருதியோடு, ரம்மியமாக பாடுகிறது.
ஆமாம் நான் எங்கே இப்போது? ஆகாயத்தில் பறந்து கொண்டா?. என் வழக்கமான அடுக்கு மாடி ஒன்றில் முதல் மாடி, ஒரு சின்ன புறா கூண்டிலா? 2BRBHK எல்லாமே சேர்ந்து 700 சதுர அடிக்குள்.
'சொத்'' என்று என்மீது பால்கனி வழியாக வந்து விழுந்த காலை பத்திரிகையை எடுத்து ஆவலாக பார்க்க ஆசை.
நேற்று எங்கே யாரை யார் கொலை செய்தார்கள்?.எங்கே ரயில் கவிழ்ந்தது?. எந்த பாங்க் வாயில் விரலை வைத்துக்கொண்டு பணத்தை கோட்டை விட்டது? எந்த ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் மடத்தில் குரு? எவன் அகப்பட்டால். அவனுக்கா அஷ்டமத்தில் சனி? எவனை எவன் கூட்டத்தில் கெட்ட வார்த்தையில் திட்டிப் பேசினான். விலை எதில் எல்லாம் ஏறிவிட்டது? தங்கம் சூரியனைத் தாண்டி உயரே போய் விட்டதா? -- இதெல்லாம் தான் அந்த பேப்பரில் வழக்கமாக வரும்.
ஆனால் இன்று .... ஐயோ !!..
“அட, இதென்ன ஆச்சர்யம்? எதற்கு நான் சிரித்துகொண்டிருக்கும்போட்டோ??? (மைசூரில் பல வருஷங்களுக்கு முன்னே முரளியோடு போன போது-கல்யாணத்துக்கு முன்னால் - சேகருடைய ஜானவாச கோட்டை கடன்வாங்கிபோட்டுகொண்டு நான்- ) இந்த போட்டோ தான் என் பர்சில் நான் எப்போதும் வைத்துக்கொண்டிருப்பது.
''ஐயோ ... இது என்ன கீழே ??
" தோற்றம் - மறைவு'' தேதிகளோடு நானா?"
இரவு படுக்கப் போகுமுன் மார்பில் தாங்க முடியாத வலி!ஆஸ்பத்திரிக்கு தூக்கி போகபட்டேன். அங்கு அசந்து தூங்கிவிட்டேனா?
பொழுது விடிந்து காலை பத்து மணியும் ஆகிவிட்டது. ஏன் காபி இன்னும்கொடுக்கவில்லை?
ஆபிசில் டீம் ஹெட் நரஹரி ராவ், இன்று என்னை காய்ச்சு காய்ச்சு என்றுகாச்சப் போகிறான்.
ஏன் இங்கே யாருமே காணோம்?
எதுக்காக ஹால் தாண்டி என் அறையின் வெளியே வாசலில் சத்தம்??.
அங்கே நிறைய பேர் இருக்கிறார்களே. ஏன் அழுகிறார்கள்? ஏன் நான்இங்கே தரையில்படுத்து கொண்டிருக்கிறேன் ?
யோவ்.! என்னய்யா நடக்குது? ஏன் என்னை ஒத்தருமே பார்க்கவில்லை???--- என்னைப்பற்றி என்னென்னமோ பேசுகிறார்களே.
நான் கத்தினேன். எல்லாரும் என் உடம்பையே ஏன் இப்படிபார்க்கிறார்கள்? ஒருவேளை நான் செத்து விட்டேனோ??? எங்கேஎன் மனைவி கமலா? பசங்க, நண்பர்கள் எல்லாம்? இதோ இருக்காளே அவள் அடுத்த ரூம்லே - அது சரி ஏன் அவங்களும் அழறாங்க? என் மாமியார் காவேரி கண்ணிலே எதுக்கு இன்னொரு காவேரி? “
”ஏய் கமலா, அடி அழகி!! என் உலகமே நீதானே!!!. நான் கத்தறது ஏன்அவங்க யாருமே கேக்க மாட்டேன்கிறாங்க? உங்களை விட்டு நான் எப்படிபோகமுடியும்.??
>இதோ என் சிநேகிதன் சங்கரன், இவன் எங்க இங்கே வந்தான்? டேய் !!ஸ்கூலிலே கணக்கு வாத்யார் பார்க்காமே ஒண்ணா சிகரெட் பிடிச்சது மறந்துட்டியா? ---மாதவன் - என் மச்சினன் இப்போ எதுக்கு வரான்??.போனவாரமே என் கிட்ட வாங்கின கடன் ஆயிரம் ரூபாய் திருப்பிதருவதாக எல்லா சாமி மேலும் சத்யம் செய்துவிட்டு காணாம போனவன் ஆச்சே ?
ஒருநிமிஷம்.....எல்லாருமே கேளுங்கோ, நான் உங்களுக்கு எத்தனையோ கெடுதல்செய்திருக்கேன். கோவபட்டிருக்கேன். மனசை ஓடைச்சிருக்கேன் .எல்லாத்துக்கும் பெரிய " சாரி" சாரி சாரி - நான் உரக்க கத்தறது ஏன் உங்க காதிலே விழவில்லை.
திடீர்னு நீங்க எல்லாருமே செவிடா? நான் உங்க முன்னாலே இப்படி கதறுகிறேன்-- ஒருஜீவனும் என்னை பாக்காமே ஏன் உடம்பையே ஏன் பாக்கறீங்க.?நிஜமாவே நான் இல்லையா? போய்ட்டேனா ? என்னுடைய உடம்பை நான்கிள்ளி பாக்கறேன்.
கடவுளே ப்ளீஸ் என்னை வுட்டுடு. கொஞ்சநாள் மறுபடியும் கொடேன். நான்பண்ண தப்பையெல்லாம் அழிச்சுட்டு மன்னிப்பு கேட்டுவிட்டு என்மனைவி, குழந்தைகள், நண்பர்கள் பக்கத்துக்கு வீட்டு பார்த்தசாரதி குடும்பம் எல்லாத்து கிட்டையும் நல்ல பேர் வாங்கணும். இதோ என் கமலா -- அடியே, நான் எங்கும் போகல்லேடி இங்கேயே உன் முன்னாலேயே இருக்கேனே. நான் அடிக்கடி சொல்வேனே " " உலகத்துக்கு நீ ஒருத்தியாகஇறந்தாலும் எனக்கு நீதான் அந்த உலகமே?ன்னு " இந்த டயலாக் காது புளிச்சுப்போச்சு என்று சொல்வியே.- மறந்துட்டியா? -- எதுக்கு குடுமி வச்ச இத்தனை வாத்தியார்கள் கூட்டமா இங்கே ஏன்?.. ரெண்டாம் நாள், பத்தாம் நாள், பண்ணீரெண்டு.... என்ன இது.. .காசு பத்தி ஏதோ பேசறாளே.
''கடவுளே, கடவுளே ப்ளீஸ் ப்ளீஸ் எனக்கு இன்னுமொரு சான்ஸ் குடு . இந்ததடவை எந்த தப்பும் பண்ண மாட்டேன் எல்லார் கிட்டேயும் அன்பாக நடப்பேன் ப்ளீஸ்''
நான் உரக்க கத்தினேன். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
”ஏன் தூக்கத்திலே இப்படி கத்தறீங்க? எதாவது கனவா? ஏன் உங்க உடம்பெல்லாம் தொப்பமா வேர்த்துவிட்டிருக்கு - நடுங்குது ?" -- கமலா என்னை எழுப்பினாள்.
எனக்கு பேச்சு வரலை. கமலாவை இருக்க கட்டிகொண்டேன். இனிமேஉன்கிட்ட நான் கோவமா பேசவே மாட்டேன். ஐ லவ் யு ? கடவுளே உனக்கு நன்றி எப்படி சொல்வேன். இனி என் வாழ்வின் ஒவ்வொரு நிமிஷமும் அன்பிலும் பரோபகாரதிலும் தான். இது நிச்சயம் –--இது என் புது வாழ்வு.
எதிர் சுவற்றில் அப்பா சுப்ரமணியின் படம்.:
"அப்பா உன்கிட்டே எத்தனையோ தடவை கத்தியிருக்கேன். ஏன் எனக்கு கோதண்டம்என்று ஒரு உலகத்தில் இல்லாத பேர் வைச்சே?. என் பிரண்ட்ஸ்எல்லாம் ''தண்டம்'' என்று கேலி பண்றது போராதா - வீட்டிலே அத்தனைபேருக்கும் நான் "கோண்டு" வேறே ??? – இல்லேப்பா இனிமே கத்தமாட்டவே மாட்டேன்.
ரொம்ப சாரி அப்பா நீ வச்ச பேரு ரொம்ப கரக்டு - நான் இத்தனை நாள்தண்டம் தான். இனிமே பாரு நான் கோதண்டம். !!!!ராமர் கை வில்லுமாதிரியே நல்ல காரியம் செய்து நல்ல பேர் எடுப்பேன். ஒரு கனவுஎன்னை அடியோடு மாற்றிவிட்டதே.!!! நான் யார்? அப்போ யார்? இப்போ யார்?
பகவான் ஸ்ரீ ரமணர் மரண அனுபவத்தை உயிரோடு சிறுவயதிலேயே பெற்றவர் அது அவரை ''நான் யார்'' கேட்க வைத்து அந்த கேள்விக்கு இன்னும் நாமெல்லாம் பதில் தேடிக்கொண்டிருக்கிறோம். இந்த சின்ன கற்பனைக் கதை நம்மை இன்னும் கொஞ்சம் நன்றாக வாழ்க்கையின் அநித்தியத்தை உணரவைத்தால் உபயோகப்படாதா.?
This must be the real experience of the dead, supported by sastras. But will the experience and resolve to change be lasting after he wakes up?
ReplyDelete