போனவனுக்கு போகப்போகிறவன் செய்வது.
J.K. SIVAN
இதில் வரும் விஷயங்கள் பற்றி அதிகம் கேள்விகள் கேட்கவேண்டாம். நானே கொஞ்சம் அதைப்பற்றி எங்கோ படித்துவிட்டு சுருக்கமாக சொல்கிறேன். சொந்த அனுபவம் என்று சொல்வதற்கும் இன்னும் வழியில்லை.
நாம் சந்தோஷம் இல்லாமல் சங்கடப்பட்டுக்கொண்டே பேசும் ஒரு விஷயம் மரணம். முதலில் இந்த உலகில் வாழும்போது அன்றாடம் நாம் பூமா தேவி, இந்திரன், அக்னி, சூர்யன், வாயு என்று தெய்வங்களை வணங்குகிறோம். நாம் இந்த உலகத்தில் இருந்து விடை பெற்றுக்கொண்டு போனப்புறம் நமக்கு சம்மந்தப் பட்ட தேவர்கள் யார் தெரியுமா? நமது ஆத்மாவை காப்பதற்காக நியமிக்கப்பட்டவர்கள் யார் என்று தெரியுமா? பிரம்மதேவன் நியமித்த அஷ்ட வசுக்கள், பதினோரு ஏகாதச ருத்ரர்கள், பன்னிரண்டு ஆதித்யர்கள் ஆகியோர் தான். இவர்களைத்தான் தர்ப்பணம் பண்ணும்போது மந்திரத்தில் வசு, ருத்ர, ஆதித்ய, ஸ்வரூபா, பித்ரு பிதாமஹ, ப்ரபிதாமஹா என்று நமது மூன்று தலைமுறையும் சேர்த்து சொல்கிறோம் . நாம் பூமியை விட்டு மேலே பறந்தபோது நமது ஜீவன் இவர்கள் கட்டுப்பாட்டில் தான்.
நமக்கு தெரிந்து எப்போதாவது யாராவது வியாதி வந்து படுத்தபோது, வயது முதிர்ந்து ஸ்வாதீனம் இல்லாமல் படுத்தபோது, ஏதோ விபத்திலோ வேறு ஏதோ காரணதாலோ சுய நினைவு இன்றி கிடைக்கும்போது, டாக்டர் தலையாட்டி மேலே பார்க்கும்போது, '' ஹுஹும் வீட்டுக்கு எடுத்து போங்கள் ஆச்சு எல்லோருக்கும் சொல்லிவிடுங்கள்'' என்ற உத்தரவு வரும்போது என்னசெய்கிறோம்?
பிரயாணம் செய்யப்போகிறவனை சுற்றி உட்கார்ந்து ஸ்ரத்தையாக விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்கிறோம். சாஸ்த்ரம் என்ன சொல்கிறது? மேலே கிளம்ப போகிறவரின் மூத்த பிள்ளை பக்கத்தில் அமர்ந்து வலது காதில் ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்தை, பஞ்சாக்ஷ்ரத்தை உச்சரிக்கவேண்டும் உயிர் பிரியும் வரை என்கிறது. முடியுமா?. முடியவேண்டாமா? இந்த மந்திரத்தை கேட்டு தான் உடம்பில் உள்ள பஞ்ச ப்ராணன்கள் எல்லாமும் ஒன்று சேர்ந்து மெதுவாக வெளியேறுமாம். மூத்த பிள்ளை இல்லையே என்று குறை வேண்டாம். வேறு யாராவது கூட இந்த தர்ம காரியத்தை செய்யலாம். மூத்த பிள்ளை இந்த மந்திரம் ஓதினால் பிரியும் ஜீவனுக்கு ரொம்ப சந்தோஷம்.. அவ்வளவு தான்.
நிறைய பேர் வீட்டில் இன்னும் சில பழக்கங்கள் இருக்கிறது. நாராயணீயம், ராமாயணத்தில் சுந்தரகாண்டம், ஹரிநாம சங்கீர்த்தனம், கோவிந்தா கோவிந்தா என்று நாமம் எல்லாம் கூட சொல்வார்கள். பேசாமல் டேப் ஒலிநாடா போடுகிறவர்களும் உண்டு. அவரவர் நிலைமைக்கு, சந்தர்ப்பத்திற்கு ஏற்ப இதெல்லாம். அந்த சமயத்தில் சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று ஆராய வேண்டாம். அந்த காலத்தில் இந்த வசதிகள் கிடையாதே. ஒரு உயிர் பிரியும்போது அங்கே தெய்வீகம் இருக்க வேண்டும் என்பது தான் எண்ணம். நோக்கம். ஏனென்றால் எங்கும் சுற்றிக்கொண்டிருக்கும் சில தீய சக்திகள் மரணமடைபவன் அருகே சுற்றியிருந்த வெளியேறும் ஜீவனை தம்மிடம் இழுத்துக்கொள்ள முயற்சிக்கும். இறைவன் நாம பலம் அவற்றை விரட்டியடிக்கும். எனவே தான் பாராயணம். புரிகிறதா? தீய சக்திகளால் தெய்வீக மந்திரத்தை எதிர்கொள்ளமுடியாது.
ஒரு மனிதனின் நல்ல கர்மாக்கள் அவனது ஜீவனை நல்வழிப்படுத்த, நற்பிறவி எடுக்க உதவும்போது தாமும் ஒட்டிக்கொள்ள தீய சக்திகள் விழையும். அவற்றால் நெருங்கமுடியாதபடி தெய்வத்தின் நாம ஜெப மந்த்ர சக்தி செய்துவிடும்.
கடைசி நேரத்தில் மனிதன் மரணத்தை எதிர்நோக்கி இருக்கும்போது, மரணம் சம்பவித்து விட்டது. அப்புறம்? பிராணன் எனும் ஆத்மா வெளிப்பட்டு சிறிது நேரம் தான் விடுபட்ட அந்த உடலின் அருகே சுற்றிக்கொண்டே இருக்கும். மரணமடைந்தவன் உடலை தர்ப்பை புல் மீது கிடத்துவார்கள். தலை தெற்கு இருப்பது அவன் யமன் இருக்குமிடம் நோக்கி பிரயாணம் துவங்கி விட்டான் என்பதை குறிக்கும்.
அழைத்து செல்ல வரும் தர்ம தேவதை, எம தர்மனுக்கு காலை நீட்டி அவமதிக்க கூடாது என்பதற்காக தலை யை தெற்கு பக்கம் வைப்பது வழக்கம். யமதர்மனுக்கு தலை சாய்த்து நமஸ்காரம் பண்ணுவது போல் வணங்குவது போல் அவன் தலை தெற்கு நோக்கி உள்ளது. விஞ்ஞான ரீதியில், தென்பகுதியில் காந்த சக்தி அதிகம். உள்ளே இருந்து வெளியேறும் ஜீவ சக்திக்கு உதவ இந்த மாதிரி தெற்கே தலை. இறந்தவனின் ஏழு தலைமுறை மூதாதையர் பித்ருலோகத்தில் இருப்பவர்களோடு இவனும் சேர்ந்து கொள்ளவேண்டும் என்று சில சடங்குகள் செய்வார்கள். அங்கே அவனை சேர்ப்பது அவ்வளவு சுலபமில்லை.
இறந்தவன் உடல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டு சாம்பலாகும் வரை அவனது ஜீவன் உடலின் மேற்பகுதியிலேயே அருகே சுற்றிக்கொண்டு இருக்கும்.
No comments:
Post a Comment