Wednesday, April 4, 2018

NEETHI SATHAKAM.



பர்த்ருஹரி நீதி சதகம். - சுபாஷிதம்
J.K. SIVAN

வடக்கே ஒரு சாம்ராஜ்யத்துக்கு ராஜாவாக இருந்த பர்த்ருஹரி ஒரு நாள் காலை திடீரென்று ஓட்டாண்டி யாக தீர்மானித்து மனைவி பிள்ளை, குடிமக்கள், ராஜ்ஜியம் எல்லாம் துறந்து நடக்கிறான். அவனிடமிருந்து நமக்கு அப்போது முன்னூறு ஸ்லோகங்கள் கிடைத்து அதில் முதல் நூறான நீதி சதகம் கொஞ்சம் கொஞ்சம் அவ்வப்போது நேரம் கிடைத்தால் சொல்லி வருகிறேன். இதற்கு சுபாஷிதம் என்ற பெயர். நல்ல வார்த்தைகள். உண்மையிலேயே நன்றாக தான் இருக்கிறது அல்லவா? பிடிக்கிறதா?
संतप्तायसि संस्थितस्य पयसो नामापि न श्रूयते
मुक्ताकारतया तदेव नलिनीपत्रस्थितं राजते ।
मध्ये सागरशुक्तिमध्यपतितं तन्मौक्तिकं जायते
प्रायेणाधम मध्यमोत्तमगुनाः संसर्गतो देहिनाम् ॥

Santaptaayasi samsthitasya payaso naamaapi na shrooyate
Muktaakaaratayaa tadeva nalineepatrasthitam raajate
Madhye saagarashuktimadhyapatitam tanmouktikam jaayate
Praayenaadhama madhyamottamagunaah samsargato dehinaam 1.66

பள்ளிக்கூடத்தில் படித்தது ஞாபகம் வரட்டும். நீர்நிலைகள் கோடையில் வெயிலில் ஆவியாக மாறி மேலே மேகமாகி மழையாகிறது. அந்த மழை நீர் ஒரு சொட்டு எங்கோ வாயைத்திறந்து காத்திருக்கும் முத்து சிப்பிக்குள் நுழைந்து மூடிக் கொண்டு கடலடியில் பல காலம் கழித்து விலை மதிப்பற்ற முத்தாகிறது. மழைநீர் சாக்கடையை நிரப்பிற்று, கடலில் கலந்து உப்பாகி குடிக்க முடியாமல் போனது. குப்பையோடு கலந்தது. அசுத்தமாயிற்று. ஒரு சொட்டை தவிர. அது தான் முத்தாகி விட்டதே. அது போல் தான் நாம் யாரோடு சேர வேண்டும், நட்பு வேண்டும் என்று சத் சங்கம் பற்றி பர்த்ருஹரி சொல்கிறார். நீ எவரோடு சேர்கிறாய் என்பது நீ முத்தானாயா, சாக்கடையா ? என்பதில் தெரியும். மனிதர்களில் சாக்கடை, முத்து சிப்பி, பிரயோஜனம் இல்லாத உப்பு நீர் இருக்கிறார்களே. ரொம்பவே ஜாஸ்தி. ஜாக்கிரதை.


प्रीणाति यस्सुचरितैः पितरं स पुत्रो
यद्भर्तुरेव हितमिच्छति तत्कलत्रम् ।
तन्मित्रमापदि सुखे च समक्रियं यत्
एतत्त्रयं जगति पुण्यकृतो लभन्ते ॥

Preenaati yah sucharitaih pitaram sa putro
Yadbhartureva hitamichchhati tatkalatram
Tanmitramaapadi sukhe cha samakriyam yat
Etattrayam jagati punyakrito labhante 1.67

ஒரு நல்ல மகன் தனது நல்ல ஒழுக்கம், குணம், பதவிசு, மரியாதை படிப்பு இவற்றால் பெற்றோரை மகிழ்விக்கிறான். ஒரு பெண்மணி தனது கணவனே உலகம் என்று அவனது நலன் ஒன்றே கருத்தில் கொண்டு அவனை மகிழ்விக்கிறாள். அவன் பாக்கியசாலி. ஒரு உற்ற நண்பன் நமது கஷ்டம் சுகம் ரெண்டிலும், உயர்ச்சி தாழ்ச்சி ரெண்டிலுமே கூடவே இருந்து இடுப்பு துணி அவிழும்போது கை தானாகவே அதை இழுத்து முடிச்சு போடும் என்று வள்ளுவர் சொல்வாரே அதுபோல் நாம் அழைக்குமுன்பே வந்து உதவுவான். ஆஹா பூர்வ ஜென்ம நல்ல கர்ம பலனினால் தான் இதுபோன்ற நல்ல மகன், மனைவி நண்பன் நமக்கு கிடைப்பான். (கிருஷ்ணா எனக்கு ஏதோ கொஞ்சம் இது கிடைத்திருக்கிறது நன்றி அப்பா உனக்கு.)

भवन्ति नम्रास्तरव फलोद्गमैः
नवांबुभिर्भूमिविलंबिनो घनाः ।
अनुद्धता सत्पुरुषाः समृद्धिभिः
स्वभाव एवैष परोपकारिणाम् ॥

Bhavanti namraastarava phalodgamaih
Navaambubhirbhoomivilambino ghanaah
Anuddhataah satpurushaah samriddhibhih
Swabhaava evaisha paropakaarinaam 1.70

முற்றின கதிர் தலை சாயும். கனமான குண்டு குண்டு மாம்பழம் உள்ள கிளைகள் கைக்கு எட்டும்படியாக குனியும். சூல் கொண்ட மேகம் தலைக்கு மேலே கை நீட்டினால் இடிக்கிறமாதிரி கிட்டே தெரியும். நிறைய மழை கொடுக்கும். பசுவின் மடி பால் நிறைந்து கால் வரை அது நடக்கமுடியாமல் தடுக்கும்.. இது எதுக்கு சொல்றேன் என்றால் மிகப்பெரிய பரம்பரை செல்வந்தனின் செல்வம் மற்றவர்களுக்கு பயன் பட நிறைய உதவும். மற்றவர்க்கு ஏதாவது உதவுபவன் நிறைய கொடுத்து க்கொண்டே இருப்பான் சேவை செய்வான். (அடாடா, நான் நல்ல விஷயங்களை நிறைய நிறைய இரவும் பகலும் தருகிறேன் அது போலவா? --- என்று யாருமே சொல்லாததால் நானே சொல்லிக் கொள்கிறேன்!!) ராஜா பர்த்ருஹரி எவ்வளவு அழகாக ஒவ்வொன்றும் ஆணி அடித்தால் மாதிரி சொல்கிறார்.


पापान्निवारयति योजयते हिताय
गुह्यं निगूहति गुणान् प्रकटीकरोति ।
आपद्गतं च न जहाति ददाति काले
सन्मित्रलक्षणमिदं प्रवदन्ति सन्तः ॥

Paapaannivaarayati yojayate hitaaya
Guhyam nigoohati gunaan prakateekaroti
Aapadgatam cha na jahaati dadaati kaale
Sanmitralakshanamidam pravadanti santah 1.72

ஞானிகள் என்ன சொல்கிறார்கள்.நம்மை பாபங்கள் செய்யாமல் தடுக்கிறார்கள். எது சரியோ அதை செய்ய உதவுகிறார்கள். சொல்லிக் கொடுக்கிறார்கள். இது சரியான வழி அப்படியே நட, அப்படியே செய், பேசு என்று வழிகாட்டுகிறார்கள். இப்படி இருந்தால் இப்போது கொள்ளைக்கு, வரி ஏய்ப்புக்கு ஏமாற்ற உதவிய கணக்கனும் , வக்கீலும் மாட்டிக்கொண்டு சந்தி சிரிப்பார்களா? மசால் வடைக்கு ஆசைப்பட்ட எலிகள்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...