Sunday, April 1, 2018

VEDIC PANCHANGAM



ஒரு  அத்யாவசிய பஞ்சாங்கம்.... J.K SIVAN

                                                         
பதிமூன்று வருஷங்களாக அன்பர் வேதிக் ரவி அவர்கள், ஸ்ரீ புவனேஸ்வரி வேதிக் சென்டர் (SRI  BHUVANESWARI  VEDIC  CENTRE) என்ற நிறுவனத்தின் மூலம் எத்தனையோ நல்ல காரியங்களை சப்தமில்லாமல் செய்து

வருகிறார். எல்லோருக்கும் தெரிந்த பெயர் வேதிக் ரவி. சுருக்கமான பெயர் போல் குறுகிய தேகம் உடைய உயர்ந்த மனிதர்.

அவர்களது பஞ்சாங்கம் நான் விரும்பி உபயோகிப்பது. சகல வித தாத்தா பாட்டி சொல்லித்தருகிற சம்பிரதாய சமாச்சாரங்களும்  அதில் உண்டு. நிறைய வீடுகளில் இப்போது தாத்தா பாட்டிகளோ பெரியவர்களோ இல்லாத போது  இந்த பஞ்சாங்கம் அந்த குறையை தீர்க்கிறது.

முதலில் பஞ்சாங்கத்தை பற்றி சில வார்த்தைகள் சொல்கிறேன்.

ஹிந்துக்களாகிய நமக்கு  பஞ்சாங்கம் ஒரு இன்றியமையாத கையேடு. வரப்பிரசாதம்.  நமது உலக வாழ்க்கை பிறப்பது முதல், இறப்பது வரை, அதற்குப் பின்னும் நாம் அனுசரிக்க வேண்டிய நியதிகளை,   நேம நியமங்
களை,  சொல்லித்தருவது பஞ்சாங்கம். நமது வாழ்க்கையே இந்த பஞ்ச பூத  இயற்கையால் அமைவது, அதனுடன் வளர்ந்து மாறுவது, அதனிலே ஐக்யமாவது.எனவே இயற்கையை அறிந்துகொள்ள பஞ்சாங்கம் அவசியம்.

பஞ்சாங்கம் ஒரு காலம்  நேரம்  காட்டும் அட்டவணை மட்டும் அல்ல. நமது செய்கைகளை, எண்ணங்களை நேர் படுத்த சீராக்க  உதவும் ஒரு அத்யாவசிய கருவி.  சம்பிரதாயங்கள்,  முக்கிய நாட்கள்,  கிரஹணம், அமாவாசை, பௌர்ணமி, திதி, நக்ஷத்திரங்கள்  மாதங்கள் தவிர  பண்டிகை, கர்மானுஷ்டான மந்த்ரங்கள், சுப முகூர்த்த நேரங்கள் அறிய  உதவும் ஒரு வசதியை   இப்பஞ்சாங்கங்கள் அளிக்கிறது.  எல்லாம் சொல்லித்தரும்  வீட்டில் டாக்டரை  தேடும்  தொந்தரவு பண்ணாத சாப்பிடாத பேசாத  அதிகாரம் பண்ணாத  பாட்டி தாத்தாக்கள் இந்த பஞ்சாங்கங்கள்.

அந்தக்காலத்தில் பஞ்சாங்கம் எல்லார் வீட்டிலும் இருக்காது. பெரியவர்கள் மனக்கணக்கில் இந்த நாள் இந்த தேதி, இந்த திதி, நக்ஷத்ரம் மாசம், என்று சொல்வதை வைத்து தான் அனுஷ்டானங்கள் நடந்தது.  பஞ்சாங்க பிராமணர்கள் என்று சிலர் வீடு வீடாக வந்து என்னென்ன தேதிகளில் எந்தெந்த  விசேஷம் என்று  குறித்துக் கொள்ள சொல்வார்கள். சுவற்றில் எழுதி வைத்துக் கொள்வோம்.டயரி என்றால் என்ன என்று தெரியாத காலம்..

 நமது தேசம் முழுதும் ஒவ்வொரு மூலை முடுக்கிலும்  இந்த பஞ்சாங்கம் பயன்படுகிறது. பஞ்சாங்கங்கள் பல சாஸ்த்ர விற்பன்னர்களால் கணிக்கப்பட்டு பல குடும்பங்கள் அவரவர் விரும்பும் பஞ்சாங்கங்களை உபயோகிக்கிறார்கள்.

பஞ்சாங்கம் கணிப்பது எளிதல்ல,  மிகவும் சூக்ஷ்மமாக  கவனமாக கணிக்கவேண்டியது. கிரஹங்களின் சுழற்சி, அவற்றின் சுற்று, பிரயாணம், அதற்கான காலம், சூரிய உதயம்,  அஸ்தமன நேரங்கள் எல்லாம் ஒரு வருஷத்துக்கு முன்கூட்டியே  சரியாக கணக்கில் கொண்டுவரும்  கணித நூல்.   பண்டைய ரிஷிகள் ஆராய்ந்து வகுத்த வழிமுறையில் தொடர்ந்து கண்காணித்து அறிவிக்கும் அற்புத படைப்பு.

விஸ்வ  விஜய பஞ்சாங்கம் என்பது நூறு வருஷங்களுக்கு கணிக்கப்படுவது. இதில் சூரிய சித்தாந்தம், கிரஹ லாகவ கணக்குகள் உண்டு. புரியாத நமக்கு தலை சுற்றும் கணக்குகள்.

சந்திரனின் அசைவு  நமது பஞ்சாங்கத்தில் முக்கியமான ஒரு அம்சம். எல்லா கிரஹங்களையும் விட சந்திரன் ஒருவனே வேகமாக சுழல்பவன்.  எனவே   பஞ்சாங்கத்தின் திதி, நக்ஷத்ரம், ராசி, யோகம், கரணம், ஆகியவை சந்திரனின் சுழற்சியை அடிப்படியாக கொண்டவை.

''பஞ்ச அங்கம்'' என்பதே  மேலே சொன்ன  ஐந்து முக்கிய  அம்சங்களை கொண்ட சேர்க்கை.  சூரிய சந்திர நிலைகளை நிலையான துவக்கப்புள்ளி (சித்திரை அல்லது அஸ்வினி நட்சத்திர) பின்னணியில் பகுத்து திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என மிகமுக்கியமான ஐந்து விஷயங்களையும், இதர பஞ்சாதி(புத, சுக்கிர, மங்கள, குரு, சனி) கிரகங்கள் மற்றும் ராகு, கேது (சந்திர புவிவட்ட பாதையில் ஏற்படும் வெட்டுப்புள்ளி) ஆகிய தகவல்கள் வானசாஸ்திர அடிப்படையில் கணிப்பதாகும். ஜோசியர்களுக்கு இது மிகவும் உதவுகிறது.

நமது தேசத்தில்  பஞ்சாங்கம்  மூன்று முறைகளில் கணிக்கப்படுகிறது. சூரிய சித்தாந்தம், ஆரிய சித்தாந்தம், திருக்கணித சித்தாந்தம் என்பதாகும்.   முற்காலத்தில் ஏறக்குறைய   18க்கும் மேற்பட்ட சித்தாந்தங்கள் , அவற்றுக்கான  கணிதமுறைகள் இருந்துள்ளன. பெரும்பாலோர் பின்பற்றுவது திருக்  கணித பஞ்சாங்கம்.

இப்போது,  நவீன தொலைநோக்கி துணையுடன் கண்களால் பார்த்து மற்றும் தொலையுணர் விஞ்ஞான கருவிகள் கொண்டு சந்திர கிரகநிலையை மிக துல்லியமாக கணித்தும், அதன் அடிப்படையில் உயரிய சிக்கலான கணித சூத்திரங்கள்(Lunar theory - modern numerical theories) உருவாக்கியும், திருத்தங்கள் (Ephemeride Lunaire Parisienne) செய்தும் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் பெறப்படும் வானியல் துறையினரின் புள்ளிவிபரங்கள் கொண்டு திருக்கணித பஞ்சாங்கம் உருவாக்கப்படுகிறது

இஸ்ரோ , நாஸா அமைப்புகள் தங்களின் வான்வெளி திட்டங்களுக்கு பயன்படுத்தும் மிகதுல்லியமான வானியல் தகவல்களை வணிகஅடிப்படையில் வெளியிடுகிறது. இப்படி வெளியிடப்படும் துல்லியமான தகவல்கள் அடிப்படையில்தான் திருக்கணிதமுறை பஞ்சாங்கம் உருவாக்கப்படுகிறது. இப்படி உருவாகும் பஞ்சாங்கம் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது.

இந்திய அரசின் வான்நிலையியல் துறையின்கீழ் இயங்கும் வானியல் கிரக நிலை கண்காணிப்பு பிரிவு கொல்கத்தா அருகில் உள்ளது இங்கிருந்து பெறப்படும் தகவல்கள் முறைப்படி அரசு அனுமதிப்பெற்று திருக்கணித பஞ்சாங்கம் கணிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த துறையினரும் லஹரி அயனாம்ஸ நிலைக்கொண்டு ராஷ்டீரிய பஞ்சாங்கம் என்கிற மிகதுல்லியமான திருக்கணித பஞ்சாங்கத்தை வெளியிடுகின்றனர்.  மங்களாயன்,  சந்திராயன் விண்வெளிக்கலத்தை மிகதுல்லியமாக சந்திரனுக்கு அனுப்ப பயன்பட்ட புள்ளிவிபரங்களும் திருக்கணிதபஞ்சாங்கத்திற்கு வழங்கப்படும் புள்ளிவிபரங்களும் ஒன்றேயாகும்!

திருக்கணித முறையில் அயனம் வேண்டுமானால் வேறுபடலாம் ஆனால் திதி, நக்ஷத்ரம், யோகம் எக்காரணம் கொண்டும் மாறாது.  இந்திய விண்வெளித்துறை மற்றும் நாஸாவின் அமாவாசை முடிவு நேரமும் திருக்கணித அமாவாசை முடிவு நேரமும் ஒன்றாக இருக்கும்.  இது கிரகணத்தின் பொழுது கண்ணுக்கு நன்றாக தெரியும் வானியல் நிகழ்வு.

அண்டை மாநிலங்களான ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகியவற்றில் நூறாண்டுகளாக திருக்கணிதமுறையே பின்பற்றப்படுகிறது. பிறந்த ஜாதகம் கணிப்பதிலும் இவர்கள் திருக்கணிதமுறைய மட்டுமே கடைபிடிக்கிறார்கள்.

திருக்கணித முறையில் சந்திரன் கிரகநிலை மட்டும் கணக்கிட 100க்கும் மேற்பட்ட சூத்திரங்கள், திருத்தங்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் 10 ஆண்டுக்கு ஒருமுறை வானியல் விஞ்ஞானிகள் கூடி கூடுதல் திருத்தங்களை விவாதித்து ஏற்றுக்கொள்கிறார்கள். (இது போன்ற எந்த வித ஏற்பாடும் வாக்கிய முறை பஞ்சாங்கத்தில் இல்லை 400 வருடங்களாக வாக்கியத்தில் திருத்தமே இல்லை !)

ஆராய்ச்சியாளர்களால்  அங்கீகரிக்கப்பட்டு கணிக்கப்பட்ட  லஹரி அயனாம்சத்தின்  அடிப்படையில் அமையும் திருக்கணித பஞ்சாங்கம் சரியானது எனலாம்.  லஹரி அயனாம்ஸம் சர்வதேச விஞ்ஞானிகளால் விவாதிக்கப்பட்டது, அறிவியல் சஞ்சிகைகளால்  ஆமோதிக்கப்பட்டது. சூரிய சித்தாந்த அயனாம்ஸ கொள்கை வேறு, நவீன சித்தாந்த அயனாம்ஸ கொள்கை வேறு  என்பதால் அறிவியல் முறைப்படி கூறப்படுவதை ஏற்றுக்கொள்வது நியாயமே.  மேலும் அயனம்  என்பது குறிப்பிட்ட அளவிற்கு பின்னர் குறையும் மற்றும் அயனம் ஏற்றம் மட்டுமே இருக்கும் என்ற சில வேறுபட்ட கருத்துக்கள் இருக்கத்தான் செய்கிறது. எனவே வானியல் அறிவியலாளர்களின் முடிவை  ஏற்போம்.  விவரமாக அதற்குள் நாம் போகவேண்டாம்.

இப்போதைய நிலையில் நமக்கு தேவையானது  அம்மாவாசை தர்ப்பண நாட்கள்,மந்திரங்கள், ஸ்ராத்த திதி, கிரஹண, மஹாளய தர்ப்பண கால நேரம், மந்த்ரங்கள், தவிர சுப முஹூர்த்தங்கள், கல்யாண காரியங்களுக்கு நல்ல நாட்கள், பண்டிகைகள், ஜாதகத்திற்கு  தேவையான விபரங்கள்,  யஜுர் உபா கர்மா, சாம, ரிக், யஜுர் வேத வேதங்களுக்கு ஏற்ப. போனஸாக இவர்கள் பஞ்சாங்கத்தில் சில பூஜா அஷ்டோத்ர, நாமாவளி ஸ்லோகங்களும் இருக்கிறதே.  போதாதற்கு  தேவைப்பட்டால் அபர  காரிய விபரங்களும் நிறைய இருக்கிறதே. உடனே குடும்ப வாத்யாரைத் தேடி ஓடவேண்டாமே.... நல்ல கார்யம் செயகிறார்கள். வாழ்க வளமுடன்  திரு வேதிக் ரவியும் அவர் நிறுவனமும், அந்த அமைப்பின்  நிர்வாகிகளும்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...