புரிய கொஞ்சம் நிதானம் வேண்டும்
J.K. SIVAN
வேதாந்தம் நமக்கு புரிவதில்லை. ஏதோ சொல்வது கொஞ்சம் புரிகிறது போல் இருக்கும். ஆனால் புரியாது. அப்படி புரிந்து கொள்ளும்போது அது அப்படியில்லை, என்று அதுவே மாற்றி சொல்லும். எது உண்மை என்று நம்பினோமோ அது அப்படியில்லை என்று சொன்னால் பிறகு எப்படி அதை புரிந்து கொள்வது என்று தலையை சொரிந்துகொண்டு போதும் வேதாந்தம் என்று ஓடிவிடுகிறோம். என்னய்யா இது மாற்றி மாற்றி சொன்னால் எப்படி புரியும்?
ரொம்ப சாதாரணமான ரொம்ப யோசிக்காதவர்களுக்கு இப்படி தோன்றுவதில் தப்பில்லை, ஆச்சர்யமில்லை. அதற்காக கீதை போன்ற வேதாந்த நூல்களை குறை சொல்லவேண்டாம்.
அத்வைதத்தில் உலகம் பொய், மாயை என்று சொல்லியிருப்பது பல பேருக்குப் புரிவதில்லை. அதை எதிர்க்கிறார்கள். கண்டனம் பண்ணுகிறார்கள். “இத்தனை ஜீவ-ஜந்துக்களுக்கும் லோகம் தெரிகிறது. அதில் இப்படி ஒரு காரியம் செய்தால் இப்படி விளைவு ஏற்படுகிறது என்று ஏராளமான காரண காரிய விதிகள் இருப்பதால்தான் நாம் அநேக விதமான காரியங்களை செய்யமுடிகிறது. பலனை அடைய முடிகிறது. பொய், மாயை என்றால் எப்படி ஒப்புக்கொள்வது?” என்று கேட்கும் பல குரல்கள் நமக்கு காதில் விழுகிறது.
ஆதிசங்கரர் லோகத்தைப் பொய் ஜகத் மித்யா என்று சொன்னார் என்றால், அது அப்படியே அஸத்யம் என்று சொன்னார் என்று தப்பாக அர்த்தம் பண்ணிக் கொள்வதால்தான் இப்படிப்பட்ட எதிர்ப்பு எழுகிறது.
“இதென்ன வேடிக்கையாயிருக்கிறது! அப்படியானால் லோகம் பொய், ஆனால் அஸத்தியமில்லை என்றா ஆசார்யாள் சொல்லியிருக்கிறார்? இப்படி சொல்வது கொஞ்சம்கூடப்புரியாத விசித்திரமாக இருக்கிறதே!” என்று தோன்றும்.
மஹா பெரியவா விளக்கம் கொடுக்கிறார் கேளுங்கள்:
ஸத்யம்-அஸத்யம்-பொய் என்ற மூன்றைப் பற்றி ஆதி சங்கரரின் அபிப்பிராயத்தை, அவர் செய்திருக்கிற பாகுபாட்டைப் (distinction) பார்க்கலாம்.
ஸத்ய வஸ்து என்றால் அது அவருக்கு ஏகமான ஆத்மா ஒன்றுதான். அதையே தான் பிரம்மம் என்கிறோம். ஒரே ஸத்யமான வஸ்துவைத்தான் ஒரு ஜீவனுக்கு ஆதாரமாக இருக்கிற போது ஆத்மா என்றும், ஸர்வ ஜீவராசிகளுக்கும் ஸர்வ லோகத்துக்கும் ஆதாரமாக இருக்கிறபோது பிரம்மம் என்றும் சொல்வது. எக்காலும் மாறாமல் இருப்பது அது ஒன்றுதான். அதனால் ஸத்யம். உண்மை சாஸ்வதம்.
லோகம் மாறிக்கொண்டேதானே இருக்கிறது? நாம் மாறிக் கொண்டேதானே இருக்கிறாம்? நம் மனஸ், எண்ணங்கள் க்ஷணத்துக்கு க்ஷணம் மாறிக் கொண்டேதானே இருக்கின்றன? அதனால் இவற்றுக்கு ‘ஸத்யம்’ என்ற விளக்கத்தை , பெயரை, லக்ஷணத்தை (definition) ஆதி சங்கரர் நிச்சயம் தரமாட்டார்.
அப்படி என்றால் உலகம் ''அஸத்யம்'' என்பாரா? அப்படியும் சொல்ல மாட்டார். ஸத்யத்துக்கு முன்னாடி ‘அ’ போட்டு ‘அஸத்யம்’ என்று சொன்ன்னல், இது ஸத்யத்துக்கு முற்றிலும் எதிரானது என்றாகிவிடும். அதாவது அடியோடு இல்லை என்று ஆகிவிடும். லோகத்தை இப்படி அடியோடு இல்லாத அஸத்யம் என்று ஆதி சங்கரர் எப்போது சொன்னார், சொல்லவே இல்லை. அதே சமயத்தில் அது ஸத்யமும் அல்ல, சாச்வதமான உண்மையும் அல்ல என்பதால், மித்யை, மித்யை என்றார். மித்யை என்றால் பொய் என்று நாம் எடுத்துக் கொள்கிறோம். உண்மையில் அது சாச்வத ஸத்தியமாகவும் இல்லாமல் அடியோடு அஸத்யமாகவும் இல்லாமலிருக்கிற நடுவாந்தர நிலை.
நம்முடைய ஸ்ரீ ஆசார்யர் ஆதிசங்கரர் ஸத்யத்தை மூன்று விதமாகப் பிரித்திருக்கிறார்..
(1) பாரமார்த்திக ஸத்யம், - சாஸ்வதமான, நிரந்தரமான, ப்ரம்ம ஸ்வரூபம்.
(2) வ்யாவஹாரிக ஸத்யம் - அன்றாட நடைமுறை வாழ்க்கையில் நிஜமாக தோன்றுவது.
(3) ப்ராதிபாஸிக ஸத்யம் - ஒரு தகர டப்பா முடி வெள்ளிபோல் வெயிலில் மின்னுகிறது. வெள்ளியா? தூர வெயிலில் தார் ரோடில் ஜலம் நிறைய ஓடுகிறதே. கானல் நீர்? அது நிஜமா? கயிறு இருட்டில் பாம்பா? இருட்டில் மரம் பேயா?
ஆகவே மேலே சொன்ன (2) (3) இரண்டுமே உண்மை தெரிகிறவரையில் அது ''நிஜம் '' மாதிரி தோன்றுவது.
அஸத்யம் என்பது இந்த மூன்றிலும் சேராது. அதாவது எப்போதுமே அது நிஜம் இல்லை என்று நன்றாக தெரிவது. குதிரைக்கு கொம்பு இல்லை என்பது போல் சந்தேகமே இல்லாமல் நன்றாக தெரிந்தது.
தகர மூடியில் சூரிய வெளிச்சம் ஏற்பட்டது. சூரிய ஒளி பிரதிபலிப்பால் அது வெள்ளி மாதிரித் தெரிந்தது. ஆனாலும் வெள்ளியில்லை. வெள்ளி மாதிரி இருந்ததால் நாம் வெள்ளி தான், நிஜம் தான் என்று நம்பினோம். கயிறு இருட்டில் பாம்பு மாதிரி காற்றில் ஆடி நெளிவது போல் தோன்றி நாம் நம்பியது. இது தான் பிராதிபாஸிகம். பாசி: பிரகாசம், பிரதி: பிம்பம்:
அதுபோல தான் உலகம் என்பது பிரம்மத்தின் சைதன்யத்தால் ஸத்யம் மாதிரி மினுமினுக்கிறது.
பிரம்மம் லோகம் மாதிரித் தோன்றுகிறது. இந்த லோகமே பரம ஸத்யம் என்று ஏமாந்து போகிறோம். இப்படி இன்னொன்று மாதிரித் தோன்றி ஏமாற்றுவதற்குத்தான் மாயா சக்தி என்று பெயர்.
நமக்கு ஞானம் வந்துவிட்டால் என்ன ஆகிறது? ‘பிரம்மத்தைத் தவிர இரண்டாவதாக எதுவுமே இல்லை. அதைத் தவிர இந்த லோகமும் இல்லை. இது அது மாயையால் போட்டுக்கொண்ட வேஷம்தான்’ என்று தெரிந்து விடுகிறது. கயிறு கிட்டே போனால் அது பாம்பு என்று நினைத்த எண்ணம் ஓடிப்போய் விடுகிற மாதிரி, தகர மூடியையோ, கிளிஞ்சலையோ எடுக்கப் போய் அது வெள்ளியில்லை என்று தெரிந்து கொள்கிற மாதிரி, ஞான நிலையில் அதற்கு முன்னாடி லோகம் நிஜம் என்று நினைத்தது ஓட்டம் பிடிக்கிறது.
ஞானம் வந்துவிட்டால் லோகம் நிஜம் என்று நினைத்தபோது நமக்கு ஏற்பட்ட அத்தனை எண்ணமுமே நின்று போய்விடுகிறது. அதாவது, அனேக விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டதால் விவகார ஸத்யம் என்று நாம் ஒத்துக் கொண்ட லோகம், அத்வைதமாக ஸமாதி நிலையில் இருக்கிற போது பிராதிபாஸிகம் மாதிரியே மறைந்து விடுகிறது. ஞானியைத் தவிர மற்ற அத்தனை பேருக்கும் அது காரியம்-விளைவு என்கிற விதிகளோடு தெரிந்து கொண்டு, அதிலே அவர்கள் பல தினுஸான பிரயத்தனங்களைப் பண்ண முடிவதால், லோகத்தை வ்யாவஹாரிக ஸத்யம் என்று ஒரு Status கொடுத்து வைத்திருக்கிறார் ஆதி சங்கரர்.
“ஸத்யதரம்” என்று ஒன்று இருக்கிறது. அதுவே எப்போதும் ஸத்தியமான பிரம்மம்.ஆகவே ஸத்தியமானது ஒன்று, அஸத்யம் ஒன்று. பொய் இரண்டு உள்ளன.
ஸத்தியமாவது பிரம்மம் என்கிற ஸ்வாமி, ஈச்வரன் ஒரு நாளும் இல்லையென்று போகமாட்டார். அவர் ஸத்யம்
அஸத்யம் குதிரை கொம்பு மாதிரி. நிஜம் இல்லை என்று நிச்சயமாக தெரியும்.
சில வஸ்துக்கள் ஒருகாலத்தில் இல்லாமல் போகும்; பிந்தி வரும்; இப்பொழுது இல்லாமல் அப்புறம் உண்டாகும். அவைகள் எப்பொழுதாவது இல்லை என்ற ஒரு காலம் இருக்கும். எப்பொழுதுமே இருப்பது ஸத்யம். அப்படியிருப்பவர் பரமாத்மா. அஸத்யம் ஒரு நாளும் இல்லாதது.
நடுவில் உள்ள இரண்டு விதமான மித்யைகள் ஸத்திய அம்சம் கொஞ்சம், அஸத்திய அம்சம் கொஞ்சம் கலந்து உள்ளவை. அவைதான் பொய். வியாவஹாரிகம், பிராதிபாஸிகம் என்பவை இரண்டும் மித்யை அல்லது பொய். அவை ஒரு காலத்தில் மட்டும் இருக்கிறாற்போல இருந்து இன்னொரு காலத்தில் இல்லாமல் போய்விடுபவை.
நாமெல்லாம் எப்படிப்பட்டவர்கள்? நம் தேஹம் கொஞ்ச நாளுக்கு முன்பு இல்லை, பின்பும் இது இல்லாமல்தான் போகப்போகிறது. ஸத்யம் இல்லை. கொஞ்சகாலம் இருப்பதால் அஸத்தியமும் இல்லை. இந்த தேகம் முழு ஸத்தியமாக இருந்தால் எப்போதுமே அழியாமல் இருக்க வேண்டும். அப்படி இல்லையே . இது “சுக்தி ரூப்யம்” போன்றது. அதாவது வெயில் அடிக்கும்போது கிளிஞ்சலில் (சுக்தி) வெள்ளி (ரூப்யம்) தோன்றுவதைப் போன்றது. ரூப்யம் என்பது வெள்ளி. அதிலிருந்து ரூபாய் (Rupee) என்ற வார்த்தை வந்தது. கிளிஞ்சலில் வெள்ளி தோன்றுவது ஸத்தியமா? அஸத்தியமா?
கிளிஞ்சல் மினுமினு என்று மின்னும்போது ஒரு நிமிஷமாவது அதிலே வெள்ளி இருக்கிறதென்று நிஜமாக தோன்றுகிறது. ஆகவே “இருக்கிறது” ''நிஜம் தான்'' என்னும் அம்சம் இதில் கொஞ்சம் கலக்கிறது. அதனால் அஸத்யம் அல்ல. சரி, ஸத்தியமா என்றால் அதுவும் இல்லை. தேகம் எப்பவும் இருக்க ப்போவதில்லையே.
கயிறு கிளிஞ்சல் என்ற ஸத்தியங்களை ஆதாரமாகக் கொண்டே பாம்பு, வெள்ளி ரூபாய் என்ற தோற்றங்கள் ஏற்பட்டன. அதுபோல இந்த போய் உலகத்துக்கு ஆதாரம் பிரம்மம். லோகத் தோற்றம் போனால் எல்லாம் சூன்யமாகி விடாது. ஆதாரமான பிரம்மம் அப்போதும் ஸத்யமாக இருக்கும். பாம்பு பொய் என்ற எண்ணம் போன பிறகும் கயிறும் தகர டப்பாவும் இன்னும் இருக்கிறதல்லவா ?
ஸத்ய பிரம்மத்தை மித்யலோகம் மாதிரிக் காட்டுவது மாயை. மாயையை “அநிர்வசனீயம்” என்று ஆசார்யாள் சொல்லுவார்கள். “விளக்க வொண்ணாதது” என்று அர்த்தம். அது ஸத்தும் அன்று. அஸத்தும் அன்று. இன்னதென்று சொல்ல முடியாதது; உள்ளதென்றும் இல்லதென்றும் சொல்ல முடியாதது. ஒரு சமயம் தோன்றுகிறது. அப்புறம் ஞானம் வந்துவிட்டால் இல்லாமலும் போகிறது.“பொய்ம்மாயப் பெருங்கடலில்” என்று தமிழில் ஞானிகள் சொல்வது. மாயை என்றால் பொய் என்று அது சொல்லுகிறது. ஸத்தியமும் இல்லாமல் அஸத்தியமும் இல்லாத மூன்றாவது பொருளாக ''இருக்கிறது என்றால் பின்னர் இல்லாமல் போவது'' '' இல்லையென்று சொல்லிவிட்டால் கொஞ்சகாலம் அது இருக்கிறதே என்றும் தோன்றுகிறதே''. அப்படி கொஞ்சம் காலம் இருந்தாலும் மறையக்கூடியது முடிவில் பொய் தானே. அது தான் நமது தேகம்.!
இது பரமாத்வாவைவிட வேறு என்றால், அவருக்கு வேறாக ஏதும் இல்லையாதலால் அப்படிச் சொல்ல முடியாது. பரமாத்மாவேதான் மாயை என்பதும் ஸரியல்ல. ஞானம் வந்தால் மாயை போய்விடுகிறதே! பெளத்தர்கள் சொல்லுகிற சூனியமும் அன்று. பரமார்த்திக ஸத்தியமுமன்று. அதனால்தான் விளக்கவொண்ணாத ‘அநிர்வசனீயம்’ என்று சொல்லுகிறார்கள்.
கயிறு இருந்தபோது பாம்பு இல்லை. கயிறு அதிஷ்டானம். பாம்பு ஆரோப்யம். அதிஷ்டானம் நமக்கு ஸாக்ஷாத்காரமானால் ஆரோப்யம் போய்விடும். எதில் ஒரு தோற்றத்தை ஏற்றி வைத்திருக்கிறோமோ அது தெரிந்தால், ஏற்றி வைத்திருந்த தோற்றம் போய்விடும். இந்தத் தோற்றமே பிராதிபாஸிக ஸத்யம்.
நாம் அடியோடு எப்பொழுது இல்லாமல் போவோம்? நம்மை எந்த வஸ்துவின்மேல் ஆரோபித்து வைத்திருக்கிறோமோ அது தெரிந்தால், ‘நாம்’ என்பது போய்விடும். ஸூர்ய சந்திராதிகள், பஞ்ச பூதங்கள், பிரபஞ்சம் முதலியவைகளை நாம் எதில் வைத்திருக்கிறோமோ அந்த ஸத்தியமான வஸ்து தெரிந்தால், இந்தப் பிரபஞ்சமெல்லாம் போய்விடும். அப்போது லோகம் பொய் ஆகிறது. நாமும் பொய்யாகிறோம். இதுதான் ஆசார்யாள் சொன்னது.
“விவகார தசையில் லோகம் நிஜமே; ஞான தசையில் அது மறைந்துவிடும்” என்றார். இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாததாலேயே, ‘கண்ணுக்குத் தெரிகிற – காரிய, காரணச் சட்டத்துக்குக் கட்டுப்பட்ட – லோகத்தை அவர் எப்படிப் பொய் என்று சொல்லலாம்?’ என்று சண்டைக்கு வருகிறார்கள். அடியோடு புளுகாக உள்ள அஸத்யமாகவும் இல்லாமல், முழுக்க நிஜமாக இருக்கிற ஸத்யமாகவும் இல்லாமல், இரண்டும் கலந்திருக்கிற விவகார ஸத்யமாகவே லோகத்தை அவர் வைத்து, இதற்கே மித்யை அல்லது பொய் என்று பேரைக் கொடுத்தார் என்று புரிந்து கொண்டால் சண்டை வராது.
No comments:
Post a Comment