என் தாய் வழி முன்னோர் --J.K. SIVAN
ஸ்ரீ ராம அனுக்ரஹம்
நாடு நகரம் கிராமம் எல்லாமே இப்போது மாறிவிட்டது. மாறுதல் என்பது காலப்போக்கில் தானாகவே நேர்வது. தவிர்க்கமுடியாதது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கையின் செயல். '' Old order changes yielding place to new'' என்பதும் இது பற்றியே தான் வெள்ளைக்கார அற்புத கவிஞன் டென்னிஸன் சொன்னது.
இறைவன் நமக்கு அளித்த ஒரு பரிசு ஞாபக சக்தி. பழைய விஷயங்களை அசை போடும்போது ஏற்படுகிற பிரம்மானந்தம் எதிர் கால சிந்தனையில் ஆழ்ந்து நாம் கட்டும் சீட்டுக்கட்டு மாளிகைகளை விட எத்தனையோ மடங்கு சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் எதிர்காலம் நிகழ் காலமாக மாறி அதுவும் ''நிகழ்ந்தால்'' மட்டுமே அந்த சுகம் அநுபவத்தில் சேரும்.
கடந்த காலம் என்பது அசைக்க முடியாத பெரும் பாறைகளால் கட்டப்பட்ட கோபுரங்கள். அவற்றின் நிழலில் நாம் காணும் இன்பம் ஈடிணையற்றது. என்றும் பசுமை கொண்டவை அவை. மாற்றம் என்பது அவற்றின் அருகே செல்ல முடியாது. அவை ''நடந்து முடிந்தவை'' இனி அவற்றை எதுவும் எவரும் தொடக்கூட முடியாது. மாற்ற முயல்வதோ அவற்றை சிதைப்பதற்கோ வழி கிடையாது. என்னே இறைவன் கருணை!.
எதிர்கால கனவுகள் ஏமாற்றத்தைத் தரலாம். பழைமை நினைவுகளில் எதிர்பார்ப்பு இல்லை. ''ஆஹா இது இப்படி நடந்திருக்கலாமே'' என்று அங்கலாய்க்க அங்கு வசதி இல்லையே. இப்படித்தான் இருந்தார்கள் நம் முன்னோர், இப்படித்தான் வாழ்ந்தார்கள் என்று அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள உதவும் கருவூலம். ''சரித்திரத்தில் எப்போதும் என்றும், '' ஒருவேளை, ஒருக்கால், இப்படி ஆகியிருந்தால் '' என்ற ஹேஷ்ய வார்த்தைகள் இடம்பெற முடியாது. There are no ''ifs'' and ''buts'' in history. It thus happened and so unalterable .
ரெட்டைப்பல்லவி தோடி சீதாராம அய்யரின் அடகு வைக்கப்பட்ட தோடி ராகம் மீட்கப்பட்டது அறிந்தோம். தஞ்சாவூர் சிவாஜி மஹா ராஜாவுக்கு நன்றி. வெள்ளைக்கார கலெக்டருக்கு ஒரு ''ஜே''. அவர்களால் அல்லவோ அய்யரிடம் மீண்டும் அவரது பிரத்யேக, பிரதான '' தோடி என்கிற சொத்து'' திரும்ப வந்தது.
சீதாராமய்யர் மனைவி வழி குடும்பம் (வேட்டகம் - என்பது வேற்றகம் ) திருவையாற்றுக்கு கிழக்கே ரெண்டு மைல் (கி.மீ. நடைமுறையில் வராத காலம்) தூரத்தில் இருக்கும் கார்குடியில் இருந்ததால் நடந்து போகும்போது வழயில் சங்கீத திரி மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகப்ரம்மம் -- தியாகராஜ சுவாமிகள்-- வாழ்ந்த வீட்டை கடந்து தான் போகவேண்டும்.
அவர் வீட்டைக் கடக்கும்போது எப்போதும் தியாகையர்வாள் வீட்டில் அவர் பாடும் குரல் கேட்டுக்கொண்டே இருக்குமே. அவர் அருமை தெரியாதோர் அவரைப் பரிகசிப்பதும் உண்டு. இது ஒன்றும் அறியாதவர்களின் மனித ஸ்வபாவம் அல்லவா? எத்தனையோ மகான்களை அவர்கள் வாழ் நாளில் நாம் இகழ்கிறோம், புறக்கணிக்கிறோம், தவறாக பேசுகிறோம், பின்னர் வருந்துகிறோம், தியாகராஜ சுவாமிகளுக்கு தோடி சீதாராமய்யரை நன்றாக பரிச்சயம் உண்டு. ஓரிரு சமயங்களில் தான் இயற்றிய கீர்த்தனைகளை தானே நேரில் தஞ்சாவூரில் இருந்த அவர் வீட்டுக்கு வந்து பாடிக்காட்டுவார்.
தஞ்சாவூர் கருத்தட்டாங்குடி பரசுராம அப்பா அக்ரஹாரத்தில் இருந்த தோடி சீதாராமய்யர் கிரஹத்துக்கு தியாகராஜ சுவாமிகள் அப்படித்தான் ஒரு தரம் வந்தார். தியாகராஜ சுவாமிகள் தெலுங்கு பேசும் பிராமணர். அவர் கிருதிகள் தெலுங்கு மொழியில் உள்ளவை.
சங்கீத உலகத்துக்கு தியாகராஜ ஸ்வாமிகள் அளித்த கிருதிகள் விலை மதிப் பில்லா
பொக்கிஷம் என்றால் மிகையாகாது. சீதாராமய்யரும் தெலுங்கு பேசுவார்.
அய்யர் வீட்டுக்கு வந்த சுவாமிகள் தான் இயற்றிய கீர்த்தனைகளை பாடிக்காட்டினார்.
''அண்ணா காரு, மீரு பெத்தலு, இதி ஏமி பாட? ஈ கீர்த்தனமுலு அந்த ஆடவாள்ளு பாடேதி; நாக்கு எந்துகு? நா செவிக்கு பட்டது போண்டி'' என்று விளையாட்டாக கூட சொல்லியிருக்கிறார். (தியாகராஜ அண்ணா, நீங்கள் பெரியவா, இதெல்லாம் என்ன பாட்டு, இந்த கீர்த்தனைகளை எல்லாம் பெண் பிள்ளைகள் பாடறதுக்கு தான் பொருத்தம். எனக்கு இந்த கீர்த்தனமெல்லாம் எதற்கு? நான் கேட்டதே போதும் நீங்க போய்ட்டுவாங்கோ'' என்றிருக்கிறார் சீதாராமய்யர்)
அதற்கு தியாகராஜ ஸ்வாமிகள் '' அய்யர்வாள், நீர் ஒரு மஹா வித்வான். ரெட்டைபல்லவி பாடறவர். நீங்க சொல்றது சரிதான். உம்முடைய தோடி ராகத்தில் நான் சொக்கிப்போனது உண்டு. உமது தோடி ராகத்தைக் கேட்டே நான் அநேக கீர்த்தனங்கள் பண்ணியிருக்கி
றேன்'' என்று சிரித்துக்கொண்டே சொல்வாராம்.
ஒரு முறை இவ்வாறு அய்யர் கார்குடி செல்லும்போது வழியில் தியாகையர்வாள் வீட்டு வாசலில் சிலையாக நின்று விட்டார். காலை நேரம் அப்போது. சுவாமிகள் உள்ளே ஏகாந்தமாய் காலை 6 மணி நேர அளவில் சுகமாக பிலஹரி ராகத்தை அனுபவித்து ஆலாபனை பண்ணிக்கொண்டிருந்தார். சுவாமிகளின் கல்பனா ஸ்வரங்கள் சீதாராமய்யரை ஈர்த்து வாசலிலே அப்படியே நின்று விட்டார். உள்ளே ''கனு கொண்டினே ஸ்ரீ ராமுடு ...'' என்ற பல்லவி எடுப்பு பஹு விஸ்தாரமாக ஸ்வரத்துடன் சௌக மத்யம காலத்தில் நிரவல் உத்சாகமாக தேனின் சுவைக்கும் மேலாக காற்றில் கலந்து அய்யர் செவிகள் நிரம்பி இனித்தன. புளகாங்கிதம் தாங்க முடியவில்லை சீதாராமய்யருக்கு. ஆச்சர்யமும் பக்தியும் போட்டி போட்டுக்கொண்டு அவரை ஆட்டிப் படைத்தன. எங்கள் தாய்வழி குடும்பத்துக்கே, ராம பக்தி குடும்ப சொத்தல்லவா? விடுவிடுவென்று தியாகராஜ ஸ்வாமிகள் வீட்டுக்குள் புகுந்தார். சுவாமிகள் வீட்டுக்கதவு தாள் போடாமல் திறந்து தான் இருந்தது.
உள்ளே பூஜா க்ரஹத்தில் தீபம் எரிந்தது. ஸ்ரீ சீதாசமேத ராம லக்ஷ்மண விக்ரஹம். அதற்கு முன்னால் அமர்ந்துகொண்டு கையில் தம்புரா சுருதி மீட்ட கண்களை மூடிக்கொண்டு தலையை ஆட்டி பாடி அதை தானே ரசித்தவாறு ஆனந்த லோகத்தில் '' ராம குடும்பத்தோடு'' லயித்து பக்தி பரவசத்தில் ஆழ்ந்திருந்தார் சுவாமிகள். அவருக்கு முன்னாள் சென்று இடுப்பின் மேல் அங்க வஸ்த்ரத்தை வரிந்து கட்டிக்கொண்டு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணினார். ''
''அண்ணா ஸ்ரீ அண்ணா'' ஸ்ரீ ராம சரணம் ராம சரணம் '' நான் வேடிக்கைக்கு அன்னிக்கி ஏதோ சொன்னேன். அபச்சாரம் மஹா பாபம் பண்ணிட்டேன். மன்னிக்கணும் என்று அவர் கால்களைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார். உருகிவிட்டார். சுவாமிகள் தம்பூரைக் கீழே வைத்துவிட்டு குனிந்து அய்யரைத்தூக்கித் தழுவிகொண்டு ''
''சீதாராமா, உன் ஞானம், உன் பாட்டுக்கு முன்னாலே என் ஞானம், பாட்டு எம்மாத்ரம். நீ கனம் கணபதி சாஸ்திரி பிள்ளை. ரெட்டைப் பல்லவி தோடி சீதாராமன்'' என்று எளிமையாக பதிலளித்தார்.
''சுவாமி, அந்த எண்ணம் இன்னியோடு போயாச்சு. முதல்லே அலட்சியமா இருந்துட்டேன். அகம்பாவம் என்னை தின்னுடுத்து. என்னமோ பொம்மனாட்டி கிருதி பாடுறீர் என்று தப்பா எடை போட்டுட்டேன். அப்பாப்பா, இன்னிக்கு நான் கேட்ட அந்த பிலஹரி ராக விஸ்தாரம், ஸ்வரம், பல்லவி எடுப்பு முடிப்பு, இதெல்லாம் என்னை கிடுகிடுக்க வச்சிடுத்து. ஸ்ரீ வைகுண்டத்தில் கொண்டு நிக்க வச்சிடுத்து. என் கர்வத்தை இன்னியோடு பறிகொடுத்துட்டேன்''
''சீதாராமா, ராகம், பல்லவி பாடறதெல்லாம் உசந்தது தான். அப்படி தான், அது தான் சம்பிரதாயமாக நம்முடைய முன்னோர்கள் பாடினார்கள். என்னமோ ஸ்ரீ ராமன் பெயரையும், கதையையும் பின்னி அதை வச்சு பல கிருதிகளாக பல பல ராகங்களில் பாடி வைத்தால் பின்னாலே வருபவர்களுக்கு அடையாளம் காட்டும். ராகங்களுடைய உருவம் மாறாமல் இருக்க இடமுண்டே'' என்று எனக்கு தோணித்து . அதனாலே இப்படி கிருதி பண்ணி ராகம் போட்டு வச்சிண்டு வரேன்.'' என்று அந்த சங்கீத தெய்வம் தியாகராஜ ஸ்வாமிகள் அமைதியாக சொன்னார்
''சுவாமி, இது சத்யம். நீங்க சொன்னது பரம சத்யம். ராகம் பல்லவி எல்லாம் எங்களோடு போய்விடும். தாங்கள் எழுதுகிற கீர்த்தனங்கள் தான் என்னிக்கும் சாஸ்வதமாக நிற்கும். எனக்கும் அந்த ஸ்ரீராமன் அனுக்ரஹத்தில் சிறிது கொடுங்கள்''
'தியாகராஜ சுவாமிகள் சிரித்தார். ''அப்பா சீதாராமா, நீயே அந்த ராமன். உனக்கு அந்த ராமன் அனுக்ரஹிப்பார். இந்தா இட்டுக்கோ '' தியாகராஜ சுவாமிகள் கொடுத்த விபூதியை நெற்றியில் இட்டுக்கொண்டார் சீதாராமய்யர்.
உடனே காவிரி சென்று ஸ்நானம் அனுஷ்டானம் முடிந்து திருவையாறு பிரணதார்த்தி ஹரனை தரிசித்துவிட்டு தியாகராஜ சுவாமிகள் இல்லத்தில் அன்று சுவாமிகள் விருந்தளிக்க அவர்கள் இருவரும் ஸ்ரீ ராமப்ரசாதத்தை உண்டு மகிழ்ந்து இருந்தார்கள். மறுநாள் முதலே சீதாராமய்யருக்கு சுவாமிகள் கீர்த்தனமே உபதேசமாயிற்று. அதையே பல்லவியாக பாடிகொண்டே இருப்பார்.
No comments:
Post a Comment