''தோடி மேல் கடன்'' J.K SIVAN
வறுமையும் வளமையும் இரவும் பகலும் போல. வறுமையும் புலமையும் ரெட்டைப் பிறவிகள் என்றும் சொல்லலாம். ஏனெனில் சரஸ்வதி இருக்குமிடத்தில் அவ்வளவாக லட்சுமி குடியிருப்பதில்லை என்று தான் தெரிகிறது. ஏன் அவர்களே சேர்ந்து இருக்க மாட்டேன் என்கிறார்களோ?
ரெட்டைப் பல்லவி தோடி சீதாராமய்யர் குடும்பம் நடத்த முடியாத ச்ரமதசைக்கு தள்ளப்பட்டார். அவருடைய வருமானமான சன்மானங்களை விற்று சாப்பிட்டாகி விட்டதே. இனி என்ன இருக்கிறது நம்மிடம் என்றபோது தான் அவருக்கு சிரிப்பு வந்தது. கையில் வெண்ணையை வைத்துக்கொண்டே அல்லவா நெய்க்கு அழுகிறேன். எது என்னை இத்தனை நாள் ராஜ போகத்தில் வைத்ததோ அந்த வித்தை இப்போதும் உதவட்டும். பூமி சொத்து இருந்தால் அதை அடமானம் வைத்து சாப்பிடுவது எல்லோரும் அறிந்தது. அத்தகைய சொத்து எதுவுமே இல்லையே?
கணம் கிருஷ்ணய்யர் சீதாராமய்யருக்கு தாய் மாமன் வகையில் உறவு. மேலும் சீதாராமய்யர் தகப்பனார் கணம் கணபதி ஸாஸ் திரிகளிடம் கனம் பயின்றவர் வேறு. அவர் உடையார் பாளையம் ஜாமீனில் ஆஸ்தான வித்வான் என்பதும் ஞாபகத்துக்கு வரவே அவர் மூலம் உடையார் பாளையம் ஜமீன்தார் யுவரங்க பூபதியை நேரில் சென்று சந்தித்தால் என்ன?
கிருஷ்ணய்யர் ஜமீன்தாரை சந்திக்க ஏற்பாடு செய்தார். சீதாராமய்யர் ஜமீன்தார் சமூகத்தில் அவரை வணங்கி நின்றார்.
'' இவர் யார் ?'' ஜமீன்தார் க்ரிஷ்ணய்யரிடம் கேட்டார்.
'' தஞ்சாவூர் மகாராஜா சமூக வித்வான்''
'' உங்களுக்கு இவரை எப்படி தெரியும்?''
''என் குருவின் புத்திரன். மேலும் எனக்கு பந்துவும் ஆனவர்''
''இவர் பெயர் என்ன?''
''கன, நய, தேசிக, ஜிகி பிகி, டால், உருகி, கமக , சம்ரதான (பிர்கா ),ரெட்டைப்பல்லவி, தோடி, சோல்ஜர் சீதாராமய்யர்.''
''பேஷ் பேஷ், இவ்வளவு பட்டப்பெயரா!!''
''அவருக்கு அவ்வளவு யோக்யதாம்சம் உண்டு''
ஜமீன்தார் சீதாரமய்யரைப் பார்த்து புன்முறுவலுடன், உமது பேர் கேட்டிருக்கிறேன். உங்களுடைய தகப்பனார் கணபதி சாஸ்திரிகள் தஞ்சாவூர் சமஸ்தான வித்வான் என்றும் அறிந்திருக்கிறேன். உமக்கு என்ன வேண்டும்?''
''எனது க்ரஹத்தில் சீமந்த கல்யாணம் வருகிறது. அதற்கு செலவுக்கு பணம் வேண்டும் ''
''ஒ, அப்படியா, நீங்கள் ராஜ சமூகத்தில் பாடுபவர். இங்கெல்லாம் பாட மாட்டீர்களே. நீங்கள் பாடினால் தருவோம். மேலும் ராஜ சமூகத்தை விட்டு எம்மிடம் வந்து சேர்ந்தால் வேண்டியது தருவோம் ''
சீதாராமய்யர் யோசித்தார். பாடுவதற்கும் மனமில்லை. தஞ்சையிலிருந்து குடி பெயர்ந்து உடையார்பாளையம் வரவும் துணிவில்லையே ! ஒரு கணம் யோசித்தவர், ஒரு தீர்மானத்துக்கு வந்தார்.
ஜமீன்தார் அவர்களே, என்னிடம் உள்ள ஒரே சொத்து.சங்கீத வித்தை..அதையே உங்களிடம் அடகு வைக்கிறேன். அதை ஈடாக வைத்துக் கொண்டு பொருள் கொடுப்பீர்களானால் அது ஒரு பேருபகாரமாக இருக்கும் எனக்கு.''
''அது என்ன வித்தை?''
'' பாடும் பல வித ராகங்களில் தோடி ஒரு மிகப் பிரசித்தமான ராகம். அதை தான் நாம் ராஜசபையில் பாடுவது. அதையே உங்களுக்கு இப்போது அடமானம் வைக்கிறேன்''
''வைத்தால்?''
''எந்த வருஷம், மாதம் தேதியில், சீட்டு எழுதி கொடுத்து வாங்குகிற தொகையை தங்களிடத்தில் திருப்பிக் கொடுத் து சீட்டை மீட்டுக்கொள்கிறேனோ, அதுவரை ராஜாவே பாடச்சொன்னாலும் அந்த ராகத்தை பாடுகிறதில்லை, சத்தியம்''
ஜமீன்தார் யுவரங்க பூபதி இதைக் கேட்டு பெரு மகிழ்ச்சி அடைந்தார்.
''இவர் ஒரு வித்வான். பிரசித்தமானவர். இவருக்கு இந்த தருணத்தில், சீட்டை எழுதி வாங்கிக்கொண்டு தோடி ராகத்தின் மேல் பொருளை கடன் கொடுத்தால், எப்படியும் இந்த சீட்டின் மூலமாக நம்முடைய கீர்த்தி சிவாஜி மகாராஜா சமூகத்தில் ஏறும்'' என்று சந்தோஷப்பட்டு ஒப்புக்கொண்டார்.
சீதாராமய்யர் கடன் சீட்டு எழுதிகொடுக்க, ஜமீன்தார் கேட்ட பணம் கொடுத்தார். மகிழ்ச்சியோடு சீதாராமய்யர் பணத்தோடு தஞ்சாவூர் திரும்பி தனது சீமந்த முகூர்த்தத்தை நன்கு சுற்றம் சூழ செய்துகொண்டார். ஒரு
பெண் குழந்தை பிறந்தது. குலதெய்வம் பெயரில் அலமேலு என்று நாமதேயம்.வைத்து வீட்டில் எல்லோரும் அம்மணி என்று அழைத்தார்கள்.
அந்த அம்மணி தான் என் தாத்தா வசிஷ்ட பாரதிகள் அம்மா
அடுத்து பிறந்த ஆண் குழந்தை வெங்கட்ராமன் என்று பெயர் பெற்றான். 85 வயது ஜோதிடர் ஒருவர் அவர்கள் வீட்டுக்கு வந்தபோது இரு குழந்தைகள் ஜாதகங்களும் காட்டப்பட்டது. ''பையன் மகா வித்வானாக இருப்பான். வயது மட்டும் 20க்கு மேல் இல்லை என்று அவன் ஜாதகத்தை கீழே போட்டார்.
பெண் அம்மணியின் ஜாதகத்தை பார்த்தவர் அதைக் கண்ணில் ஒற்றிக்கொண்டார். இவள் 81 வயது இருப்பாள். இவளால் தான் உங்கள் குடும்பம் உயரப்போகிரது.
எட்டு குழந்தைகள் உண்டு. தங்குவது 3 தான். நடுமகனே நெடு மகனாக சிறந்து இருப்பான்.
அது அப்படியே நடந்தாக கேள்விப்பட்டேன்.
அது சரி, தோடி ராகம் கடனிலிருந்து மீண்டதா? பார்ப்போம்
ATTACHED IS THE PHOTO OF MY MATERNAL GRAND FATHER BRAMMASHRI PURANASAGARAM VASISHTA BHARATHIGAL
.
No comments:
Post a Comment