Wednesday, April 25, 2018

IYARPAGAI



அறுபத்து மூவர்: இயற்பகை நாயனார்
J.K. SIVAN
''உன் மனையாளைத் தா''
சுயவிளம்பரம் இன்றி, தன்னலம் கருதாது, ஏழையா இருந்தாலும் முடிந்தவரை நிறைய தான தர்மம் பண்ணவே சிலர் இந்த உலகில் பிறக்கிறார்கள். அவர்கள் மூச்சே மற்றவர்க்கு எப்போதும் ஏதாவது உதவ வேண்டும் என்பது தான். அப்போதும் சரி இப்போதும் சரி அவர்கள் உள்ளார்கள். அப்போது ஜாஸ்தி, இப்போது எங்கோ எவரோ சிலர்.... மற்றவர்கள் செய்வது வியாபாரம். அது கணக்கில் சேராது இங்கே.
இப்படி ஒரு சிவபக்தர் ஒருகாலத்தில் இருந்தார். சிவபக்தர்கள், சிவனடியார்கள் எதை வேண்டினாலும் ''அடடா இல்லையே'' என்று வருந்தாத ''இல்லையே எனாத இயற்பகைக்கு அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் என்று சுந்தரரால் போற்றப்பட்ட இயற்பகை நாயனார் தான் அவர். சிவனடியார்க்கு சேவை செய்வதையே விரதமாக கொண்டவர்.
இயற்பகை என்பதே அவரது இயல்பான பெயர் இல்லை. உலக இயல்புகளை எதிர்த்தவர்,உலகத்தோடு ஒட்டாதவர், அதனிடம் பகை கொண்டவர் என்றார் அர்த்தத்தில் அவர்க்கு எல்லோரும் பெயர் வைத்து அழைத்தது தான் இயற்பகை என்று அவர் பெயரானது.
இவர் காவிரிப்பூம்பட்டினத்துக்காரர். வைசிய குலம். வியாபாரத்தில் செல்வம் சேர்ந்தது. இருந்தபோதிலும் சிவனை சிவனடியார்கள் ரூபத்தில் வழிபட்டவர்.
சகலமும் அறியும் பரமசிவன் இந்த இயற்பகைநாயனாரின் பெருமை உலகறியவேண்டும் என்று சங்கல்பித்ததில் என்ன ஆச்சர்யம்.
ஒரு நாள் காலை சுள்ளென்று வெயில் கொளுத்த, எங்கிருந்தோ வெகு தூரத்திலிருந்து ஒரு வேதியர் இயற்பகையின் வீட்டுக்கு வந்தார். பட்டை பட்டையாக விபூதியணிந்த அவரை இயற்பகை வரவேற்று ''இந்த சிவனடியாருக்கு பருக இளநீர் அல்லது குளிர்ந்த மோர் கொண்டுவா அம்மா'' என்று மனைவியை அழைக்க அந்த மாது ஒரு தட்டில் சில உணவுப் பண்டங்களும் குளிர்ந்த மோரும் கொண்டுவந்து அந்த வேதியரை வணங்கி எதிரே தட்டில் வைத்தாள் .
திருப்தியாக உணவருந்திய அந்த வேதியர் போகும்போது வணங்கிய இயற்பகை தம்பதியரை வாழ்த்திவிட்டு ஒரு கணம் தயங்குகிறார்.
''ஐயா சிவனடியார், தாங்கள் ஏதோ சொல்ல விரும்புகிறீர்கள் போல் தோன்றுகிறதே?'' என்கிறார் இயற்பகை.
''இயற்பகை வள்ளலே, உமது புகழ் திக்கெட்டும் பரவியுள்ளது. நீங்கள் யார் எதை வேண்டினாலும் உடனே இல்லை என்னாது வழங்குபவர் என்கிறார்களே ஆச்சரியமாக அல்லவா இருக்கிறது?
''இதுவரை அந்த பரமேஸ்வரன் என்னை அவ்வாறு பணிபுரிய வைத்தது நான் செய்த முற் பிறப்பு நல்வினை பயன் என்று தான் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன் ''
''நான் இப்போது உம்மை ஒரு உதவி கேட்கலாம் என்று இருக்கிறேனே, உம்மால் அதை தர முடியுமா என்று யோசிக்கிறேன்.''
''யோசனையே வேண்டாம். தாங்கள் எதை வேண்டினாலும் அடுத்த கணமே அதை அளிக்க சித்தமாயிருக்கிறேன் ஐயா''
''ஓ அப்படியா. எனக்கு வயதாகி விட்டது. உன்னுடன் யாரவது ஒருவர் எனக்கு உதவ வேண்டியிருக்கிறது. இதோ இந்த அம்மாளை, உமது இல்லத்தரசியை என்னோடு அனுப்ப முடியுமா. அவர் எனக்கு பணிவிடை செயது என்னோடு இருக்கலாமே''
''தாயே, இது அந்த பரமேஸ்வரன் கட்டளை அம்மா. நீ என் சொல் தட்டாது இதோ இந்த வேதியருடன் இப்போதே சென்று அவருக்கு பணிவிடை காலமெல்லாம் செய்ய வேண்டும் என்று நான் உனக்கு கட்டளை இடுகிறேன் '' என்று இயற்பகை அடுத்த கணமே தனது மனைவியிடம் கூறி அந்த தெய்வீக பெண்ணும் வேதியரோடு செல்ல ஆயத்தமாகிறார்.
''இயற்பகை நாயனாரே , இன்னொரு விஷயம், நான் இப்படி உனது மனைவியை கூட்டிச் செல்வது ஊரார் சுற்றத்துக்குத் தெரியவேண்டாமா? நீர் எல்லோரிடமும் விஷயத்தை சொல்லி அவர்களையும் என்னிடம் அழைத்துவரும். என் பின்னே அவர்களும் சற்று தூரம் வரவேண்டும். அது தான் நியாயம் '' என்கிறார் வேதியர்.
''ஆஹா அப்படியே என்று இயற்பகை சுற்றத்தார் அனைவரையும் வரவழைத்து அவர்களிடம் தான் செய்ததை சொல்கிறார். இந்த மாதிரி விஷயம் ஊரெங்கும் பரவாதா?
''என்ன ஆயிற்று இந்த இயற்பகைக்கு?'' ஏன் இப்படி புத்தி பேதலித்து தனது மனைவியை யாரோ ஒருபிராமண சந்நியாசிக்கு தானமாக அளித்துவிட்டார்? நாம் இதை வேடிக்கை பார்ப்பதா? உடனே தடுத்து நிறுத்தவேண்டாமா? அந்த வேதியனை உண்டு இல்லை என்று பண்ணிவிட வேண்டாமா?''
உறவினர் கோபம் கொண்டு ஆயுதங்களோடு வந்து விட்டனர். வேதியரை ஏசுகிறார்கள். மிரட்டுகிறார்கள். வேதியர் நடுங்கிவிட்டார். ''என்ன இது நான் தானம் கேட்டு தானே பெற்றேன்'' என்கிறார்வேதியர்.
அந்த மங்கை வேதியரை சமாதானப்படுத்தி ''சிவனடியாரான இறைவனே, நீர் எதற்கும் அஞ்ச வேண்டாம் இயற்பகை வெல்லும்'' என்கிறார்.
இயற்பகைக்கு சினம் மேலிட்டது. சிவனடியார் ஒருவர் வேண்டி அதை தான் மனமுவந்து கொடுத்ததை எப்படி இந்த உறவினர்கள் தடுக்கலாம். அவர்கள் யார் இதற்கு? என்று உள்ளே சென்று தனது ஆயுதங்களோடு வெளியே வந்த இயற்பகை கோபத்தோடு தன்னை எதிர்த்த ஊரார் உறவினர்களை எல்லாம் த்வம்சம் செய்கிறார். பயம் மேலிட்டு இதற்குள் வேதியர் அம்மையாரை அழைத்துக் கொண்டு விடுவிடென்று நடந்து சென்றார்.
''அப்பா இயற்பகை, இந்த ஊரில் உள்ளவர்கள், மற்றும் உன் உறவினர்கள் எனக்கு தீங்கு செய்தாலும் அதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை. எனக்கு அச்சமாக இருக்கிறதே. நீயும் எங்களோடு பாதுகாப்பாக வாயேன்'' என்கிறார் வேதியர்.
''தங்கள் கட்டளை சுவாமி'' என்று இயற்பகை பின் தொடர்கிறார்.
வெகுதூரம் நடந்த இருவரும் சாய்க்காடு (சாயா வனம்) எனும் கிராமம் அடைகிறார்கள். அங்கே ஒரு சிவன் கோவில். சிவனுக்கு அங்கே சாயாவனேஸ்வரர், அமுதேஸ்வரர் என்று பெயர். அம்பாளுக்கு குயிலினும் நன்மொழியம்மை என்ற அற்புத பெயர். ஆதிசேஷனது நாக மணி இங்கே ஒளி வீசியதால் சாயாவனம் என்று பெயர் வந்ததாக சொல்கிறார்கள். ஒரு அருமையானவிஷயம் சொல்கிறேன். காசிக்கு சமமாக தெற்கே ஆறு சிவ ஸ்தலங்கள் உண்டு. அவை திருவெண்காடு என்னும் ஸ்வேதாரண்யம், மாயூரம் என்னும் மயிலாடுதுறை, மத்யார்ஜுனம் என்னும் திருவிடை மருதூர், பஞ்சநதீஸ்வரம் என்னும் திருவையாறு, ஸ்ரீ வாஞ்சியம் என்பவை. அவைகளுக்கு சமமானது இந்த சாயாவனம்.
சீர்காழிக்கு தென் கிழக்கே 12 கி.மீ. தூரத்தில் உள்ள அமைதியான பழைய கிராமம். இயற்கை வளம் நிரம்பிய கிராமம். சாயாவனேஸ்வரர் ஆலயம் கோச்செங்கணான் காலத்து கோவில்.
நமது கதையில் வரும் வேதியர் இயற்பகையின் மனைவியுடன் நடந்து வந்தவர் சாயாவனம் சிவன் கோவில் அருகே வந்தபோது
''அப்பாடா இயற்பகை இனி நீ போகலாம். எனக்கு பயமில்லை'' என்கிறார் வேதியர். அவரை வணங்கிவிட்டு மனைவியின்றி இயற்பகை திரும்புகிறார்.
திடீரென்று உரக்க கத்தினார் அந்த வேதியர். ''நில், இயற்பகை, நீ அதி தீரன், மஹா வீரன். ஆஹா இதுவரை யாரும் செய்யாத செய்ய முடியாது அரிய செயலை செய்தவனே, இயற்பகையே, நீயல்லவோ சிறந்த சிவபக்தன் '' என்று உரக்க சொல்கிறார் அந்த வேதியர்.
வேதியரை வழியனுப்பிட்டு அவர் சொற்படி திரும்பிய இயற்பகை நாயனார் மற்றும் எஞ்சியுள்ளோர் காதுகளில் இந்த சப்தம் விழுந்தது. திகைத்தார்கள். எதற்கு இந்த வேதியர் இப்படி அறை கூவுகிறார்? கோவில் அருகே ஓடி வந்தார்கள் .
கோவில் வாசலில் நின்று கூவிய வேதியரை காணவில்லை, தனது மனைவி மட்டுமே நின்று கொண்டிருப்பதை கண்டார்.
இயற்பகை உள்ளே சென்று சாயாவனேஸ்வரரை தரிசித்தார். ஒரு கணம் சிவன் வேதியராக காட்சியளித்து ஆசிர்வதித்தார். அடுத்து அங்கே பரமசிவன் பார்வதியோடு ரிஷபாரூடராக தரிசனம் அளித்தார். இயற்பகை சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்குகிறார்.
அசரீரி ஒன்று வானில் அனைவரும் கேட்க ஒலிக்கிறது. ''இயற்பகை, என் பக்தா, நாம் உன் பக்தியை சோதித்தோம். நீயும் உன் மனைவியும் களங்கமற்றவர்கள். பரிபூர்ண பக்தர்கள். எம்மிடம் உங்களை அன்போடு வரவேற்கிறேன்''
ஆகாயத்திலிருந்து தேவர்கள் மலர்மாரி பொழிய இயற்பகை மனையாளோடு கைலாசம் அடைகிறார்.
''எல்லையில் இன்ப வெள்ளம் எனக்கருள் செய்தாய் போற்றி!
தில்லையம்பலத்துள் ஆடும் சேவடி போற்றி!
இயற்பகை நாயனாரின் குரல் எங்கும் எதிரொலித்தது.
இயற்பகை போல் சிறிதும் களங்கமற்ற தூய பக்தி எத்தனை பேரிடம் இருக்க முடியும். அப்படி சிவபக்தி கொண்ட சிலரை பற்றி மேலும் அறிவோம்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...