Saturday, April 21, 2018

pattinaththar

பட்டினத்தார் -- J.K. SIVAN

                   

 3  அற்புத பாடல் ரெண்டு 

நாம் சொல்கிறோமே   ''அடாடா,  என்ன  வெங்காய அடை  நன்றாக இருக்கிறது என்று  நேற்று மாலை எங்கள் வீட்டில் வந்து சுப்புணி சொன்னானே.  இன்னொன்று ? என்று கேட்டதற்கு   ''போதும், நான் நாக்கை அடக்குபவன்,  ஒன்றுக்கு மேல் ஆசையை கட்டுப்படுத்திக்கொள்கிறேன் ''  என்று உடம்பை பற்றி கவலைப்பட்டானே. அவனா?? ஓ...போய்விட்டானா?  எப்படி?''  

''சுந்தரம் கடையில்  சோடா வாங்கி குடித்தான்.  பாக்கெட்டில்  பர்ஸ் இல்லை, பையில் இருக்கும் என்று குனிந்தவன் அப்படியே கீழே விழுந்தவன் தான் . சோடாவுக்கு காசு கொடுக்காமலேயே போய் விட்டானாம்''  

எவ்வளவு அநித்தியம் நமது பூலோக வாழ்வு??

இதைத்தான்  பட்டினத்தாரும் சொல்கிறார்.    

''இதோ இங்கே உட்கார்ந்து கொண்டிருப்பாள், தெருவில் நடப்பாள், நேற்று இருந்தாள், இன்று இல்லை, வெந்து சாம்பலானாள்.  எல்லோரும் பால் தெளிக்க வருகிறீர்களா? ''  என்று உறவை அழைக்கிறார்.  எதற்கும் கவலை வேண்டாம். எல்லாம் அந்த சிவன் செயல். அவனன்றி ஒரு அணுவும் அசையாது, நிற்காது, இருக்காது.போகாது . அது தான் இந்த பாடல்.

“வீற்றிருந்தா ளன்னை வீதிதனி லிருந்தாள்
நேற்றிருந்தா ளின்று வெந்து நீறானாள் - பாற்றெளிக்க
வெல்லீரும் வாருங்க ளேதென் றிரங்காம
லெல்லாந் சிவமயமே யாம்”

நல்ல வசதி படைத்து பெரும் பணக்காரனாக பெருமையாக வாழ்ந்த தனது  சகோதரன் இப்படி பிச்சைக்காரனாக கோவணத்துடன் தெருவில் அலைவது பட்டினத்தாரின் சகோதரிக்கு பிடிக்கவில்லை. அவமானம்.  இப்படி அவன் நமக்கு அவப்பெயர் தேடி தருவதை விட சாகட்டுமே என்று பட்டினத்தாரை சாப்பிட அழைத்து அவருக்கு என்று தயாரித்த ஆப்பத்தில் விஷம் நிறைய கலந்து வைத்தாள் .

''இந்தா அண்ணா,  உனக்காக விசேஷமாக செய்தேன். சாப்பிடு''  

 பட்டினத்தார் எல்லாம் உணர்ந்த ஞானி. அவருக்கு தெரியாதா ஆப்பத்தில் என்ன இருக்கிறது என்று?

''பரம சிவா, என்ன இந்த உலகம்,  மக்களின் எண்ணம்.....   ஆஹா,  என் அன்பு தங்கையே,  ரொம்ப சந்தோஷம்  நீ எனக்களித்த  வரவேற்புக்கு, இந்த  உணவுப்பண்டத்திற்கு''   என்று ஒரு வரி பாடுகிறார்.

 ‘தன்னப்பம் தன்னைச் சுடும்;  வீட்டப்பம்  ஓட்டைச்  சுடும்’  . இப்படி சொல்லிவிட்டு அந்த விஷ அப்பத்தை அப்படியே  தூக்கி அவள் வீட்டின் மீது எறிகிறார்.  அந்த விஷ அப்பம் ஒரு தீப்பந்தாக  மாறி அவள் வீட்டு ஓட்டை,  கூரையை,சுவற்றை எல்லாம்  எரித்து  கபளீகரம் செய்து விட்டது. 

சித்தர்கள்  ஞானிகள்  சொன்னதெல்லாம் நடக்கும்.

''மனையாளு மக்களும் வாழ்வுந் தனமுந்தன் வாயின்மட்டே
யினமான சுற்ற மயானம் மட்டே வழிக்கேது துணை
தினையாமள வெள் ளளவாகினு முன்பு செய்ததவந்
தனையாள வென்றும் பரலோகஞ் சித்திக்குஞ் சத்தியமே”

மேலே  சொன்ன அற்புத பாடல் என்ன சொல்கிறது?

பெண்டாட்டி பிள்ளை, எல்லாம் அழுகிறார்கள், உலகத்தில்  எல்லாமே  இழந்தது போல் கதறி புரள்
கிறார்களே. வீடு,  வாசல், கார், தோட்டம், துரவு, பேங்க் பணம் எல்லாம்  இந்த மூச்சு இருக்கும் வரை, வாய் பேசும் வரை தான். 

''நான் இருக்கேன் உங்களுக்கு,  எப்போதும் நான் தான் உங்களோடு''  என்று தைரியம் கூறிய எல்லா உறவும் சுடுகாட்டு வாசல் வரை தான். 

''சரி,  தனியாக நான் பிரயாணம் செய் யகிறேனே எனக்கு யார் துணை??

ஒரு கடுகு அளவாவது, எள்  அளவாவது,எப்போதோ  நான் செய்த ஒரு நல்ல செய்கை, யாருக்கோ மனமார உதவியது என்று ஒன்று இருந்தால் அது தான் என்னோடு வரும். பரலோகம், சிவலோகம் என்னை கொண்டு செல்லும்.  இது மேலே மற்றவர்கள் சொன்னது போல் தைரிய பொய்  வார்த்தை இல்லை. சத்யம் சத்யம் சத்யம் '' என்கிறார் பட்டினத்தார்.

இன்னும் நிறையும் பட்டினத்தாரை ரசிப்போம் ருசிப்போம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...