Wednesday, April 18, 2018

JAYADEVA ASHTAPATHI




 ஜெயதேவரின் விருந்து       J.K. SIVAN

கிருஷ்ணன் அருள் வேண்டுமானால் ராதாவின் கால்களை முதலில் பிடிக்கவேண்டும். பிருந்தாவனத்தில் கிருஷ்ணனை தரிசிக்க போவோர்கள் ''ராதே கோவிந்தா'', ''ராதே கிருஷ்ணா'' என்று ஸ்மரித்துக்கொண்டே தான் செல்வார்கள்.

இரவில் வெள்ளி நிலவாக ஜ்வலிக்கும் சந்திரன் பகலில் இல்லை. பகலில் விகசிக்கும் தாமரை இரவில் சூம்பி விடுகிறது. ''என் சகி ராதா, நீ இரவிலும் பகலிலுமே அழகு அறிவு இரண்டும் கலந்த உன் காந்த சக்தியை என் மீது அள்ளி வீசுகிறாய் '' என்று கிருஷ்ணனே வர்ணிப்பதாக ஒரு பாடல் ' விதக்த மாதவா' என்ற கீத கோர்வையில் வருகிறது.

நீ சிரித்தால், மகிழ்ச்சி அலைகள் ஒன்றின் மேல் ஒன்றாய் பொங்கி எழுந்து கன்னத்திலிருந்து பீரி வெளிக் கிளம்பி என்னை தாக்குகிறது. ராதையின் அழகிய வளைந்த புருவங்கள் மன்மதனின் வில். அவள் கடை விழிப்பார்வையின் வீச்சு தேன் வண்டுகளின் ரீங்காரத்வனியை வாரி வீசும். அந்த தேன் வண்டு ''அடடா என் இதயத்தை துளைத்துவிட்டதே!'' இது ஒரு சிறு மாதிரி வர்ணனை. முழுதும் ரசிக்க விதக்த மாதவா வை படிக்கவேண்டும்.

அன்று வைகாசி விசாக பௌர்ணமி நாள்


இரவைப் பகலாக்கிகொண்டிருந்தான் சந்திரன். அவனது குளிர்ந்த அலைகள் உலகை குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. மெல்லிய தென்றல் வீசி எங்கிருந்தெல்லாமோ இருந்த இனிய நறுமண மலர்களின் சுகந்தத்தை தன்னோடு சேர்த்து பரிமாறிக் கொண்டு இருந்ததோடு மட்டுமல்லாமல் வேறு ஒரு அருமையான வேலையையும் செய்தது. யமுனையின் குளிர்ச்சியையும் தாங்கி ஜில்லென்று வீசியது.

பிருந்தாவனத்தில் ஒரு அழகிய மரங்கள் அடர்ந்த இடத்திற்கு பாண்டீர வனம் என்று பெயர். அதில் யாரேனும் உலவினால் எளிதில் மற்றவர்கள் கண்களில் படமுடியாது.

''கிருஷ்ணா, இன்று என்ன விசேஷம்? எதற்காக என்னை இங்கு வரச்சொன்னாய்? என்றாள் ராதா.

''உனக்கே தெரியுமே, நான் ஏன் எதற்கு என்று உனக்கு தனியாக சொல்ல வேண்டுமா?

''என்ன பெரிய ரகசியம்? நீயே சொல்லேன். ஏதோ உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகப்போகிறதா என்ன?''

''எப்படி சரியாகவே சொல்லிவிட்டாய் ராதா? நீ ரொம்ப கெட்டிக்காரி, புத்திசாலி என்பதால் தான் உன்னை எனக்கு பிடிக்கிறது. ''

''என்ன சொல்கிறாய் கிருஷ்ணா, விளையாடுகிறாயா? தீராத விளையாட்டுப்பிள்ளை என்று நிரூபிக்கிறாயே?''

'' ஆமாம்,, ஆமாம் இன்றே இங்கேயே இப்போதே உனக்கும் எனக்கும் கல்யாணம். நடத்தி வைப்பவர் ஜெயதேவர். போதுமா?''

ஒரு இடத்தில் படித்தேன் ரசித்தேன். அது இது:

''அந்த பாண்டிர வனத்தின் ஆல மரத்தின் கீழ் ராதா கிருஷ்ண திருமணம் நடந்ததாம். ஸ்ரீ மத் பாகவதம் கூறாத ராதையை- ராதா- கிருஷ்ண திருமணத்தை கீத கோவிந்தம் என்னும் சிருங்கார ரச காவியம் கூறுகிறது. இதனை இயற்றியவர் ஜெயதேவர். அதனை மிகவும் ரசிப்பார் காஞ்சிப் பெரியவர். ஒரு சந்நியாசி சிருங்கார ரசம் கலந்த கீத கோவிந்தத்தை ரசிக்கிறாரென்றால் அது சாதாரண சிருங்கார ரசமா? அந்த ஜெகந்நாதரே ரசித்த கீதமல்லவா!

விசாக-அனுஷ நட்சத்திரங்களுக்கு வேதத்தில் "ராதா' என்று பெயராம். வட மொழியில் அனுஷத்திற்கு அனுராதா என்று பெயர். விசாகத்துக்கு அடுத்தது அனுஷம். எனவே விசாகன் ராதையுமா னான். சிவனே ராதையாகப் பிறந்து கண்ணனுடன் ராச லீலை புரிந்தான் என்று தேவி புராணம் கூறுகிறது. சிவனே கந்தனாக அவதரித்தான் என்று கந்தபுராணம் கூறுகிறது. ஆக, கந்தனே ராதையானான் என்றும் சொல்லலாம். ராதையின் மகிமையை கர்க சம்ஹிதை, பிரம்ம வைவர்த்தம், தேவி பாகவதம் போன்ற நூல்கள் கூறுகின்றன. அதன்படி ராதா- மாதவன் திருமணம் நடந்த தினம் விசாக பௌர்ணமியே. எனவேதான் மகாபெரிய வருக்கு ராதா- கிருஷ்ண வைபவத்தில் விருப்பம் உண்டாயிற்று எனலாம்.

கிருஷ்ண சைதன்ய மகாபிரபு ஒரு சந்நியாசி. அவரது சீடன் ஒருவன் பிச்சை யிட்ட பெண்மணியின் முகத்தைப் பார்த்தான் என்பதை அறிந்து அவனை விலக்கினார். அதனால் அந்த சீடன் தன் உயிரையே மாய்த்துக் கொண்டான். அத்தகைய சைதன்ய மகாபிரபு ராதா கிருஷ்ண இயக்க சந்நியாசி. அவர் 12 ஆண்டுகள் பூரி ஜெகந் நாதர் கோவிலிலேயே வாழ்ந்து, தனது 50-ஆவது வயதில் ஜெகந்நாதரின் திருவடியில் கலந்தார். எனவே சந்நியாசிகளின் ராதா- கிருஷ்ண பிரேமை என்பது மிகவும் உயர்ந்த நிலை.

ஜெயதேவரின் கீத கோவிந்தம் ராதா- கிருஷ்ண விரக பிதற்றல்களை விவரிப்பது. 24 பாடல்களே கொண்டது; அஷ்டபதி எனப்படுவது. பூரி ஜெகந்நாதரே உவந்தது- எழுதியது என்று பூரியிலும் காசியிலும் பறைசாற்றப்பட்டது. (இதில் 19-ஆவது அஷ்டபதியை எழுதும்போது ஜெயதேவர் குழப்பமாகி எழுதாமல் எழுந்து சென்றுவிட, அவர் உருவில் ஜெகந்நாதரே அந்த அஷ்டபதியை எழுதினார் என்பர்.) ராதா என்பது ஜீவாத்மா; கிருஷ்ணன் என்பது பரமாத்மா. ஜீவாத்மா- பரமாத்மா ஐக்கியத்தை- முக்தி நிலையை விளக்குபவையே இந்தப் பாடல்கள்.''

ஒரு அஷ்டபதி பாடல் மிக அருமையாக ஒரு கன்னடப் படத்தில் கேட்டேன். மியூசிக் டைரக்டர் பாலமுரளி கிருஷ்ணா. அவரே அருமையான குரலில் பாடியிருக்கிறார். அந்த அருமையான அஷ்டபதி பாடலின் சில வரிகளை கேட்போமா? இந்த லிங்கை  கிளிக்கினால்  பாலமுரளி பாட  உங்களுக்காக காத்திருக்கிறார்.எனக்கு மிகவும் பிடித்த ஒரு குட்டி அஷ்டபதி.https://youtu.be/7md-pEW39wc

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...