Saturday, April 7, 2018

UTHTHAVA GITA





உத்தவ கீதை 1 J.K. SIVAN

ஒருவரைப்போலவே இன்னொருத்தர் இருக்க முடியுமா என்று அடிக்கடி கேள்வி எழுகிறது. அப்படியே அச்சாக இருக்கவே முடியாது. கொஞ்சமாவது வித்தியாசம் இருக்கத்தான் செய்யும். இருப்பினும், ஒருவரைப் பார்க்கும்போது ''அட இது என்ன அவரை மாதிரியே ஐவரும் இருக்கிறாரே, ரெட்டை பிறவியோ ?'' என்கிறோம். கிருஷ்ணனைப் போலவே உத்தவரும் இருந்தார். எத்தனையோ பேர் கிருஷ்ணனை பார்க்க வந்து உத்தவரிடம் பேசிவிட்டு ஏமாந்திருக்கிறார்கள். கிருஷ்ணனின் நெருங்கிய உறவினர் உத்தவர். கிருஷ்ணனின் அப்பா வசுதேவரின் சகோதரன் தேவ பாகாவின் பிள்ளை. சிறந்த நண்பர். அதே போல் வசுதேவரின் சகோதரி குந்தியின் பிள்ளை அர்ஜுனன். அர்ஜுனன் அருமைத் தோழன் என்றால் உத்தவர் கிருஷ்ணனின் ஆத்ம நண்பர். மதுராவில் பிறந்தவர். . கம்சனின் அரண்மனையில் இருந்தவர். ப்ரஹஸ்பதியிடம் கல்வி கற்ற ஞானி. உத்தவரின் ஞான தாகம் அவரை கிருஷ்ணனை தேட வைத்தது.

பிருந்தாவனத்திலிருந்து கிருஷ்ணனை கம்சனின் அரண்மனைக்கு அழைக்க சென்ற உத்தவர் எல்லோரிடமும் இனி கிருஷ்ணன் பிருந்தாவனம் திரும்ப வழியில்லை என்று அறிவித்து விடுகிறார். இன்னொரு முறை க்ரிஷ்ணனால் துவாரகை அனுப்பப்பட்டு கிருஷ்ணன் மறைந்து விட்டார், இனி யது வம்சம் அழிந்துவிடும் என்று அறிவிப்பவர்.

பிரிந்தாவனத்துக்கு உத்தவர் சென்றபோது எல்லா கோபிகைகளும் அவரை கிருஷ்ணன் என எண்ணுகிறார்கள். ''எனக்கு எதற்கு இவ்வளவு வெண்ணை? என்ன செய்வது நான்? '' என்று திணறுகிறார்.

''எங்களை விட்டு ஏன் போகிறாய் ,எதற்கு ?''

''நான் எங்கும் போகவே இல்லை, இப்போது தானே வந்திருக்கிறேன், ஏன் என்னை பார்த்து எல்லோரும் அழுகிறீர்கள் '' என்று அவர் குழம்பும்போது தான் ''ஓஹோ இவர் கிருஷ்ணன் இல்லையா '' என புரிந்து கொள்கிறார்கள்.
கிருஷ்ணன் இல்லை என உணர்கிறார்கள்.

கோபிகைகளுக்கு வேத நூல்கள் எப்படி உலகம் மாறுபடுவதை சொல்கிறது என எடுத்துரைக்கிறார். உலக வாழ்க்கையின் ஈர்ப்புகளிலிருந்து விடுபட்டு ஆசை அறுமின்கள் என்று போதிக்கிறார்.

''ஆசையை எல்லாம் விடமுடியாது. நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள் என்கிறாள் ராதா. நாங்கள் எப்படி கிருஷ்ணன் மேலான காதலை, அன்பை, பாசத்தை விடமுடியும். தேன் குடிக்கும் வண்டு கிருஷ்ணன். நாங்கள் மலர்கள் போன்றவர்கள். மலரில் உள்ள தேனை அருந்தி வண்டு வேறு மலர்களை நோக்கி சென்று விடுகிறது. திரும்புவதில்லை. மலர்கள் வண்டை கோபிக்கின்றனவா. வண்டு வராதா என்று காத்திருப்பது போல் நாங்கள் கிருஷ்ணன் வரவுக்கு காலம் காலமாக காத்திருப்போம். கிருஷ்ணனை குறை கூற மாட்டோம். எங்கோ வேறு சிலர் கிருஷ்ணன் மகிழ்கிறார்களே . அவன் எங்கு இருந்தாலும் மகிழ்ச்சியின் ஸ்வரூபம் தானே...எங்களுக்கு அவனுக்காக ஏங்குவதற்கு உரிமை உண்டே ''. இப்படி ராதை கூறுவதை தான் விரக பக்தி யை விளக்கும் ''ப்ரம்மர கீதை'' என்பார்கள்... ப்ரம்மரம் என்றால் வண்டு.
உத்தவர் அவர்களுக்கு பற்றற்ற நிலை பற்றி விளக்க முற்படுகிறார்.

''அதெல்லாம் வேண்டாம் ஐயா. நீங்கள் சொல்லும் அறிவுரையை நாங்கள் எங்கே சேமித்து வைத்துக் கொள்வது. உள்ளும் புறமும் எங்களுக்கு அந்த கிருஷ்ணன் நினைவே நிரம்பியிருக்க உமது அறிவுரைக்கு இடமே இல்லையே'' என்கிறார்கள்.

ராதை மற்றும் கோபியரின் பக்தி யோகத்திற்கு முன் உத்தவரின் ஞான யோகம் எடுபடவில்லையே.

கிருஷ்ணன் தனது துவாபர யுக அவதாரத்தை முடித்துக் கொள்ளும் முன்பு உத்தவருக்கு ஞான உபதேசம் செய்வதை தான் உத்தவ கீதை, ஹம்ச கீதை என்று இனி அறியப்போகிறோம்.

நான் சகல சாஸ்திரங்களும் கலை ஞானமும் கற்றும் உன்னளவு எனக்கு மெய்ஞ்ஞானம் இல்லையே என்று உத்தவர் கேட்கும்போது தான் கிருஷ்ணன் ''உத்தவா, ஞானத்தின் எல்லை தான் அசையாத நம்பிக்கையும் பொறுமையும் என ராதையின் பக்தியில் உணர்வாய்'' என்று உபதேசிக்கிறார். நம்பிக்கை என்றால் அப்படியே ஏற்றுக்கொள்வது. ராதைக்கு தெரியும் கிருஷ்ணன் இனி பிருந்தாவனத்திலோ, மதுராவிலோ, துவாரகையிலோ, இல்லாவிட்டாலும் வைகுண்டவாசியாக இருப்பார். திரும்ப எதிர்பார்ப்பது வீண் என அறிந்தவள். அதற்காக அவள் கிருஷ்ணனை ஏங்காமல் இல்லை, அழாமல் இல்லை. உருவத்தில் எதிரில் இல்லை என அறிிவாள். உள்ளத்தில் விடாமல் இருத்திக் கொண்டாள் .

ஹம்ஸ கீதையே ஹம்ஸம் எனும் அன்னமாக நீரில் இரு. வாசம் செய். அது உன்னை ஒட்டாமலோ, நீ அதில் ஒட்டாமலோ வாழ் என்பதன் தத்துவம்.

ஸ்ரீமத் பாகவதத்தில் 11வது காண்டம், 6வது அத்தியாயத்தில் 40வது ஸ்லோகத்திலிருந்து 29வது அத்யாயம் வரை உத்தவ கீதை உள்ளது. அது ஆயிரக்கணக்கான ஸ்லோகங்களை கொண்டுள்ளது. கிருஷ்ணன் உத்தவருக்கு அளித்த ''விடை பெறும் ஞான அறிவுரையாக அமைந்துள்ளது
சுருங்கிய அளவில் அதை நாம் அனுபவிப்போம்:

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...