உத்தவ கீதை - ஜே.கே. சிவன்
1. இனி யது வம்சம் இல்லை.
துவாபர யுகம் முடிவு கலியுக ஆரம்பகாலம் -- ஸ்ரீ கிருஷ்ணன் தனது அவதாரம் நிறைவுற்றதை உணர்ந்து மீண்டும் நாராயணனாக வைகுண்டம் செல்ல ஆயத்தமாகிறார். அவரது உறவினனும் நண்பனுமான உத்தவர் அவரைபிரிய வருந்துகிறார். அப்போது உத்தவருக்கு ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு செய்ததைப் போல உபதேசங்கள் செய்வதையே உத்தவ கீதை என்று அறிவோம். நமக்கு உதவ க்ரிஷ்ணன் உத்தவன் மூலம் அளித்தது உத்தவ கீதை.
கிருஷ்ணனுக்கு நடக்கப்போவது எது? என்ன? எப்போது நடக்கும்? என்று நிச்சயமாக தெரியும். எதையும் தனது மாயையின் சங்கல்பமாக எடுத்துக் கொள்பவன் அல்லவா.?
யது குலத்தவர்கள் ப்ரபாஸ க்ஷேத்ரத்துக்கு குடியேறினார்கள். செல்வம் கொழிக்கும் இயற்கை வளமிக்க துவாரகை வைகுண்டம் போல அல்லவா காட்சி அளித்தது.
சுகதேவ கோஸ்வாமி சொன்னதை நினைவு கூர்வோம். ப்ரம்மா துவாரகைக்கு வந்து விட்டார். தனியாக அல்ல. தேவர்கள் உப தேவதை பரிவாரங்களோடு. சிவனும் சிவகணங்களோடு. இந்திரன் திக் தேவதைகளோடு ஆஜர். சகல லோகத்தவரும் குழுமியாகிவிட்டது.
கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். அனைவரும் கிருஷ்ணனை கண்ணாரக் கண்டார்கள். மலர் மாலைகள் சூட்டினார்கள். போற்றி புகழ்ந்து பாடினார்கள்.
ப்ரம்மா கிருஷ்ணனை வணங்கி அனைவர் சார்பாகவும் பேசினார்:
''ப்ரபோ, எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி பூமியில் அவதாரம் செய்து பூமியின் பாரம் குறைத்தீர்கள். நீங்கள் தோன்றிய யதுவம்சம் பிராமணர்கள் சாபத்தால் சுருங்கப்போகிறது. தங்களுக்கு இந்த அவதாரத்தில் நூற்றி இருபத்து ஐந்து ஆண்டுகள் கழிந்து விட்டது. இனி இங்கே நீங்கள் புரியவேண்டிய கடமையோ நிறைவேறாத எங்கள் வேண்டுகோளோ எதுவும் பாக்கி இல்லை. தாங்கள் வைகுண்டத்துக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டுகிறோம்.எங்களுக்கு நீங்கள் அங்கே தேவை.'' என்றனர் தேவர்கள் ஒட்டுமொத்தமாக.
'''வாஸ்தவம் ப்ரம்மதேவா, யதுகுல வீரர்கள் தங்கள் பலத்தினால், என் ஆதரவால் கொடுமைகளும் தீய சக்திகளும் செய்ய வலுத்து விட்டார்கள் என்பதால் இந்த ஏற்பாடு. அவர்களையும் அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு அவர்களை ஒடுக்கியாகி விட்டது. எனக்கு இங்கே புரிய வேண்டிய பணி எதுவும் இனி இல்லை. வெகு விரைவில் திரும்பி வருவேன். நீங்கள் சந்தோஷமாக செல்லலாம்.'' என்கிறார் கிருஷ்ணன்.
துவாரகையில் கிருஷ்ணன் எதிர்பார்த்தது போலவே நடந்தது. யதுகுல வீரர்களை தலைவர்களை அழைத்தார்.
''உயிர் நண்பர்களே, பெரியோர்களே, நமது யது வம்சத்தை பிராமணர்கள் அழிந்து போக சபித்து விட்டனர் என்பது உங்களுக்கு தெரியும். இதை தடுக்க வழியில்லை. அதன் விளைவாக எங்கும் விநாசம் தலை விரித்தாடுகிறது. உயிர் வாழ வேண்டும் என்றால் இனியும் நாம் யாரும் இங்கு வசிக்க வழியில்லை. துவாரகையை விட்டு எல்லோரும் ப்ரபாஸ க்ஷேத்ரம் செல்வோம். நேரம் கடத்தக் கூடாது'' என்கிறார் கிருஷ்ணன். .
யாதவர்கள் அவ்வாறே மூட்டை முடிச்சுகளுடன் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு துவாரகையை விட்டு வெளியேறுகிறார்கள். ப்ரபாஸ க்ஷேத்ரம் நோக்கி செல்கிறார்கள்.
உத்தவர் கிருஷ்ணனின் தாசர். அவரை பக்தியோடு பின்பற்றுபவர்.ஏன் எல்லோரும் துவாரகையை விட்டு வெளியேறுகிறார்கள் என்று அறிந்து திடுக்கிட்டனர் கிருஷ்ணரை அணுகி தனியே சந்திக்கிறார். சாஷ்டாங்கமாக கிருஷ்ணன் தாள்களை வணங்குகிறார்.
கிருஷ்ண அவதாரத்தின் நோக்கம் முடிந்து விட்டது.
யாதவகுல ஆண்கள் குடும்பத்தோடு சோமநாதபுரம் கடற்கரையில் உள்ள பிரபாச நகருக்கு புறப்படுவதை உத்தவர் அறிகிறார். நேராக கிருஷ்ணனிடம் வருகிறார். கிருஷ்ணன் தியானத்தில் இருக்கிறானா? எதையோ யோசிக்கிறானா? அருகே வந்து ''கிருஷ்ணா '' என்று மனமார கூப்பிட்டு வணங்குகிறார் உத்தவர்.
''வா உத்தவா நான் உன்னை எதிர்பார்த்தேன்''
'' கிருஷ்ணா, துர்வாசர் முதலான ரிஷிக்களின் சாபத்திற்கு உள்ளாகி யதுகுலம் முற்றிலும் அழியும் என்று உனக்கு தெரியுமே, அதை தடுக்கும் சக்தியும் உனக்கு உண்டே, எதற்கு அவர்களை அழியச் செய்து விட்டு நீ வைகுண்டம் செல்ல உத்தேசித்தாய். முடிவெடுத்தாய்? எனக்கு காரணம் வேண்டாம். ஆனால் தயவு செய்து என்னையும் உன்னுடன் அழைத்து செல்வாயா கிருஷ்ணா?''
'' இல்லை உத்தவா நீ இன்னும் பூமியில் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. உனக்கு நான் ஆத்ம உபதேசம் செய்வேன். நான் இங்கிருந்து சென்றபின் இந்த பூமியில் கலியின் பிடி அதிகரிக்கும். இந்த உலகில் மனம் வாக்கு காயம் என்று ஐம்புலன்களால் அடையப்படும் எதுவுமே சாஸ்வதம் இல்லை, அழியும் தன்மை கொண்டது என்பதை நீ உணர்ந்து மற்றவர்க்கும் உபதேசம் செய்யும் பணி உன்னால் நிறைபெறவேண்டும்.
''ப்ரபோ, தாங்கள் யது வம்சத்திற்கு முடிவு நிச்சயம் என்று அறிவித்து தாங்களும் விடைபெறுவீர்கள் என்று அறிகிறேன். யோகீஸ்வரா, தங்கள் சக்தி நான் அறிவேன். சர்வ வல்லமை பொருந்திய தாங்கள் பிராமணர்களின் சாபத்தை விலக்க முடியாதா? அதை சக்தி இழக்க செய்ய இயலாதா? இதனால் தங்கள் பூவுலக யாத்திரையும் அல்லவா முடிவுக்கு வரும். நீங்கள் இல்லாமல் யார் இங்கு வாழ முடியும் ப்ரபோ? உங்களை பிரிவது என்பது நினைத்து க்கூட பார்க்க முடியவில்லையே. எங்கள் செயல், எண்ணம் எதுவுமே உங்களால் அல்லவோ நடைபெறுகிறது. உங்களது ஒவ்வொரு அசைவையும் கண்ணால் கண்டு ரசித்த பக்தர்கள் இதை எவ்வாறு ஜீரணிப்பார்கள்?
கிருஷ்ணன் புன்முறுவல் செய்தார். உத்தவரை அன்போடு பார்த்தார்.
''என் பிரியமான உத்தவா, என் முடிவை நீ சரியாகவே உணர்ந்திருக்கிறாய். நான் வைகுண்டம் திரும்பும் நேரம் வந்து விட்டது. ப்ரம்மா சிவன், இந்திராதி தேவர்கள் அனைவருமே என்னை மீண்டும் அங்கே அடைய காத்திருக்கிறார்கள். நேரம் அதிகமாகவே எடுத்துக் கொண்டுவிட்டேன். நூற்று இருபத்து ஐந்து ஆண்டுகள்
அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றவே இங்கே பலராமனோடு வந்தேன். என் வேலையும் அவர்கள் விருப்பமும் நிறைவேறி விட்டதே. நான் மீண்டும் என் இடத்துக்கு செல்லவேண்டாமா.?
அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றவே இங்கே பலராமனோடு வந்தேன். என் வேலையும் அவர்கள் விருப்பமும் நிறைவேறி விட்டதே. நான் மீண்டும் என் இடத்துக்கு செல்லவேண்டாமா.?
இதைக் கேள் உத்தவா. யது குலத்தினர் தங்களுக்குள் தாங்களே போரிட்டு அனைவரும் மடியபோகிறார்கள். எவரும் மிஞ்சப் போவதில்லை. இன்றிலிருந்து சரியாக ஏழாம் நாள் சமுத்திரம் பொங்கும். இந்த துவாரகை கடலில் மூழ்கும். துவாரகை நகரத்தில் எதுவும் தப்பாது. நான் இந்த உலகை விட்டு அகல்வேன். கலி முழுதுமாக உலகை ஆக்கிரமித்து விடுவான். நான் மறைந்த பிறகு நீயும் இங்கு இருக்க வேண்டாம். கலியில் அதர்மம், அநீதி, பாப காரியங்கள் பெருகும். நீ அதில் சிக்க வேண்டியதில்லை. உன் பந்த பாசம், பற்று அனைத்தையும் நீக்கி என்னை நினைப்பாயாக. சம நோக்கோடு என் மீது உன் சிந்தையை செலுத்தி பூமியில் எங்கும் செல்வாயாக. ஏனென்றால் காண்பது, கேட்பது, செய்வது, தோன்றுவது நிகழ்வது அனைத்தும் மாயை, அநித்யமானது, என்று அறிவாய். ஐம்புலன்களையும் வென்று மாயைக்கு அடிமையாகாமல் ஆத்ம சிந்தனையோடு என்னை உன்னில் கண்டு ஆனந்தமாக இரு.
தயை, கருணை, அன்பு சம தர்சனம் இவற்றோடு எல்லோரையும் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்பவன் என்னை அடைகிறான். எல்லாவற்றிலும் எல்லோரிலும் என்னையே காண்பான். ஜனன மரணம் அவனை அணுகாது.
''பகவானே எனக்கு இன்னும் அவசியம் உபதேசம் செய்யுங்கள் என்கிறார் உத்தவர். கண்ணன் தொடர்கிறான்
No comments:
Post a Comment