கடல் தாண்டி ஒரு கேதீஸ்வரன்
J.K. SIVAN
என் உத்யோக காலத்தில் ஈழநாட்டுக்கு ( ஸ்ரீ லங்கா) சென்றிருக்கிறேன். சில கோவில்களை பார்த்திருக்கிறேன். சிவ பக்தர்கள் நிரம்பிய இடம் வட இலங்கை, கிழக்கு இலங்கை.
மன்னார் வளைகுடா இந்திய கரையை நெருங்கிய கடல் பகுதி. தேங்காய் மாதிரி வளைந்து இருக்கும் இலங்கை தேசத்தின் வடமேற்கு பகுதியில் இந்தியாவை பார்த்தபடி இருக்கிறது மன்னார் இல்லை மண் ஆறு, மணல் ஆறு, அங்கேயும் மணல் காணாமல் போய் அது அப்படி மாறிவிட்டதோ? அங்கே தமிழர்கள் உண்டு. அங்கே தான் இருக்கிறது கேதீஸ்வரம் எனக்கு முன்பே திரு ஞான சம்பந்தர் அங்கே உத்யோக சம்பந்தம் இல்லாமலே பக்தி பரவசத்தோடு போயிருக்கிறார். எனக்கு முன்னால் இங்கே சுந்தரரும் வந்திருக்கிறார். இந்த திருக் கேதீஸ்வரம் 275 பாடல் பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்று.
எப்போதுமே ஒரு நாட்டின் செல்வங்களை வெளியாட்கள் வந்து சூறையாடுவதும் அவர்கள் கலாச்சாரத்தை அழிப்பதும் சரித்திரத்தின் பக்கங்களை நிறைய நிரப்பி இருக்கிறது. கேதீஸ்வரத்தை போர்ச்சுகீசியர்கள் விட்டுவைக்கவில்லை. 1575ல் தங்களால் முடிந்த வரை அழித்துவிட்டார்கள். சிவ சாபத்தால் காணாமல் போனார்கள். 1589 வரை கேதீஸ்வரனுக்கு இதனால் விளக்கேற்றியோ பூஜையோ இல்லாமல் போனது. கேதீஸ்வரன் மற்றும் ஆலய விக்ரஹங்கள் புதைந்து போய், 400வருஷங்களுக்கு அப்புறம் தோண்டி எடுக்கப் பட்டு, ஆறுமுகநாவலர் என்று உலகறிந்த ஒரு தமிழறிஞர், சிவபக்தர் இந்த கோவிலுக்காக பாடுபட்டு இதை பழைய நிலைமைக்கு கொண்டுவர முயற்சித்து ஒருவழியாக 1903ல் எத்தனையோ அரசியல், மத வேறுபாடு பின்னணியில் கேதீஸ்வரன் ஆலயம் மறுபடி உயர்ந்த கோபுரத்தோடு புனருத்தாரணம் செய்யப்பட்டது நமது பாக்யம். நிச்சயம் 2000 வருஷ கோவில் இது.
இந்த ஆலயம், அதன் அருகே உள்ள புராதன பாலாவி குளம், பற்றியெல்லாம் ஆராய்ச்சிகள் நடந்திருக்கிறது. இது ராவணன் மனைவி மண்டோதரி ஊராம். கேதீஸ்வரன் ஆலயமே அவள் தந்தை அசுரன் மயன் கட்டியதாம். பிருகு முனிவர் வழிபட்ட சிவன். அதைவிட முக்கியமான விஷயம், கேது எனும் நவக்ரஹன் சிவனை இங்கே வழிபட்டு, இந்த ஊர் அவன் பெயரால் கேதீஸ்வரன் ஆனது தான்.
இலங்கை தேசத்தின் சிவஸ்தலங்களில் பஞ்ச ஈஸ்வரம் எனும் ஐந்து ஸ்தலங்களில் திருக்கேதீஸ்வரம் ஒன்று. மற்றவை கோணேஸ்வரம், (திருகோண மலையில் உள்ளது), நகுலேஸ்வரம் (கீரிமலை), தேனாவரம் (தேவன் துறை) முனீஸ்வரம் (புட்டாலம்). மகா சிவபக்தன், சிவனையே சாம கானத்தால் கவர்ந்து வரம் பெற்ற ராவணேஸ்வரன் இருந்த ஊரில் பஞ்ச ஈஸ்வரம் இருந்ததில் என்ன ஆச்சர்யம்.
ஈழநாட்டில் கேதீஸ்வரத்தை தவிர்த்து மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் கோணேஸ்வரம்.
கேதீஸ்வரன் ஒரு நாக க்ஷேத்ரமாக இருக்க இன்னொருகாரணம் மாந்தை என்ற கடல் வாணிப துறைமுகத்திற்கு அருகே வாழ்ந்த கரையர் நாகர் வம்சம். இவர்களைச்சேர்ந்தவர் தான் நமது சங்க இலக்கியத்தில் நாம் இன்றும் காணும் ஒரு புலவர் ஈழத்து பூதன் தேவனார் . பாண்டிய சோழ ராஜாக்கள் இந்த ஆலயங்களை பராமரித்திருக்கிறார்கள்.
ஸ்கந்தம் இந்த ஆலயம் பற்றி நிறைய சொல்கிறது. நைமிசாரண்யத்தில் சௌதி என்று நான் எழுதும் சுதர் இதைப் பற்றி மற்ற முனிவர்களுக்கு சொல்லியிருக்கிறாராம். சுதர் சொல்லாத விஷயமே இல்லை போலிருக்கிறது. இந்த கோவில் தற்போது நேற்று காலை கட்டிமுடிக்க கோவில் போல் அழகாக காட்சி அளிக்கிறது. ஸ்ரீலங்காவில் உல்லாச பொழுதுபோக்க செல்பவர்கள் இந்த ஆலயங்களை சென்றடைந்து காசு செலவு பண்ணாமல் நிறைய புண்யமும் சம்பாதித்து வரலாம்.
No comments:
Post a Comment