குட்டி கதை 57 சாப விமோசனம்
மெல்லிய இன்பமான தென்றல் முன்னிரவு. வானில் பூரணச்சந்திரன் பால் ஒளியை வாரி வழங்க அமைதியான அந்த வனத்தில் கிருஷ்ணன் புல்லாங்குழலில் தேனிசையை தென்றலில் கலந்து கொண்டிருக்க ராதை அவனுடன் வெள்ளி நிறமாக ஓடிக் கொண்டிருந்த யமுனை நதிக் கரையில் நடந்து வந்தாள். இசை நின்றது பேச்சு தொடர்ந்தது.
"இப்போது வந்தாரே அவர் யார்?"என்றாள்.
"எனக்கு உன் மீது கொஞ்சம் வருத்தம் ராதா?"
"ஏன், ஏன்"
என்று திடுக்கிட்டு நின்றாள் ராதா
"அவர் எப்படிப்பட்ட ச்ரேஷ்டர் என்பது அறியாமல் நீ அவரைக் கண்டதும் கேலியாக சிரித்தது தவறு?”
“எனக்கு அவரை கேலி செய்ய எண்ணமில்லை அவர் உடல் வளைவு என்னை அறியாமல் சிரிக்க வைத்தது தவறு தான். யார் அவர்?
“எனக்கு விருப்பமான அஷ்டாவக்ரர். அவர் கதை ஒரு சோக கதை.”
“எனக்கு சொல்லலாமா அதை”
“தாராளமாக. வாட்ட சாட்டமாக பெண்கள் மயங்கும் வடிவில் ஆணழகனாக ஒரு பிராமணர் கங்கை
கரையில் வசித்து யாகங்கள் ஹோமங்கள் ஜப தபங்களோடு நாராயணனை வழிபட்டு வந்தார். அவர் மனைவி அவருக்கு நேர் மாறானவள்.
அவர் வாழ்க்கை வெறுத்து போய் வனங்களில் தவம் புரிந்தார். இனி பெண்களை ஏறெடுத்தும் பாரேன்” என்று விரதம் பூண்டார். இந்திரனின் சபையிலிருந்து ரம்பை ஒருநாள் அந்த வனத்தில் வந்த போது இந்த பிராமண முனியின் தேஜஸ் கம்பீரம் அழகு அவளை கவர்ந்தது . அவரை அணுகி வணங்கி “எனக்கு ஒரு எண்ணம் நிறைவேற அருள்வீர்களா” என வினவ, அவர் “என்னால் முடிந்தால் அப்படியே ஆகட்டும்” என்று சொல்ல,
“நான் உங்களை மணக்க விரும்புகிறேன்” என்றாள் ரம்பை.
“அது முடியாது”
“ஏன்?”
"நான் எந்த பெண்ணையும்
நினைத்து கூட பார்ப்பதில்லை. இது என் விரதம்"
“என்னை ஏமாற்றம் அடையச் செய்த, எனக்கு கிடைக்காத
உன் அழகிய உருவம் இன்று முதல் யாரும் அருவருக்கத் தக்க, எந்த பெண்ணும் வெறுத்து கேலி செய்யும்படியான உடலாக கடவது” என்று சாபமிட்டாள். எட்டு வித கோணலாக அவர் உடல் வளைந்தது. அவர் பெயரே மறந்து போய் அது முதல் அவர் அஷ்டாவக்ரர் (எட்டு கோணல் ஆசாமி) என்று எல்லோராலும் அழைக்க படுகிறார்
"இதற்கு அவர் கடவுளிடம் முறையிடவில்லையா?".
"முறையிட்டாரே "
"எப்போது அவருக்கு கடவுள் கிருபை செய்வார் அவர் உடல் மீண்டும் எப்போது பழைய நிலைக்கு திரும்பும்"
"கண்ணன் சிரித்தான். கடவுள் கிருபை அவருக்கு கிடைத்ததே”
"எப்போது "
"சற்று நேரம் முன் அவர் இங்கு பேசிக்கொண்டிருந்த போது"
என்றான் கண்ணன்.
No comments:
Post a Comment