குட்டி கதை 54 உடலும் ஆத்மாவும்
"ருக்மணி ஒரு வேலை எனக்காக செய்கிறாயா
?" என்றான் கிருஷ்ணன்.
"என் பிராண நாதா அது என் பாக்கியம், சொல்லுங்கள்"
“இதோ அந்த யமுனை நதியின் அக்கரையில் ஒரு ஆஸ்ரமத்தில் துர்வாச முனிவர் வந்து தங்கியிருக்கிறார் "அவருக்கு இன்று ஒரு சிறந்த விருந்து அளிக்க விரும்புகிறேன். உடனே தயார் செய்து நீயே அதை கொண்டுபோய் அவருக்கு பரிமாருகிறாயா?"
"உடனே செய்கிறேன்”
ருக்மணி அறுசுவை உண்டி தயாரித்து நிறைய எடுத்துகொண்டு யமுனை நதியை அணுகினாள். வெள்ளம் கரை புரண்டோடியது எப்படி கடப்பது? படகு ஒன்றுமே இல்லையே?
" கிருஷ்ணா நான் எப்படி அக்கரை போவது
?"
"ஒ, அப்படியா நீ யமுனையிடம் போய் "நித்ய பிரம்மச்சாரி" உன்னை வழி விடச்சொன்னார்" என்று சொல்." என்றான் கிருஷ்ணன்
" யார் அந்த நித்யப்ரம்மசாரி?"
"ஏன், நான் தான்!."
ருக்மணி மனதுக்குள் சிரித்தாள் தன்னையும் சேர்த்து எட்டு மனைவிகள் கொண்ட கிருஷ்ணனா நித்ய பிரம்மச்சாரி!, என்ன வேடிக்கை. பரவாயில்லை, கிருஷ்ணன் சொன்னதை செய்வது என் கடமை"
யமுனையிடம் சொன்னவுடன் உடனே வழிகிடைத்தது அக்கரை போனாள். ஆஸ்ரமத்தில் காத்து கொண்டிருந்த துர்வாச முனிவருக்கு அறுசுவை உண்டியை திருப்தியாக படைத்தாள். திரும்பி பார்த்த போது யமுனை பெரு வெள்ளத்துடன் ஓடுவதை கண்டு தயங்கினாள்.
"என்ன யோசிக்கிறாய் ருக்மணி?"
என்றார் துர்வாசர்.
"சுவாமி வெள்ளம் எப்போது வடிந்து எப்போது நான் திரும்புவது?"
போய் யமுனையிடம் " நித்ய உபவாசி கேட்கிறார் வழி விடு"
என்று சொல். இப்போது தான் மூக்கு பிடிக்க வயிறு வெடிக்க விருந்து சாப்பிட்ட இவரா நித்ய உபவாசி?? வாய் திறக்காமல் சொன்னபடியே செய்தாள். அவர் பெரிய கோபக்கார முனிவராச்சே. யமுனை உடனே வழிவிட்டாள்.
கிருஷ்ணனிடம் விஷயத்தை சொல்லும் போது அவளுக்கு மனதில் ஒரே குமைச்சல், என்ன இது, ஒருவர் நித்ய பிரமச்சாரியாம் ஒருவர் நித்ய உபவாசம் இருப்பவராம்! சம்திங் ராங் என்று யோசிக்கவே, "ருக்மணி, உனது மனதில் ஓடும் எண்ணம் என்ன என்று எனக்கு தெரியும் நானே விளக்குகிறேன் உனக்கு. நீ பார்க்கும் இந்த உடல் வேறு, உள்ளே இருக்கும் நான் வேறு, துர்வாசர் உடலில் வாசம் செய்யும் ஆத்மாவும் அவ்வாறே. உடல் சம்பந்தப்பட்ட எந்த ஆசை, பாசம், உணர்ச்சி, காலம், நேரம், உணவு, உறவு, வேண்டியது, வேண்டாதது செய்யும் செயல் ஆத்மாவாகிய எங்களுக்கு கிடையாது. எனவே நீங்கள் நினைப்பது
போல் அல்லாமல் நான் நித்ய பிரம்மச்சாரி துர்வாசர் நித்ய உபவாசி. புரிகிறதா". புரிகிற பக்குவம் வந்தால் உனக்கு இது விளங்கும்"
என்றான் கிருஷ்ணன்.
No comments:
Post a Comment