KUTTI KADHAI
31 பசி தீர்ந்ததே!!!
“நீ இவ்வளவு என் மீது
பாசமும் பக்தியும் கொண்டவன் இன்று இதுவரை நான் அறியவில்லை துர்யோதனா . எவ்வளவு நேர்த்தியாக எங்களை உபசரித்து மகிழ்வித்தாய்!!
வரம் கேளப்பா என்றால் அதிலும் உன் சகோதர பாசத்தை தான் காட்டுகிறாய். நீ கேட்ட வரத்தை அளித்தேன். என் சிஷ்ய கோடிகளோடு - (கிட்ட தட்ட ஆயிரம் பேர்! ) அவசியம் நான் தர்மனை அடைந்து நீ விரும்பியபடியே அவர்கள் பகலுணவு கழித்தபிறகே எங்களுக்கு பிக்ஷை ஏற்பாடு பண்ண சொல்கிறேன். திருப்தியா?” என்றார் துர்வாசர்
துரியோதனனுக்கு
பரம திருப்தி. தொலைந்தார்கள் பாண்டவர்கள் இதோடு. துர்வாசரின் கோபம் தான் கின்னஸ் ரெகார்ட் ஆயிற்றே!. அவன் போட்ட பிளான் ரொம்ப சிம்பிள். சூர்யனிடமிருந்து திரௌபதி பெற்ற அக்ஷய பாத்திரத்தை உபயோகித்து அவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்தபின் அதால் மறுநாள் தான் உணவு பெற முடியும். இதை தெரிந்தே, ஆயிரக் கணக்கான
சிஷ்யர்களுடன் துர்வாசர் பாண்டவர்களை பிற்பகல் அடைந்தால் சாப்பாடு கூப்பாடாக அல்லவோ ஆகும்! . பசியுடன் துர்வாசர் இடும் சாபம் பாண்டவர்களுக்கு வெந்த புண்ணில் வேலாகட்டுமே!
துர்வாசர் தன் குழுவுடன் காம்யவனம்
வந்து விட்டார்.
"தர்மா நீயும் உன் சகோதரர்களும் என்னை வரவேற்றது உன் சகோதரன்
துர்யோதனன் உபசரித்ததை விட மேலாக இருக்கிறதே. உண்மையான அன்பு வெளிப்படுகிறதே. நீ சொல்லியவாறே இதோ நங்கள் அனைவரும் அருகே ஆற்றில் நீராடி ஜபம் முடித்தபின் வருகிறோம். பிறகு நீங்கள் அளிக்கும் பிக்ஷை ஏற்று கொள்கிறோம்..
வயிற்றில் புளி கரைத்தது திரௌபதிக்கு!
இன்றைக்கு அக்ஷயபாத்ரம் இனி உணவு தராதே! என்ன செய்ய?. கோபக்கார முனிவரும் சிஷ்யர்களும் எப்படி சாப்பிடுவது?. ஆபத்து நேரத்தில் நமக்கு என்ன தோன்றும்? ஆபத்பாந்தவன் என்று தான் ஒருவன் எப்போதுமே உண்டே! . " கிருஷ்ணா” என கதறினாள்.
சொல்லி வைத்தாற்போல் வாசலில் வந்து நின்றான் கிருஷ்ணன்.
“திரௌபதி நீங்கள் எல்லாம் சுகமா?. எங்கே அவர்கள் எல்லாரும்?”
“கிருஷ்ணா!,
இப்போது தான் உன்னை நினைத்தேன். நீயே வந்து நிற்கிறாயே என் அதிர்ஷ்டம்!!” ஆதியோடந்தமாய் கதையை சொல்லி முடித்தாள் திரௌபதி.
“இதோ பார், துரோபதி நீ எதற்காக என்னை அழைத்தாய் என்று எனக்கு தெரியாது. நானாகவே இந்த பக்கம் வந்தேன். வந்ததுவந்தோம் இங்கே சாப்பாட்டை முடித்துகொள்வோமே என்று பசி காதடைக்க
வந்திருக்கிறேன். நீயானால் ஒன்றுமில்லை கொடுக்க ஆனால் சாப்பிட ஆயிரக்கணக்கானோர்
வரப்போகிறார்கள் என்கிறாய். நீ முதலில் உன் அக்ஷய பாத்திரத்தை கொண்டு வா. அதை கெஞ்சி கேட்கிறேன் எதாவது எனக்கு அளிக்காமலா போகும்!. திரௌபதி நீட்டிய அக்ஷயபாத்திரத்தை நன்றாக கவனித்த கண்ணன் அதன் இடது விளிம்பில் ஒரு கீரை ஒட்டிகொண்டிருப்பதை பார்த்தான். “ஆஹா எனக்கு பிடித்த கீரை இதில் இருக்கிறதே. இது போதுமே வேறென்ன வேண்டும் என்று அதை எடுத்து உண்டான். சிறிதளவு நீரை கண்ணை மூடிக்கொண்டே பருகினான் "அப்பாடா என் பசியெல்லாம் தீர்ந்துவிட்டதம்மா. நான் என் வழியே போகிறேன்"
என்று கிருஷ்ணன் புறப்பட்டான்
"கிருஷ்ணா. எனக்கு என்ன வழி காட்ட போகிறாய். இன்னும் சற்று நேரத்தில் முனிவரும் ஆயிரக்கணக்கான சிஷ்யர்களும் வந்து
விடுவார்களே சாப்பிட".
"இதோபார், திரௌபதி. எனக்கு பசி அடங்கிவிட்டதுஅவர்களும் இந்த அக்ஷயபாத்ரத்தை கேட்கட்டும்
அவர்களுக்கும் ஏதாவது கிடைக்காமலா போகும். பசி தீராமலா போகும்.. பார்த்துக்கொள்"
ஆற்றில் அமிழ்ந்து ஸ்நானம் செய்த துர்வாசரும் சிஷ்யர்களும் ஒருவாய் ஆற்றுநீரை பருகியவுடனே பசி பறந்து போய் விட்டது. விருந்து உண்ட மாதிரி ஆகிவிட்டது. கரையில் நின்றுகொண்டு அவர்களை திரும்ப பிக்ஷைக்கு அழைத்து செல்ல காத்திருந்த சகாதேவனிடம் துர்வாசர் "“சகாதேவா என்னவோ தெரியவில்லை, நிறைய சாப்பிட்டமாதிரி ஆகிவிட்டது. வயிறு நிரம்பி இனி நாளை மதியம் தான் உணவு கொள்ள முடியும் போல இருக்கிறது. இதற்குமேல்
இன்று பிக்ஷை கொள்ள முடியாது.
"குருதேவா! எங்களுக்கும் இதே நிலை தான்" நீங்கள் சொன்னது நல்லதாய் போய் விட்டது"
என்றனர் சிஷ்யர்களும் கோரசாக. "சஹாதேவா நாங்கள் இப்போதே இங்கிருந்து புறப்படுகிறோம், தர்மனிடமும் மற்ற சகோதரர்களிடமும் த்ரௌபதியிடமும் எங்களை தவறாக நினைக்க வேண்டாம். என்று சொல் முழு
திருப்தியுடன் தான் சொல்கிறேன் மீண்டும் ஒருமுறை எப்பவாவது பிக்ஷை கட்டாயம்
இங்கு வந்து உங்களிடம் பெற்றுக்கொள்கிறோம். என்னவோ எனக்கு ரொம்ப மனசு சந்தோஷமாக உள்ளது. உங்கள் அனைவருக்கும் என்னுடைய பரிபூர்ண ஆசீர்வாதம் எப்போதும் உண்டு. நீங்கள் ஜெயமடைவீர்கள். என்று வாழ்த்தி சென்றார் துர்வாசர்.
இறைவனுக்கு நைவேத்யம் அளிப்பது உலகில் அனைவரும் இன்புறுவதற்காகவே
No comments:
Post a Comment