Wednesday, December 19, 2012

MORAL STORY 51 பெற்ற மனம் பித்து


KUTTI KADHAI 51            பெற்ற மனம் பித்து 
                       
சிலை போல வெகு நேரம் நின்று கொண்டிருந்தார்  விஷ்ணு சித்தர்.  
அன்னம்  ஆகாரம்  எல்லாம்  மறந்து விட்டதா  வெறுத்து விட்டதா? . அவளில்லையே!   இனி அன்னம்  எதற்கு,  நீர்  எதற்கு , வீடு வாசல்  இந்த  தோட்டம் ஏன்,   என்  உடலே  எதற்கு?  எல்லாம்  அவளாகவே இருந்து அவளே  இல்லாமல்  போன பின்  நானே  எதற்கு? . கண்களில்  வழியும்  நீர்  ஆனந்த கண்ணீரா?   இல்லை அளக்க  முடியாத சோக  கண்ணீரா?  தெரியவில்லையே.  பித்து பிடித்து விட்டதே!!.
இதோ!  இந்த  துளசி வனத்தில்  தானே,  ஆடி பூரம்  அன்று,  விடிகாலை என்  ரங்கனை பாடிக் கொண்டே  புஷ்பம்  பறிக்க வந்தபோது  அந்த சின்ன  குரல் கேட்டேன்.  ஆச்சர்யமாக, அவளை  ஒரு  தெய்வ பிம்பமாக, தாயாரின்  சிறு வடிவாகப் பார்த்து  இதோ இந்த  கூடத்தில் இட்டு பால் வார்த்தேன். இங்கு தானே  ரங்கன்  படத்துக்கு  முன்னால் அமர்ந்து  அவளை  மடியில் போட்டுகொண்டு  அனைவர் மத்தியிலும்  அவளுக்கு  இரவெல்லாம் யோசித்து  பொருத்தமாக  “கோதை”  என்று  பெயரிட்டேன்இங்குதானே  அவள்  எப்போதும்  என்னோடு  அமர்ந்து 
பேசுவாள்.  ரங்கன்  கதையெல்லாம்  திரும்ப திரும்ப  கேட்பாள்.  வாய்  ஓயாமல்  நானும்  சொல்லி சொல்லி மகிழ்வேனே. எப்போதும்  இந்த பூக்கூடையை  பார்த்து  “மாலை  ரெடியா?”  என்று  கேட்பாளே.  ஏன்  
எதற்கு  என்று  ரொம்ப  காலம்  புரியாமலே  இருந்து விட்டேனே!. தினமும் கட்டிவைத்த  மாலையை  தன் தோளில்  சூட்டிக் கொண்டு  இங்கே  பின்னால்  இருக்கும்  கிணற்றில்  நீரில்  தன்   அழகை பார்த்து  “ரங்கா, நான்  உனக்கு  ஏற்றவளா?  உனக்கு  பிடிக்கிறதா  என்னை”  என்று கேட்பாளாமே.  இறைவனின்  மனதில்  இடம் பிடித்த  அவளை  ஒன்றும்  அறியாதவனாக நான் கோபித்ததே மா பெரும்  தவறுஅவள்  சூடிக்கொடுத்த மாலை  தான்  வேண்டும்  என்று  ரங்கனே  அல்லவா உணர்த்தினான்  எனக்கு.   அவள்  அவனுக்காகவே பிறந்தவள்.  என்னிடம்  வளர்வதற்காகவே வந்தவள்.  நான்   பாக்யவானே அப்பறம்  தானே  அந்த  அழகிய மணவாளனே  புரிய வைத்தான்!என்ன குரல்  என்னகுரல்  அவளுக்கு.  எவ்வளவு சூடிகை.  எவ்வளவு அறிவு.  என்னமாய்  தமிழ்  பாசுரங்கள்  எழுதலானாள்.  என்  பெண்  சாதாரண பிறவி  அல்ல  என்று  வாய்க்கு  வாய் சொல்வேனே.  அவள்  பாசுரங்களை  நானே  எத்தனையோ முறை  பாடி  மகிழ்ந்தேனே  எல்லாம்  அவள்  என்னை விட்டு  பிரிவதற்காகவேவா?”.  
ச்சே”  என்ன எண்ணம்  இது.  அவள்  எங்கு  என்னை  பிரிந்தாள்?.  நான்  அல்லவோ  மேள   தாளங்களோடு அரசன் அனுப்பிய  பல்லக்கிலே சகல மாலை  மரியாதைகளோடு  மகாலட்சுமியாக அவளை  சீவி சிங்காரித்து  சீர்  வரிசையோடு  மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பினேன் கூடவே போனவனும் கூட.
என்ன அழகு அவளுக்கு, எத்தனை மகிழ்ச்சி முகத்தில். “இன்னும் எத்தனை தூரம், எவ்வளவு நேரம் இருக்கு ஸ்ரீ ரங்கத்துக்கு” என்று கேட்டு கொண்டே வந்தாளே. என்ன  ஆச்சர்யம், என்ன அதிசயம் என்னை கிள்ளி  பார்த்துக் கொண்டும் கூட என்னால் நம்ப முடியவில்லையே”
“இதோ, வந்து விட்டது, ரங்கனின் இடம் இதோ எனக்காக உன்னை காக்க வைத்து விட்டேனே.  “பல்லக்கை இறக்குங்கள்”  என்று  அவசர அவசரமாக  இறக்க சொல்லி தாவி குதித்து  ரங்கனின் சந்நிதிக்குள்  ஓடினாள். எல்லாரும்  ரங்கா  ரங்கா  என்று  உணர்ச்சி பொங்க கூவினோம்.  என் கோதை,  எனை ஆண்டாள்,  எங்களையெல்லாம்  பார்க்கக் கூட  நேரமில்லாமல் உள்ளே  சென்றாள்.  ரங்கனை  ஆரத்தழுவினாள். பிறகு  பிறகு .....?  ரங்கனோடு கலந்து மறைந்தாள்!!!
இறைவனோடு  எங்கள்  இறைவி  ஒன்றாக கலந்தது  துக்கமா?? நிச்சயம்  இல்லைதான்!  ஆனால்,  ஆனால்,....  
அவளை  இனி  என்  கோதையாக பார்க்க முடியவில்லையே!”  என்ற  ஒரு  தகப்பனின்  பாசக் குமுறல் தான்  இது!.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...